||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணனின் குறும்புகள்| 2
கிருஷ்ணனின் குறும்பு தனத்தை புகார் செய்வவே தினம் தினம் ஒவ்வொரு கோபிகைகள் யசோதையிடம் வருவார்கள்.
ஒரு கோபி சொல்லுவாள்: "நான் மிகவும் எச்சரிக்கையாக இருந்ததனால், என் வீட்டில் சாப்பிட, கிருஷ்ணனால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவன் தூங்கிக் கொண்டிருந்த என் குழந்தையைக் கிள்ளி அழ வைத்துவிட்டுக் குறும்புச் சிரிப்பு சிரித்துக் கொண்டே சென்று விட்டான்".
இன்னொரு கோபி சொல்லுவாள்: "நான் என் வீட்டில் பாலையும் தயிரையும் மேலே உத்திரத்திலிருந்து தொங்கும் உறியில் வைத்திருந்தேன். கிருஷ்ணனும், பலராமனும் அங்கு வந்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு எட்டவில்லை. ஆகவே அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். சில பலகைகளை ஒன்றின்மீது ஒன்றாக அமைத்தார்கள். அவற்றின்மீது, நான் உட்கார்ந்து தயிர் கடைவதற்காகப் பயன்படுத்தும் முக்காலியை வைத்தார்கள். முக்காலியின் மீது பலராமன் ஏறினான். அப்பொழுதும் பானை எட்டவில்லை. அதனால் பலராமன் வளைந்து கொடுக்க, கிருஷ்ணன் அவன் முதுகின் மீது ஏறினான்.
பானை எட்டவே, எல்லா வெண்ணையையும் சாப்பிட்டு தீர்த்தார்கள். அப்பொழுது நான் வீட்டிற்குள் நுழைந்து கிருஷ்ணனின் கையைப் பிடித்தேன். ஆனால் அவன் என்னைக் கண்டு பயப்படவில்லை. என்னைப் பார்த்து, நான் இந்த வீட்டின் சொந்தக்காரன், நீ தான் திருடி என்றான்".
இன்னொரு கோபி சொல்லுவாள்: "நான் அப்பொழுது தான் வீட்டை மெழுகிச் சுத்தமாக வைத்திருந்தேன். கிருஷ்ணன் வந்து வெண்ணெய் கேட்டான். என்னிடம் வெண்ணெய் இல்லை என்று சொன்னேன். பிறகு நான் வீட்டு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்த வேளையில் அவன் தெரு மண்ணை எல்லாம் என் வீட்டுத் தரையில் இரைத்து விட்டு ஓடி விட்டான்".
இப்படி எல்லாக் கோபிகளும் யசோதையிடம் முறையிடுவார்கள். ஆனால் ஒருத்திக்கும் கிருஷ்ணனின் மீது கோபம் இருக்காது. அவன் குறும்புகளை அவர்கள் ரசிக்கவே செய்தார்கள். இவர்கள் யசோதையிடம் முறையிடும் போது, கிருஷ்ணன் ஒரு மூலையில் குறும்புச் சிரிப்பு சிரித்து கொண்டு, இவர்கள் தன்னை பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பான். யசோதை கோப கண்களுடன் அவனை திரும்பிப் பார்ப்பாள். உடனே அவன் கண்களில் கண்ணீர் மல்கும். கிருஷ்ணன் அழ யார் தாம் பொறுப்பார்கள்? உடனே யசோதை அவனை தன் மடியில் கிடத்தி தட்டிக்கொடுப்பாள். கிருஷ்ணனுடைய அழகிய முகம் அவனுடைய களங்கமற்ற கண்கள் அவனுடைய இனிய புன்முறுவல் இவை கோபிகளின் மனத்தை மயக்கின.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்