||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
012. திருக்குடந்தை
பாஸ்கர க்ஷேத்ரம் - கும்பகோணம்
பன்னிரெண்டாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 51 - 1
பெரியாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 173 - திவ்ய தேசங்களில் விளையாடும் மகன்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து* விளையாடும் என்மகன்**
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க*
நல் அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா*
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா|
002. திவ்ய ப்ரபந்தம் - 177 - குடந்தைக் கிடந்தான்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஆலத்து இலையான்* அரவின் அணை மேலான்*
நீலக் கடலுள்* நெடுங்காலம் கண் வளர்ந்தான்*
பாலப் பிராயத்தே* பார்த்தற்கு அருள் செய்த*
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா*
குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா|
003. திவ்ய ப்ரபந்தம் - 188 - திருக்குடந்தை ஆராவமுதுக்குக் குருக்கத்திப் பூ
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
குடங்கள் எடுத்து ஏற விட்டுக்* கூத்தாட வல்ல எம் கோவே*
மடம் கொள் மதி முகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இரு பிளவு ஆக முன் கீண்டாய்*
குடந்தைக் கிடந்த எம் கோவே* குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்|
ஸ்ரீ ஆண்டாள்
004. திவ்ய ப்ரபந்தம் – 628 - திருத்துழாயை என் கூந்தலில் சூட்டுங்கள்
நாச்சியார் திருமொழி - பதிமூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பால் ஆலிலையில் துயில் கொண்ட* பரமன் வலைப்பட்டு இருந்தேனை*
வேலால் துன்னம் பெய்தாற் போல்* வேண்டிற்று எல்லாம் பேசாதே*
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க்* குடந்தைக் கிடந்த குடம் ஆடி*
நீலார் தண்ணந் துழாய் கொண்டு* என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே|
திருமழிசை ஆழ்வார்
005. திவ்ய ப்ரபந்தம் - 807 - திருக்குடந்தைக் கிடந்த திருமால்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (56)
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து* பைந்தலை நிலத்து உக*
கலங்க அன்று சென்று கொன்று* வென்றி கொண்ட வீரனே*
விலங்கு நூலர் வேத நாவர்* நீதியான கேள்வியார்*
வலங் கொளக் குடந்தையுள்* கிடந்த மாலும் அல்லையே?
006. திவ்ய ப்ரபந்தம் - 808 - திருக்குடந்தை ஆராவமுது
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (57)
சங்கு தங்கு முன் கை நங்கை* கொங்கை தங்கல் உற்றவன்*
அங்கம் மங்க அன்று சென்று* அடர்த்து எறிந்த ஆழியான்*
கொங்கு தங்கு வார் குழல்* மடந்தைமார் குடைந்த நீர்*
பொங்கு தண் குடந்தையுள்* கிடந்த புண்டரீகனே|
007. திவ்ய ப்ரபந்தம் - 809 - மத்த யானை கொம்பொடித்தவன்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (58)
மரம் கெட நடந்து அடர்த்து* மத்த யானை மத்தகத்து*
உரம் கெடப் புடைத்து* ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா*
துரங்கம் வாய் பிளந்து* மண் அளந்த பாத வேதியர்*
வரம் கொளக் குடந்தையுள்* கிடந்த மாலும் அல்லையே?
008. திவ்ய ப்ரபந்தம் - 810 - திருக்குடந்தையுள் வாழும் கோவலன்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (59)
சாலி வேலி தண் வயல்* தடங்கிடங்கு பூம்பொழில்*
கோல மாடம் நீடு* தண் குடந்தை மேய கோவலா*
காலநேமி வக்கரன்* கரன் முரன் சிரம் அவை*
காலனோடு கூட* விற்குனித்த வில் கை வீரனே|
009. திவ்ய ப்ரபந்தம் - 811 - உயர் வேங்கடத்தில் நின்றவன்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
செழுங் கொழும் பெரும்பனி பொழிந்திட* உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து* விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று*
எழுந்திருந்து தேன் பொருந்து* பூம்பொழில் தழைக் கொழும்*
செழுந் தடங் குடந்தையுள்* கிடந்த மாலும் அல்லையே?
010. திவ்ய ப்ரபந்தம் - 812 - கேசனே!எழுந்திருந்து பேசு
திருச்சந்த விருத்தம் - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
நடந்த கால்கள் நொந்தவோ?* நடுங்க ஞாலம் ஏனமாய்*
இடந்த மெய் குலுங்கவோ?* இலங்கு மால் வரைச் சுரம்*
கடந்த கால் பரந்த* காவிரிக் கரைக் குடந்தையுள்*
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு* வாழி கேசனே|
திருமங்கையாழ்வார்
011. திவ்ய ப்ரபந்தம் - 949 - நாட்கள் வீணாயின இப்பொழுது தெளிந்தேன்
பெரிய திருமொழி - முதலாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையா*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்|
012. திவ்ய ப்ரபந்தம் - 954 - திருக்குடந்தைத் திருமாலையே தொழுமின்
பெரிய திருமொழி - முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்* இன்னது ஓர் தன்மை என்று உணரீர்*
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்* கண்டவா தொண்டரைப் பாடும்*
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்*
சூழ் புனல் குடந்தையே தொழுமின்*
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்* நாராயணா என்னும் நாமம்|
013. திவ்ய ப்ரபந்தம் - 991 - அரக்கரை அழித்தவன் வாழுமிடம் சாளக்கிராமம்
பெரிய திருமொழி - முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஊரான் குடந்தை உத்தமன்* ஒரு கால் இரு கால் சிலை வளைய*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்* வற்றா வரு புனல் சூழ் பேரான்*
பேர் ஆயிரம் உடையான்* பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே|
014. திவ்ய ப்ரபந்தம் - 1078 - நால்வகைத் திருக்கோலங் கொண்டவன் இடம்
பெரிய திருமொழி - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*
தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*
மா மலை ஆவது நீர்மலையே|
015. திவ்ய ப்ரபந்தம் - 1202 - குடந்தைப் பெருமானே! எனக்குத் துணைவனாகுக
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - - ஐந்தாம் பாசுரம்
வாள் ஆய கண் பனிப்ப* மென் முலைகள் பொன் அரும்ப*
நாள் நாளும்* நின் நினைந்து நைவேற்கு*
ஓ மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா* வரை எடுத்த தோளாளா*
என் தனக்கு ஓர்* துணையாளன் ஆகாயே|
016. திவ்ய ப்ரபந்தம் - 1205 - மணவாளா! உன் நினைவால் தூங்கவே இல்லை
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்* தண் குடந்தைக் குடம் ஆடி*
துயிலாத கண் இணையேன்* நின் நினைந்து துயர்வேனோ?*
முயல் ஆலும் இள மதிக்கே* வளை இழந்தேற்கு*
இது நடுவே வயல் ஆலி மணவாளா* கொள்வாயோ மணி நிறமே?
017. திவ்ய ப்ரபந்தம் - 1394 - என் மகளது குணத்தை மாற்றி விட்டானே மாயன்!
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*
எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள்*
இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்?*
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்*
ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த தேர் ஆளன்*
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் செப்புகேனே?
018. திவ்ய ப்ரபந்தம் - 1526 - திருக்குடந்தைக் கிடந்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே|
019. திவ்ய ப்ரபந்தம் - 1538 - திருமாலின் திருநாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கிடந்த நம்பி குடந்தை மேவிக்* கேழல் ஆய் உலகை இடந்த நம்பி*
எங்கள் நம்பி* எறிஞர் அரண் அழிய*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|
020. திவ்ய ப்ரபந்தம் - 1570 - எம்பிரானை நான் எந்த விதத்திலும் மறக்க முடியாது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்* மற்று ஓர் நெஞ்சு அறியான்*
அடியேனுடைச் சிந்தை ஆய் வந்து*
தென்புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக் கோவினை*
குடம் ஆடிய கூத்தனை*
எந்தையை எந்தை தந்தை தம்மானை* எம்பிரானை எத்தால் மறக்கேனே?
021. திவ்ய ப்ரபந்தம் - 1606 - திருமகள் கணவனை நான் கண்டு களித்த இடம் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பேரானைக்* குடந்தைப் பெருமானை*
இலங்கு ஒளி சேர் வார் ஆர் வனமுலையாள்* மலர் மங்கை நாயகனை*
ஆரா இன் அமுதைத்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
கார் ஆர் கரு முகிலைக்* கண்டு கொண்டு களித்தேனே|
022. திவ்ய ப்ரபந்தம் - 1732 - குடந்தையில் கிடந்தவனே! உன்னை மறவேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வந்தாய் என் மனத்தே* வந்து நீ புகுந்த பின்னை*
எந்தாய் போய் அறியாய்* இதுவே அமையாதோ?*
கொந்து ஆர் பைம் பொழில் சூழ்* குடந்தைக் கிடந்து உகந்த மைந்தா*
உன்னை என்றும்* மறவாமைப் பெற்றேனே|
023. திவ்ய ப்ரபந்தம் - 1759 - குடந்தையில் கிடக்கும் பெருமாளா இவர்?
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்* சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த*
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்* செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி*
பாடக மெல் அடியார் வணங்கப்* பல் மணி முத்தொடு இலங்கு சோதி*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா|
024. திவ்ய ப்ரபந்தம் - 1853 - திருச்சேறையும் திருக்குடந்தையும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வானை ஆர் அமுதம்* தந்த வள்ளலை*
தேனை நீள் வயல்* சேறையில் கண்டு போய்*
ஆனை வாட்டி அருளும்* அமரர் தம் கோனை*
யாம் குடந்தைச் சென்று காண்டுமே|
025. திவ்ய ப்ரபந்தம் - 1949 - குடந்தைத் திருமால் இங்கே வருவானோ?
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
இங்கே போதும்கொலோ*
இன வேல் நெடுங் கண் களிப்ப?*
கொங்கு ஆர் சோலைக்* குடந்தைக் கிடந்த மால்*
இங்கே போதும் கொலோ?
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்