About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 April 2024

108 திவ்ய தேசங்கள் - 034 - திருவாலி – திருநகரி 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

034. திருவாலி – திருநகரி (திருநாங்கூர்)
முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 42 - 2

022. திவ்ய ப்ரபந்தம் - 1207 - இத்தமிழ்மாலை படித்தோரைத் தீவினைகள் சேரா
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மை இலங்கு கருங் குவளை* மருங்கு அலரும் வயல் ஆலி*
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை* நெடுமாலை*
கை இலங்கு வேல் கலியன்* கண்டு உரைத்த தமிழ் மாலை*
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு* அரு வினைகள் அடையாவே|

023. திவ்ய ப்ரபந்தம் - 1208 - கள்வனும் என் மகளும் ஆலிநகர் புகுவரோ?
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கள்வன் கொல்? யான் அறியேன்* கரியான் ஒரு காளை வந்து*
வள்ளி மருங்குல்* என் தன் மட மானினைப் போத என்று*
வெள்ளி வளைக் கை* பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று*
அள்ளல் அம் பூங் கழனி* அணி ஆலி புகுவர்கொலோ?

024. திவ்ய ப்ரபந்தம் - 1209 - என் மகள் ஆயனுடன் பேசிக் கொண்டே ஆலி புகுவாளோ?
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பண்டு இவன் ஆயன் நங்காய்* படிறன் புகுந்து* 
என் மகள் தன் தொண்டை அம் செங் கனி வாய்* நுகர்ந்தானை உகந்து* 
அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக்* கிளிபோல் மிழற்றி நடந்து*
வண்டு அமர் கானல் மல்கும்* வயல் ஆலி புகுவர்கொலோ?

025. திவ்ய ப்ரபந்தம் - 1210 - சூர்ப்பனகை மூக்கை அறுத்தவனுடன் சென்றாளே! ஐயகோ!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
அஞ்சுவன் வெம் சொல் நங்காய்* அரக்கர் குலப் பாவை தன்னை*
வெம் சின மூக்கு அரிந்த* விறலோன் திறம் கேட்கில் மெய்யே*
பஞ்சிய மெல் அடி* எம் பணைத் தோளி பரக்கழிந்து*
வஞ்சி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ?

026. திவ்ய ப்ரபந்தம் - 1211 - மாதவனைத் துணைக் கொண்டு நடந்தாளே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஏது அவன் தொல் பிறப்பு?* இளையவன் வளை ஊதி* 
மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்* சொல்வீர்கள் சொலீர் அறியேன்*
மாதவன் தன் துணையா நடந்தாள்* தடம் சூழ் புறவில்*
போது வண்டு ஆடு செம்மல்* புனல் ஆலி புகுவர்கொலோ?

027. திவ்ய ப்ரபந்தம் - 1212 - மாயனுடன் அன்னமென நடந்து செல்வாளோ!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தாய் எனை என்று இரங்காள்* தடந் தோளி தனக்கு அமைந்த*
மாயனை மாதவனை* மதித்து என்னை அகன்ற இவள்*
வேய் அன தோள் விசிறிப்* பெடை அன்னம் என நடந்து*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர்கொலோ?

028. திவ்ய ப்ரபந்தம் - 1213 - என்னிடம் இரக்கமின்றிச் சென்று விட்டாளே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*
தன் துணை ஆய என் தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்*
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ?

029. திவ்ய ப்ரபந்தம் - 1214 - நப்பின்னை மணாளனை விரும்பினாளே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
அன்னையும் அத்தனும் என்று* அடியோமுக்கு இரங்கிற்றிலள்*
பின்னை தன் காதலன் தன்* பெருந் தோள் நலம் பேணினளால்*
மின்னையும் வஞ்சியையும்* வென்று இலங்கும் இடையாள் நடந்து*
புன்னையும் அன்னமும் சூழ்* புனல் ஆலி புகுவர்கொலோ?

030. திவ்ய ப்ரபந்தம் - 1215 - யாவரும் தொழுமாறு ஆலி புகுவரோ?
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முற்றிலும் பைங் கிளியும்* பந்தும் ஊசலும் பேசுகின்ற*
சிற்றில் மென் பூவையும்* விட்டு அகன்ற செழுங் கோதை தன்னைப்*
பெற்றிலேன் முற்று இழையை* பிறப்பிலி பின்னே நடந்து*
மற்று எல்லாம் கைதொழப் போய்* வயல் ஆலி புகுவர்கொலோ?

031. திவ்ய ப்ரபந்தம் - 1216 - நெடுமாலும் என் மகளும் ஆலி புகுவரோ?
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ?

032. திவ்ய ப்ரபந்தம் - 1217 - இத்தமிழ்மாலை படித்தோர் தேவருலகு அடைவர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தாய் மனம் நின்று இரங்கத்* தனியே நெடுமால் துணையா*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்* ஒலிசெய் தமிழ் மாலை பத்தும்*
மேவிய நெஞ்சு உடையார்* தஞ்சம் ஆவது விண் உலகே|

033. திவ்ய ப்ரபந்தம் - 1329 - இந்தளூராய்! இரக்கம் காட்டு
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே* மருவினிய மைந்தா*
அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே*
நந்தா விளக்கின் சுடரே* நறையூர் நின்ற நம்பீ* 
என் எந்தாய் இந்தளூராய்* அடியேற்கு இறையும் இரங்காயே|

034. திவ்ய ப்ரபந்தம் - 1519 - கடல் கடைந்தவனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
முந்நீரை முன் நாள்* கடைந்தானை* 
மூழ்த்த நாள் அந் நீரை மீன் ஆய்* அமைத்த பெருமானை*
தென் ஆலி மேய திருமாலை எம்மானை*
நல் நீர் சூழ்* நறையூரில் கண்டேனே|

035. திவ்ய ப்ரபந்தம் - 1733 - மனமே! கண்ணபுரத்தானை மறவாதே
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
எஞ்சா வெம் நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல் என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே நீ நினையாது* இறைப்பொழுதும் இருத்தி கண்டாய்*
மஞ்சு ஆர் மாளிகை சூழ்* வயல் ஆலி மைந்தனையே|

036. திவ்ய ப்ரபந்தம் - 1735 - பிறவா வரம் பெற்று விட்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கற்றார் பற்று அறுக்கும்* பிறவிப் பெருங் கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்த பின்னை*
வற்றா நீர் வயல் சூழ்* வயல் ஆலி அம்மானைப் பெற்றேன்* 
பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே|

037. திவ்ய ப்ரபந்தம் - 1850 - திருவாலியும் திருநாங்கூரும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வேலை ஆல் இலைப்* பள்ளி விரும்பிய*
பாலை ஆர் அமுதத்தினைப்* பைந் துழாய்* 
மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*
ஞாலம் உன்னியைக் காண்டும்* நாங்கூரிலே|

038. திவ்ய ப்ரபந்தம் - 2014 - பகவான் பெருமை பேசாதார் பேச்சு பேச்சல்ல
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
தூயானைத்* தூய மறையானை* தென் ஆலி மேயானை* 
மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட வாயானை*
மாலை வணங்கி* அவன் பெருமை பேசாதார்* 
பேச்சு என்றும்* பேச்சு அல்ல கேட்டாமே|

039. திவ்ய ப்ரபந்தம் - 2027 - இடையன் (அரைகுறையாக) வெட்டிய மரம் போல்
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
படை நின்ற* பைந்தாமரையோடு* 
அணி நீலம் மடை நின்று அலரும்* வயல் ஆலி மணாளா* 
இடையன் எறிந்த மரமே* ஒத்து இராமே*
அடைய அருளாய்* எனக்கு உன் தன் அருளே|

040. திவ்ய ப்ரபந்தம் - 2063 - அரங்கனை எண்ணி அயர்கின்றாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்* 
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும்* 
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்* 
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்* 
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே|

041. திவ்ய ப்ரபந்தம் - 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை (2)

042. திவ்ய ப்ரபந்தம் - 2773 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை* 
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை* மன்னும் அரங்கத்து எம் மா மணியை*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 81

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 26

ஸ்கந்தம் 03

தாயைப் பார்த்து சாதகனின்‌ தன்னிறைவை விளக்கிய கபிலர் மேற்கொண்டு ஸாதுக்களின்‌ மகிமைகளைக் கூறுகிறார்.

தாயே! உலகியல் இன்பங்களைப் பெரிதென நினைத்து ஒழுகுபவர்களுடனான இணக்கம், என்றும் எதனாலும் அறுக்க இயலாத பாசக்கயிறு.


அதே மன ‌இணக்கம், உத்தம ஸாதுக்களிடம் ஏற்படுமாயின் அது இடையூறு இன்றித் திறந்து வைக்கப்பட்ட முக்தி வாயில் என்றும் அறிஞர்கள்‌ கூறுகிறார்கள். அத்தகைய சாதுக்களைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.

சாதுக்கள் பூமியினும் பொறுமை மிக்கவர். பிறர் துன்பங்கண்டு இரங்கி, பயன் நோக்காது உதவி புரியும் கருணை மிக்கவர். ஆகவே, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நண்பராவார். பகைவரற்றவர். ஐம்புலன்களையும், மனத்தையும் வெற்றி கொண்டவர். ஒழுக்கமே அவர்க்குப் பொன்னகை. பிறவற்றில் மனத்தை ஓடவிடாது பகவானான என்னிடம்‌ காதல்‌ கொண்டவர். எனக்காக அனைத்து கர்மங்களையும் துறந்தவர். சுற்றம் அனைத்தையும் நீக்கி, என்னையே சுற்றமாய்க் கொண்டவர். எனது திருவிளையாடல்களைக்‌ கேட்டு மகிழ்பவர். அவற்றையே திரும்ப திரும்பக் கேட்பதும் சொல்வதுமாகப் பொழுது போக்குவர். என்னிடமே நிறைந்த மனம் கொண்ட இத்தகைய சாதுக்களை வினைப்பயனால் விளையும்‌ துன்பங்கள் கூட வருந்தச் செய்யாது. 

கற்பின் சிகரமே! இத்தகைய ஸாதுக்களையே ஒருவன் தேடிச் சென்று அடைய வேண்டும். அவர்களுடைய ஒரு தொடர்பினால், செவிக்கும் இதயத்திற்கும்‌ அமுதாய் விளங்கும் எனது திருவிளையாடல்கள் பற்றிய கதைகளை எப்போதும் கேட்கும் வாய்ப்பு கிட்டும்.‌ அக்கதைகளைக் ‌கேட்பதால், முக்தியில் ஈடுபாடும், என்னிடம்‌ அன்பும்‌ தோன்றும். படைத்தல், காத்தல், அழித்தலாகிய எனது திருவிளையாடல்களைக் கேட்டு, அதையே சிந்தனை செய்வதால் என்னிடம்‌ அசைவற்ற பக்தி உண்டாகும். அதனால் ஸ்வர்கம் முதலியவற்றில் இருக்கும் பற்று நீங்கி பக்தி யோகத்தால் மனத்தைத் தனதாக்கிக் கொள்ள இயலும். அப்படிப்பட்ட சாதகன் முடிவில் என்னையே அடைகிறான், என்றார் கபிலர்.

தொடர்ந்து பக்தி யோகம்‌ பற்றி வினவினாள் தேவஹுதி.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 136

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 106

ஆத்ம யோநிஸ் ஸ்வயஞ் ஜாதோ 
வைகா²நஸ் ஸாம கா³யந:|
தே³வகீ நந்த³நஸ் ஸ்ரஷ்டா 
க்ஷிதீஸ²: பாப நாஸ²ந:||

  • 985. ஆத்ம யோநிஸ் - அடியார்களைத் தன்னுடன் ஒரே தன்மையாகக் கலக்கச் செய்பவர்.
  • 986. ஸ்வயஞ் ஜாதோ - தான் தோன்றி, தானே அவதாரம் செய்பவர்.
  • 987. வைகா²நஸ் - வேரோடு பெயர்ப்பவர். துக்கங்களைக் களைபவர்.
  • 988. ஸாம கா³யநஹ - சாமகானம் செய்யக் கேட்டிருப்பவர்.
  • 989. தே³வகீ நந்த³நஸ் - தேவகியின் மைந்தன்.
  • 990. ஸ்ரஷ்டா - படைப்பவர்.
  • 991. க்ஷிதீஸ²ஃ - பூமியை ஆள்பவர்.
  • 992. பாப நாஸ²நஹ - பாபங்களை அழிப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - மூன்றாம் அத்யாயம் அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

கண்ணன் காட்டிய கர்ம யோகம் சுவர்களை வீடாக்குகிற, இல்லமாக்குகிற, லக்ஷ்மி வசிக்கும் கிருஹமாக்குகிற கலையை சொல்லி தருகிறது. வாழ்க்கையில் கலை, தொழில், வியாபாரம், இன்பம் துய்த்தல், ஓய்வெடுத்தல், ப்ரார்த்தனை செய்தல், சமூக நடவடிக்கைகள், அண்டை அயல் மனிதருடன் உறவாடுதல் ஆகிய அனைத்தையும் இணைத்து வாழ்க்கையின் சிதறுண்ட மலர்களை வாழ்க்கை என்ற மாலையாக்கக் கற்றுதருகிறது கீதையில் கண்ணன் காட்டிய கர்மயோகம். முதலில் அத்யாயம் பற்றிய விளக்கத்தை பார்ப்போம் பிறகு கர்மயோகம் பற்றி ஒரு சில விளக்கத்தை பார்ப்போம்.

பாவ புண்ணியமென்ற பலனை எதிர்பாரா ஞானமே பெரிதென்று போதிக்கும் நீ, பலன் கருதும் கோரமான இப்போரில் என்னை ஏன் ஈடுபடுத்துகிறாய்? என்ற அர்ஜூனனின் கேள்விக்கு கண்ணன், ”ஞான யோகம், கர்ம யோகம் இரண்டுமே என்னால் சொல்லப்பட்டப் போதும் கர்மயோகமே சிறந்தது” என்கிறார். ஏனெனில் பிறந்தவர் யாவருமே செயலாற்றாமல் இருக்க முடியாது. மனதால் செயலை நினைத்துக்கொண்டு செயலாற்றாமல் இருப்பவன் பொய்யன். வினைகள் குணங்களுக்கேற்பவும் புலன்களுக்கேற்பவும் அமைகின்றன. இது இயற்கையாகவே நடக்கிறது. இதற்கு தானே காரணம் என்று உணர்க்கிறான் அஞ்ஞானி, இறைவனே காரணம் என்று உணர்கிறான் ஞானி. திருப்தி அடையாத ஆசையே ஒருவனை செயலில் ஈடுபடுத்தி மனிதனின் துன்பத்திற்கு காரணமாகிறது. ஆசையின் இருப்பிடங்கள் புலன்களில் தொடங்கி, மனம், புத்தி, என்று இடமாறுகிறது. முதலில் புலன்களை அடக்கு. புலன்களை விட உயர்ந்தது மனம், மனத்திலும் உயர்ந்தது புத்தி, புத்தியிலும் உயர்ந்தது ஆத்மா. புத்திக்கும் மேலான ஆத்ம பலத்தால் ஆசையை வென்று பற்றற்றுச் செயல் புரிபவனே கர்ம்யோகி.

தனக்காக செய்யும் வினை/செயல் ஒருவனை பந்தத்தில் ஈடுபடுத்துகிறது. உலக நலன் கருதிச் செய்யும் வினை/செயல் பந்தத்தை அறுக்கிறது. எல்லா செயல்களிலும் இறைவன் இருக்கிறார். அதனால் தான் ஆசை இல்லாத துறவிகளும் உலக நலன் கருதி இறைவனை வேண்டி வேள்வி எனும் வினை/செயல் புரிகின்றனர். அறிவாளிகள் தானும் பற்றற்று செயல் புரிந்து மற்றவர்களையும் அது போல் செயல் புரிய தூண்டவேண்டும். நானே மக்களுக்காக எடுத்துக் காட்டாய் வினை/செயலாற்ற வேண்டி இருக்கிறது என்று எப்படி எல்லாம் வினையாற்ற வேண்டும் என்று இங்கே பகவான் விளக்குகிறார். புலன்களின் உணர்வே இன்பம், துன்பம். இந்த இரண்டையும் சமமாக நினைப்பது ஞான யோகம், புலன்களை வென்று பற்றற்று செயல் புரிவது கர்ம யோகம். புலன்களை அடக்கி இன்ப துன்பங்களைச் சமமாக பாவித்து செயல் புரிபவன் நிலையான புத்தியுடையவன் என்றும் பகவான் இங்கே விளக்கம் அளிக்கிறார்.

  • மனிதர்கள் நான்கு வகையாக செயல் புரிகிறார்கள்.
  • 1. உள்ளும் புறமும் செயலிலே ஈடுப்பட்டிருப்பவர்கள் இவர்கள் தம் ஆன்மீக யாத்திரையை இன்னும் தொடாங்காதவர்கள்.
  • 2. உள்ளே செயலைச் செய்துகொண்டே வெளியே ஆசைகள் அற்றவர்கள் போல் இருப்பவர் இவர்கள் பொய்யொழுக்கம் உடையவர்கள்.
  • 3. உள்ளும் புறமும் பற்றற்று இருப்பவர்கள் இவர்கள் சன்னியாசிகள் அல்லது துறவிகள் என்போம்.
  • 4. புலன்களினால் மட்டுமே செயலைச் செய்து கொண்டு உள்ளே பற்றற்று இருப்பவர். இவர்கள் கர்மயோகிகள்.

மேலும் கர்ம்யோகி யார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

கண்ணனிலும் பெரிய கர்மயோகி யார் உள்ளார்? தோல்வி வெற்றி, பகைவர் நண்பர் அனைவரையும் சமதிருஷ்டியுடன் நோக்கி போர்க் களத்தே பரஞான மெய்கீதையை புகன்ற கண்ணன் ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் கர்மயோகத்திற்கு வாழ்கின்ற உதாரணம். அவனே நிலைத்த அறிவுடையவன், அவனே சன்னியாசி, அவனே கர்மயோகி, அவனே தியான யோகி, விஞ்ஞானி, விஸ்வரூபி, லட்சிய பக்தன், தேவன், குணாதீதன், புருஷோத்தமன், சாத்வீகக் கர்த்தா இப்படி கீதையின் ஒவ்வொரு சுலோகமும் கண்ணனின் வாழ்க்கை வரலாறே. மேலும் ராமனும், பரதனும், இலட்சுமனனும், அனுமனும் கர்மயோகத்திற்கு இந்நாடு கண்ட உதாரணங்களாவர். 

பானை செய்யும் கோராகும்பர், பெற்றோருக்கு பணிவிடை புரியும் புண்டலீகன், ஸ்ரீசேனா நாவிதர், ஸாவதாமாலி என்ற பூந்தோட்டக்காரன், நரஹரிஸோனன் என்ற பொற்கொல்லன், ரவிதாஸர் என்ற சக்கிலியர், சாஹீகர் என்ற வட்டிக்கடைக்காரர், ஜயமல்லர் என்ற மன்னன், தனாசடர் என்ற விவசாயி, கபீர் என்ற நெசவாளி, நாமதேவர் என்ற தையல்காரர், பெரியதாசர் என்ற வளையல் வியாபாரி என்று இப்படி அனைவரும் கர்மயோகம் புரிந்து விட்டலனை வழிபட்டனர். செய்தொழில் எதுவாயினும் அதை உண்மையுடன் செய்து பரம்பொருளை அடை என்கிறது கீதை. தமிழ் இலக்கியத்தில் இப்படி சாதாரண தொழில் வாழ்க்கை புரிந்தும் இறைவன்மீது பக்திகொண்டு கர்மயோகியராய் வாழ்ந்த பெரியவர்கள் வரலாறுதான் பெரியபுராணம். அரியனை ஏறி அரசு புரிந்த சேரமான் பெருமான், மீன்பிடிக்கும் அதிபத்தர், 

மண்பாண்டம் செய்துவந்த திருநீலகண்டர், வணிகராய் வாழ்ந்த இயற்பகையார், விவசாயம் செய்து வந்த இளையான்குடி மறநாயனார், கண்ணப்பன் எனும் ஒப்பிலா வேடன், பக்தருக்கு துணி துவைத்துப் போட்ட திருகுறிப்புத் தொண்டர், இல்லத்தரசியாக விளங்கிய காரைக்கால் அம்மையார் இவர்கள் அனைவரும் கர்மயோகிகளே.

ஆக, கண்ணன் சொல்லும் கர்மயோகம் குலம், தொழில், இடம், கல்வியறிவு இவைகளால் பேதம் ஏற்படா வண்ணம் ஆணும், பெண்ணும் செய்து ஒழுகவல்ல வழி. நமக்கு எல்லாம் ஒரு சந்தேகம் ஏற்படும் கர்மயோகம் எப்படி செய்வது, அதற்கான சக்தி நம்மிடம் இருக்கிறதா, அதையும் கண்ணன் மிக அழகாக கூறுகிறார் .

கர்மயோகம் புரிவதற்கு எனக்கு சக்தி இல்லையே. தொண்டு புரிவதற்கு எனக்கு அறிவு இல்லையே. புதுப்பணி தொடங்குவதற்கு எனக்கு திறமை போதாதே. நான் குறையுள்ளவன் எளியவன் என்கிறான் தொண்டன். அதற்கு கண்ணன் சொல்கிறான்: “குழந்தாய், புதிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். ஏற்கனவே தான் உன் உடம்பும், மனதும், அறிவும், மூச்சும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றனவே, அவற்றையே அந்த அசைவுகளையே இயக்கங்களையே பயன்படுத்துக் கொள்ளேன்”.

உடம்பு எப்போழுதும் அசைந்து கொண்டே இருக்கிறது. அரை நிமிஷம் ஒரிடத்தில் உட்கார முடிகிறதா? கால் ஆடிக் கொண்டே இருக்கிறது. கை தலையைச் சொறிகிறது. ஆக உடல் என்பது எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது. அதன் இயக்கத்தைப் பயன்படுத்தி தன்னை உணர். அந்த இயக்கம் சீராக செய்ல்படும் ஒழுங்கினை ஆரம்பிக்க உனக்கு உதவும் என்கிறான் கண்ணன். அதே போல் மூச்சு விடுவதற்கு மனிதன் கற்றுக்கொள்ளவா வேண்டும்? ஆகவே மூச்சுவிடுவதிலும் மனிதன் சக்தியைச் செலவழித்துத் தானே வருகிறான். அந்த மூச்சைச் சற்று ஒழுங்காக, சீராக விடுவது தானே பிராணாயாமம்! அதுபோல, மனம் எப்போதும் ஆசையும், துவேஷமும், விருப்பும், வெறுப்பும் கொண்டு தானே இருக்கிறது. இந்த விருப்பு வெறுப்பை நல்லதை விரும்புவதாகவும், கெட்டதை வெறுப்பதாகவும் ஒழுங்குபண்ணிக் கொள்வதுதானே பக்தி. அதுபோல அறிவு ஒவ்வொரு கணமும் இவ்வுலகை இது நல்லது இது கெட்டது என்று துண்டு போட்டுக் கொண்டு தானே இருக்கிறது. இந்த அறிவை இது சாசுவதம், நித்தியம், இது நிலைத்த பரம்பொருள் என்றும், இது தற்காலிகமானது, இது அழிவது, இது அனித்தியம் என்றும் பிரித்தறிவதற்குத் தானே விவேகம் என்று பெயர். ஆகவே புதிதாக சக்தியைச் செலவழிக்கத் தேவை இல்லை. ஏற்கனவே வீண் பண்ணிக் கொண்டிருக்கிற சக்தியை, உடல், மூச்சு, மனம், அறிவு ஆகியவற்றின் சக்தியை ஒழுங்கு பண்ணுவது தான் இறைவனை அடையும் வழி என்கிறார் கண்ணன்.

தன்னிடம் செயலாற்றும் திறன் இல்லை என்று சோம்பி இருப்பவனுக்கு, இதைவிட ஒழுக்க உயர்வு, நியாய உணர்வு சற்று அதிகமானவனுக்கு கீதை என்ன சொல்கிறது தெரியுமா? “நீ உண்கிறாய், உடை உடுத்துகிறாய், வீட்டில் வசிக்கிறாய். இந்த வசதிகள் எல்லாம் உழைப்பினால், முயற்சியினால், கர்மத்தினால் யாரோ ஒரு உழைப்பாளி படைத்தது தானே! அதையெல்லாம் நீ அனுபவித்துவிட்டு, நீ உழைக்க மாட்டேன் என்பது இவ்வுலகில் கூட நியாயம் இல்லையே இறைவன் சன்னதியில் இது எப்படி நியாயமாகும்? ஆகவே உழை தொண்டுபுரி என்கிறார் கண்ணன்.

சில பேர் கர்மத்தினால் வருகின்ற பலன், பலம் தனக்குத் தேவை இல்லாத அளவிற்கு உயர்ந்து இருப்பார்கள். அவர்கள் ஏன் தொண்டு புரிய வேண்டும்? தொண்டு புரிந்து அவர்களுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. தொண்டு புரியாததனால் அவர்களுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. இவர்களை பார்த்து கண்ணன் சொல்கிறான்:- அப்படி அலட்சியமாக இராதே. நீ நல்லவன் தானே? ஒழுக்கம் மிகுந்தவன் தானே. அப்படி நல்லவனாக இருக்கிற உன்னைப் பார்த்துத் தானே பாமர ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்து கொள்வார்கள். ஆகவே, மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்குவதற்கு என்றாவது நீ கர்மம் புரி, தொண்டு செய், சேவை பண்ணு. நீ வினைப்பயன் தேவையில்லை என்று சும்மா இருக்கலாம். உண்மையில் நீ முழுமை உடையவனாக இருக்கலாம். ஆனால் உன்னைப் பார்த்து பாமர மக்கள் சோம்பேறிகளாகி விடக் கூடாது. ஆகவே தொண்டு புரி, உழை, முயற்சி செய், செயல் புரி. இறைவன் நல்ல காரியங்களை உலகில் நடத்த நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கிறான். அப்படி இறைவனின் கைகருவியாக ஆகிவிடு. காலியாக இருக்கிற புல்லாங்குழல் கண்ணனின் உதடுபட்டு இசைமழை பொழுவதுபோல் நீயும் அவன் கைபட்டு உலக சேவைபுரியும் புண்ணிய கருவியாக ஆகிவிடு. அப்போதும் கூட தொண்டும், தொழிலும் இன்றியமையாதவை, தவிர்க்க முடியாதவை.

கர்மயோகம் “பலனை எதிர்பாராமல் செயல் புரிபவன் பரம்பொருளை அடைகிறான்” உங்களைச் சிரமமின்றி பணி செய்யத் தூண்டுகின்ற இயற்கையாக அமைந்த, சுலபமான உங்கள் மனத்தைக் கவர்ந்த விஷயங்கள் அனைத்தையும் எழுதுங்கள். உலக நன்மை, புலனடக்கம், மனிதாபிமானம், பரோபகாரம் என்ற தலைப்பின்கீழ் நீங்கள் செய்ய விரும்புகிற விஷயங்கள், பணிகள் ஆகியவற்றைப் பட்டியிலிடுங்கள். இரண்டு பட்டியல்களிலும் இருக்கின்ற பணிகள் எதெது என்று அடையாளம் காணுங்கள். அதுதான் உங்கள் சுய தர்மம், சுய கர்மம், சுபாவம். அந்த சுயதர்மத்தை ஒதுக்கிவிட்டு நீங்கள் வாழ்க்கையில் எந்த நற்பணியையும் செய்ய முடியாது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.26

ஏவம் ப்ரவ்ருத் தஸ்ய ஸதா³ 
பூ⁴தாநாம் ஸ்²ரேயஸி த்³விஜா:|
ஸர்வாத்ம கேநாபி யதா³ 
நாதுஷ் யத்³ த்⁴ருத³யம் தத:||  

  • த்³விஜா: - ஹே! பிராமணோத்தமர்களே!
  • ஏவம் - இவ்வாறு
  • ஸர்வாத்ம கேநாபி - எவ்விதத்திலும்
  • ஸதா³ - எப்பொழுதும்
  • பூ⁴தாநாம் ஸ்²ரேயஸி - மக்களின் நன்மையில்
  • ப்ரவ்ருத் தஸ்ய - நாட்டம் உடைய வியாஸருக்கு
  • யதா³ - எப்பொழுது
  • ஹ்ருத³யம் - மனம்
  • ந அதுஷ் யத்³  - திருப்தி அடைய வில்லையோ
  • தத: - அப்பொழுது

அந்தணப் பெரியோர்களே! இவ்வாறு எப்பொழுதும், எவ்விதத்திலும் மக்களின் நன்மையிலேயே நாட்டம் கொண்ட வியாஸ முனிவரது மனம் அனைத்து சாஸ்திரங்களையும் தர்மங்களையும் அறிந்திருப்பினும் திருப்தி அடையாமல் அமைதியின்றித் தவித்தது. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.71

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.71

ஸ ச ஸர்வாந் ஸமாநீய 
வாநராந் வாநரர்ஷப⁴:|
தி³ஸ²: ப்ரஸ்தா² பயாமாஸ 
தி³த்³ரு க்ஷுர் ஜந காத்ம ஜாம்|| 

  • வாநரர்ஷப⁴: - வாநர ஸ்ரேஷ்டரான
  • ஸ ச - அவரும்
  • ஜந காத்ம ஜாம் - ஜனகரின் புத்ரியை
  • தி³த்³ ருக்ஷுர் - பார்க்க இச்சை உடையவராய்
  • ஸர்வாந் - எல்லா
  • வாநராந் - வாநரர்களையும்
  • ஸமா நீய - அழைத்து
  • தி³ஸ²: - திசைகளை குறிப்பிட்டு
  • ப்ரஸ்தா²ப யாமாஸ - அனுப்பினார்

வாநரர்களில் சிறந்தவனான ஸுக்ரீவன், வாநரர்கள் அனைவரையும் அழைத்து, ஜனகனின் மகள் சீதையைக் கண்டு பிடிப்பதற்காக, அவர்களைப் பல்வேறு திசைகளில் அனுப்பினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 113 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 113 - பத்திராகாரன் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

சத்திரம் ஏந்தித்* தனி ஒரு மாணியாய்*
உத்தர வேதியில்* நின்ற ஒருவனைக்* 
கத்திரியர் காணக்* காணி முற்றும் கொண்ட* 
பத்திரா காரன் புறம் புல்குவான்* 
பாரளந்தான் என் புறம் புல்குவான்|

  • உத்தர வேதியில் - ஔதார்யத்தில் அத்விதீயனான மகாபலியின் வேள்வியில்
  • நின்ற ஒருவனை -  சென்றவவரை
  • சத்திரம் - குடையை
  • ஏந்தி - கையில் பிடித்துக் கொண்டு
  • தனி - தனி ஒருவனாக ஒப்பற்ற
  • ஒரு மாணி ஆய் - ஒரு ப்ரஹ்மசாரி வாமனனாய் போய் 
  • கத்திரியர் - அவனுக்குக் கீழ்ப்பட்ட க்ஷத்ரியர்கள்
  • காண - பார்த்துக் கொண்டிருக்கையில்
  • காணி முற்றும் - உலகம் முழுவதையும்
  • கொண்ட - நீரை ஏற்று தன்னதாக்கிக் கொண்ட
  • பத்திரம் - விலக்ஷணமான, மங்களகரமான
  • ஆகாரன் - வடிவை உடையனான இவன்
  • புறம் - என் முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • பார் - பூமியை
  • அளந்தான் – திரிவிக்கிரமனாய் அளந்த இவன்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

குடையைப் பிடித்தவனாய், நிகரற்ற ஒரு ப்ரஹ்மசாரியாய், மகாபலியிடம் மூவடி மண்ணை யாசகமாகப் பெற்று, க்ஷத்ரியர்கள் பார்த்துக் கொண்டு இருக்கையில்,  உலகம் அனைத்தையும் தனதாக்கிக் கொண்ட சிறந்த லக்ஷணங்களைக் கொண்ட வடிவுடையவன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! த்ரிவிக்ரமனாய் பூமியை அளந்தவன், என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 034 - திருவாலி – திருநகரி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

034. திருவாலி – திருநகரி (திருநாங்கூர்)
முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 42 - 1

001. திவ்ய ப்ரபந்தம் - 725 - அயோத்தி மன்னனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
ஆலின் இலைப் பாலகனாய்* அன்று உலகம் உண்டவனே*
வாலியைக் கொன்று அரசு* இளைய வானரத்துக்கு அளித்தவனே*
காலின் மணி கரை அலைக்கும்* கணபுரத்து என் கருமணியே*
ஆலி நகர்க்கு அதிபதியே* அயோத்திமனே தாலேலோ|

002. திவ்ய ப்ரபந்தம் - 1078 - நால்வகைத் திருக்கோலங் கொண்டவன் இடம்
பெரிய திருமொழி - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது* 
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* 
தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* 
மா மலை ஆவது நீர்மலையே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1188 - சிந்தனைக்கு இனியான் திருவாலி அம்மான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்ததன் பின் வணங்கும்* 
என் சிந்தனைக்கு இனியாய்* திருவே என் ஆர் உயிரே*
அம் தளிர் அணி ஆர்* அசோகின் இளந்தளிர்கள் கலந்து* 
அவை எங்கும் செந் தழல் புரையும்* திருவாலி அம்மானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1189 - அடியேன் மனத்திருந்த அணியாலி அம்மான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
நீலத் தட வரை மா மணி நிகழக்* கிடந்தது போல் அரவு அணை*
வேலைத் தலைக் கிடந்தாய்* அடியேன் மனத்து இருந்தாய்*
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட* மழை முகில் போன்று எழுந்து* 
எங்கும் ஆலைப் புகை கமழும்* அணி ஆலி அம்மானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1190 - மனத்தில் நிலை பெற்றவன் ஆலி அம்மான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி* இராமை என் மனத்தே புகுந்தது*
இம்மைக்கு என்று இருந்தேன்* எறி நீர் வளஞ் செறுவில்*
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார்* முகத்து எழு வாளை போய்* கரும்பு
அந் நல் நாடு அணையும்* அணி ஆலி அம்மானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1191 - நின் திருவடிகளை மறக்காமல் இருக்க அருள் செய்தாயே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
மின்னின் மன்னும் நுடங்கு இடை* மடவார் தம் சிந்தை மறந்து வந்து* 
நின் மன்னு சேவடிக்கே* மறவாமை வைத்தாயால்*
புன்னை மன்னு செருந்தி* வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து* 
எங்கும் அன்னம் மன்னும் வயல்* அணி ஆலி அம்மானே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1192 - அம்மானே! என்னை விட்டு நீங்க நினையாதே
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
நீடு பல் மலர் மாலை இட்டு* நின் இணை அடி தொழுது ஏத்தும்* 
என் மனம் வாட நீ நினையேல்* மரம் எய்த மா முனிவா*
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை* பரந்து பல் பணையால் மலிந்து* 
எங்கும் ஆடல் ஓசை அறா* அணி ஆலி அம்மானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1193 - அம்மானே! நீ எங்கும் செல்ல விட மாட்டேன்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கந்த மா மலர் எட்டும் இட்டு* நின் காமர் சேவடி கைதொழுது எழும்*
புந்தியேன் மனத்தே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
சந்தி வேள்வி சடங்கு நான்மறை* ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்*
அந்தணாளர் அறா* அணி ஆலி அம்மானே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1194 - புண்ணியனே! உன்னை நான் விட மாட்டேன்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து* உன் அடியேன் மனம் புகுந்த* 
அப்புலவ புண்ணியனே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்* தண் தாமரை மலரின் மிசை* 
மலி அலவன் கண்படுக்கும்* அணி ஆலி அம்மானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1195 - திருவாலி அம்மானே! என் மனத்தில் புகுந்து விட்டாய்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
சங்கு தங்கு தடங் கடல்* கடல் மல்லையுள் கிடந்தாய்* 
அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்* இனிப் போயினால் அறையோ!*
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி* இன் இள வண்டு போய்* 
இளந் தெங்கின் தாது அளையும்* திருவாலி அம்மானே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1196 - ஆயிரம் நாமமும் கூறினேன்; ஒரு சொல் உரை
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி* நின் அடைந்தேற்கு* 
ஒரு பொருள் வேதியா அரையா* உரையாய் ஒரு மாற்றம்* 
எந்தாய் நீதி ஆகிய வேத மா முனி யாளர்* தோற்றம் உரைத்து* 
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்* அணி ஆலி அம்மானே|

012. திவ்ய ப்ரபந்தம் - 1197 - இவற்றைப் பாடுவோர்க்கு இடம் வானுலகு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்* தென் ஆலி இருந்த மாயனை*
கல்லின் மன்னு திண் தோள்* கலியன் ஒலி செய்த*
நல்ல இன் இசை மாலை* நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம்* 
உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு* இடம் ஆகும் வான் உலகே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1198 - வண்டே! திருவாலிப் பெருமானிடம் எனது நிலையை உரை
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தூ விரிய மலர் உழக்கித்* துணையோடும் பிரியாதே*
பூ விரிய மது நுகரும்* பொறி வரிய சிறு வண்டே*
தீ விரிய மறை வளர்க்கும்* புகழ் ஆளர் திருவாலி*
ஏ வரி வெம் சிலையானுக்கு* என் நிலைமை உரையாயே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1199 - வண்டே! மணவாளனிடம் என் காதலைச் சொல்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பிணி அவிழு நறு நீல* மலர் கிழியப் பெடையோடும்*
அணி மலர்மேல் மது நுகரும்* அறு கால சிறு வண்டே*
மணி கழுநீர் மருங்கு அலரும்* வயல் ஆலி மணவாளன் பணி அறியேன்* 
நீ சென்று* என் பயலை நோய் உரையாயே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1200 - குருகே! மணவாளனிடம் குறிப்பறிந்து கூறு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
நீர் வானம் மண் எரி கால் ஆய்* நின்ற நெடுமால்* 
தன் தார் ஆய நறுந் துளவம்* பெறும் தகையேற்கு அருளானே*
சீர் ஆரும் வளர் பொழில் சூழ்* திருவாலி வயல் வாழும்*
கூர் வாய சிறு குருகே* குறிப்பு அறிந்து கூறாயே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1201 - வண்டே! எனது நோயை மணவாளனிடம் சொல்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
தானாக நினையானேல்* தன் நினைந்து நைவேற்கு* 
ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்* வலி செய்ய மெலிவேனோ?*
தேன் வாய வரி வண்டே* திருவாலி நகர் ஆளும்*
ஆன் ஆயற்கு என் உறு நோய்* அறியச் சென்று உரையாயே|

017. திவ்ய ப்ரபந்தம் - 1202 - குடந்தைப் பெருமானே! எனக்குத் துணைவனாகுக
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வாள் ஆய கண் பனிப்ப* மென் முலைகள் பொன் அரும்ப*
நாள் நாளும்* நின் நினைந்து நைவேற்கு* 
ஓ மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா* 
வரை எடுத்த தோளாளா* என் தனக்கு ஓர்* துணையாளன் ஆகாயே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1203 - கருட வாகனன் என் வளையும் கவர்வானோ!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தார் ஆய தன் துளவ* வண்டு உழுதவரை மார்பன்*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த* புள் பாகன் என் அம்மான்*
தேர் ஆரும் நெடு வீதித்* திருவாலி நகர் ஆளும்*
கார் ஆயன் என்னுடைய* கன வளையும் கவர்வானோ?

019. திவ்ய ப்ரபந்தம் - 1204 - மணவாளா! என் கண்ணில் நீ உள்ளாயே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கொண்டு அரவத் திரை உலவு* குரை கடல்மேல் குலவரை போல்*
பண்டு அரவின் அணைக் கிடந்து* பார் அளந்த பண்பாளா*
வண்டு அமரும் வளர் பொழில் சூழ்* வயல் ஆலி மைந்தா* 
என் கண் துயில் நீ கொண்டாய்க்கு* என் கன வளையும் கடவேனோ?

020. திவ்ய ப்ரபந்தம் - 1205 - மணவாளா! உனது நினைவால் தூங்கவே இல்லை!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்* தண் குடந்தைக் குடம் ஆடி*
துயிலாத கண் இணையேன்* நின் நினைந்து துயர்வேனோ?*
முயல் ஆலும் இள மதிக்கே* வளை இழந்தேற்கு* 
இது நடுவே வயல் ஆலி மணவாளா* கொள்வாயோ மணி நிறமே?

021. திவ்ய ப்ரபந்தம் - 1206 - மணவாளா! ஒரு நாளாவது என்னைத் தழுவு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
நிலை ஆளா நின் வணங்க* வேண்டாயே ஆகிலும்* 
என் முலை ஆள ஒருநாள்* உன் அகலத்தால் ஆளாயே*
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா* 
திருமெய்ய மலையாளா* நீ ஆள வளை ஆள மாட்டோமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 80

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 25

ஸ்கந்தம் 03

கர்தமர் வனம் சென்றபின், கபிலர் தன் தாயான தேவஹூதியை மகிழ்விக்க எண்ணி, அந்த ஆஸ்ரமத்திலேயே தங்கினார்.

ஒருநாள் தேவஹூதி, கர்தமர் தன் மகனான கபிலரைப் பற்றிக்‌ கூறியவைகளை நினைவு கூர்ந்தாள்.


கர்தமர் என்ற பெரிய ஆத்மஞானியைக் கணவராகப் பெற்றும் நாள்களை வீணே கழித்துவிட்டோம்.

மகனாக இறைவனே அவதரித்திருக்கும்போதும் இப்பிறவியை உய்விக்கும் வழியை அறியத்தவறினால், அது முட்டாள்தனம் என்றெண்ணினாள்.

கபிலர் தனித்திருக்கும் சமயத்தில், அவரிடம் சென்றாள்.

ப்ரபோ! இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து, பொறிகளின் அடிமையாய்க் காலத்தை வீணடித்துவிட்டேன். அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடக்கிறேன்.

பற்பல பிறவிகள் எடுத்து நொந்துபோய் முடிவில் உன் கருணையால் இம்மானுடப்பிறவி கிடைத்துள்ளது. நீ என்னைக் கரையேற்றவே எனக்கு மகனாகப் பிறந்துள்ளாய். என் அஞ்ஞான இருளகற்றி எனக்கு ஞானக் கண் அருள்வாய்!

அனைத்து ஜீவராசிகளுக்கும் நீயே தலைவன். அனைத்திற்கும் மூலகாரணன். நற்குணங்களின் கொள்கலன். ஜீவர்களை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் சூரியன் போல் அஞ்ஞான இருளிலிருந்து ஞானப் பாதையில் அழைத்துச் செல்ல வந்த ஞான சூரியன் நீயே.

உன்னைத் தவிர சரணமடையத் தக்கவர்கள் யாருளர்? ஆகவே, உன்னையே சரணடைகிறேன். ப்ரக்ருதி (மாயை), புருஷன் (இறைவன்) பற்றிய தத்துவத்தை எனக்கு உபதேசம் செய்தருளும்படி இறையான உன்னை வணங்கி வேண்டுகிறேன், என்றாள்.

தேவஹூதி தன் பொருட்டு வேண்டினாலும், இவற்றை நாம் படிக்கும்போது, நம்பொருட்டுச் சொன்னாள் என்றே தோன்றுகிறது. ஒருவரின் பொருட்டுச் சொன்னாலும், ஞானவழி நம் அனைவர்க்குமானதே..

தாய் கேட்ட கேள்வி, அனைத்து ஜீவர்களுக்கும் முக்தியில் ஆசையை உண்டு பண்ணுவதாகவும், எவ்வித மறைவு எண்ணமும் இன்றித் தூய்மையான வேண்டுகோளாகவும் இருப்பது கண்டு, சான்றோர்களின் புகலிடமான கபிலர் முகம்‌ மலர்ந்தார்.

பின்னர் தாயிடம்‌ கூறலானார். தாயே! ஆன்மாவின் உண்மையை உணர்த்தும் ஞானயோகம் உலகியல் தளைகளிலிருந்து விடுபட, சிறந்த சாதனமாகும். இதில்‌ இன்ப துன்பங்கள் இல்லை. இரண்டும்‌ அழிந்துவிடும்.

முன்பு, நாரதர் முதலிய மஹரிஷிகளுக்கு இதை நான் உபதேசித்தேன்.

ஒரு ஜீவன் தளைகளில் சிக்கிக் கொள்ளவும், அதிலிருந்து விடுபடவும் முக்கிய காரணமாக இருப்பது மனமே. உலகியல் இன்பங்களில் சென்றால் அது தளைப்படுகிறது. இறைவனிடம் ஒன்றினால் விடுதலை அடைகிறது. உண்மையற்ற பொய்யான உலகியல் விஷயங்களில் ஈடுபட்டால், காமம், ஆசை, கோபம் முதலியவற்றிற்குக் காரணமாகிறது. அதே மனம், ஆசைகளை ஒதுக்கிவிட்டுத் தூய்மை பெறுமாயின் இன்ப துன்பங்களைச் சமமாக எண்ணும் தன்மை பெறுகிறது.

இவ்வாறான மனம் கொண்டவன், ஆன்ம ஞானம், வைராக்யம், பக்தி ஆகியவற்றைக் கொண்டவனாய் இருப்பான். ப்ரக்ருதியின் பரிமாணங்களான உடல், பொறி, புலன், மனம்,‌ப்ராணன் இவைகளிலிருந்து இயல்பாகத் தனித்திருப்பான். முக்குணங்களால் பாதிப்படையமாட்டான். தேவர், மனிதர் என்ற வேறுபாடு அற்றிருப்பான். உடலால் வேறுபட்டிருப்பினும், ஞானத்தினால் வேறுபாடில்லாமலும், அணுவிலிருந்து பிரிக்கமுடியாதவனாயும்‌ இருப்பான்.

இவன் இன்ப துன்பங்களில் ஈடுபடாமல் தனித்திருக்கும் ஆன்மாவையும், உலகியல் தளைகளை விளைவிக்கும் திறன் இன்றித் தோற்றுப்போன மாயையையும் காண்பான். அம்மா! அனைத்து ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக விளங்கும் பகவானிடம் ஏற்படும் பக்தியைத்தவிர, முக்தி அடைய வேறொரு எளிய சாதனம் இல்லவே இல்லை என்பது யோகிகளின் கருத்து.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்