||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 1
பெரியாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 71 - ஏழுலகுடையவனே ஆயர் போரேறு
பெரியாழ்வார் திருமொழி - முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி*
உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர*
கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி*
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ்*
சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே*
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை*
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே|
ஸ்ரீ ஆண்டாள்
002. திவ்ய ப்ரபந்தம் - 535 - வாமனன் வந்து கூட்டுவார் என்றால் கூடலே கூடு
நாச்சியார் திருமொழி - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
காட்டில் வேங்கடம்* கண்ணபுர நகர்*
வாட்டம் இன்றி* மகிழ்ந்து உறை வாமனன்*
ஓட்டரா வந்து* என் கைப் பற்றி தன்னொடும்*
கூட்டு மாகில்* நீ கூடிடு கூடலே|
குலசேகராழ்வார்
003. திவ்ய ப்ரபந்தம் - 719 - கணபுரத்தின் கருமணியே! தாலேலோ!
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
மன்னு புகழ்க் கௌசலை தன்* மணி வயிறு வாய்த்தவனே*
தென் இலங்கைக் கோன் முடிகள்* சிந்து வித்தாய் செம்பொன் சேர்*
கன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் கருமணியே*
என்னுடைய இன்னமுதே* இராகவனே தாலேலோ|
004. திவ்ய ப்ரபந்தம் - 720 - எண் திசையும் ஆள்பவனே! தாலேலோ!
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
புண்டரிக மலர் அதன் மேல்* புவனி எல்லாம் படைத்தவனே*
திண் திறலாள் தாடகை தன்* உரம் உருவச் சிலை வளைத்தாய்*
கண்டவர்தம் மனம் வழங்கும்* கணபுரத்து என் கருமணியே*
எண் திசையும் ஆளுடையாய்* இராகவனே தாலேலோ|
005. திவ்ய ப்ரபந்தம் - 721 - சனகன் மருமகனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
கொங்கு மலி கருங்குழலாள்* கௌசலைதன் குல மதலாய்*
தங்கு பெரும் புகழ்ச் சனகன்* திரு மருகா தாசரதீ*
கங்கையிலும் தீர்த்த மலி* கணபுரத்து என் கருமணியே
எங்கள் குலத்து இன்னமுதே* இராகவனே தாலேலோ|
006. திவ்ய ப்ரபந்தம் - 722 - வில்லுக்கு ஒருவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
தாமரை மேல் அயனவனைப்* படைத்தவனே தயரதன் தன்*
மா மதலாய்* மைதிலி தன் மணவாளா*
வண்டினங்கள் காமரங்கள் இசைபாடும்* கணபுரத்து என் கருமணியே*
ஏமருவும் சிலை வலவா* இராகவனே தாலேலோ|
007. திவ்ய ப்ரபந்தம் - 723 - பரதனுக்கு நாடு தந்தவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பார் ஆளும் படர் செல்வம்* பரத நம்பிக்கே அருளி*
ஆரா அன்பு இளையவனோடு* அருங்கானம் அடைந்தவனே*
சீர் ஆளும் வரை மார்பா* திருக் கண்ணபுரத்து அரசே*
தார் ஆரும் நீண் முடி* என் தாசரதீ தாலேலோ|
008. திவ்ய ப்ரபந்தம் - 724 - சிற்றன்னை சொற்கொண்டவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
சுற்றம் எல்லாம் பின் தொடரத்* தொல் கானம் அடைந்தவனே*
அற்றவர்கட்கு அருமருந்தே* அயோத்தி நகர்க்கு அதிபதியே*
கற்றவர்கள் தாம் வாழும்* கணபுரத்து என் கருமணியே*
சிற்றவை தன் சொற் கொண்ட* சீராமா தாலேலோ|
009. திவ்ய ப்ரபந்தம் - 725 - அயோத்தி மன்னனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
ஆலின் இலைப் பாலகனாய்* அன்று உலகம் உண்டவனே*
வாலியைக் கொன்று அரசு* இளைய வானரத்துக்கு அளித்தவனே*
காலின் மணி கரை அலைக்கும்* கணபுரத்து என் கருமணியே*
ஆலி நகர்க்கு அதிபதியே* அயோத்திமனே தாலேலோ|
010. திவ்ய ப்ரபந்தம் - 726 - தேவர்க்கு அமுதம் அளித்தவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மலையதனால் அணை கட்டி* மதிள் இலங்கை அழித்தவனே*
அலை கடலைக் கடைந்து* அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே*
கலை வலவர் தாம் வாழும்* கணபுரத்து என் கருமணியே*
சிலை வலவா சேவகனே* சீராமா தாலேலோ|
011. திவ்ய ப்ரபந்தம் - 727 - இலங்கையை அழித்தவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
தளை அவிழும் நறுங் குஞ்சித்* தயரதன் தன் குல மதலாய்*
வளைய ஒரு சிலையதனால்* மதிள் இலங்கை அழித்தவனே*
களை கழுநீர் மருங்கு அலரும்* கணபுரத்து என் கருமணியே*
இளையவர்கட்கு அருள் உடையாய்* இராகவனே தாலேலோ|
012. திவ்ய ப்ரபந்தம் - 728 - யாவரையும் படைத்தவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!*
யாவரும் வந்தடி வணங்க* அரங்கநகர்த் துயின்றவனே!*
காவிரி நல் நதி பாயும்* கணபுரத்து என் கருமணியே*
ஏவரி வெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ|
013. திவ்ய ப்ரபந்தம் - 729 - காகுத்தனின் பக்தர்கள் ஆவர்
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்
கன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் காகுத்தன் தன் அடிமேல்*
தாலேலோ என்று உரைத்த* தமிழ்மாலை*
கொல் நவிலும் வேல் வலவன்* குடைக் குலசேகரன் சொன்ன*
பன்னிய நூல் பத்தும் வல்லார்* பாங்காய பத்தர்களே|
திருமங்கையாழ்வார்
014. திவ்ய ப்ரபந்தம் - 1648 - தலைவி ஸௌரிராஜப் பெருமாளைக் கண்டு விட்டாளோ?
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
சிலை இலங்கு பொன் ஆழி* திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்*
மலை இலங்கு தோள் நான்கே* மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்*
முலை இலங்கு பூம் பயலை* முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால்*
கலை இலங்கு மொழியாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
015. திவ்ய ப்ரபந்தம் - 1649 - ஸௌரி ராஜனின் வீரத்தை இவள் வியக்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
செருவரை முன் ஆசு அறுத்த* சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால்*
பொரு வரை முன் போர் தொலைத்த* பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால்*
ஒருவரையும் நின் ஒப்பார்* ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால்*
கரு வரைபோல் நின்றானைக்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
016. திவ்ய ப்ரபந்தம் - 1650 - ஸௌரி ராஜனின் தோற்றத்தை வர்ணிக்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
துன்னு மா மணி முடிமேல்* துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்*
மின்னு மா மணி மகர குண்டலங்கள்* வில் வீசும் என்கின்றாளால்*
பொன்னின் மா மணி ஆரம்* அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
கன்னி மா மதிள் புடை சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
017. திவ்ய ப்ரபந்தம் - 1651 - ஸௌரி ராஜனை இவள் கண்டாள் என்பது உறுதி
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
தார் ஆய தண் துளப வண்டு* உழுத வரை மார்பன் என்கின்றாளால்*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன்* என் அம்மான் என்கின்றாளால்*
ஆரானும் காண்மின்கள்* அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால்*
கார் வானம் நின்று அதிரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
018. திவ்ய ப்ரபந்தம் - 1652 - ஸௌரி ராஜனின் அவயவங்களையே வர்ணிக்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
அடித்தலமும் தாமரையே* அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
முடித்தலமும் பொன் பூணும்* என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*
வடித் தடங் கண் மலரவளோ* வரை ஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்*
கடிக் கமலம் கள் உகுக்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
019. திவ்ய ப்ரபந்தம் - 1653 - ஸௌரி ராஜன் உருவத்தையே புகழ்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பேர் ஆயிரம் உடைய பேராளன்* பேராளன் என்கின்றாளால்*
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன்* எண் தோளன் என்கின்றாளால்*
நீர் ஆர் மழை முகிலே* நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
கார் ஆர் வயல் அமரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
020. திவ்ய ப்ரபந்தம் - 1654 - ஸௌரி ராஜன் அழகில் இவள் மயங்கி விட்டாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
செவ் அரத்த உடை ஆடை* அதன் மேல் ஓர் சிவளிகைக் கச்சு என்கின்றாளால்*
அவ் அரத்த அடி இணையும்* அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
மை வளர்க்கும் மணி உருவம்* மரகதமோ? மழை முகிலோ? என்கின்றாளால்*
கை வளர்க்கும் அழலாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
021. திவ்ய ப்ரபந்தம் - 1655 - கண்ணபுரத்து அம்மானையே இவள் காதலிக்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கொற்றப் புள் ஒன்று ஏறி* மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்*
வெற்றிப் போர் இந்திரற்கும்* இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*
பெற்றக்கால் அவன் ஆகம்* பெண் பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
கற்ற நூல் மறையாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
022. திவ்ய ப்ரபந்தம் - 1656 - ஸௌரி ராஜனை இவள் பிரிய மாட்டாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
வண்டு அமரும் வனமாலை* மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால்*
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று*
ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*
பண்டு இவரைக் கண்டு அறிவது* எவ் ஊரில்? யாம் என்றே பயில்கின்றாளால்*
கண்டவர் தம் மனம் வழங்கும்*
கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
023. திவ்ய ப்ரபந்தம் - 1657 - பொன்னுலகில் மன்னராவர்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மா வளரும் மென் நோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள் என்று*
கா வளரும் கடி பொழில் சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பா வளரும் தமிழ் மாலை* பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
பூ வளரும் கற்பகம் சேர்* பொன் உலகில் மன்னவர் ஆய்ப் புகழ் தக்கோரே|
024. திவ்ய ப்ரபந்தம் - 1658 - என் மகளின் கை வளை கழன்று விட்டதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தெள்ளியீர் தேவர்க்கும்* தேவர் திருத் தக்கீர்*
வெள்ளியீர் வெய்ய* விழு நிதி வண்ணர்*
ஓ துள்ளு நீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ?*
கை வளை கொள்வது தக்கதே?
025. திவ்ய ப்ரபந்தம் - 1659 - என் மகள் நாணத்தைத் துறந்து விட்டாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
நீள் நிலா முற்றத்து* நின்று இவள் நோக்கினாள்*
காணுமோ* கண்ணபுரம் என்று காட்டினாள்*
பாணனார் திண்ணம் இருக்க*
இனி இவள் நாணுமோ?* நன்று நன்று நறையூரர்க்கே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்