About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 24 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 80

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 50

ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ
நைகாத்மா நைக கர்ம க்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ
ரத்ந க³ர்போ⁴ த⁴நேஸ்²வர:||

  • 466. ஸ்வாபநஸ் - மாயையின் சக்தியைப் பயன்படுத்தி மக்களை தூங்கச் செய்பவர். எதிரிகளை நினைவிழக்கச் செய்பவர்.
  • 467. ஸ்வவஸோ - தன் வசத்தில் எப்போதும் இருப்பவர். சுதந்திரமானவர். சொந்தக் கட்டுப்பாட்டின் கீழ் அவரது செயல்பாடுகளைச் செய்வதற்கு யாரிடமிருந்தும் எந்த ஆதரவும் தேவையில்லாதவர்.
  • 468. வ்யாபீ - எங்கும் பரந்திருப்பவர். வியாபித்து இருப்பவர்
  • 469. நைகாத்மா - அநேக உருவங்களில் இருப்பவர். ஒவ்வொரு உயிரினத்திலும் அந்தர்யாமி வசிப்பவர்.
  • 470. நைக கர்ம க்ருத்து - அநேக செயல்களைச் செய்பவர். சொந்த விருப்பத்தின் பேரில் உருவாக்கம், வாழ்வாதாரம் மற்றும் கலைத்தல் போன்ற பல செயல்களில் ஈடுபடுகிறார்.
  • 471. வத்ஸரோ - எல்லாப் பொருளிலும், எல்லாரிடத்தும் உள்ளுறைபவர்.
  • 472. வத்ஸலோ - அன்புடையவர். தனது பக்தர்களிடம் மிகவும் பாசம் கொண்டவர். அவர்களை ஆழமாக நேசிக்கிறார்.
  • 473. வத்ஸீ - குழந்தைகளை (ஆன்மாக்களை) உடையவர். பக்தர்களைக் காப்பவர். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போல் அவர் பக்தர்களைக் காக்கிறார்.
  • 474. ரத்ந க³ர்போ⁴ - சங்கு சக்கரம் முதலான நிதியை உடையவர். ஏராளமான செல்வத்தை உடையவர். பகவான் உலகம் முழுவதையும் தனது கர்ப்பத்தில் வைத்திருக்கிறார், தனக்குள்ளேயே மகிழ்ச்சியைத் தரக்கூடிய அனைத்தையும் கொண்டிருக்கிறார். அவரது பக்தர்கள் தேடும் ரத்தினம் அவர்.
  • 475. த⁴நேஸ்²வரஹ - ஐஸ்வர்யங்களை உடனே அளிப்பவர். செல்வங்களில் மிகப் பெரியது மோட்சம். பகவான் தம்மிடம் முற்றிலும் சரணடையும் பக்தர்களுக்கு இந்தப் பெரும் செல்வத்தை வழங்குபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.17 

அவிநாஸி² து தத்³வித்³தி⁴ 
யேந ஸர்வ மித³ம் ததம்|
விநாஸ² மவ் யயஸ் யாஸ்ய 
ந கஸ்²சித் கர்து மர் ஹதி||

  • அவிநாஸி² - அழிக்க இயலாதது 
  • து - என்று 
  • தத்³ - அதை 
  • வித்³தி⁴ - அறிந்து கொள் 
  • யேந- எதனால் 
  • ஸர்வம் - உடல் முழுவதும் 
  • இத³ம் - இது 
  • ததம் - பரவியுள்ளது 
  • விநாஸ²ம் - அழிவு 
  • அவ்ய யஸ்ய - அழிவற்றதற்கு 
  • அஸ்ய - அதன் 
  • கஸ்²சித் ந - யாருமில்லை 
  • கர்தும் - செய்ய 
  • அர்ஹதி - கூடியவர்

ப்ராண, அபான, வ்யான, ஸமான, உதான என்னும் ஐந்து ஜட காற்றுகளின் களங்கத்தில் இருந்து ஆத்மா தூய்மை அடைந்து உடல் முழுவதும் பரவி இருப்பதை அழிவற்றது என்று நீ அறிந்து, அதை கொல்லக் கூடியவர் எவருமில்லை என உணர வேண்டும். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.15

ரூபம் ஸ ஜக்³ருஹே மாத்ஸ்யம் 
சாக்ஷு ஷோத³தி⁴ ஸம்ப் லவே|
நாவ்யா ரோப்ய மஹீ மய்யா
மபாத்³ வைவஸ் வதம் மநும்||

  • சாக்ஷு ஷோத³தி⁴ - சாக்ஷு ஷமன் வந்தரத்தில்
  • ஸம்ப் லவே - ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில்
  • ஸ - அந்த பகவான்
  • மாத்ஸ்யம் - மத்ஸ்ய
  • ரூபம் - உருவத்தை
  • ஜக்³ருஹே - எடுத்துக் கொண்டார்
  • மஹீ மய்யாம் நாவி - பூமி ரூபமான ஓடத்தில்
  • வைவஸ் வதம் மநும் - வைவஸ்வத மனுவை
  • ஆரோப்ய - ஏற்றுக் கொண்டு
  • அபாத்³ - காப்பாற்றினார்

பத்தாவதாக, சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் ஏற்பட்ட மகாபிரளயத்தில் 'மத்ஸ்யாவதாரம்' எடுத்து, வைவஸ்வத மனுவை பூமி ரூபமாக வந்த தோணியில் ஏற்றிக் கொண்டு காப்பாற்றினார்.

குறிப்பு: மன்வந்தர முடிவில் பிரளயம் இல்லாவிட்டாலும், ஸத்ய விரத மனுவிற்குத் தனது மாயையைக் காண்பிப்பதாகச் செய்த திருவிளையாடல் போலும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.15

ஸர்வ ஸா²ஸ்த்ரார்த² தத்த்வஜ்ஞ:
ஸ்ம்ருதி மாந் ப்ரதி பா⁴நவாந்|
ஸர்வ லோக ப்ரிய: ஸாது⁴
ரதீ³நாத்மா விசக்ஷண:||

  • ஸர்வ ஸா²ஸ்த்ரார்த² - எல்லா சாஸ்திரத்தின் உண்மையையும்
  • தத்த் வஜ்ஞஹ - அறிந்தவர்
  • ஸ்ம்ருதி மாந் -  ஞாபகம் உடையவர்
  • ப்ரதி பா⁴ந வாந் - மேலும் மேலும் விஷயங்கள் விளங்கப் பெற்ற ஞான விசேஷம் உடையவர்
  • ஸர்வ லோக ப்ரியஸ் -  ஸகல லோகங்களுக்கும் பிரியமானவர்
  • ஸாது⁴ஹு - ஸாதுவானவர்
  • அதீ³நாத்மா -  கம்பீர ஸ்வபாவம் உள்ளவர்
  • விசக்ஷணஹ - வெகு சமர்த்தர்

அவன் சாத்திரங்கள் அனைத்தின் உண்மைப் பொருளையும், அவற்றின் சாரத்தையும் அறிந்தவனாகவும், சிறந்த நினைவுத் திறனும், அறிவாற்றலும் கொண்டவனாகவும், மென்மையானவனாகவும், கலங்காத ஆத்மாவைக் கொண்டவனாகவும், சரியான நேரங்களில் சரியான செயல்களைச் செய்யும் தெளிந்த சிந்தை கொண்டவனாகவும், உலகங்கள் அனைத்தினாலும் விரும்பப்படுகிறவனாகவும் இருக்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 62 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 62 - வெண்ணெய் உண்ட கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

தாழியில் வெண்ணெய்* 
தடங்கையார விழுங்கிய* 
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்* 
உன்னைக் கூவுகின்றான்* 
ஆழி கொண்டுன்னை எறியும்* 
ஐயுறவில்லை காண்* 
வாழ உறுதியேல்* 
மா மதீ! மகிழ்ந்து ஓடி வா!

  • தாழியில் - பானையிலே சேமித்து வைத்திருக்கிற
  • வெண்ணெய் - வெண்ணெய் முழுவதையும்
  • தட - தன் பெரிய 
  • கை ஆர - கையால் நிறைய அள்ளி எடுத்து
  • விழுங்கிய - ஒரே வாயில் விழுங்கி அமுது செய்த
  • பேழை வயிறு - பெரு வயிற்றை உடையவனான 
  • எம்பிரான் கண்டாய் - என் கண்ணபிரானைப் பார்
  • உன்னை கூவுகின்றான் - உன்னைக் கூவி அழைக்கிறான்
  • ஆழிகொண்டு - நீ வராததால் தன் சக்கராயுதத்தை அனுப்பி
  • உன்னை எறியும் - உன்னை கொல்லப்போகிறான்
  • ஐயுறவு இல்லை - இதில் சந்தேகமே இல்லை;
  • வாழ உறுதியேல் - உனக்கு உயிர் வாழ விருப்பம் இருந்தால்
  • மா மதீ! மகிழ்ந்து ஓடி வா! - புகழுடைய சந்திரனே! மகிழ்ந்து ஓடி வா

பானையில் வைத்திருந்த, வெண்ணெய் முழுவதையும், தன் பெரிய கையால் எடுத்து, ஒரே வாயில் விழுங்கி அமுது செய்த பெருவயிற்றை உடையவனான என் கண்ணபிரான் உன்னைக் கூவி அழைக்கின்றான். அவன் பல முறை அழைத்தும் நீ வராததால், தன் சக்கராயுதத்தை அனுப்பி, நிச்சயமாக உன்னைக் கொல்லப் போகிறான். இதில் சந்தேகமே இல்லை. உனக்கு உயிர் வாழ விருப்பம் இருந்தால், மாமதியே! மகிழ்ந்தோடி வந்து என் மகனுடன் விளையாடுவாயாக.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
5 ஆழ்வார்கள் - 129 பாசுரங்கள்

1. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள் 
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 3656 - 3666 - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி 

-----------
2. குலசேகராழ்வார் - 11 பாசுரங்கள் 
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 719 - 729 - எட்டாம் திருமொழி

-----------
3. பெரியாழ்வார் - 1 பாசுரம் 
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 71 - முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம் 

-----------
4. ஸ்ரீ ஆண்டாள் - 1 பாசுரம் 
1. நாச்சியார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 535 - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

-----------
5. திருமங்கையாழ்வார் - 105 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) – (100 பாசுரங்கள்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1648 - 1657 - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி
  • திவ்ய ப்ரபந்தம் - 1658 - 1667 - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி
  • திவ்ய ப்ரபந்தம் - 1668 - 1677 - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி
  • திவ்ய ப்ரபந்தம் - 1678 - 1687 - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி
  • திவ்ய ப்ரபந்தம் - 1688 - 1697 - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி    
  • திவ்ய ப்ரபந்தம் - 1698 - 1707 - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி 
  • திவ்ய ப்ரபந்தம் - 1708 - 1717 - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி    
  • திவ்ய ப்ரபந்தம் - 1718 - 1727 - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி
  • திவ்ய ப்ரபந்தம் - 1728 - 1737 - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி
  • திவ்ய ப்ரபந்தம் - 1738 - 1747 - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி

2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 2067 - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (16)
  • திவ்ய ப்ரபந்தம் - 2078 - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (27)

3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) – 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (35)

4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2759 - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (47)
  • திவ்ய ப்ரபந்தம் - 2782 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
-----------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
பேறு தரினும் பிறப்பு இறப்பு நோய் மூப்பு*
வேறு தரினும் விடேன் கண்டாய் ஏறு நீர்*
வண்ண புரத்தாய் என் மனம் புகுந்தாய் வைகுந்தா*
கண்ண புரத்தாய் உன் கழல்*

  • ஏறு நீர் வண்ணம் புரத்தாய் – அலைகள் கரை மேல் புரளப் பெற்ற நீரை உடைய கடல் போன்ற கருநிறத்தைக் கொண்ட திருமேனியை உடையவனே!
  • என் மனம் புகுந்தாய் – எனது மனத்தில் குடி புகுந்துள்ளவனே!
  • வைகுந்தா – ஸ்ரீ வைகுண்டத்தில் எப்போதும் வாழ்பவனே!
  • கண்ணபுரத்தாய் – திருக்கண்ணபுரம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
  • நீ அடியேனுக்கு பேறு தரினும் – பரம புருஷார்த்தமாகிய மோக்ஷத்தைக் கொடுத்தாலும்
  • வேறு – அதற்கு மாறாக
  • பிறப்பு இறப்பு நோய் மூப்பு தரினும் – ஜநநத்தையும் மரணத்தையும் வியாதியையும் கிழத்தனத்தையும் தந்தாலும்
  • இந்த லீலா விபூதியிலேயே அலைய வைத்தாலும்
  • உன் கழல் – உனது திருவடிகளை
  • விடேன் – உபாயமாகக் கொண்டிருப்பேனே அன்றி ஒரு போதும் விட்டு நீங்கேன் 
  • கண்டாய் – முன்னிலையசை, தேற்றமுமாம்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 71

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ருக்மியின் கோபம்|

கிருஷ்ணனுடன் சண்டைக்கு வந்த எல்லா அரசர்களும் தோல்வியை ஒப்புக் கொண்டு ஓட வேண்டியதாயிற்று. ஜராசந்தன் சிசுபாலனைப் பார்த்து, "ஓ அரசே! கவலைப்படாதே, இன்பமும் துன்பமும் எல்லாருடைய வாழ்க்கையில் நிச்சயமாக இருக்கும். எப்படி மரப் பொம்மை அதை ஆட்டி வைப்பவன் இஷ்டத்திற்கு ஆடுகிறதோ, அது போலவே நம் ஈஸ்வரனின் விருப்பப் படித்தான் ஆட வேண்டியிருக்கிறது. இருபத்திமூன்று ஆக்ஷௌஹினி சேனைகளைக் கொண்டு ஜராசந்தனாகிய நான் பதினேழு முறை கிருஷ்ணனிடம் தோற்றுவிட்டேன். இருந்தும், இது பகவானின் செய்கை என்று என்னை நான் தேற்றிக் கொள்ளுகிறேன்" என்று சொன்னான். ஆனால் சிசுபாலன் ஆறுதல் அடையவில்லை. மனம் நொந்து, அவன் தன் நாடு திரும்பினான்.


பீஷ்மகருக்கோ, நடந்த செயல்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன, ஆனால் கிருஷ்ணரின் எதிரியான ருக்மிக்கோ, தன் தங்கையைக் கிருஷ்ணர் மனம் புரிவது, அதுவும் பலாத்காரத்தினால் மனம் புரிவது, துளியும் பிடிக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட கோபத்தை அவனால் தாங்க முடியவில்லை. தன் சேனைகளைத் திரட்டிக் கிருஷ்ணரைப் பின் தொடர்ந்தான். புறப்படுவதற்கு முன், கவசம் அணிந்து, கையில் வில்லை எடுத்துக் கொண்டு, எல்லோருக்கும் முன்னால் அவன் ஒரு வீரசபதம் செய்தான், "கிருஷ்ணரைக் கொன்று, ருக்மிணியை மீட்காமல் நான் இந்த நகரத்திற்குள் பிரவேசிக்கமாட்டேன்" என்றான்.

கிருஷ்ணரைப் பிடிப்பதற்காக அவன் வெகு வேகமாகச் சென்றான். தூரத்தில் கிருஷ்ணர் தெரிந்ததும், "ஏ திருடா! நில்! ஏன் தங்கையைத் தூக்கிச் செல்லும் துணிவு உனக்கு எப்படி ஏற்பட்டது?" என்று கத்தினான். மூன்று அம்புகளால் அவன் கிருஷ்ணரைத் தாக்கினான். பதிலுக்குக் கிருஷ்ணர் புன்சிரிப்புடன், அவனுடைய வில்லை துண்டுகளாக உடைத்தார். அவனையும் ஆறு அம்புகளால் தாக்கினார். ருக்மி இன்னொரு வில்லை எடுத்தான், ஆனால் கிருஷ்ணர் அதையும் துண்டு துண்டாக்கினார். இப்படி அவன் புது வில்லை எடுப்பதும், அதைக் கிருஷ்ணர் துண்டாக்குவதும் வெகு நேரம் நடந்தது.

கடைசியில் கையில் கத்தியுடன் ருக்மி இரதத்திலிருந்து குதித்து, கிருஷ்ணர் மீது பாய்ந்தான். ருக்மியைக் கொல்லக் கிருஷ்ணர் தாமும் கத்தியைக் கையிலெடுத்தார். தன் அண்ணன் கொல்லப்படப் போகிறான் என்று ருக்மிணி பயந்தாள். அவள் கிருஷ்ணரின் காலில் விழுந்து, "தயவு செய்து ஏன் அண்ணனைக் கொன்றுவிடாதீர்கள்" என்ச்று கெஞ்சினாள். பயத்தினால் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் முகம் வெளிறி விட்டிருந்தது.

கிருஷ்ணர் ருக்மியின் மீது இறக்கம் காட்டி, அவனை வெட்ட வேண்டாம் என்று தீர்மானித்தார். ஆனால் அவன் அகந்தையைக் கொல்ல வேண்டுமே! அதற்காக, ஒரு துணியினால் ருக்மியைக் கட்டினார். பிறகு அவனுடைய குடுமி, மீசை, தாடி இவற்றையெல்லாம் அரைகுறையாக மழித்து, அவன் முகத்தை விகாரமாக்கினர். கிருஷ்ணர் இப்படி ருக்மியை விகாரப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் பலராமர் யாதவப் படையுடன் அங்கு வந்து சேர்ந்தார். அவர் ருக்மி மீது பரிதாபப்பட்டு, கிருஷ்ணரைப் பார்த்து, "நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது" என்று கூறினார்.

பிறகு பலராமர் ருக்மிணியைப் பார்த்து, "உன் அண்ணன் மீதுள்ள அன்பு காரணமாக நீ இப்பொழுது சங்கடப் படுகிறாய். ஆனால் நீ சங்கடப்படத் தேவையில்லை. எல்லாவற்றையும் மறந்து, நீ கிருஷ்ணரோடு மகிழ்ச்சியோடு போய் வா" என்று அறிவுரை கூறினார். ருக்மி கிருஷ்ணர் சென்ற தேரையே வெகு நேரம் பார்த்துக் கொண்டு நின்றான். அவன் தன் சபதப்படி ஊர் திரும்பவில்லை. அங்கேயே ஒரு சிறிய நகரை கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தான். கிருஷ்ணர் பிறகு ருக்மிணியுடன் தேரில் துவாரகைக்கு புறப்பட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி ஏழாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

077 நீரோருகம் கொண்டேனோ காசி சிங்கனைப் போலே|

நீரோருகம் என்பது தாமரை மலரைக் குறிக்கும்.

புனித ஸ்தலமான காசியில், சிங்கன் என்பவன் வசித்து வந்தான். ஸ்ரீமன் நாராயணனின் தீவிர பக்தனான அவன், அனுதினமும் குளத்திலிருந்து தாமரை மலரை, தானே பறித்து, எம்பெருமானை அலங்கரித்து, வணங்குவான். சிறந்த நீச்சல் வீரனான சிங்கனின் நீச்சல் திறமை, நாளுக்கு நாள் வளர, விளைவாக, அவனுள் அகந்தையும் மலர்ந்தது.


கங்கை நதியின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு அநாசியமாக நீச்சல் அடிக்கும் அளவிற்கு, திறமையும் வளர்ந்தது. ஒரு சமயம், சிங்கன் நீச்சல் அடிக்கையில், நதியின் சுழலில் சிக்கிக் கொண்டான். கங்கை அவனை அடித்துச் சென்றது. அவனது நீச்சல் திறமை கை கொடுக்காமல் போக, கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கத் தொடங்கினான்.

தனது அகந்தையே தனது இந்நிலைமைக்கு காரணம் என்பதை உணர்ந்த சிங்கன், கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து முதலையிடம் சிக்கிய கஜேந்திரனைக் காத்த நாராயணனின் நினைவு வர, "நாராயணா! முதலையிடம் சிக்கிய கஜேந்திரனைப் போல், அகந்தையில் சிக்கியுள்ள நானும் உன்னிடம் சரணாகதி அடைகிறேன். என்னை காப்பாற்று.”, என்று சரணாகதி அடைந்தான்.

காற்று பலமாக வீச, நதியில் ஒரு பெரிய அலை எழுந்து வந்து அவனை கரையில் சேர்த்தது. இறைவனின் அருள் தான் தன்னைக் காத்தது என அறிந்த அவன், அகந்தையை விட்டொழித்தான். அன்று முதல், அனுதினமும் ஸ்ரீமன் நாராயணனை மலர்களால் அலங்கரித்து, அகந்தையின்றி சேவைப் புரிந்து வாழ்ந்தான்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "காசி சிங்கனைப் போல தினமும் ஸ்ரீமன் நாராயணனை தாமரை மலர்கள் கொண்டு அலங்கரித்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

மழை கண்ட பாலை

ஸ்கந்தம் 01

அரசவைக்குத் திரும்பிய தர்மபுத்ரர் காந்தாரியையும் த்ருதராஷ்ட்ரனையும் ஒருவாறு தேற்றினார்.

பீஷ்மராலும் கண்ணனாலும் சொல்லப்பட்ட அத்தனை தர்மங்களையும் கேட்டு, ஆட்சிப் பொறுப்பை ஏற்று தர்மத்தோடு அரசாட்சி செய்யலானார்.

அவரது ஆட்சியில் நன்றாக மழை பொழிந்தது. பூமி விரும்பியவற்றை எல்லாம் கொடுத்தது. பசுக்கள் ஏராளமான பாலைப் பொழிந்தன. ஒவ்வொரு பருவ காலத்திலும், அவற்றிற்கேற்ற விளைச்சலும், ஔஷதிகளும் நன்கு பலன் கொடுத்தன.


தர்மபுத்ரரின் ஆட்சியில் ஆதி தைவிக, ஆதிபௌதிக, ஆத்யாத்மிகமான மனக்லேசங்கள், வியாதிகள், பருவகாலத் துயரங்கள், இயற்கையினால் ஏற்படக்கூடிய இடர்கள் ஆகியவை ஒருபொழுதும் ஏற்படவில்லை. அனைவரும் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர் .

சில மாதங்கள் கழித்து, கண்ணன் துவாரகைக்குக் கிளம்பினான்.

எல்லோரும் அவனது பிரிவைத் தாங்க முடியாமல் வருந்தனர்.

அஸ்தினாபுரத்து மக்கள் நாடெங்கிலும் சாலையின் இரு மருங்கிலும் நின்று பிரிவுத் துயரை அடக்கிக் கொண்டு வழியனுப்பினர். பெண்கள் உப்பரிகையில் நின்று கொண்டு புஷ்பங்களைத் தூவினர்.

யுதிஷ்டிரர் கண்ணனின் மேலுள்ள பிரியத்தால், கண்ணன் மறுத்த போதிலும் அவனது பாதுகாப்புக்கென்று ஒரு சேனையை உடன் அனுப்பினார்.

காற்றாய்ப் பறந்த ரதம் துவாரகை நகர எல்லையை அடைந்தது. நகரின் வாயிலை அடைந்ததும், யுதிஷ்டிரர் அனுப்பிய சேனையைத் திருப்பி அனுப்பி விட்டு, கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதினான்.

அவ்வளவு தான். கண்ணனின் சங்க நாதத்தை அறியாதவர்களா துவாரகை மக்கள்? பல காலமாக கண்ணனைக் காணாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

சபரி தினமும் ராமனுக்காக எதிர்பார்த்து, எத்தனையோ வருடங்களாக தினமும் கோலமிட்டு, புஷ்பங்களும் கனிகளும் பறித்து வைத்துக் கொண்டு அது வரை தான் பார்த்தேயிராத ராமனுக்காகக் காத்திருந்தாள்.

துவாரகை மக்களோ கண்ணனின் அன்பில் திளைத்தவர்களாயிற்றே. எதிர்பார்த்து பார்த்து, எப்போது கண்ணன் வந்தாலும் வரவேற்பதற்காக ஆரத்தி, புஷ்பங்கள், மங்கள திரவியங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருந்தனர்.

சங்கநாதம் கேட்டதும், அனைவரும் வீதிக்குப் பாய்ந்தோடி வந்தனர். துதிபாடிகளும், நர்த்தகிகளும், கண்ணைன் நண்பர்களும், மந்திரிகளும் விரைந்து வந்து எதிர்கொண்டு அழைத்தனர்.

கண்ணன் மெதுவாக ரதத்தைச் செலுத்தச் சொல்லி, மக்கள் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்ணுக்குக் கண் நோக்கி, கையசைத்துக் கொண்டு நகரத்தினுள் ப்ரவேசித்தான்.

பெண்கள் உப்பரிகையிலிருந்து புஷ்ப வர்ஷம் செய்தனர். வயதான பெண்கள் வந்து ஆரத்தி எடுத்தனர். மங்கலத் தோரணங்களும், தீபங்களும் ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் ஒளி வீசின.

மெதுவாக அரண்மனையை அடைந்தான் கண்ணன். பலராமனும், தந்தையும் அணைத்து வரவேற்றனர். வசுதேவருக்கு தேவகியையும் சேர்த்து ஏழு மனைவிகள். அத்தனை அன்னைகளையும் வணங்கினான் கண்ணன். அவர்கள் ஒவ்வொருவரும், கண்ணனைக் கண்டதும் மகிழ்ச்சியால் கண்ணீர் பெருக்கினர். பின்னர் மனைவிகள் இருக்கும் பவனத்தை அடைந்தான் கண்ணன்.

கண்ணன் அஸ்தினாபுரம் சென்றதிலிருந்து அவனது மனைவியர் பலவிதமான விரதங்களை மேற்கொண்டிருந்தனர்.
ருக்மிணி உள்பட அனைவரும் இன்று தான் கண்ணனை முதன் முதலில் பார்ப்பவர் போல் பரவசமடைந்து விரதங்களை விட்டு எழுந்தோடி வந்தனர்.

ஆத்மாராமனான கண்ணன் எவ்வித அழகிலும் மயங்குவதில்லை. மன்மதனும் அவன் மனத்தில் எந்த விகாரத்தையும் ஏற்படுத்த முடியாமல் தோற்றுப் போனான். ஆனால், அவரவர் மனோபாவத்திற்கேற்ப, கண்ணன் தன்னைத்தான் விரும்புகிறான், தன் அழகில் மயங்கிக் கிடக்கிறான் என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டார்கள். அவர்களது மனோபாவத்திற்கேற்ப கண்ணன் மனைவிகளை சந்தோஷப்படுத்தினான்.

ஸௌனக மஹரிஷி கேட்டார்.

"உத்தரையின் கர்பத்திலிருந்த குழந்தை யார்? அவருக்கு என்னவாயிற்று?"

ஸூதர் பரீக்ஷித்தின் கதையைக் கூறலானார்.

"கர்பத்திலிருந்த குழந்தை கட்டை விரல் அளவிற்கு ஒரு உருவம் தன்னைச் சுற்றிச் சுற்றி வருவதைக் கண்டது. மிக அழகாக இருந்த அந்த உருவம் கையிலிருந்த கதையைச் சுழற்றிக் கொண்டே குழந்தையைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தது.
குழந்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவ்வுருவம் மறைந்து விட்டது.

சில நாள்களில் பூமியில் பிறந்த அக்குழந்தைக்கு, யுதிஷ்டிரர் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டவன் என்று பொருள்படும்படி யாக, விஷ்ணுராதன் என்று பெயரிட்டார்.

பிறந்த குழந்தையோ, தன்னைச் சுற்றியிருந்த ஒவ்வொருவரையும் கர்பத்தில் தான் பார்த்தவர் இவரா என்று ஆராய்ந்து ஆராய்ந்து உற்று உற்றுப் பார்த்து அழுதது. அதனாலேயே பரீக்ஷித் என்று பெயர் பெற்றது."

இப்பெயருக்கு இன்னும் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவற்றை அந்தந்த தருணங்களில் காண்போம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்