||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அத்தை செய்த துதி
ஸ்கந்தம் 01
ப்ரும்மாஸ்திரத்தால் வந்த ஆபத்தை விலக்கி கர்பத்தைக் காத்தது கண்ணன் ஏவிய ஸுதர்சனம் என்பதை குந்தி உடனே புரிந்து கொண்டாள்.
வம்சத்தின் மூத்தவள். பாண்டுவுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அன்றிலிருந்து காந்தாரியின் பொறாமையைச் சகித்துக் கொண்டு, தன் பிள்ளைகளைக் கொல்லத் துணிந்த கௌரவர்களைச் சகித்துக் கொண்டு, பொறுமையின் உருவமாய்த் திகழ்பவள். பீஷ்மர், விதுரர் போன்ற பெரியவர்கள் இருந்தும் தன் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டவள். சிறு வயது முதல், ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் கண்ணன் எப்படி தங்கள் வாரிசுகளைக் காத்தான் என்பதை அருகிலிருந்து பார்த்தவள்.
உத்தரையின் வயிற்றிலிருக்கும் சிசு தான் இப்போது ஒரே வாரிசு. மற்ற அத்தனை குழந்தைகளும் இறந்து விட்டன. அதைக் கண்ணன் காப்பாற்றிக் கொடுத்ததும், அவனது கருணையை நினைத்து குந்தியின் கண்களில் நீர் திரண்டது. குந்தி வசுதேவரின் தங்கை ஆவாள். அதனால் அவள் கண்ணனுக்கு அத்தையாகிறாள்.
ரதத்திலேறி கண்ணன் துவாரகைக்குப் புறப்படும் சமயத்தில் இவ்வளவு அமர்க்களம். கண்ணன் ரதத்தை விட்டு இறங்கவில்லை. குந்தி மெதுவாக ரத்தத்தின் அருகே சென்று கண்ணனைப் பார்த்துக் கைகளைக் கூப்பினாள்.
நீ ஸர்வேஸ்வரன், முதல் காரண புருஷன், பார்வையற்றவனுக்கு விஷயங்கள் தெரியாததைப் போல், மாயையினால் கண்கள் கட்டப்பட்டிருப்பவர்களின் கண்களுக்கு உமது ஸ்வரூபம் தெரிவதில்லை. உம்மை நமஸ்கரிக்கிறேன் என்றாள்.
இப்படிப்பட்ட ஸ்துதிகளைக் கேட்கவா கண்ணன் அவதாரம் செய்தான்?
கலகலவென்று சிரித்தான். மாயையைத் துணைக்கு அழைத்தான்.
"என்னாச்சு அத்தை உனக்கு? ஏன் இப்படி சொல்ற? நீ பெரியவ . நீ போய் எனக்கு நமஸ்காரம்னு சொல்ற?"
அவனைப் பரம்பொருளே என்றழைத்து தூரத்தில் வைப்பதை அவன் விரும்புவதே இல்லை. சிறு பேரழைத்தனவும் சீறியருளாதே என்ற ஆண்டாளின் கூற்றுக்கு இப்பெயர்களெல்லாம் சிறு பெயர்களாயிற்று என்று பெரியவாச்சான் பிள்ளை அவர்கள் வியாக்யானம் செய்கிறார்.
குந்தி புரிந்து கொண்டாள். உடனே,
க்ருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச|
நந்தகோப குமாராய கோவிந்தாய் நமோ நம:||
என்று அடுத்த வாக்கியம் சொன்னாள்.
கண்ணன் மகிழ்ந்து போனான். கண்ணா, வசுதேவன் மகனே, நந்தகுமாரா, கோவிந்தா என்பவை அவன் விரும்பி ஏற்கும் விளிப் பெயர்கள். இந்த ஸ்லோகத்தை அறியாதவர்களே இல்லை எனலாம்.
கண்ணனின் தாய் தேவகி, தந்தை வசுதேவர், பின்னர் வளர்ப்புத் தந்தை நந்தன் ஒவ்வொருவராய் வரிசையில் நினைக்கிறாள். எனில் வளர்ப்புத் தாயான யசோதையை நினைக்கவில்லையா என்றால், அவளுக்குத் தனி ஏற்றம். பின்னால் ஒரு ஸ்லோகம் முழுவதும் யசோதையை ஸ்மரிக்கிறாள்.
"என்ன விஷயம் அத்தே சொல்லு"
"உன் அவயவங்கள் ஒவ்வொறுமே தாமரையின் வடிவழகை ஒத்தவை கண்ணா. பதினான்கு வருடங்கள் சிறையில் வாடிய பின்னரே உன் தாயான தேவகியை விடுவித்தாய். ஆனால், உன்னைப் பெற்றவளை விடவும் அதிகமாக என் மீது வாஞ்சை வைத்து ஒவ்வொரு ஆபத்து வரும் போதும் உடனே ஓடி வந்து காத்தாய். பீமனுக்கு விஷம் வைத்தார்கள். நீ காப்பாற்றினாய். அரக்கு
மாளிகையோடு கொளுத்தப்பட்ட போதும் காத்தாய். ஹிடும்பன் முதலிய ராக்ஷஸர்களிடமிருந்தும், சூதாட்ட சபையில் த்ரௌபதியையும், வனவாஸத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட கண்டங்களிலிருந்தும், காப்பாற்றினாய். ஒவ்வொரு சண்டையிலும், பீஷ்மர் போன்ற மஹாரதர்களின் அஸ்திரங்களிலிருந்தும் இப்போது ப்ரும்மாஸ்திரத்திலிருந்தும் நீயே எங்களைக் காத்தாய். உலகனைத்திற்கும் குருவாய் விளங்குபவன் நீ. நீ ஒடி வந்து தர்சனம் அளித்துக் காக்கும் படியான விபத்துக்களும் கஷ்டங்களும் எங்களுக்கு அடிக்கடி வரட்டும். ஒவ்வொரு கஷ்டமும் உன் தரிசனத்தாலேயே விலகுகிறது.
நீ தயிர்ச் சட்டிகளை உடைத்த போது, யசோதை உன்னைக் கட்டுவதற்கு கயிற்றைக் கொண்டு வந்தாள். அப்போது முகத்தைத் தாழ்த்திக் கொண்டு, பயமே பயப்படும் ஸ்வரூபமாகிய நீ பயந்தவன் போல் நின்றாயே. அந்த உன் ஸ்வரூபம் என்னை மயக்குகிறது. அதுவே என் தியானத்தில் எப்போதும் இருக்கட்டும். பிறப்பே இல்லாத நீ தேவர்களுக்கும் எங்களுக்கும் க்ஷேமம் செய்வதற்காக ப்ரும்மாவின் வேண்டுகோளுக் கிரங்கி அவதரித்திருக்கிறாய். யார் உன் சரித்திரத்தைக் கேட்கிறார்களோ, பாடுகிறார்களோ திரும்ப திரும்ப சொல்கிறார்களோ, அடிக்கடி நினைக்கிறார்களோ அவர்கள் உன் திருவடித் தாமரை யை வெகு சீக்கிரம் பார்க்கிறார்கள். ஹே கிருஷ்ணா! அர்ஜுனனின் தோழனே! வ்ருஷ்ணி குலத் தலைவனே! யோகீஷ்வரா! உனக்கு நமஸ்காரம்!" என்று இன்னும் பலவாறு ஸ்துதி செய்து கண்ணனை வணங்கினாள்.
குந்தி ஸ்துதி எனப்படும் இந்த ஸ்துதி பஞ்ச ஸ்துதிகளுள் ஒன்றாகும்.
இதைக் கேட்டு கண்ணன் அன்போடு ஒரு புன்முறுவல் செய்து விட்டு, "போய்ட்டு வரேன் அத்தை" என்றான்.
அப்போது தர்ம புத்திரர் அருகே வந்து, "கண்ணா, இப்போ தான் ஒரு ஆபத்து விலகியிருக்கு. மனம் ரொம்ப சங்கடமாய் இருக்கு. நீயும் இப்பவே கிளம்பணுமா? நீ இன்னும் கொஞ்ச நாள் எங்களோடு இருந்தா எங்களுக்கு ஆறுதலா இருக்கும்" என்று சொன்னார்.
அங்கிருக்குந்த அனைவர் முகத்தையும் பார்த்தான் கண்ணன். சற்று நேரம் முன்பு ஏற்பட்ட ஆபத்தின் அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை.
"சரி, நான் இப்ப போகல" என்று சொல்லி ரதத்திலிருந்து குதித்து இறங்கி அர்ஜுனனின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.
தாமரைக் கண்ணன் ஊருக்குக் கிளம்பவில்லை என்றதும் அனைவரின் முகங்களும் சூரியனைக் கண்ட தாமரையாய் மலர்ந்தன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்