About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 19 November 2023

திவ்ய ப்ரபந்தம் - 59 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 59 - கண்ணனின் கொட்டாவி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்

தண்டொடு சக்கரம்* 
சார்ங்கமேந்தும் தடக்கையன்*
கண் துயில் கொள்ளக் கருதிக்* 
கொட்டாவி கொள்கின்றான்*
உண்ட முலைப் பாலறா கண்டாய்* 
உறங்கா விடில்*
விண் தனில் மன்னிய* 
மா மதீ! விரைந்து ஓடி வா!

  • தண்டொடு - ‘கௌமோதகி’ என்னும் கதையையும்
  • சக்கரம் - சுதர்சன சக்கரத்தையும் 
  • சார்ங்கம் - ஸ்ரீ சார்ங்கமென்னும் வில்லையும்
  • ஏந்தும் - ஏந்தி கொண்டிருக்கும் 
  • தட - விசாலமான
  • கையன் - கைகளையுடைய இக்கண்ணபிரானுக்கு
  • கண் துயில் கொள்ள கருதி - தூக்க மயக்கம் தழுவிக் கொண்டது
  • கொட்டாவி கொள்கின்றான் - வாய் வழியே நெடு மூச்சு விடுகின்றான் (கொட்டாவி விடுகின்றான்) 
  • உண்ட - அமுது செய்யப்பட்டிருக்கிற 
  • முலைப்பால் - தாய்ப்பாலும்
  • அறா - சரியாக செரிமானமாகாது
  • உறங்காவிடில் - இப்போது இவன் உறங்கா விட்டால்
  • விண் தனில் - ஆகாசத்திலே
  • மன்னிய - என்றும் நிலை பெற்றிருக்கின்ற
  • மா மதீ! - பெருமை தங்கிய சந்திரனே!
  • விரைந்தோடி வா - என் மகன், கண்ணுறக்கம் கொள்ள தாமதிக்காமல் விரைந்து ஓடி வா 

விண்ணிலே என்றும் நிலை பெற்றிருக்கின்ற முழுமதியே! எத்துனை முறை தான் என் மகன் உன்னையேக் கூவி அழைத்துக் கொண்டிருப்பான். தன் வலிமையான பிஞ்சு கைகளில் கௌமோதகி என்கிற கதையுடன், சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் தன் விசாலமான திருக்கைகளில் ஏந்தியிருப்பவன், தூக்க மயக்கம் அவனைத் தழுவிக் கொண்டது. உறங்குவதற்கு நிமித்தமாய் வாய் வழியே நெடு மூச்சு விடுகின்றான். இதோ பார் வெண்மதியே! அவன் சரியான நேரத்திற்கு, சரியான நேரத்திற்கு அவன் உறங்காவிட்டால், அவன் நிறைவாய் உண்ட தாய்ப்பாலும் சரியாக செரிமானமாகாது. என் மகன், கண்ணுறக்கம் கொள்ள வேண்டும்; தாமதிக்காமல் விரைந்தோடிவா, வெண்ணிலவே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment