||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
இறைவனின் திருத்தோற்றங்கள் - 2
ஸ்கந்தம் 02
11. மத்ஸ்ய அவதாரம்
சாக்ஷுஷ மன்வந்தரத்தின் முடிவில் அடுத்து வரப் போகும் ஸத்ய விரதன் என்ற பாண்டிய மன்னனுக்கு மீன் உருவில் காட்சி அளித்தார். ப்ரளய ஜலத்தில் வேதங்களைச் சொல்லிக் கொண்டு அதிலேயே விளையாடி மகிழ்ந்தார். தசாவதாரத்தில் முதலாவதாகச் சொல்லப்படும் மத்ஸ்ய அவதாரம் நமது தமிழ் நாட்டில் மதுரையம்பதியில் நிகழ்ந்தது.
12. கூர்ம அவதாரம்
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற விரும்பி பாற்கடலைக் கடைந்த போது இறைவன் ஆமை உருக்கொண்டு மத்தாக விளங்கிய மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கினார்.
மலை முன்னும் பின்னுமாக அவர் முதுகில் சுழன்றது அவருக்கு முதுகு சொறிந்து விடுவது போல் சுகமாக இருந்ததாம்.
13. நரஸிம்ஹ அவதாரம்
உத்தம பக்தனான ப்ரஹலாதனைக் காப்பதற்காக ஏற்பட்ட அவதாரம். சிங்க முகத்துடனும் மனித உடலுடனும் தோன்றி ஹிரண்ய கசிபுவைக் கொன்று தேவர்களின் துயர் தீர்த்தார்.
14. கஜேந்திரனுக்காக வந்த அவதாரம்
ஹரி என்று பெயர் பெற்ற இந்த அவதாரம் முதலையினால் துன்புற்ற கஜேந்திரன் என்ற யானையைக் காப்பதற்காக நிகழ்ந்தது.
ஆதிமூலமே, அகில லோகநாதனே! என்றழைத்த யானைக்குத் தானே அது என்னும்படி கருடன்மீதேறி விரைந்து வந்து காத்தார்.
15. வாமன அவதாரம்
அதிதி தேவியின் மகனாக அவதரித்தவர். தன் சகோதரர்களான தேவர்களின் துயர் நீக்கவும், பரம் பக்தனான பலிச் சக்ரவர்த்தியின் அஹங்காரத்தை அழித்து அவரை ஆட்கொள்ளவும் சிறிய திருமேனியாக இருந்தவர், திரிவிக்ரம அவதாரம் எடுத்தார்.
16. ஹம்ஸ அவதாரம்
நாரதரின் அளப்பரிய அன்பினாலும் பக்தியினாலும் ஈர்க்கப்பட்டு அன்னப்பறவை உருவில் தோன்றி பாகவத தர்மத்தையிம், பக்தி யோகத்தையும் உபதேசித்தார்.
17. மனு
ஒவ்வொரு மன்வந்தரத்திலும் அந்தந்த காலத்தில் அதிபதியான மனுவாக இறைவனே அவதாரம் செய்கிறார்.
18. தன்வந்த்ரி
பாற்கடலைக் கடையும்போது கைகளில் அமுதக் கலசத்தோடு தோன்றியவர். தன் பெயரைச் சொன்னாலே அனைத்து நோய்களையும் குணப்படுத்துபவர்.
19. பரசுராம அவதாரம்
அந்தணர்களைக் காக்க வேண்டிய அரசர்களே அவர்களைத் துன்புறுத்தி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள முற்பட்டனர். அப்போது கூர்மையான (பரசு) கோடரியை ஏந்தி தீயொழுக்கமுள்ள அரசர்களை 21 முறை அழித்தார்.
20. ஸ்ரீ ராம அவதாரம்
தன் பதினாறு கலைகளுடனும் பூர்ணாவதாரமாக தன் அம்சங்களோடு அவதரித்தார். மானுட தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்.
21. ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
இவரும் பூர்ணாவதாரமே. பூபாரம் தீர்க்க தன் அம்சமான பலராமனோடு அவதரித்து எண்ணற்ற லீலைகள் புரிந்தார்.
22. ஸ்ரீ வியாஸ அவதாரம்
காலமெனும் நீரோட்டத்தில் மானிடர்களின் அறிவும் ஆற்றலும் குறையும்போது, ஒவ்வொரு சதுர்யுகத்தின் துவாபர யுகத்திலும் ஸத்யவதியின் வயிற்றில் பிறந்து வேதமாகிய விருக்ஷத்தைப் பல கிளைகளாகப் பிரிக்கப் போகிறார்.
23. புத்த அவதாரம்
தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் வசித்துக்கொண்டு சத்தியத்தை அழிக்கத் துவங்குவார்கள். அப்போது மனத்தில் மயக்கத்தையும் கவர்ச்சியையும் உண்டுபண்ணும் வண்ணம் அழகிய திருமேனியை ஏற்று, புத்தர் என்ற வடிவில், வேத நெறிக்குப் புறம்பான ஆனால் மக்கள் நலனுக்கேற்ற பல வாழ்க்கை நெறிகளை உபதேசிக்கப்போகிறார்.
24. கல்கி அவதாரம்
கலியுகமுடிவில், வேதம் எங்குமே ஒலிக்காது. ஓரிடத்திலும் ஸத்சங்கம் நடைபெறாது. நல்ல விஷயம் என்று எதுவுமே இருக்காது. அப்போது கலியை அழிப்பதற்காக தென் இந்தியாவில் சம்பளம் என்ற கிராமத்தில் அவதாரம் செய்வார். தேவதத்தம் என்ற குதிரையில் சுற்றி, கோடிக் கணக்கான துஷ்டர்களை வாளால் வதம் செய்யப் போகிறார். அப்போது மாந்தர்களிடையே ஸத்வகுணம் மிகுந்து க்ருதயுகம் தோன்றும்.
படைக்கும் போது ப்ரஜாபதிகள், ப்ரும்மாவாகிய நான், காப்பாற்றும் போது விஷ்ணு, அழிக்கும் போது ருத்ரன் என்று அனைத்து ரூபங்களாகவும் விளங்குபவர் பகவான் ஒருவரே என்று சொல்லி, யோக மாயையை அறிந்தவர்கள் பற்றிய விவரத்தையும் கூறினார் ப்ரும்மா.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்