About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 11 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீ கிருஷ்ணன் கோகுலத்திற்கு எடுத்து செல்லுதல்|

தன்னை எடுத்துக் கொண்டு போய் கோகுலத்தில் உள்ள நந்தன் வீட்டில் விட்டு விடும்படி கிருஷ்ணன் வசுதேவரைக் கேட்டுக் கொண்டார். இது எப்படி முடியும் என்று வசுதேவரும் தேவகியும் திகைத்தார்கள். 


சிறைக் கதுவுகள் பூடப்பட்டிருப்பதோடு, ஆயுதம் தாங்கிய வீரர்கள் எங்கும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வசுதேவர் குழந்தையை மெல்ல எடுத்து அதை ஒரு பிரம்புக் கூடையில் வைத்து கூடையை தம் தலை மேல் வைத்துக் கொண்டார். என்ன வியப்பு! பெரிய பூட்டுகளாலும் சங்கிலிகளாலும் பூட்டப்படிருந்த சிறைக் கதவுகள் தாமாக திறந்து கொண்டன. வியப்புடன் வெளியே வந்தார் வசுதேவர்.


காவலாளிகள் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். திடீரென்று ஆகாயத்தில் கருமேகங்கள் சூழ, பெருமழை பெய்தது. ஸ்ரீ மகா விஷ்ணுவுக்குப் படுக்கையாக இருந்த ஆயிரம் தலை ஆதிசேடன் திடீரென்று வசுதேவருக்கு முன்னால் தோன்றினார். தம் தலைவனான கிருஷ்ணன் மழையில் நனைய அவர் எப்படி சம்மதிப்பார்? அதனால் அவர் படம் எடுத்துத் தந்தையும் குழந்தையும் மழையில் நனையாதபடி காப்பாற்றினார். 


பெய்த மழை காரணமாக யமுனாநதி பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டு இருந்தது. அதைத் தாண்டித் தான் கோகுலம் செல்ல வேண்டும். என்ன செய்வதென்று தெரியாமல் வசுதேவர் திகைத்து நின்றார். அப்பொழுது திடீரென்று நதி நடுவில் விலகி அவருக்கு வழி விட்டது. 


அவர் நதியைக் கடந்து, நேரே நந்தன் வீட்டுக்குச் சென்றார். உடனே நந்தனின் தேவியான யசோதையின் அறைக்குச் சென்றார். வீட்டில் எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் யாரும் அவர் வந்ததைப் பார்க்கவில்லை.


யசோதையின் பக்கத்தில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைப் பார்த்தார். தாம் கொண்டு வந்திருந்த குழந்தையை யசோதையின் பக்கத்தில் கிடத்தி விட்டு அந்த பெண் குழந்தையை எடுத்து தம் கூடையில் வைத்துக் கொண்டு மீண்டும் மதுரா திரும்பினார். 


அவர் சிறைக்குள் வந்து சேர்ந்ததும் சிறைக் கதவுகளும் தாமாகவே மூடிக் கொண்டன. நடந்த நிகழ்ச்சிகள் யாருக்கும் தெரியாது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 7

தொண்டரடிப்பொடி ஆழ்வார் 

110. திவ்ய ப்ரபந்தம் - 893 - மாசற்றார் மனத்தில் உள்ளான் அரங்கன்
திருமாலை - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (22)
பேசிற்றே பேசலல்லால்* பெருமை ஒன்று உணரலாகாது* 
ஆசற்றார் தங்கட் கல்லால்* அறியல் ஆவானும் அல்லன்*
மாசற்றார் மனத்துளானை* வணங்கி நாம் இருப்பதல்லால்* 
பேசத் தான் ஆவதுண்டோ?* பேதை நெஞ்சே! நீ சொல்லாய்|

111. திவ்ய ப்ரபந்தம் - 894 - அரங்கனை எப்படி மறக்க முடியும்?
திருமாலை - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (23)
கங்கையில் புனிதம் ஆய* காவிரி நடுவு பாட்டு*
பொங்கு நீர் பரந்து பாயும்* பூம் பொழில் அரங்கம் தன்னுள்*
எங்கள் மால் இறைவன் ஈசன்* கிடந்ததோர் கிடக்கை கண்டும்*
எங்ஙனம் மறந்து வாழ்கேன்* ஏழையேன் ஏழையேனே|

112. திவ்ய ப்ரபந்தம் - 895 - மனமே! காலத்தை வீணாக்காதே
திருமாலை - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம் (24)
வெள்ள நீர் பரந்து பாயும்* விரி பொழில் அரங்கம் தன்னுள்*
கள்வனார் கிடந்த வாறும்* கமல நன் முகமும் கண்டும்*
உள்ளமே! வலியைப் போலும்* ஒருவனென்று உணர மாட்டாய்*
கள்ளமே காதல் செய்து* உன் கள்ளத்தே கழிக்கின்றாயே|

113. திவ்ய ப்ரபந்தம் - 896 - கடல் வண்ணா! எனக்கு அருள் செய்
திருமாலை - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (25)
குளித்து மூன்றனலை ஓம்பும்* குறி கொள் அந்தணமை தன்னை*
ஒளித்திட்டேன் என் கண்ணில்லை* நின் கணும் பத்தனல்லேன்*
களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல் வண்ணா! கதறுகின்றேன்*
அளித்தெனக்கு அருள் செய் கண்டாய்* அரங்கமா நகருளானே|

114. திவ்ய ப்ரபந்தம் - 897 - நான் ஏன் பிறந்தேன்?
திருமாலை - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (26)
போதெல்லாம் போது கொண்டு* உன் பொன்னடி புனைய மாட்டேன்*
தீதிலா மொழிகள் கொண்டு* உன் திருக்குணம் செப்ப மாட்டேன்*
காதலால் நெஞ்சம் அன்பு* கலந்திலேன் அது தன்னாலே*
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே!* என் செய்வான் தோன்றினேனே|

115. திவ்ய ப்ரபந்தம் - 898 - அரங்கனுக்கு அடிமை செய்யத் தயங்குகின்றேனே!
திருமாலை - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (27)
குரங்குகள் மலையை தூக்கக்* குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி*
தரங்க நீர் அடைக்கல் உற்ற* சலமிலா அணிலும் போலேன்*
மரங்கள் போல் வலிய நெஞ்சம்* வஞ்சனேன் நெஞ்சு தன்னால்*
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே* அளியத் தேன் அயர்க்கின்றேனே|

116. திவ்ய ப்ரபந்தம் - 899 - அரங்கனுக்கு அடியனாகாமல் ஏன் இருக்கின்றேன்?
திருமாலை - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (28)
உம்பரால் அறியலாகா* ஒளி உளார் ஆனைக்கு ஆகி*
செம் புலால் உண்டு வாழும்* முதலை மேல் சீறி வந்தார்*
நம் பரமாயது உண்டே?* நாய்களோம் சிறுமை ஓரா*
எம்பிராற்கு ஆட் செய்யாதே* என் செய்வான் தோன்றினேனே|

117. திவ்ய ப்ரபந்தம் - 900 - உன்னைத் தவிர ரக்ஷகர் யார்?
திருமாலை - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)
ஊரிலேன் காணியில்லை * உறவு மற்றொருவர் இல்லை*
பாரில் நின் பாத மூலம்* பற்றிலேன் பரம மூர்த்தி*
காரொளி வண்ணனே! (என்)* கண்ணனே! கதறுகின்றேன்*
ஆருளர் களை கண் அம்மா!* அரங்கமா நகருளானே|

118. திவ்ய ப்ரபந்தம் - 901 - எனக்கு இனி என்ன கதி?
திருமாலை - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (30)
மனத்திலோர் தூய்மை இல்லை* வாயிலோர் இன் சொல் இல்லை*
சினத்தினால் செற்றம் நோக்கித்* தீவிளி விளிவன் வாளா*
புனத் துழாய் மாலையானே!* பொன்னி சூழ் திருவரங்கா*
எனக்கினிக் கதியென் சொல்லாய்* என்னை ஆளுடைய கோவே|

119. திவ்ய ப்ரபந்தம் - 902 - வீணாகப் பிறவி கொடுத்தாய்!
திருமாலை - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம் (31)
தவத்துளார் தம்மில் அல்லேன்* தனம் படத்தாரில் அல்லேன்*
உவர்த்த நீர் போல* என் தன் உற்றவர்க்கு ஒன்றுமல்லேன்*
துவர்த்த செவ்வாயி னார்க்கே* துவக்கு அறத் துரிசன் ஆனேன்*
அவத்தமே பிறவி தந்தாய்* அரங்கமா நகருளானே|

120. திவ்ய ப்ரபந்தம் - 903 - உன்னைக் காண வழி தெரியவில்லையே!
திருமாலை - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (32)
ஆர்த்து வண்டலம்பும் சோலை* அணி திருவரங்கம் தன்னுள்*
கார்த் திரள் அனைய மேனிக்* கண்ணனே! உன்னைக் காணும்*
மார்க்கம் ஒன்றறிய மாட்டா* மனிசரில் துரிசனாய*
மூர்க்கனேன் வந்து நின்றேன்* மூர்க்கனேன் மூர்க்கனேனே|

121. திவ்ய ப்ரபந்தம் - 904 - உன் அருள் பெற வந்து நின்றேன்
திருமாலை - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (33)
மெயெல்லாம் போக விட்டு* விரி குழலாரில் பட்டு*
பொயெல்லாம் பொதிந்து கொண்ட* போழ்க்கனேன் வந்து நின்றேன்*
ஐயனே! அரங்கனே!* உன் அருள் என்னும் ஆசை தன்னால்*
பொய்யனேன் வந்து நின்றேன்* பொய்யனேன் பொய்யனேனே|

122. திவ்ய ப்ரபந்தம் - 905 - எனது நினைவை அறிவாய்
திருமாலை - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
உள்ளத்தே உறையும் மாலை* உள்ளுவான் உணர்வு ஒன்றில்லா*
கள்ளத் தேன் நானும் தொண்டாய்த்* தொண்டுக்கே கோலம் பூண்டு*
உள்ளுவார் உள்ளிற் றெல்லாம்* உடனிருந்து அறிதியென்று*
வெள்கிப் போய் என்னுள்ளே நான்* விலவறச் சிரித்திட்டேனே|

123. திவ்ய ப்ரபந்தம் - 906 - உன்னையே நான் சேவிப்பேன்
திருமாலை - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
தாவி அன்று உலகமெல்லாம்* தலை விளாக் கொண்ட எந்தாய்*
சேவியேன் உன்னை அல்லால்* சிக்கெனச் செங்கண் மாலே*
ஆவியே! அமுதே! என் தன்* ஆருயிரனைய எந்தாய்*
பாவியேன் உன்னை அல்லால்* பாவியேன் பாவியேனே|

124. திவ்ய ப்ரபந்தம் - 907 - உன்னைத் தானே நான் அழைக்கின்றேன்!
திருமாலை - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
மழைக்கு அன்று வரை முன்னேந்தும்* மைந்தனே மதுரவாறே*
உழைக் கன்றே போல நோக்கம்* உடையவர் வலையுள் பட்டு*
உழைக்கின்றேற்கு* என்னை நோக்காது ஒழிவதே* 
உன்னை அன்றே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!* அரங்கமா நகருளானே|

125. திவ்ய ப்ரபந்தம் - 908 - என் தந்தையும் தாயும் நீரே
திருமாலை - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம் (37)
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்* திருவரங்கத்துள் ஓங்கும்*
ஒளியுளார் தாமே அன்றே* தந்தையும் தாயுமாவார்*
எளியதோர் அருளும் அன்றே* என் திறத்து எம்பிரானார்*
அளியன் நம் பையல் என்னார்* அம்மவோ கொடியவாறே|

126. திவ்ய ப்ரபந்தம் - 909 - நானும் வேஷம் போட வேண்டுமா?
திருமாலை - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம் (38)
மேம் பொருள் போக விட்டு* மெய்ம்மையை மிக உணர்ந்து*
ஆம்பரி சறிந்து கொண்டு* ஐம்புலன் அகத்தடக்கி*
காம்பறத் தலை சிரைத்து* உன் கடைத் தலை இருந்து வாழும்*
சோம்பரை உகத்தி போலும்* சூழ் புனல் அரங்கத்தானே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 5 - திருப்பல்லாண்டு 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 5- இருடீகேசனைப் பாடு
திருப்பல்லாண்டு - ஐந்தாம் பாசுரம்

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி* 
அசுரர் இராக்கதரை*
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த* 
இருடிகேசன் தனக்கு*
தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடி தொழுது* 
ஆயிரம் நாமம் சொல்லிப்*
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* 
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே|

  • இதில் இவ்வுலகத்து இன்பத்தை விரும்பும் ஐச்வர்யார்த்தியை அழைக்கிறார். 
  • அண்டக் குலத்துக்கு - அகிலத்திற்கு 
  • அதிபதி ஆகி - அதிபதி ஆகி 
  • அசுரர் - அசுரர்களும் 
  • இராக்கதரை - ராக்ஷஸர்களுமாகிய 
  • இண்டைக் குலத்தை - நெருக்கமான கூட்டத்தை 
  • எடுத்துக் களைந்த - நிர்மூலமாக்கின 
  • இருடீகேசன் தனக்கு - ஹ்ருஷீகேசனான பகவானுக்கு 
  • தொண்டக் குலத்தில் - அடியவராய் இருப்பவர்களுடைய கோஷ்டியில் சேர்ந்தவர்களே! 
  • உள்ளீர் வந்து - எங்களோடு சேர்ந்து வந்து 
  • அடி தொழுது - பகவானுடைய திருவடிகளை ஸேவித்து 
  • ஆயிரம் - அவனது ஆயிரம் 
  • நாமம் சொல்லி - நாமங்களையும் துதித்து 
  • பண்டைக் குலத்தைத் - பழைய தன்மையை 
  • தவிர்ந்து - நீக்கிக் கொண்டு 
  • பல்லாண்டு - பல வருஷங்கள் 
  • பல்லாயிரத்து ஆண்டு - பல ஆயிரம் வருஷங்கள் 
  • என்மினே - மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருங்கள்

இப்பாசுரத்தில் ஆழ்வார் கூறும் கருத்து: ஸ்ரீமன் நாராயணனே அகில உலகங்களையும் படைத்து அதை நிர்வஹித்தும் வருகிறான். நம்முடைய வேதங்களும், உபநிஷத்களும் இதையே நமக்கு எடுத்துரைக்கின்றது. அண்டங்களின் கூட்டங்களுக்குத் தலைவனாகி, அஸுர ராக்ஷஸர்களின் நெருங்கின கூட்டத்தைத் திரட்டி, அவர்களை ஒழித்த, ஹ்ருஷீகேசன் எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்கள் குலத்தில் உள்ள நீங்கள், எங்கள் கூட்டத்துக்கு வந்து, எம்பெருமானின் திருவடிகளை வணங்கி, அந்த எம்பெருமானுடைய ஆயிரம் திருநாமங்களையும் வாயாராப் பாடி, எம்பெருமானிடம் சென்று வேறு ப்ரயோஜனங்களைப் ப்ரார்த்தித்துப் பெற்று விலகிப் போகும் பிறப்பைத் தவிர்த்து, மீண்டும் மீண்டும் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.3 

பஸ்²யை தாம் பாண்டு³ புத்ராணாம், 
ஆசார்ய மஹதீம் சமூம்|
வ்யூடா⁴ம் த்³ருபத³ புத்ரேண, 
தவ ஸி²ஷ்யேண தீ⁴மதா||

  • பஸ்²ய - பாருங்கள் 
  • ஏதாம் - இந்த 
  • பாண்டு³ புத்ராணாம் - பாண்டுவின் புதல்வர்கள் 
  • ஆசார்ய - ஆச்சாரியரே 
  • மஹதீம் - மிகப் பெரிய 
  • சமூம் - போர்ப் படைகள் 
  • வ்யூடா⁴ம் - அணிவகுக்கப்பட்ட 
  • த்³ருபத³ புத்ரேண - த்ருபதனின் மகனான த்ருஷ்டத்யும்னனால் 
  • தவ - உமது 
  • ஸி²ஷ்யேண - சீடனான 
  • தீ⁴மதா - மிகவும் புத்திசாலி

துரியோதனன் கூறுகிறார்: ஆச்சாரியரே, துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனால் நேர்த்தியாக அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப் பாருங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.10

ப்ராயேணால் பாயுஷ꞉ ஸப்⁴ய 
கலா வஸ்மிந் யுகே³ ஜநா꞉|
மந்தா³꞉ ஸுமந்த³ மதயோ 
மந்த³ பா⁴க்³யா ஹ்யுபத்³ ருதா꞉||

  • ஸப்⁴ய - ஹே ஸாதோ!
  • அஸ்மிந் கலாவ் யுகே³ - இந்த கலியுகத்தில்
  • ஜநாஹ - ஜனங்கள்
  • ப்ராயேண - அனேகமாக
  • அல்பாயுஷஸ் - அற்பமான ஆயுளை உடையவர்களாயும்
  • மந்தா³ஸ் - சோம்பல் உள்ளவர்களாயும்
  • ஸுமந்த³ மதயோ - மிகவும் மந்தமான அறிவை உடையவர்களாயும்
  • மந்த³ பா⁴க்³யா - தீவினைப் பயனை உடையவர்களாயும்
  • உப த்³ருதாஹ - வியாதியால் பீடிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள் அன்றோ!

கற்ற சமுதாயத்தின் உறுப்பினரே! கலி யுகத்தில், பொது மக்களின் வயது வாழ்நாளில் எப்போதும் குறைவாகவே இருக்கும். இங்கே அவர்கள் சோம்பேறிகளாகவும், தவறாக வழி நடத்தப்பட்டவர்களாகவும், துரதிர்ஷ்டவசம் ஆனவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக குழப்பம் அடைந்தவர்களாகவும் உள்ளனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 17 & 18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

(17) 
யத: ஸர்வாணி பூதா⁴நி 
ப⁴வந்த் யாதி³ யுகா³க³மே|
யஸ் மிம்ஸ்² ச ப்ரளயம் யாந்தி 
புநரேவ யுக³ க்ஷயே||


யத: - யதஸ்

(18) 
தஸ்ய லோக ப்ரதா⁴ நஸ்ய 
ஜக³ந் நாத²ஸ்ய பூ⁴பதே|
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே 
ஸ்²ருணு பாப ப⁴யா பஹம்||


17 & 18
"உயிர்கள் அனைத்தும் ஆதி யுகத்தின் தொடக்கத்தில் எவரிடமிருந்து பிறந்தனவோ, யுகத்தின் முடிவில் மீண்டும் அவை எவரிடத்தில் மறைகின்றனவோ, உலகத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், உலகத்துக்குக் காரணமானவரும், உலக நாயகருமாக எங்கும் விளங்குபவர் எவரோ அவரே விஷ்ணு. இத்தகைய உயர்வும் சிறப்பும் மிக்க மகாவிஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்கள் பாவங்களையும், பயங்களையும் போக்குவன. அந்த ஆயிரம் நாமங்களையும் என்னிடம் கேட்பாயாக."  இவ்வாறு அம்புப் படுக்கையில் இருந்தவாறே பீஷ்மர், தரும புத்திரருக்கு ஆயிரம் நாமங்களைக் கூறலானார். மேலும், பீஷ்மர் தருமருக்குக் கூறுகிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் -- பதினைந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

015 ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே|

ஆழ்வார்களிலே ஆறாவதாக திருவஞ்சிகளம் என்ற ஸ்தலத்தில் அவதரித்தவர் குலசேகராழ்வார். இவர் கலியுகம் பிறந்த 28வது வருடமான பராபவ வருடம் மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி திதியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.


இவர் மூன்று தேசத்துக்கு ராஜாவாக இருந்தவர். சாம்ராஜ்யத்துக்கே சக்கரவர்த்தியாக இருந்தாலும் கூட, அவருக்கு லௌகிக விஷயங்களில் அவ்வளவாக நாட்டம் இருக்கவில்லை. பரத்வம் என்பது எது, அதை அடைவது எப்படி என்பதிலேயே அவருடைய கவனம் எல்லாம் இருந்து வந்தது. செங்கமலக் கண்ணனான திருமாலின் திருவடிகளே முடிவான பரத்வம் என்ற பேருண்மையும் அவருக்குப் புரிந்தது. அதன் பிறகு அந்த பரத்வத்தை அடைய வேண்டி, பஞ்ச சம்ஸ்காரங்களையும் கடைப் பிடித்து இறைத் தொண்டு ஆற்றி வந்தார். திருமாலின் பத்து அவதாரங்களில் இவருக்கு ஸ்ரீ ராமபிரானிடம் அளவற்ற ஈடுபாடு. ராமபிரானிடம் இவருக்கு இருந்த அன்பை விளக்க ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.


ஒரு முறை ஒரு பாகவதோத்தமர் ராமாயண உபந்யாசம் செய்து கொண்டிருந்த போது, ராமனை எதிர்த்து கரன் என்பவன் பெரும் சேனையுடன் வந்த கட்டத்தை மிக ரசமாக, ஏதோ நேரில் நிகழ்ந்தது போல சொல்லிக் கொண்டிருந்தார். குலசேகரரோ, 'காட்டில் ராமன் எவ்வித படைபலமும் இல்லாமல், எதிர்த்து வரும் கரனை எவ்வாறு எதிர்கொள்வார்’ என்று நினைத்தவராகத் தன் படைகளைத் தயார் படுத்தி ராமனின் உதவிக்கு அனுப்புமாறு படைத் தளபதிக்கு உத்தரவு போடுகிறார். அந்த அளவுக்கு ராமனிடம் ஈடுபாடு கொண்டிருந்தார்! அதே போல் அவருக்குத் திருவேங்கடமுடையானிடமும் அளவற்ற பக்தி ஏற்பட்டது. அதன் காரணமாக, அவர் பத்து பாசுரங்கள் பாடி இருக்கிறார்.

திருவேங்கடமுடையானால் பாகவதர் ஆனவர். அனைத்து திவ்ய தேசங்களுக்கும் யாத்திரையாக சென்றவர், திருவேங்கடத்துக்கும் வந்தார். திருவேங்கடத்திலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் இருக்க விரும்பினாலும், ராஜா என்பதால் யாரும் அதை நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள். குலசேகரராக இங்கிருக்க முடியாது என்று புரிந்து கொண்டார். வேறு எப்படி இருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி அப்படி பிறந்திருக்க மாட்டேனா இப்படி பிறந்திருக்க மாட்டேனா என்று சொல்லி கொண்டே வருகிறார். திருவேங்கட த்தில் எம்பெருமான் புஷ்கரிணியில் ஒரு பறவையாக பிறந்திருக்க மாட்டேனா! ஆனால் பறவைக்கு இறக்கை முளைத்து கீழ் திருப்பதிக்கு பறந்து போய் விடும் அப்பொழுது பெருமானை சேவித்துக் கொண்டே இருக்க முடியாதே வேண்டாம் என்று சொல்லி கொள்கிறார். அதிலேயே மீனாக பிறந்து விடலாம் என்றால் வெய்யில் காலத்தில் மீன் எங்கே போகும்? அல்லது ஆற்று நீர் அடித்து வந்தால் மீன் அதோடு போய் விடுமே அதனால் அதுவும் வேண்டாம் என்கிறார். பெருமான் கையில் பொன் வட்டில் பிடிப்பவனாக ஆகலாமே என்றால் வேறொருவர் வந்து பிடித்துக் கொண்டு போனால் பெருமானை சேவிக்க முடியாதே அதனால் வேண்டாம், செண்பக புஷ்பமாக பிறக்கலாம் என்றால் யாராவது அதை பறித்து தலையில் வைத்துக் கொண்டு போய் விட்டால் அவனை சேவிக்க முடியாதே! அதனால் வேண்டாம் என்கிறார். தம்பகமாக நிற்போம் என்றால் (தம்பகம் என்றால் எதற்கும் உதவாத ஒரு செடி) எதற்கும் பயன் இல்லை என்று அதை வெட்டி விட்டால் எம்பெருமானை சேவிக்க முடியாதே! அதனால் அதுவும் வேண்டாம் என்கிறார். ஆறாக இருக்கலாம் என்றால், ஆறு நிற்கும் ஆனால் தண்ணீர் வற்றி போய் விட்டால் என்ன பண்ணுவது! அதனால் அதுவும் வேண்டாம். பாகவதர்கள் நடக்கும் பாதையாக இருக்கலாமே! அவர்கள் ஸ்ரீபாதத்தில் இருக்கும் தூசியாக இருக்கலாமே என்றால் வேற வழியாக சென்று விட்டால் பெருமானை சேவிக்க முடியாதே! அதனால் எதுவுமே வேண்டாம். உன் ஆஸ்தானத்திற்கு முன்பு இருக்கும் படியாகவே இருந்து விடுகிறேன். நான் படியாய் கிடப்பேன், நீ அது கண்டு ஆனந்தப்பட்டு சிரிப்பாய், உன் சிரித்த பொன்முகத்தை நான் கண்டு கொள்கிறேன் என்றார். இன்றைக்கும் திருவேங்கட ஆஸ்தானத்திற்கு முன் இருக்கும் படிக்கு குலசேகரபடி என்று தான் பெயர். படிக்கட்டு மீது ஒரு வேளை கவசம் போட்டு விட்டால் சேவிக்க முடியாமல் போய் விடுமே என்று யோசித்து கடைசியாக எதுவாக இருந்தாலும் சரி பெருமானின் சேவை நமக்கு வேண்டும், கைங்கர்யம் வேண்டும் என்று எதுவாகவாவது பிறக்க பிரார்த்தித்துக் கொண்டார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “எதுவாக பிறந்தாலும் இந்த ஊர்லேயே இருக்க வேண்டும் என்று அவரை போல நான் நினைக்கவில்லையே! பகவத் சம்பந்தம் இருக்கிற ஜென்மம் முக்கியமே தவிர என் ஜென்மம் எது என்பது முக்கியமில்லை என்கிற ஞானம் எனக்கு வரவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மகாவிஷ்ணு சிறிய குழந்தையாக மாறினார்|

ஒரு புறம் வசுதேவர் மகாவிஷ்ணு பிறந்ததைக் கேள்விபட்டதும் கம்சன் ஆயுதத்துடன் தங்களைக் கொல்ல வருவானே! என்று கவலைப் பட்டார். மறு புறம் தேவகியும் கம்சனை எண்ணி பயந்து கொண்டு தான் இருந்தாள். ஆனால் இப்பொழுது தன் குழந்தை உருவில் இருப்பதை கண்டதும் இறைவனை துதிக்க ஆரம்பித்தாள். "இறைவனே! தாங்கள் மகா விஷ்ணுவே தான் என்று எனக்கு விளங்கி விட்டது. நல்லவர்களை வதைக்கும் கம்சனைத் தயவு செய்து கொல்லுங்கள். மற்றத் தாய்மார்களைப் போல் நான் தங்களை என்னோடு வைத்துக் கொள்ள முடியாது. தங்களை நான் கம்சனிடம் ஒப்படைக்க வேண்டும். தங்கள் கடவுளாதலால் என் குழந்தைகள் எல்லாவற்றையும் அவன் எப்படிக் கொன்றான் என்பது தங்களுக்குத் தெரியும் . இப்போது எனக்கு இன்னொரு குழந்தை பிறந்துள்ளது என்பதைக் கேட்டவுடன் உடனே இங்கு ஓடி வந்து தங்களைப் இரக்கமின்றி கொன்று விடுவான். தாங்கள் தெய்விக உருவில் அவனுக்குக் காட்சி அளிக்காதீர்கள். தங்களை பக்தியுடன் பூசிக்க அடியார்கள் காண வேண்டிய திருவுருவம் இது" என்று சொன்னாள்.


கம்சனை பற்றித் தேவகிக்கு இருந்த பயத்தில் அவனால் மகா விஷ்ணுவைக் கொல்ல முடியாது என்பதை அவளால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. தாயன்பு காரணமாக சாதாரணக் குழந்தையாக மாறும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள்.

தேவகியின் நல்ல உள்ளதைக் கண்டு மகா விஷ்ணு மகிழ்ச்சி அடைந்தார். அவர் அவளைப் பார்த்து அன்புடன் சொன்னார், "தேவகி! நீ பெண்களுள் பரிசுத்தமானவள். நீ முன்னொரு பிறவியில் என்னை குறித்துத் தவம் செய்தாய். உன் பக்தியில் மகிழ்ந்து, நான் உன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன். நான் உன் மகனாக பிறக்க வேண்டும் என்று நீ கேட்டாய். 


என்னுடைய பூர்வ அவதாரங்களிலும் நான் உன்னை என் அன்னையாக ஏற்றுக் கொண்டுள்ளேன். அதனால்தான் இப்பொழுதும் நான் உன் மகனாக பிறந்துள்ளேன். நான் உனக்கு முன்னாலும் மகனாகப் பிறந்துள்ளேன் என்று ஞாபகப் படுத்துவதர்காகத் தான் இந்த விஷ்ணு உருவை உனக்குக் காட்டினேன். நான் சாதாரணக் குழந்தையாகப் பிறந்திருந்தால் இறைவன் தான் உனக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நீ நம்ப மாட்டாய்" என்று சொல்லிக் கொண்டே அவர் சாதாரணக் குழந்தையாக மாறினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 6

தொண்டரடிப்பொடி ஆழ்வார் 

089. திவ்ய ப்ரபந்தம் - 872 - அரங்கனே! நின் நாமத்தைக் கற்றேன்
திருமாலை - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம் (1)
காவலில் புலனை வைத்துக்* கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து*
நாவலிட்டு உழி தருகின்றோம்* நமன் தமர் தலைகள் மீதே*
மூவுலகு உண்டுமிழ்ந்த* முதல்வ நின் நாமம் கற்ற*
ஆவலிப்புடைமை கண்டாய்* அரங்கமா நகருளானே| (2)

090. திவ்ய ப்ரபந்தம் - 873 - நின் பெயரைச் சொல்வதே பேரின்பம்
திருமாலை - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (2)
பச்சை மாமலை போல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!* ஆயர் தம் கொழுந்தே! என்னும்*
இச்சுவை தவிர யான் போய்* இந்திர லோகம் ஆளும்*
அச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகருளானே| (2)

091. திவ்ய ப்ரபந்தம் - 874 - பிறப்பே எனக்கு வேண்டாம்
திருமாலை - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (3)
வேத நூல் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவரேலும்*
பாதியும் உறங்கிப் போகும்* நின்றதில் பதினை ஆண்டு*
பேதை பாலகன் அது ஆகும்* பிணி பசி மூப்புத் துன்பம்*
ஆதலால் பிறவி வேண்டேன்* அரங்கமா நகருளானே|

092. திவ்ய ப்ரபந்தம் - 875 - அரங்கனை அடைந்தபின் அல்லலே இல்லை
திருமாலை - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம் (4)
மொய்த்த வல் வினையுள் நின்று* மூன்றெழுத்துடைய பேரால்*
கத்திர பந்தும் அன்றே* பராங்கதி கண்டு கொண்டான்*
இத்தனை அடியர் ஆனார்க்கு* இரங்கும் நம் அரங்கன் ஆய*
பித்தனைப் பெற்றும் அந்தோ!* பிறவியுள் பிணங்கு மாறே|

093. திவ்ய ப்ரபந்தம் - 876 - அரங்கன் அடியராகி ஆடிப் பாடுக
திருமாலை - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (5)
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்* பெரியதோர் இடும்பை பூண்டு*
உண்டிராக் கிடக்கும் போது* உடலுக்கே கரைந்து நைந்து*
தண் துழாய் மாலை மார்பன்* தமர்களாய்ப் பாடியாடி* 
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்* தொழும்பர் சோறு உகக்கு மாறே|

094. திவ்ய ப்ரபந்தம் - 877 - அரங்கனாக்கு அடிமை குங்கள்
திருமாலை - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (6)
மறம் சுவர் மதிளெடுத்து* மறுமைக்கே வெறுமை பூண்டு,* 
புறம் சுவர் ஓட்டை மாடம்* புரளும் போது அறிய மாட்டீர்,*
அறம் சுவராகி நின்ற* அரங்கனார்க்கு ஆட் செய்யாதே* 
புறம் சுவர் கோலம் செய்து* புள் கௌவக் கிடக்கின்றீரே|

095. திவ்ய ப்ரபந்தம் - 878 - இலங்கையை அழித்த தேவனே தேவன்
திருமாலை - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (7)
புலை அறம் ஆகி நின்ற* புத்தொடு சமணமெல்லாம்,* 
கலையறக் கற்ற மாந்தர்* காண்பரோ கேட்பரோ தாம்*
தலை அறுப்புண்டும் சாவேன்* சத்தியம் காண்மின் ஐயா* 
சிலையினால் இலங்கை செற்ற* தேவனே தேவன் ஆவான்|

096.  திவ்ய ப்ரபந்தம் - 879 - பகவானைப் பழிப்பவர் அழியத் தான் வேண்டும்
திருமாலை - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (8)
வெறுப்பொடு சமணர் முண்டர்* விதி இல் சாக்கியர்கள் நின் பால்*
பொறுப்பரி யனகள் பேசில்* போவதே நோயதாகி*
குறிப்பெனக் கடையுமாகில்* கூடு மேல் தலையை ஆங்கே*
அறுப்பதே கருமம் கண்டாய்* அரங்கமா நகருளானே|

097. திவ்ய ப்ரபந்தம் - 880 - கண்ணன் கழல்களைப் பணிக
திருமாலை - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (9)
மற்றுமோர் தெய்வம் உண்டே* மதியிலா மானிடங்காள்*
உற்ற போதன்றி நீங்கள்* ஒருவனென்று உணர மாட்டீர்*
அற்றம் மேல் ஒன்றறியீர்* அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்த்த எந்தை* கழலிணை பணிமின் நீரே|

098. திவ்ய ப்ரபந்தம் - 881 - உலகம் உய்யத் திருவரங்கத்தைக் காட்டினான்
திருமாலை - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (10)
நாட்டினான் தெய்வமெங்கும்* நல்லதோர் அருள் தன்னாலே*
காட்டினான் திருவரங்கம்* உய்பவர்க்கு உய்யும் வண்ணம்*
கேட்டிரே நம்பி மீர்காள்* கெருட வாகனனும் நிற்க*
சேட்டை தன் மடியகத்து* செல்வம் பார்த்திருக் கின்றீரே|

099. திவ்ய ப்ரபந்தம் - 882 - காலத்தை வீணாக்காமல் அரங்களை அழையுங்கள்
திருமாலை - இரண்டாம்  திருமொழி - முதலாம் பாசுரம் (11)
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து* உலகங்கள் உய்ய* 
செருவிலே அரக்கர் கோனைச்* செற்ற நம் சேவகனார்*
மருவிய பெரிய கோயில்* மதில் திருவரங்கம் என்னா* 
கருவிலே திருவிலாதீர்!* காலத்தைக் கழிக்கின்றீரே|

100. திவ்ய ப்ரபந்தம் - 883 - அரங்கம் என்னாதவர்க்கு இரங்குகிறேன்
திருமாலை - இரண்டாம்  திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
நமனும் முற்கலனும் பேச* நரகில் நின்றார்கள் கேட்க* 
நரகமே சுவர்க்கம் ஆகும்* நாமங்கள் உடையன் நம்பி*
அவனது ஊர் அரங்கம் என்னாது* அயர்த்து வீழ்ந்தளிய மாந்தர்* 
கவலையுள் படுகின்றார் என்று* அதனுக்கே கவல்கின்றேனே|

101. திவ்ய ப்ரபந்தம் - 884 - அரங்கனை நினைத்தால் நரகம் அழிந்து விடும்
திருமாலை - இரண்டாம்  திருமொழி - மூன்றாம் பாசுரம் (13)
எறியும் நீர் வெறி கொள் வேலை* மாநிலத்து உயிர்கள் எல்லாம்* 
வெறி கொள் பூந்துளவ மாலை* விண்ணவர் கோனை ஏத்த*
அறிவிலா மனிசர் எல்லாம்* அரங்கம் என்றழைப்பர் ஆகில்* 
பொறியில் வாழ் நரகம் எல்லாம்* புல்லெழுந்து ஒழியும் அன்றே?

102. திவ்ய ப்ரபந்தம் - 885 - கடவுளைத் தொழாதவர்க்குச் சோறு தராதீர்
திருமாலை - இரண்டாம்  திருமொழி - நான்காம் பாசுரம் (14)
வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை* 
கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை*
அண்டர் கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா* 
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி* நாய்க்கு இடுமின் நீரே| (2)

103. திவ்ய ப்ரபந்தம் - 886 - அழகன் வாழும் ஊர் அரங்கம்
திருமாலை - இரண்டாம்  திருமொழி - ஐந்தாம் பாசுரம் (15)
மெய்யர்க்கே மெய்யன் ஆகும்* விதியிலா என்னைப் போல*
பொய்யர்க்கே பொய்யன் ஆகும்* புள் கொடியுடைய கோமான்*
உய்யப்போம் உணர்வினார் கட்கு* ஒருவன் என்று உணர்ந்த பின்னை* 
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்* அழகனூர் அரங்கம் அன்றே?

104. திவ்ய ப்ரபந்தம் - 887 - என்னை ஆட்கொண்டவன் அரங்கன்
திருமாலை - இரண்டாம்  திருமொழி - ஆறாம் பாசுரம் (16)
சூதனாய்க் கள்வனாகித்* தூர்த்தரோடு இசைந்த காலம்* 
மாதரார் கயல் கண் என்னும்* வலையுள் பட்டழுந்து வேனை*
போதரே என்று சொல்லி* புந்தியுள் புகுந்து தன்பால்*
ஆதரம் பெருக வைத்த* அழகனூர் அரங்கம் அன்றே?

105. திவ்ய ப்ரபந்தம் - 888 - அரங்கனைக் கண்ட களிப்பே களிப்பு!
திருமாலை - இரண்டாம்  திருமொழி - ஏழாம் பாசுரம் (17)
விரும்பி நின்றேத்த மாட்டேன்* விதியிலேன் மதி ஒன்றில்லை* 
இரும்பு போல் வலிய நெஞ்சம்* இறை இறை உருகும் வண்ணம்*
சுரும்பமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட* 
கரும்பினைக் கண்டு கொண்டு* என் கண்ணினை களிக்கு மாறே|

106. திவ்ய ப்ரபந்தம் - 889 - ஆனந்தக் கண்ணீர் வருகிறதே!
திருமாலை - இரண்டாம்  திருமொழி - எட்டாம் பாசுரம் (18)
இனி திரைத் திவலை மோத* எறியும் தண் பரவை மீதே* 
தனி கிடந்து அரசு செய்யும்* தாமரைக் கண்ணன் எம்மான்*
கனியிருந் தனைய செவ்வாய்க்* கண்ணனைக் கண்ட கண்கள்* 
பனியரும்பு உதிருமாலோ* என் செய்கேன் பாவியேனே|

107. திவ்ய ப்ரபந்தம் - 890 - பள்ளி கொண்டானைப் பார்த்தால் உடல் உருகும்
திருமாலை - இரண்டாம்  திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
குட திசை முடியை வைத்துக்* குண திசை பாதம் நீட்டி* 
வட திசை பின்பு காட்டித்* தென் திசை இலங்கை நோக்கி*
கடல் நிறக் கடவுள் எந்தை* அரவணைத் துயிலுமா கண்டு* 
உடலெனக்கு உருகுமாலோ* என் செய்கேன் உலகத்தீரே| (2)

108. திவ்ய ப்ரபந்தம் - 891 - பள்ளி கொண்ட காட்சியே காட்சி!
திருமாலை - இரண்டாம்  திருமொழி - பத்தாம் பாசுரம் (20)
பாயும் நீர் அரங்கம் தன்னுள்* பாம்பணைப் பள்ளி கொண்ட* 
மாயனார் திரு நன் மார்வும்* மரகத உருவும் தோளும்*
தூய தாமரைக் கண்களும்* துவர் இதழ் பவள வாயும்* 
ஆய சீர் முடியும் தேசும்* அடியரோர்க்கு அகலலாமே?

109. திவ்ய ப்ரபந்தம் - 892 - மனமே! சஞ்சலம் எதற்கு?
திருமாலை - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம் (21)
பணிவினால் மனமது ஒன்றிப்* பவள வாய் அரங்கனார்க்குத்* 
துணிவினால் வாழ மாட்டாத்* தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்*
அணியனார் செம்பொனாய* அருவரை அனைய கோயில்* 
மணியனார் கிடந்தவாற்றை* மனத்தினால் நினைக்கலாமே?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 4 - திருப்பல்லாண்டு 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 4 - நமோ நாராயணாய
திருப்பல்லாண்டு - நான்காம் பாசுரம் 

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து* 
எங்கள் குழாம் புகுந்து*
கூடு மனமுடையீர்கள் வரம்பொழி* 
வந்தொல்லைக் கூடுமினோ*
நாடும் நகரமும் நன்கு அறிய* 
நமோ நாராயணாயவென்று*
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்* 
வந்து பல்லாண்டு கூறுமினே|


இதில் ஆத்மாநுபவத்தை ஆசைப்படும் கைவல்யார்த்தியை அழைக்கிறார். பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்களை அழைத்த பிறகு, த்ருப்தி ஏற்படாமல், உலக இன்பங்களை ஆசைப்படும் ஐச்வர்யார்த்தியையும், தன்னைத் தானே அனுபவிக்கும் கைவல்யார்த்தியையும் பார்த்து, இவர்கள் இருவரில் உலக இன்பத்தை ஆசைப் படுபவன் என்றாவது பகவத் விஷயத்தில் ஆசை கொள்வான், ஆனால் கைவல்யார்த்தி, கைவல்ய மோக்ஷத்தைப் பெற்று விட்டான் என்றால் அவனுக்கு மீட்சியே இல்லை என்பதை உணர்ந்து, கைவல்யார்த்தியை இங்கே அழைக்கிறார்.

  • ஏடு நிலத்தில் - பொல்லாத ஸ்தானமாகிய மயானத்தில் இந்த உடலை 
  • இடுவதன் முன்னம் - சேர்ப்பதற்கு முன் 
  • வந்து - கைவல்யத்தில் ஆசையை விட்டு வந்து 
  • எங்கள் குழாம் - எங்கள் கோஷ்டியில் 
  • புகுந்து கூடு - சேர்ந்து கூடுவோம் 
  • மனம் - என்ற மனம் 
  • உடையீர்கள்! - உடையவர்களாகில் 
  • வரம்பு ஒழி - ஆத்மாநுபவம் மாத்திரம் செய்வோமென்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிற வரம்பை ஒழித்துக் கொண்டு இனி பூர்ணாநுபவம் பண்ணுவோமென்று விட்டு 
  • வந்து ஒல்லைக் - வந்து விரைவாக 
  • கூடுமினோ - எங்கள் கோஷ்டியில் கூடுங்கள் அப்படியே சேர்ந்த பின்பு
  • நாடும் - நாட்டிலுள்ளவர்களும் 
  • நகரமும் - நகரத்திலுள்ளவர்களும் 
  • நன்கு அறிய - உங்களுடைய நன்மையை நன்கு அறிந்து கொள்ளும்படி 
  • நமோ நாராயணாய என்று - திருமந்திரத்தை அனுசந்தித்து 
  • பாடும் மனம் உடைப் பத்தர் - பாடக் கூடிய மனம் உடைய பக்தர்களுக்குள் 
  • உள்ளீர்! வந்து - சேர்ந்தவர்களாயிருந்து 
  • பல்லாண்டு கூறுமினே - எம்பெருமானுக்கு மங்களா சாஸநம் பண்ணுங்கள்

ஆழ்வார் இப்பாசுரத்தில் ஒரு மகத்தான உண்மையை ஆஸ்தீகர்களுக்கு கூற விரும்புகிறார் . அது என்னவென்றால் ஆத்மாநுபவத்தில் ஆசையை விட்டு விட்டு பகவத் அநுபவத்தில் ஆசையை வையுங்கள். சரீரத்தை முழுவதுமாக ஒழித்துவிடுவதற்கு முன் எங்கள் கூட்டத்தில் வந்து புகுந்து, எங்களுடன் கூடுவோம் என்ற ஆசை மட்டும் இருப்பீர்களாகில், ஆத்மாவை மட்டும் அனுபவிப்பது என்கிற வரம்பை விட்டொழித்து, எங்களுடன் கூடுங்கள். க்ராமத்தவர்களான ஸாமாந்யர்களும், நகரத்தவர்களான அறிவாளிகளும் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி, திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை அனுஸந்தித்துப் பாடக் கூடிய பக்தியை உடையர்களானீர்கள் என்றால், நீங்களும் வந்து எங்களுடன் சேர்ந்து பல்லாண்டு பாடுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்