||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 2
திருமங்கையாழ்வார்
026. திவ்ய ப்ரபந்தம் - 1660 - என் மகள் உருகி மெலிந்து விட்டாளே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
அருவி சோர் வேங்கடம்* நீர்மலை என்று வாய் வெருவினாள்*
மெய்யம் வினவி இருக்கின்றாள்* பெருகு சீர்க்*
கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள்*
உள்மெலிந்தாள் இது என்கொலோ?
027. திவ்ய ப்ரபந்தம் - 1661 - என் மகள் ஊணும் உறக்கமும் ஒழிந்தாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உண்ணும் நாள் இல்லை* உறக்கமும் தான் இல்லை*
பெண்மையும் சால* நிறைந்திலள் பேதை தான்*
கண்ணன் ஊர் கண்ணபுரம்* தொழும் கார்க் கடல் வண்ணர் மேல்*
எண்ணம் இவட்கு இது என்கொலோ?
028. திவ்ய ப்ரபந்தம் - 1662 - இவள் உடம்பில் பசலை (தேமல்) பரவி விட்டதே
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கண்ணன் ஊர்* கண்ணபுரம் தொழும் காரிகை*
பெண்மை என்? தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்*
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்*
வண்ணமும்* பொன் நிறம் ஆவது ஒழியுமே|
029. திவ்ய ப்ரபந்தம் - 1663 - என் மகள் மிகவும் இளமை உடையவள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வட வரை நின்றும் வந்து* இன்று கணபுரம் இடவகை கொள்வது*
யாம் என்று பேசினாள்* மடவரல் மாதர் என் பேதை*
இவர்க்கு இவள் கடவது என்*
கண் துயில் இன்று இவர் கொள்ளவே?
030. திவ்ய ப்ரபந்தம் - 1664 - என் மகள் எவ்வளவு ஏங்கி விட்டாள்!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தரங்க நீர் பேசினும்* தண் மதி காயினும்*
இரங்குமோ?* எத்தனை நாள் இருந்து எள்கினாள்*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை*
ஊர் அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே|
031. திவ்ய ப்ரபந்தம் - 1665 - என் மகளின் நிறம் மாறி விட்டதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
தொண்டு எல்லாம் நின் அடியே* தொழுது உய்யுமா கண்டு*
தான் கண்ணபுரம்* தொழப் போயினாள்*
வண்டு உலாம் கோதை என் பேதை*
மணி நிறம் கொண்டு தான்* கோயின்மை செய்வது தக்கதே?
032. திவ்ய ப்ரபந்தம் - 1666 - என் மகள் இன்னும் பருவம் கூட அடையவில்லையே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
முள் எயிறு ஏய்ந்தில* கூழை முடிகொடா*
தெள்ளியள் என்பது ஓர்* தேசு இலள் என் செய்கேன்*
கள் அவிழ் சோலைக்* கணபுரம் கை தொழும் பிள்ளையை*
பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?
033. திவ்ய ப்ரபந்தம் - 1667 - உலகில் நெடுங்காலம் வாழ்வர்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கார் மலி* கண்ணபுரத்து எம் அடிகளை*
பார் மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்*
சீர் மலி பாடல்* இவை பத்தும் வல்லவர்*
நீர் மலி வையத்து* நீடு நிற்பார்களே|
034. திவ்ய ப்ரபந்தம் - 1668 - பெருமானின் பிரிவால் மெலிந்தேன்: வளைகள் கழன்று விட்டன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கரை எடுத்த சுரி சங்கும்* கன பவளத்து எழு கொடியும்*
திரை எடுத்து வரு புனல் சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்*
விரை எடுத்த துழாய் அலங்கல்* விறல் வரைத் தோள் புடைபெயர*
வரை எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரி வளையே|
035. திவ்ய ப்ரபந்தம் - 1669 - என் கனமான வளைகளை இழந்து விட்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
அரி விரவு முகில் கணத்தால்* அகில் புகையால் வரையோடும்*
தெரிவு அரிய மணி மாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்*
வரி அரவின் அணைத் துயின்று* மழை மதத்த சிறு தறு கண்*
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு* இழந்தேன் என் கன வளையே|
036. திவ்ய ப்ரபந்தம் - 1670 - செங்கண்மாலால் என் வளைகளை இழந்தேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
துங்க மா மணி மாட* நெடு முகட்டின் சூலிகை போம்*
திங்கள் மா முகில் துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங் கண் மால் விடை அடர்த்துப்* பனி மதி கோள் விடுத்து உகந்த*
செங் கண் மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறி வளையே|
037. திவ்ய ப்ரபந்தம் - 1671 - கண்ணபிரானால் என் பொன் வளைகள் போய் விட்டன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கணம் மருவும் மயில் அகவு* கடி பொழில் சூழ் நெடு மறுகின்*
திணம் மருவு கன மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்*
மணம் மருவு தோள் ஆய்ச்சி* ஆர்க்க போய் உரலோடும்*
புணர் மருதம் இற நடந்தாற்கு* இழந்தேன் என் பொன் வளையே|
038. திவ்ய ப்ரபந்தம் - 1672 - என் வரி வளைகளை இழந்து விட்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வாய் எடுத்த மந்திரத்தால்* அந்தணர் தம் செய் தொழில்கள்*
தீ எடுத்து மறை வளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
தாய் எடுத்த சிறு கோலுக்கு* உளைந்து ஓடி தயிர் உண்ட*
வாய் துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரி வளையே|
039. திவ்ய ப்ரபந்தம் - 1673 - என் ஒளி வளைகளை இழந்தேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மடல் எடுத்த நெடுந் தாழை* மருங்கு எல்லாம் வளர் பவளம்*
திடல் எடுத்து சுடர் இமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
அடல் அடர்த்து அன்று இரணியனை* முரண் அழிய அணி உகிரால்*
உடல் எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளி வளையே|
040. திவ்ய ப்ரபந்தம் - 1674 - உலகமுண்டவனால் என் ஒளி வளைகள் ஒழிந்தன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வண்டு அமரும் மலர்ப் புன்னை* வரி நீழல் அணி முத்தம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
எண் திசையும் எழு சுடரும்* இரு நிலனும் பெரு விசும்பும்*
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளி வளையே|
041. திவ்ய ப்ரபந்தம் - 1675 - அவன் பிரிவால் என் செறி வளைகள் கழன்றன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கொங்கு மலி கருங் குவளை* கண் ஆகத் தெண் கயங்கள்*
செங் கமலம் முகம் அலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
வங்கம் மலி தடங் கடலுள்* வரி அரவின் அணைத் துயின்ற*
செங்கமலநாபனுக்கு* இழந்தேன் என் செறி வளையே|
042. திவ்ய ப்ரபந்தம் - 1676 - அரவணையானால் என் வளைகள் அகன்றன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
வார் ஆளும் இளங் கொங்கை* நெடும் பணைத் தோள் மடப் பாவை*
சீர் ஆளும் வரை மார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பேராளன் ஆயிரம் பேர்* ஆயிர வாய் அரவு அணைமேல்*
பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய் வளையே|
043. திவ்ய ப்ரபந்தம் - 1677 - இவற்றைப் பாடினால் வினைகள் சேரா
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தே மருவு பொழில் புடை சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை* மறி கடல் சூழ்* வயல் ஆலி வள நாடன்*
காமரு சீர்க் கலிகன்றி* கண்டு உரைத்த தமிழ் மாலை*
நா மருவி இவை பாட* வினை ஆய நண்ணாவே|
044. திவ்ய ப்ரபந்தம் - 1678 - வண்டே! நறுந்துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலி புகழ் சேர்*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர் முடி மேல்*
வண்ண நறுந் துழாய்* வந்து ஊதாய் கோல் தும்பீ|
045. திவ்ய ப்ரபந்தம் - 1679 - ஸௌரி ராஜனின் திருத்துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வேத முதல்வன்* விளங்கு புரி நூலன்*
பாதம் பரவிப்* பலரும் பணிந்து ஏத்தி*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம் பெருமான்*
தாது நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
046. திவ்ய ப்ரபந்தம் - 1680 - வண்டே! நீ மலர்களை ஊதினால் பயனில்லை
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
விண்ட மலர் எல்லாம்* ஊதி நீ என் பெறுதி?*
அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்*
கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம் பெருமான்*
வண்டு நறுந் துழாய்* வந்து ஊதாய் கோல் தும்பீ|
047. திவ்ய ப்ரபந்தம் - 1681 - வண்டே! மீனாமை சிங்கமானவன் துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
நீர் மலிகின்றது ஓர்* மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உரு ஆகி*
கார் மலி வண்ணன்* கண்ணபுரத்து எம் பெருமான்*
தார் மலி தண் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
048. திவ்ய ப்ரபந்தம் - 1682 - மலர்களை ஊதி என்ன பயன்? துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஏர் ஆர் மலர் எல்லாம்* ஊதி நீ என் பெறுதி?*
பார் ஆர் உலகம்* பரவ பெருங் கடலுள்*
கார் ஆமை ஆன* கண்ணபுரத்து எம் பெருமான்*
தார் ஆர் நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
049. திவ்ய ப்ரபந்தம் - 1683 - காயா மலர் வண்ணனின் துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மார்வில் திருவன்* வலன் ஏந்து சக்கரத்தன்*
பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி*
காரில் திகழ்* காயா வண்ணன் கதிர் முடி மேல்*
தாரில் நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
050. திவ்ய ப்ரபந்தம் - 1684 - வண்டே! துழாய் மாலையையே ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*
தார் மன்னு* தாசரதி ஆய தடமார்வன்*
காமன் தன் தாதை* கண்ணபுரத்து எம் பெருமான்*
தாம நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்