||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
- அவதார ஸ்தலம் - திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
- காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
- வருடம் - பிரமாதி - கலியுகம் தொடங்கி 43 ம் நாள்
- திரு நக்ஷத்திரம் - விசாகம்
- ஆசார்யன் - ஸேனை முதலியார்
- அருளிச் செய்தவை - 1. திருவிருத்தம் (ரிக் வேத ஸாரம்) - மூன்றாம் ஆயிரம் - 2478-2577 (100 பாசுரங்கள்), 2. திருவாசிரியம் (யஜுர் வேத ஸாரம்) - மூன்றாம் ஆயிரம் - 2578-2584 (7 பாசுரங்கள்), 3. பெரிய திருவந்தாதி (அதர்வண வேத ஸாரம்) - மூன்றாம் ஆயிரம் - 2585-2671 (87 பாசுரங்கள்), 4. திருவாய்மொழி (ஸாம வேத ஸாரம்) - நான்காம் ஆயிரம் - 2675-3776 (1102 பாசுரங்கள்)
----------
மங்களாஸாஸநம்: செய்த திவ்ய தேச
ஸ்தலங்கள் - 37; பாசுரங்கள் - 419
- திருவரங்கம் 12 பாசுரங்கள்
- திருப்பேர்நகர் 11 பாசுரங்கள்
- திருக்குடந்தை 11 பாசுரங்கள்
- திருவிண்ணகரம் 11 பாசுரங்கள்
- திருக்கண்ணபுரம் 11 பாசுரங்கள்
- திருத்தஞ்சை மாமணிக் கோயில் 1 பாசுரம்
- திருக்காட்கரை 11 பாசுரங்கள்
- திருமூழிக்களம் 11 பாசுரங்கள்
- திருவல்லவாழ் 11 பாசுரங்கள்
- திருக்கடித்தானம் 11 பாசுரங்கள்
- திருச்செங்குன்றூர் 11 பாசுரங்கள்
- திருப்புலியூர் 11 பாசுரங்கள்
- திருவாறன்விளை 11 பாசுரங்கள்
- திருவண்வண்டூர் 11 பாசுரங்கள்
- திருவனந்தபுரம் 11 பாசுரங்கள்
- திருவாட்டாறு 11 பாசுரங்கள்
- திருவண்பரிசாரம் 1 பாசுரம்
- திருக்குறுங்குடி 13 பாசுரங்கள்
- திருசீரவரமங்கை 11 பாசுரங்கள்
- திரு வைகுந்தம் 2 பாசுரங்கள்
- திருப்புள்ளிங்குடி 12 பாசுரங்கள்
- திருத்தொலைவில்லி மங்கலம் 11 பாசுரங்கள்
- திருக்கோளூர் 12 பாசுரங்கள்
- திரு தென் திருப்பேரை 11 பாசுரங்கள்
- திருக்குறுகூர் 11 பாசுரங்கள்
- திருமாலிருஞ்சோலை 46 பாசுரங்கள்
- திரு வடமதுரா 10 பாசுரங்கள்
- திருவேங்கடம் 52 பாசுரங்கள்
- திருப்பாற் கடல் 9 பாசுரங்கள்
- திரு பரமப்பதம் 24 பாசுரங்கள்
----------
பிற பெயர்கள்
குருகூர் சடகோபன், பராங்குசன், சடாரி, மாறன், வகுலா பரணன், குருகையர் கோன், மகிழ்மாறன், சதாஜித், குருகூர் நம்பி, தொண்டர்பிரான், நாவிரர், கரிமாறன், திரு நாவீருடையபிரான், உதய பாஸ்கரர் , வகுள பூஷண பாஸ்கரர் , குருகை பிரான், ஞான தமிழுக்கு அரசு, ஞான தமிழ் கடல், திருவாய்மொழி பெருமாள், மெய் ஞான கவி, பொருநல் துரைவன், தெய்வ ஞானகவி, குமரி துரைவன், தெய்வ ஞான செம்மல், பவரோக பண்டிதன், நாவலர் பெருமாள், முனி வேந்து, பாவலர் தம்பிரான், பரப் பிரம்ம யோகி, வினவாத்து உணர்த விரகர், நிகாவலன் பெருமாள், குழந்தை முனி, ஞான தேசிகன், ஸ்ரீவைஷ்ணவ குலபதி, ஞானபிரான், பிரப்பன்ன ஜன கூடஸ்தர், மணிவள்ளி, இன்ப மாரி, நம் பெரியவர், பராங்குச நாயகி
----------
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாயான நம்மாழ்வார், ரிக் வேத ஸாரமான திருவிருத்தத்தில், தன் ஞானக் கண்ணுக்கு இலக்காகும் பகவானிடம், அவன் அனுபவத்திற்கு தடையாக உள்ள சரீரத்தை போக்கி அருள வேண்டும் எனக் கதறுகிறார். ஆழ்வாருடைய இந்த பதற்றம் தீரும்படி எம்பெருமான் தன் ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை ஆழ்வாருக்குக் காட்ட, அதைக் கண்டு அநுபவித்த ஆழ்வார், அந்த திவ்ய மங்கள விக்ரஹத்தில் கொள்ளும் பர பக்தி, பர ஞான, பரம பக்திகளே உயர்ந்த புருஷார்த்தம் என்றும், அவன் திருவடிகளைப் பற்றி அவன் க்ருபைக்கு பாத்திரமான பாகவதர்களிடமும் பக்தி கொண்டு, தொண்டு செய்ய வேண்டும் என்று யஜுர் வேத ஸாரமான திருவாசிரியத்தில் காட்டுகிறார். அதர்வண வேத ஸாரமான பெரிய திருவந்தாதியில், பரமாத்மாவின் குணாநுபவத்தில் ஈடுபடுகிறார். ஹே பகவானே! பெற்ற தாயைப் போல் பிரியமுள்ளவனும், தந்தையைப் போல நலம் செய்பவனும், ஆசாரியனைப் போல ஆத்மாவிற்கு நன்மை செய்பவனும் நீயே. உன்னையே வேண்டும் அடியவர்களுக்கு உன் இனிமை மிகுந்த அனுபவத்தை கொடுத்த பின்னும், 'இன்னும் என்ன தரலாம்?' என்று நீ கலங்கி இருப்பது உன் சிவந்த திருக்கண்கள் காட்டுகிறதே என்று அனுபவிக்கிறார். ஸாம வேத ஸாரமான திருவாய் மொழியில், சேதனர்களுக்கு ஒரே புகலாக விளங்கும் பரமாத்ம ஸ்வரூபம், அடையப் புகும் ஜீவாத்ம ஸ்வரூபம், அடையப் போகும் பலத்தின் (பயன்) ஸ்வரூபம், அதை அடையக் கூடிய வழியான உபாய ஸ்வரூபம், அதை அடைய ஒட்டாமல் தடுக்கும் விரோதி ஸ்வரூபம் என்னும் அர்த்த பஞ்சகமும் அடங்கிய சாஸ்திரத்தின் ஸாரமான பொருளை உபதேசிக்கிறார். மந்திர ரத்னமான த்வய மந்திரத்தின் விவரமாக அமைந்திருப்பதே இப்பிரபந்தம். நாம் அனைவரும் ஒரு ஸதாசார்யரின் திருவடிகளை பற்றி திருவாய் மொழியின் ஸாரத்தை பருகுவோம்
----------
தனியன்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ⁴தி:
ஸர்வம் ய தே³வ நியமேந மத்³ அந்வயா நாம்|
ஆத்³யஸ்யந: குலபதேர் வகுளா பி⁴ராமம்
ஸ்ரீமத் தத³ங்க்⁴ரி யுக³ளம் ப்ரநமாமி மூர்த்⁴நா||
தனியனின் விளக்கம்
ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.
வாழி திருநாமம்
1. ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே|
ஆசிரியம் ஏழு பாட்டும் அளித்த பிரான் வாழியே|
ஈனமற அந்தாதி எண்பத்து ஏழு ஈந்தான் வாழியே|
இலகு திருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு உரைத்தான் வாழியே|
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே|
வைகாசி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே|
சேனையர் கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே|
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே||
2. மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே|
வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே|
ஆதி குருவாய்ப் புவியில் அவதரித்தோன் வாழியே|
அனவரதம் ஸேனையர் கோன் அடி தொழுவோன் வாழியே|
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே|
நன் மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே|
மாதவன் பொற் பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே|
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே||
3. திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே|
திருவான திருமுகத்துச் செவி என்றும் வாழியே|
இருக்கு மொழி என் நெஞ்சில் தேக்கினான் வாழியே|
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே|
கருக் குழியில் புகா வண்ணம் காத்து அருள்வோன் வாழியே|
காசினியில் ஆரியனாய்க் காட்டினான் வாழியே|
வருத்தமற வந்ததென்ன வாழ வைத்தான் வாழியே|
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே||
4. திருக்குருகூர்த் திருப்புளியில் வளர்ந்த பிரான் வாழியே|
சேமங்கொள் தென்மறைகள் வெளியிட்டான் வாழியே|
பெருக்கமுற்ற அடி நிலையாய் வந்து உதித்தான் வாழியே|
பெரு நிலைகள் மதுர கவிக்கு அருள் புரிந்தோன் வாழியே|
கருத்துடை நாதமுனிக்கும் கருணை செய்தான் வாழியே|
குருக்களுக்குத் திலகம் எனக் கூற நின்றான் வாழியே|
குருகூரன் சடகோபன் குலத் தாள் வாழியே||
திருநாள் பாட்டு
1. ஏரார் வைகாசி* விசாகத்தின் ஏற்றத்தை*
பாரோர் அறிய பகர்கின்றேன்*
சீராரும் வேதம் தமிழ் செய்த*
மெய்யன் எழில் குருகை* நாதன் அவதரித்த நாள்!
2. உண்டோ வைகாசி* விசாகத்துக்கு ஒப்பொருநாள்?*
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர்?*
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு* தென்குருகைக்குண்டோ*
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!
ஆழ்வாரைப் பற்றிய தனிப் பாடல்கள்
1. தேனறா மலர்த் தொடையலும் மவுலியும்,
திருக்கிளர் குழைக் காதும் கானறா மலர்த் திருமுகச் சோதியும்,
கயிரவுத் துவர் வாயும் மோனமாகிய வடிவமும் மார்பகமும்,
முத்திரைத் திருக்கையும் ஞான தேசிகன் சரண தாமரையும்,
என் நயனம் விட்டு அகலாவே
2. பாடுவது எல்லாம் பராங்குசனை
நெஞ்சத்தால் தேடுவது எல்லாம் புளிக் கீழ்த் தேசிகனை
ஓடிப் போய்க் காண்பது எல்லாம் நங்கை இரு கண்மணியை
யான் விரும்பிப் பூண்பது எல்லாம் மாறன் அடிப் போது
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்