||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
013. திருவிண்ணகரம்
மார்க்கண்டேய க்ஷேத்ரம் – கும்பகோணம்
பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 47 - 2
திருமங்கையாழ்வார்
025. திவ்ய ப்ரபந்தம் - 1472 - நின்னை நினைந்து பிறவாமை பெற்றேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மற்று ஓர் தெய்வம் எண்ணேன்*
உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன்*
பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்*
வற்றா நீள் கடல் சூழ்* இலங்கை இராவணனைச்*
செற்றாய் கொற்றவனே* திருவிண்ணகரானே|
026. திவ்ய ப்ரபந்தம் - 1473 - திருவிண்ணகரானே! பிழைக்கும் கை உணர்ந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மை ஒண் கருங் கடலும்* நிலனும் மணி வரையும்*
செய்ய சுடர் இரண்டும்* இவை ஆய நின்னை*
நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி*
யாதும் மற்று ஓர் தெய்வம் பிறிது அறியேன்* திருவிண்ணகரானே|
027. திவ்ய ப்ரபந்தம் - 1474 - திருவிண்ணகரானே! நீயே என் தெய்வம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வேறே கூறுவது உண்டு* அடியேன் விரித்து உரைக்கும் ஆறே*
நீ பணியாது அடை* நின் திருமனத்து*
கூறேன் நெஞ்சு தன்னால்* குணம் கொண்டு*
மற்று ஓர் தெய்வம் தேறேன் உன்னை அல்லால்* திருவிண்ணகரானே|
028. திவ்ய ப்ரபந்தம் - 1475 - நான் பரம பதம் அடைவது எப்பொழுது?
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முளிந்தீந்த வெம் கடத்து* மூரிப் பெருங் களிற்றால்*
விளிந்தீந்த மா மரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே*
அளிந்து ஓர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்கு*
வான் உலகம் தெளிந்தே என்று எய்துவது?* திருவிண்ணகரானே|
029. திவ்ய ப்ரபந்தம் - 1476 - நம்பீ! என் தீவினைகளை நீக்கு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
சொல்லாய் திரு மார்வா *
உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை *
வினைகள் நலியாமை நம்பு *
நம்பீ மல்லா குடம் ஆடீ * மதுசூதனே *
உலகில் செல்லா நல் இசையாய்* திருவிண்ணகரானே|
030. திவ்ய ப்ரபந்தம் - 1477 - துன்பம் நீங்கி விடும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தார் ஆர் மலர்க் கமலத்* தடம் சூழ்ந்த தண் புறவில்*
சீர் ஆர் நெடு மறுகின்* திருவிண்ணகரானை*
கார் ஆர் புயல் தடக் கைக்* கலியன் ஒலி மாலை*
ஆர் ஆர் இவை வல்லார்* அவர்க்கு அல்லல் நில்லாவே|
031. திவ்ய ப்ரபந்தம் - 1855 - திருமாலிருஞ்சோலையும் திருவிண்ணகரும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பத்தர் ஆவியைப்* பால் மதியை*
அணித் தொத்தை* மாலிருஞ்சோலைத் தொழுது போய்*
முத்தினை மணியை* மணி மாணிக்க வித்தினை*
சென்று விண்ணகர்க் காண்டுமே|
032. திவ்ய ப்ரபந்தம் - 2080 - கண்ணனையே நாயேன் நினைக்கின்றேன்
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை*
அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை*
குன்றாத வலி அரக்கர் கோனை மாளக்*
கொடும் சிலை வாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை*
குன்று எடுத்த தோளினானை*
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை*
தண் குடந்தைக் கிடந்த மாலை*
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே|
பேயாழ்வார்
033. திவ்ய ப்ரபந்தம் - 2342 - திருக்கடிகையில் திருமால் எழுந்தருளி உள்ளான்
மூன்றாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
பண்டு எல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்*
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல்*
வண்டு வளம் கிளரும் நீள் சோலை* வண் பூங் கடிகை*
இளங் குமரன் தன் விண்ணகர்|
034. திவ்ய ப்ரபந்தம் - 2343 - திருமால் எழுந்தருளி உள்ள திருப்பதிகள்
மூன்றாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (62)
விண்ணகரம் வெஃகா* விரி திரை நீர் வேங்கடம்*
மண் நகரம் மா மாட வேளுக்கை*
மண்ணகத்த தென் குடந்தை*
தேன் ஆர் திருவரங்கம் தென் கோட்டி*
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு|
திருமங்கையாழ்வார்
035. திவ்ய ப்ரபந்தம் - 2707 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்|
036. திவ்ய ப்ரபந்தம் - 2772 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை*
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை*
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை*
மன்னிய தண் சேறை வள்ளலை|
நம்மாழ்வார்
037. திவ்ய ப்ரபந்தம் - 3365 - எல்லாமானவனை ஒப்பிலியப்பன் கோயிலில் கண்டேன்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமும் ஆய்*
வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமும் ஆய்*
பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்கு குடித்* திருவிண்ணகர்க் கண்டேனே|
038. திவ்ய ப்ரபந்தம் - 3366 - கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் ஒப்பிலியப்பன்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - இரண்டாம் பாசுரம்
கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமும் ஆய்*
தண்டமும் தண்மையும்* தழலும் நிழலும் ஆய்*
கண்டுகோடற்கு அரிய* பெருமான் என்னை ஆள்வான் ஊர்*
தெண் திரைப் புனல் சூழ்* திருவிண்ணகர் நல் நகரே|
039. திவ்ய ப்ரபந்தம் - 3367 - ஒப்பிலியப்பன் புகழ் பேசுவதே புண்ணியம்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - மூன்றாம் பாசுரம்
நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமும் ஆய்*
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள்* ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்*
சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
புகர் கொள் கீர்த்தி அல்லால்* இல்லை யாவர்க்கும் புண்ணியமே|
040. திவ்ய ப்ரபந்தம் - 3368 - கண்ணனின் அருளைக் கண்டு கொள்ளுங்கள்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - நான்காம் பாசுரம்
புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்*
எண்ணம் ஆய் மறப்பு ஆய்* உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்*
திண்ண மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
கண்ணன் இன் அருளே* கண்டு கொள்மின்கள் கைதவமே?
041. திவ்ய ப்ரபந்தம் - 3369 - திருவிண்ணகரானே மூவுலகுக்கும் ஆதி
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - ஐந்தாம் பாசுரம்
கைதவம் செம்மை* கருமை வெளுமையும் ஆய்*
மெய் பொய் இளமை* முதுமை புதுமை பழமையும் ஆய்*
செய்த திண் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பெய்த காவு கண்டீர்* பெரும் தேவு உடை மூவுலகே|
042. திவ்ய ப்ரபந்தம் - 3370 - தேவர் தொழும் பிரான் என் மனத்தில் உறைகின்றான்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - ஆறாம் பாசுரம்
மூவுலகங்களும் ஆய்* அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு*
ஆய் பூவில் வாழ் மகள் ஆய்* தவ்வை ஆய்ப் புகழ் ஆய்ப் பழி ஆய்*
தேவர் மேவித் தொழும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே|
043. திவ்ய ப்ரபந்தம் - 3371 - திருவிண்ணகரன் பாதமல்லால் சரணில்லை
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - ஏழாம் பாசுரம்
பரம் சுடர் உடம்பு ஆய்* அழுக்குப் பதித்த உடம்பு ஆய்*
கரந்தும் தோன்றியும் நின்றும்* கைதவங்கள் செய்தும்*
விண்ணோர் சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை* யாவர்க்கும் வன் சரணே|
044. திவ்ய ப்ரபந்தம் - 3372 - கண்ணனே என்னை ஆளுடையப்பன்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - எட்டாம் பாசுரம்
வன் சரண் சுரர்க்கு ஆய்* அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்*
தன் சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்*
தென் சரண் திசைக்குத்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
என் சரண் என் கண்ணன்* என்னை ஆளுடை என் அப்பனே|
045. திவ்ய ப்ரபந்தம் - 3373 - ஒப்பிலியப்பன் எனக்கு அடைக்கலம் அளித்தான்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - ஒண்பதாம் பாசுரம்
என் அப்பன் எனக்கு ஆய்* இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்*
பொன் அப்பன் மணி அப்பன்* முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*
மின்னப் பொன் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்*
தன் ஒப்பார் இல் அப்பன்* தந்தனன் தன தாள் நிழலே|
046. திவ்ய ப்ரபந்தம் - 3374 - திருவிண்ணகரான் திருவடிகளே எனக்குப் புகலிடம்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - பத்தாம் பாசுரம்
நிழல் வெய்யில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையும் ஆய்*
சுழல்வன நிற்பன* மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்*
மழலை வாய் வண்டு வாழ்* திருவிண்ணகர் மன்னு பிரான்*
கழல்கள் அன்றி* மற்றோர் களை கண் இலம் காண்மின்களே|
047. திவ்ய ப்ரபந்தம் - 3375 - இவற்றைப் படித்தோர் தேவர்க்குப் பெரியோராவர்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - பதினொன்றாம் பாசுரம்
காண்மின்கள் உலகீர் என்று* கண் முகப்பே நிமிர்ந்த*
தாள் இணையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
ஆணை ஆயிரத்துத்* திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*
கோணை இன்றி விண்ணோர்க்கு* என்றும் ஆவர் குரவர்களே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்