||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
004. திருவெள்ளறை
ஸ்வேதகிரி – திருச்சி
நான்காவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 24
பெரியாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 71 - ஏழுலகுடையவனே ஆயர் போரேறு
பெரியாழ்வார் திருமொழி - முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி*
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர*
கற்றவர் தெற்றி வர பெற்ற எனக்கு அருளி*
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்*
சோலை மலைக்கு அரசே! கண்ணபுரத்தமுதே!*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை|
002. திவ்ய ப்ரபந்தம் - 192 - திருவெள்ளறை அழகன்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்*
மந்திர மா மலர் கொண்டு* மறைந்து உவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதுரர்கள் வெள்ளறை நின்றாய்*
அந்தியம் போது இது ஆகும்* அழகனே! காப்பிட வாராய்| (2)
003. திவ்ய ப்ரபந்தம் - 193 - திருவெள்ளறை நின்றவனுக்கு அந்திக் காப்பு
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கன்றுகள் இல்லம் புகுந்து* கதறுகின்ற பசு எல்லாம்*
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி* நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
மன்றில் நில்லேல் அந்திப் போது* மதிற் திருவெள்ளறை நின்றாய்!*
நன்று கண்டாய் என்தன் சொல்லு* நான் உன்னைக் காப்பிட வாராய்| (2)
004. திவ்ய ப்ரபந்தம் - 194 - திருவெள்ளறை எம்பிரான்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
செப்பு ஓது மென்முலையார்கள்* சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு*
அப்போது நான் உரப்பப் போய்* அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!*
முப் போதும் வானவர் ஏத்தும்* முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நான் ஒன்றும் செய்யேன்* எம்பிரான் காப்பிட வாராய்| (2)
005. திவ்ய ப்ரபந்தம் - 195 - திருவெள்ளறையான் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கண்ணில் மணல் கொடு தூவிக்* காலினால் பாய்ந்தனை என்று என்று*
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* இவர் ஆர்? முறைப்படுகின்றார்*
கண்ணனே! வெள்ளறை நின்றாய்!* கண்டாரொடே தீமை செய்வாய்!
வண்ணமே வேலையது ஒப்பாய்!* வள்ளலே! காப்பிட வாராய்| (2)
006. திவ்ய ப்ரபந்தம் - 196 - திருவெள்ளறை ஞானச் சுடர்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பல்லாயிரவர் இவ் ஊரில்* பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது* எம்பிரான்! நீ இங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச் சுடரே! உன்மேனி*
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்* சொப்படக் காப்பிட வாராய்| (2)
007. திவ்ய ப்ரபந்தம் - 197 - மஞ்சு தவழ் மணி மாட வெள்ளறை நின்றவன்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கஞ்சன் கறுக் கொண்டு நின்மேல்* கரு நிறச் செம் மயிர்ப் பேயை*
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு*
மஞ்சு தவழ் மணி மாட* மதிற் திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே! காப்பிட வாராய்| (2)
008. திவ்ய ப்ரபந்தம் - 198 - ஒளியுடை வெள்ளறை நின்றவன்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கள்ளச் சகடும் மருதும்* கலக்கு அழிய உதை செய்த*
பிள்ளையரசே!* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளி கொள் போது இது ஆகும்* பரமனே! காப்பிட வாராய்| (2)
009. திவ்ய ப்ரபந்தம் - 199 - திருவெள்ளறை செல்வப் பிள்ளை
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
இன்பம் அதனை உயர்த்தாய்!* இமையவர்க்கு என்றும் அரியாய்!*
கும்பக் களிறு அட்ட கோவே!* கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!*
செம்பொன் மதில் வெள்ளறையாய்!* செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்கு* கடிது ஓடிக் காப்பிட வாராய்| (2)
010. திவ்ய ப்ரபந்தம் - 200 - அந்திப் போதினில் விளக்கேற்றுவேன், வா
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு* எழில் மறையோர் வந்து நின்றார்*
தருக்கேல் நம்பி! சந்தி நின்று* தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்*
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த* தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
உருக் காட்டும் அந்தி விளக்கு* இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்| (2)
011. திவ்ய ப்ரபந்தம் - 201 - வினை போகும்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
போது அமர் செல்வக் கொழுந்து* புணர் திருவெள்ளறையானை*
மாதர்க்கு உயர்ந்த அசோதை* மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்*
வேதப் பயன் கொள்ள வல்ல* விட்டுசித்தன் சொன்ன மாலை*
பாதப் பயன் கொள்ள வல்ல* பத்தர் உள்ளார் வினை போமே| (2)
திருமங்கையாழ்வார்
012. திவ்ய ப்ரபந்தம் - 1368 - திருவெள்ளறையானே! என்னை பக்தனாக்கு
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை*
மூவெழுகால் கொன்ற தேவ!*
நின் குரை கழல் தொழுவது ஓர் வகை* எனக்கு அருள்புரியே*
மன்றில் மாம் பொழில் நுழை தந்து* மல்லிகை மௌவலின் போது அலர்த்தி*
தென்றல் மா மணம் கமழ்தர வரு* திரு வெள்ளறை நின்றானே|
013. திவ்ய ப்ரபந்தம் - 1369 - ஹயக்ரீவனாக அவதரித்தவனே! அருள் செய்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி* முன் பரி முகமாய்*
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய* மாருதம் வீதியின் வாய்*
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ்* திரு வெள்ளறை நின்றானே|
014. திவ்ய ப்ரபந்தம் - 1370 - நரசிம்மப் பெருமானே! அருள் புரிவாய்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்* உடலகம் இரு பிளவாக்*
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!* எனக்கு அருள்புரியே*
மையின் ஆர்தரு வரால் இனம் பாய* வண் தடத்திடைக் கமலங்கள்*
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்* திரு வெள்ளறை நின்றானே|
015. திவ்ய ப்ரபந்தம் - 1371 - திருவேங்கடமுடையானே! திருவருள் தா
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக* ஐவர்கட்கு அரசு அளித்த*
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!* நின் காதலை அருள் எனக்கு*
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்* வாய்-அது துவர்ப்பு எய்த*
தீம் பலங்கனித் தேன் அது நுகர்* திரு வெள்ளறை நின்றானே|
016. திவ்ய ப்ரபந்தம் - 1372 - வராகப் பெருமானே! எனக்கு அருள் செய்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மான வேல் ஒண் கண் மடவரல்* மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்*
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!* எனக்கு அருள்புரியே*
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி* வெண் முறுவல் செய்து அலர்கின்ற*
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்* திருவெள்ளறை நின்றானே|
017. திவ்ய ப்ரபந்தம் - 1373 - தேவர்கட்கு அமுதளித்தவனே! என்னை ஆட்கொள்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ* அமுதினைக் கொடுத்தளிப்பான்*
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!* நின் அடிமையை அருள் எனக்கு*
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்* தையலார் குழல் அணைவான்*
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை* திரு வெள்ளறை நின்றானே|
018. திவ்ய ப்ரபந்தம் - 1374 - இராவணனை அழித்தவனே! எனக்கு அருள் புரி
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி* அரக்கன் தன் சிரம் எல்லாம்*
வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!* எனக்கு அருள்புரியே*
மாறு இல் சோதிய மரதகப் பாசடைத்* தாமரை மலர் வார்ந்த*
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்* திரு வெள்ளறை நின்றானே|
019. திவ்ய ப்ரபந்தம் - 1375 - வேதங்களைத் தோற்றுவித்தவனே! அருள் காட்டு
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி* இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த*
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
மன்னு கேதகை சூதகம் என்று இவை* வனத்திடைச் சுரும்பு இனங்கள்*
தென்ன என்ன வண்டு இன் இசை முரல்* திரு வெள்ளறை நின்றானே|
020. திவ்ய ப்ரபந்தம் - 1376 - திரிவிக்கிரமனே! எனக்கு அருள் செய்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் முழுதினையும்*
பாங்கினால் கொண்ட பரம! நின் பணிந்து எழுவேன்* எனக்கு அருள்புரியே*
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி* வண்டு உழிதர*
மா ஏறித் தீம் குயில் மிழற்றும் படப்பைத்* திரு வெள்ளறை நின்றானே|
021. திவ்ய ப்ரபந்தம் - 1377 - இவற்றைப் பாடுவோர் தேவர்க்கு அரசராவர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்* திரு வெள்ளறை அதன் மேய*
அஞ்சனம் புரையும் திரு உருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்* கலி கன்றி சொல் ஐஇரண்டும்*
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே|
022. திவ்ய ப்ரபந்தம் - 1851 - திருப்பேர் நகரும் திருவெள்ளரையும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
துளக்கம் இல் சுடரை* அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப் போய்*
அளப்பு இல் ஆர் அமுதை* அமரர்க்கு அருள்
விளக்கினை* சென்று வெள்ளறைக் காண்டுமே|
023. திவ்ய ப்ரபந்தம் - 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே*
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்*
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)
024. திவ்ய ப்ரபந்தம் - 2773 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை*
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை* மன்னும் அரங்கத்து எம் மா மணியை|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்