About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 6 August 2023

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

வேதம் முழுவதையும் கிரகித்த வியாஸ பகவான், கலியுகத்தில் இருக்கும் மனிதர்களைக் கருத்தில் கொண்டு முழு வேதத்தையும் ஒருவர் ஒரு வாழ்நாளுக்குள் கற்றுக் கொள்வது கடினம் என்று உணர்ந்து அதை நான்காகப் பிரித்தார். பின்னர்

  • 1. ரிக் வேதத்தை பைலர் என்ற ரிஷியிடமும்,
  • 2. யஜுர் வேதத்தை வைசம்பாயனர் என்ற ரிஷியிடமும்,
  • 3. ஸாம வேதத்தை ஜைமினியிடமும்,
  • 4. அதர்வண வேதத்தை சுமந்து என்ற ரிஷியிடமும் கொடுத்தார்.
  • 5. பதினேழு புராணங்களை ரோம ஹர்ஷணர் என்ற பௌராணிகரிடம் கொடுத்தார். கடைசியாக 
  • 6. பதினெட்டாவதாக எழுதிய ஸ்ரீமத் பாகவத புராணத்தைக் கொடுக்க தகுந்த ஒருவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு தந்தை சொத்தைப் பிரித்துக் கொடுப்பது போல கொடுத்து விட்டு, தனக்குப் பிரியமான சொத்தை சரியாக நிர்வகிக்கத் தகுந்த ஆளை எதிர்பார்ப்பது போல் அவர் காத்திருந்தார். ஸ்ரீ வியாஸ பகவான் ஒரு சமயம் யாகம் செய்யும் போது, யாக குண்டத்தில் இருந்து தோன்றியவர் ஸ்ரீ சுகாசார்யார். இவரிடம் தான் பாகவதத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உடனே வியாசருக்குத் தெரிந்தது. தோன்றும் போதே பதினாறு வயது நிரம்பிய இளம் பாலகனாக, அழகு சொட்டும் உருவத்தோடு விளங்கினார் சுகாசார்யார். ஞான ஸ்வரூபமான சுகர், யாக குண்டத்தில் இருந்து வெளி வந்ததும், எதையும் கவனிக்காமல் கிடுகிடுவென்று ஓடத் துவங்கினார். எங்கும் நிரம்பி இருக்கும் ஆத்மாவில் ஆழ்ந்திருப்பவர் என்பதால் ஆடைகளின்றி, திக்குகளையே ஆடையாகக் கொண்டு திகம்பரராக சங்கல்பமின்றி சஞ்சரித்தார். தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புத்திரன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து போன வியாஸரோ, சுகரைத் துரத்திக் கொண்டு ஓடினார். மகனே மகனே, என்று குத்திக் கொண்டு தந்தை துரத்திக் கொண்டு ஓட, சுகர் தன்னைத் தான் அழைக்கிறார் என்று நினைக்கவில்லை. ஏனெனில் ப்ரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கும் ஆத்மாவே தானென்று உணர்ந்திருந்தார். ஆனால், வழியிலிருந்த மரம் செடி கொடிகளெல்லாம் ஏன் ஏன் என்று வியாஸருக்கு பதில் கூறின. இதிலிருந்து அவருடைய ப்ரும்மானுபவம் எத்தகையது என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஓடிக் கொண்டிருந்த சுகர் ஒரு குளத்தின் வழிச் செல்ல, அங்கு ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்த பெண்கள் அவரைப் பார்த்து விட்டு எந்த சஞ்சலமும் இல்லாமல் குளியலைத் தொடர்ந்தனர். சற்று நேரத்தில் பின்னாலேயே துரத்தக் கொண்டு வந்த வியாஸரைப் பார்த்ததும் ஓடிச் சென்று ஆடைகளை அணிய முற்பட்டனர். இதைக் கண்ட வியாஸர், அந்தப் பெண்களைப் பார்த்து பதினாறு வயதுடைய என் மகன் ஆடையின்றி செல்கிறான். அவனைப் பார்த்து நீங்கள் வெட்கமடையாமல் கிழவனும், ரிஷியுமான என்னைக் கண்டதும் வெட்கப் படுகிறீர்களே இது நியாயமா என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்கள், மன்னித்து விடுங்கள் மஹரிஷி. தங்கள் மகன் இளவயது உடையவராய் இருந்த போதும், அவரைக் கண்டதும் வெட்கம் ஏற்படவில்லை, காரணம் அவர் தன்னை ஆணா, பெண்ணா என்று கூட உணராமல் ப்ரும்ம வஸ்துவாகவே இருக்கிறார். அவரைக் கண்டதும் எங்கள் மனத்தில் எந்த விகாரமும் ஏற்படவில்லை. ஆனால், நீங்கள் வயதானவர் என்றாலும் நீங்கள் ஆண், நாங்கள் பெண்ணினம் என்ற பேதம் தெரிவதால் வெட்கம் வந்து ஆடைகளை அணிந்தோம் என்றனர். இந்த நிகழ்வு வியாஸரைக் குறைத்துச் சொல்லப் பட்டதல்ல. தந்தையான அவர் தன்னைக் குறைத்துக் கொண்டு தனயனின் பெருமையை உணர்த்துகிறார். மேலும், இதயத்தில் துளியும் காம வாசனையற்ற, ப்ரும்ம ஸ்வரூபமான ஸ்ரீ சுகர் தான் பாகவதத்தின் தசம (10) ஸ்கந்தத்தில் ராஸ லீலையை வர்ணிக்கிறார் என்றால் ரஸம் எவ்வளவு உயர்ந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸேனை முதலியார் வணக்கம்||

யஸ்ய த்³விரத³ வக்த்ராத்³யா: 
பாரி ஸ²த்³யா: பரஸ்² ஸ²தம்|
விக்⁴நம் நிக்⁴நந்தி ஸததம் 
விஷ்வக் ஸேநம் தமாஸ்²ரயே||


வக்த்ராத்³யா: - வக்த்ராத்³யாஃ
ஸ²த்³யா: - ஸ²த்³யாஃ

யானை முகன் முதலான பரிவாரக் கூட்டங்களுக்குத் தலைவராகவும், தம்மையே தியானம் செய்பவருக்கு வருகின்ற எல்லா இடையூறுகளையும் நீக்கி மகிழ்ச்சி அளிப்ப வருமாகிய ஸேனை முதல்வரின் திருவடிகளை வணங்குகிறோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முதலாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

001 அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே|

அக்ரூரர், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரர். அக்ரூரர் என்றால் வடமொழியில் சாது என்று பொருள். இவரும் சாது, நல்லவர். என்றாலும் கூட, அவருக்கு உத்தியோகம் என்னவோ கம்சனின் அரண்மனையில் தான். சில நேரங்களில், இறைவன் நிறைய விஷயங்களில் இப்படி மாற்றிப் போட்டு விடுகிறான்! பரமபக்தனான பிரகலாதன், கிருஷ்ணனை நாராயணனாகவே பார்த்த பீஷ்மர் போன்றோரைப் போல, வயிற்றுப் பிழைப்பு கம்சனிடமும், சிந்தனை கண்ணனிடமும் அக்ரூரருக்கு இருந்தது. 


கோகுலத்தில் இருந்த வரையில் கண்ணனுக்குப் பரம சுகம். அவன் பக்தர்களுக்கோ அதை விடவும் பரமானந்தம்! வெண்ணெய் உண்ண வேண்டியது; தலையில் ஒரு முண்டாசைக் கட்டிக் கொண்டு, கையில் ஒரு புல்லாங்குழலையும் எடுத்துக் கொண்டு, 'நானும் மாடு மேய்க்கப் போகிறேன்’ என்று கிளம்பி விட வேண்டியது; அப்புறமென்ன பொழுதுக்கும் கோபாலர்களோடும் கோபியருடனும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்! வெறும் கொண்டாட்டத்துடன் விட்டானா என்றால், அது தான் இல்லை. கம்சனின் கட்டளைப்படி தன்னைக் கொல்ல வந்த பூதனையையும், பறவையாகவும், மாடாகவும், சக்கரமாகவும் வந்த இன்னும் பல அசுரர்களையும் போகிற போக்கில் வதம் செய்தானே! ஆழ்வார்களும் சரி, ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரும் சரி அவன் கோகுலத்தில் இருந்த காலத்தில் நிகழ்த்திய லீலைகளைத் தான் போற்றி பாடி அனுபவித்து இருக்கிறார்களே தவிர, அவன் துவாரகையில் அரசாண்டதைப் பற்றியோ, பாண்டவர்களின் தூதுவனாக அஸ்தினாபுரம் சென்றது பற்றியோ, அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தது பற்றியோ பாடவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, அந்த கோகுலக் கண்ணன் தான் பாட்டுடைத் தலைவன்!


கோகுலத்தில் வளர்ந்து வரும் ஸ்ரீ கிருஷ்ணனை, கம்சன், நிறைய முறை கொல்ல முயற்சி செய்தான். இந்த முயற்சிகள் தோல்வியடைவே கண்ணனைக் கொல்வதற்கு கம்சன் ஒரு திட்டம் தீட்டுகிறான். புதிதாக தனுர் யாகம் என்ற ஒன்றை நடத்தி, அதற்கு கிருஷ்ண, பலராமர்களை அழைத்து வரச் செய்து, சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களைக் கொண்டு மல்யுத்தத்தில் அவர்களைக் கொன்று விடத் தீர்மானிக்கிறான். அதற்கு யாரை அனுப்புவது? இவனுடைய ஆட்களை அனுப்பினால், கண்ணன் ஒரே நொடியில் போட்டுத் தள்ளி விடுகிறான். எனவே, வசுதேவரின் சகோதரரான விவேகம் நிறைந்த அக்ரூரை அனுப்பி, இருவரையும் அழைத்து வரச் செய்கிறான். அக்ரூரர்: அவரது சிந்தனை எப்போதும் கிருஷ்ணனைப் பற்றியே! ஸ்ரீ கிருஷ்ணன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அக்ரூரருக்கு ஒரே குஷி! கண்ணனை நேரில் பார்க்கலாமே; கொஞ்சிப் பேசி மகிழலாமே! அவருடைய உள்ளத்தில் வாஞ்சை பெருகுகிறது. கிருஷ்ணனின் லீலைகளை நன்கு அறிந்தவர். கிருஷ்ணன் தான் சாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணன், கம்சனை வதம் செய்ய பிறந்தவன் என்பதையும் அறிந்தவர். கிருஷ்ணன் பால் அதீத அன்பும் மாறா பக்தியும் கொண்டவர். எனவே கம்சனின் திட்டம் நிறைவேறப் போவதில்லை என்பதும் மேலும் இதுவே கம்சனின் இறுதி திட்டம், இதில் கம்சன் மடிவான் என்பதும் அவருக்கு தெரியும். அனைத்தும் அறிந்திருந்தும் கம்சன் கூறியவுடன், மறுப்பேதும் கூறாமல், "இதோ புறப்படுகிறேன்!! இப்பொழுதே அழைத்து வருகிறேன்!!!" என்று கிருஷ்ணனை விழாவிற்கு அழைக்கச் சென்றார். காரணம்? கண்ணனின் மீதுள்ள மாறா நம்பிக்கை மட்டுமல்ல, கண்ணன் மீதுள்ள தீராக் காதலும் தான். இருப்பினும் கம்சன் கிருஷ்ணனைக் கொல்வதற்குத்தான் அழைத்து வரச் செய்கிறான் என்பதுகூட அவருக்கு மறந்து போய் விடுகிறது. குறும்பு கண்ணனின் சேட்டைகளை காதால் கேட்டு மட்டுமே இதுவரை ரசித்தவர், இப்பொழுது நேரில் சென்று அவனை, அவன் அழகுகளை, அவன் அன்பை, அவன் சிரிப்பை கண்ணாரக் கண்டு ரசிக்கலாம் அல்லவா!! வழி முழுவதும் கிருஷ்ணனின் லீலைகள் பற்றியும் அவனுடன் இருக்கப் போகும் கிடைப்பதற்கரிதான நொடிகளைப் பற்றியும் மனதில் எண்ணி அசை போட்டபடியே ரதத்தைச் செலுத்திக் கொண்டு வரும் வழியில் கண்ணனின் பாத சுவடுகள் மண்ணில் தெரிந்தது. உடனே ரதத்தை நிறுத்திக் கீழே இறங்கினார். பாத சுவடுகள் இருந்த மண்ணில் புரண்டார். ஆனந்தக் கண்ணீர் விட்டார். மீண்டும் கண்ணன் நினைவு வர, ரதத்தை வேகமாக ஓட்டினார், கோகுலத்தில் நுழைந்தவுடன் சாலைகளில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். மகிழ்ச்சிக்குக் காரணம் கோகுலத்தில் எல்லோர் மனதிலும் கண்ணனே இருந்தான். அக்ரூரர் சந்தை வழியே ரதத்தில் வரும் போது பழம் விற்பவர் பழத்தைக் காண்பித்து “கொஞ்சம் கோவிந்தாவை வாங்கிக் கொண்டு போங்க” என்றார். பூக்காரி “ஒரு கொத்து கேசவனை வாங்கிக்கோங்க” என்றாள்.

இதை 'பாரிப்பு’ என்பார்கள். பாரிப்பு என்றால், ஒரு நிகழ்ச்சியை அது நிகழ்வதற்கு முன் அசை போடுவது. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அர்ச்சிராதிகதி சிந்தனை மிகவும் அவசியம். ஸ்ரீ வைஷ்ணவர்களை 'முமூக்ஷு’ என்று அழைப்பர். இறுதியாக வைகுண்டத்தில் நித்தியவாசம் செய்யப் போகிறவர்கள் என்பது இதன் பொருள். இருப்பினும், அந்த வைகுண்டவாசத்தை தினமும் ஒருமுறையாவது சிந்தையில் நிறுத்தவேண்டியது ஒவ்வொரு வைஷ்ணவரின் கடமையாகும். திருவேங்கட யாத்திரை, அர்ச்சிராதிகதி மனம், அக்ரூர ஞானம் இம்மூன்றையுமே வைஷ்ணவர்களின் இலக்கணமாகக் கூறுவர்.

அப்படிப்பட்ட பாரிப்புடன், அக்ரூரருக்கு கண்ணனை இப்பவே பார்க்க வேண்டும் போல இருந்தது. ரதத்தை இன்னும் வேகமாக ஓட்டி யமுனா நதிக்கரையில் உள்ள பிருந்தாவனத்துக்குச் செல்கிறார். கண்ணனுடன் அளவளாவுகிறார். அவரை அழைத்துச் செல்ல வந்ததாகக் கூறினார். கண்ணனும் கம்ச ராஜ்ஜியத்துக்குள் நுழைவதற்கு ஒரு கேட்பாஸை அல்லவா எதிர்பார்த்து நிற்கிறான்? எனவே, மறுப்பேதும் தெரிவிக்காமல் பலராமனுடன் கம்சனைக் காணச் செல்கிறான். வழி நெடுக நொடி கூட இமைக்காமல் கண்ணனை கண்கள் குளிர குளிரக் கண்டு ரசித்தார், மனதில் ஆனந்தம் கொண்டார். இதனால், கிருஷ்ணன் அருகில் இருக்கும் பேரும், அவன் கடாட்ஷமும் பெற்றார் அக்ரூரர். பிறகு, அவன் கம்சனைக் கொன்றது சரித்திரம். இப்போதும், நந்தகௌன் என்ற இடத்திலிருந்து கண்ணனை அக்ரூரர் தேரில் அழைத்துச் சென்ற வழித்தடம் உள்ளது. 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அக்ரூரர் போல் மாறா பக்தியும் அளவில்லா அன்பும் நம்பிக்கையும் கொண்டு எந்நேரமும் அந்த கிருஷ்ணனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேனா?, அக்ரூரர் செய்தது போல் நான் செய்தேனா? இல்லையே! அப்படி நான் யாரையும் அழைத்துக் கொண்டு வர போகலையே! சேவிக்கணும்னு ஆசையும் என் உள்ளத்தில் இல்லையே!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - அறிமுகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

முக்தியடைந்தவன் பரமபதத்திலிருந்து கொண்டு எப்போதும் எம்பெருமானின் திவ்யத்தில் மூழ்கியிருக்கிறான். எனவே அவன் பூலோகத்தில் நித்ய சேவை சாதிக்கும் திருமலை வேங்கடவனையோ, குடந்தைக் கிடந்த ஆராவமுதனையோ, துவாரகாபுரி கண்ண பிரானையோ சேவிக்க எண்ணினால் அது முடியாதாம். 

இதைத்தான் ஆழ்வார் போயினால் பின்னையித் திசைக்கு பிணை கொடுக்கிணும் போக ஒட்டான் என்கிறார். அதாவது பரமபதத்தில் இருக்கும் முக்தனை எம்பெருமான் போக வொட்டான். 

எனவே பூவுலகில் வந்தவனுக்கு அர்ச்சா மூர்த்தியைவிட்டால் வேறு யார் அடைக்கலம். 

எனவே அர்ச்சாவதாரமே நம்மை இறைவனிடம் நெருக்கி கொண்டு சென்று பரமபதத்து நித்ய சூரிகளில் ஒருவனாக ஆக்கும். நம்மையெல்லாம் உய்விக்கும் பொருட்டே எம்பெருமான் அர்ச்சாவதார மூர்த்திகளாய் இங்கு எழுந்தருளியுள்ளான். எனவே எளிது எளிது நமக்கு அர்ச்சாவதாரமே எளிது.

இதைத்தான் நமக்கு ஆழ்வார்கள் காட்டிக் கொடுத்தனர். வேதம் தமிழ் செய்த மாறனான நம்மாழ்வார் இந்த அர்ச்சாவதாரமே நமக்கு எளிது என்று அடையாளங் காட்டிப் போந்தார் என்கிறார் மணவாளமாமுனிகள்.

செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றியிவற்றுள் - எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ்மாறன் பயின்று

இவ்வாறு பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அருச்சை, என்னும் எம்பெருமானின் இவ்வைந்து நிலைகளை வேதத்தைத் தமிழில் விரித்துரைத்த நம்மாழ்வார் குறிப்பால் உணர்த்திச் சென்றுள்ளார்.

விண் மீதிருப்பாய், மலை மேல் நிற்பாய், கடற் சேர்ப்பாய்
மண் மீதுழழ்வாய், இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்
என் மீதியன்ற புற வண்டத்தாய் என தாவி
உன் மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ?

  • விண் மீதிருப்பாய் - பரத்துவம் (பரமபதம்) 
  • மலை மேல் நிற்பாய் - விபவம் (அவதார புருஷனாக இறங்கி வந்தது) 
  • கடல் சேர்ப்பாய் - வ்யூகம் (திருப்பாற்கடலில் 5 வ்யூகமாக பிரித்து) 
  • மண் மீதுழழ்வாய் - அர்ச்சை (த்வ்யதேசங்களிலும் பிற ஸ்தலங்களிலுமுள்ள அர்ச்சா மூர்த்திகள்) 
  • என் மீதியன்ற புறவண்டத்தாய் - அந்தர்யாமியாய் கலந்தது. 
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - அறிமுகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • ஆரம்ப வார்த்தைகளால் பெயர் பெற்றவை திருப்பல்லாண்டு, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு
  • அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி
  • ஆரம்ப வார்த்தைகளாலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது நான்முகன் திருவந்தாதி
  • பாடியவர்களாற் பெயர் பெற்றவை பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி
  • அளவால் பெயர் பெற்றவை பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை
  • பாவாற் பெயர் பெற்றவை, திருவாசிரியம், திருச்சந்த விருத்தம், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்
  • செயலாற் பெயர் பெற்றவை திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி
  • தன்மையால் பெயர் பெற்றவை திருவிருத்தம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருமாலை
  • சிறப்பால் பெயர் பெற்றது திருவாய்மொழி

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய ப்ரபந்தங்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் எனத் தொகுத்தார். 

  • 1. பொய்கை ஆழ்வார்: அம்சம் - பாஞ்சசன்னியம் (சங்கு), அவதார ஸ்தலம் - பொற்றாமரைக் குளம், திருவெஃகா
  • 2. பூதத்தாழ்வார்: அம்சம் - கௌமோதகம் (கதை), அவதார ஸ்தலம் - திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்)
  • 3. பேயாழ்வார்: அம்சம் - நாந்தகம் (வாள்), அவதார ஸ்தலம் - ஆதிகேசவபெருமாள்கோயில், மயிலாப்பூர்
  • 4. திருமழிசை ஆழ்வார்: அம்சம் - ஆழி (சக்கரத்தாழ்வார்), அவதார ஸ்தலம் - திருமழிசை
  • 5. நம்மாழ்வார்: அம்சம் - சேனை முதலியார், அவதார ஸ்தலம் - திருக்குருகூர்
  • 6. மதுரகவி ஆழ்வார்: அம்சம் - நித்யஸூரி குமுதர், அவதார ஸ்தலம் - திருக்கோளூர்
  • 7. பெரியாழ்வார்: அம்சம் - கருடாழ்வார், அவதார ஸ்தலம் - ஸ்ரீ வில்லிபுத்தூர்
  • 8. ஆண்டாள்: அம்சம் - பூமாதேவி, ஸ்ரீ அவதார ஸ்தலம் -   வில்லிபுத்தூர்
  • 9. குலசேகர ஆழ்வார்: அம்சம் - கௌஸ்துபம், அவதார ஸ்தலம் - திருவஞ்சிக்களம்
  • 10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்: அம்சம் - வைஜயந்தி (வனமாலை), அவதார ஸ்தலம் - திருமண்டங்குடி
  • 11. திருப்பாணாழ்வார்: அம்சம் - ஸ்ரீவத்ஸம், அவதார ஸ்தலம் - உறையூர்
  • 12. திருமங்கை ஆழ்வார்: அம்சம் - சார்ங்கம் (வில்), அவதார ஸ்தலம் - திருக்குறையலூர் (திருவாலி)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - அறிமுகம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்யாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

  • காமம் - பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
  • குரோதம் - கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
  • லோபம் - பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
  • மதம் - யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான்.
  • மாத்ஸர்யம் - மனதில் பொறாமையை நிலை நிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்து விடும்.
  • டம்பம் (வீண் பெருமை) - அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
  • அகந்தை - தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
  • சாத்வீகம் - விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
  • ராஜஸம் - அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
  • தாமஸம் - அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
  • ஞானம் - எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
  • மனம் - நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
  • அஞ்ஞானம் - உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
  • கண் - ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
  • காது - ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
  • மூக்கு - ஆண்டவனின் சந்நதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
  • நாக்கு - கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
  • மெய் - இரு கரங்களால் இறைவனை கை கூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சந்நதிக்கு நடந்து செல்ல வேண்டும். ஆண்டவனை விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டு அத்யாயங்களை மூன்று பகுதிகளாக (ஷட்கம்) பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் ஆறு அத்யாயங்கள் கொண்டுள்ளது. 

  • முதல் பகுதியில் (முதல் 6 வரை உள்ள அத்யாங்கள்) ஜீவனின் தத்துவம், கர்ம யோகம் மற்றும் சுய முயற்சி குறித்து விளக்கப்படுகிறது. 
  • இரண்டாம் பகுதியில் (முதல் 12 வரை உள்ள அத்யாயங்கள்) ஈஸ்வர தத்துவம், பக்தி யோகம் மற்றும் ஈஸ்வர அநுக்ரகம் குறித்து விளக்கப்படுகிறது. 
  • மூன்றாம் பகுதியில் (முதல் 18 வரை உள்ள அத்யாயங்கள்) ஜீவ - ஈஸ்வர ஐக்கியம் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்ற அத்வைத ஞானம்), ஞான யோகம் மற்றும் நற்பண்புகள் குறித்து விளக்கப்படுகிறது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

இந்த ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமத் பகவத் கீதையைப் போன்றே கேள்வி பதிலின் வடிவில் அமைந்துள்ளது. கலி யுகத்தின் தீய விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கான மார்கத்தை அறிய நைமிசாரண்யத்தில் கூடிய முனிவர்கள், ஸ்ரீல சூத கோஸ்வாமியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரளித்த பதில்களின் வடிவில் இஃது அமைந்துள்ளது. ஸ்ரீல சூத கோஸ்வாமியோ, பரிக்ஷித் மன்னரின் கேள்விகளுக்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி எவ்வாறு பதிலளித்தாரோ, அதை அப்படியே நைமிசாரண்யத்தின் முனிவர்களிடம் விவரித்தார்.

  • திருவண்ணாமலையில் இறைவன் மலையாய் இருக்கிறார் என்று கேள்வியுற்றிருப்போம்.
  • நைமிஷாரண்யத்தில் இறைவன் காடாக இருக்கிறார்.
  • புஷ்கரம் என்னும் புண்ணிய தல த்தில் இறைவனே ஏரியாக இருந்து அனைவரின் ஸம்ஸார தாகத்தையும் தணிக்கிறார்.
  • மரங்களில் அரசமரமாக வீற்றிருக்கிறார்.
  • அது போல், புத்தகங்களில் ஸ்ரீமத் பாகவதமாக இறைவன் இருக்கிறார். 

ஸ்ரீமத் பாகவதாக்யேயாம் ப்ரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவ ஹி" 
என்பது பாகவத மாஹாத்ம்யத்தில் இருக்கும் ஒரு ஸ்லோகம்.

ஸ்ரீமத் பாகவதத்தின் உருவில் ப்ரத்யக்ஷமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார்.

இந்த பாகவதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

புராணம் என்றால் படிப்பார்கள், சொல்லுவார்கள், பிறர் சொல்லக் கேட்பார்கள். யாரவது பருகினார்கள், அருந்தினார்கள், சுவைத்தார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியுமா? ஆனால் இந்த புராணத்தைப் பருக முடியும், அதுவும் காது வழியாக. தேனினும் இனிய பகவானின் குணங்களை, லீலைகளைக் சொல்லும் நூல், சொல்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு, என அனைவருக்கும் இனிமையை வாரி வழங்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||பூர்வ பீடி²கா||

ஓம் ஸு²க்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும்
ஸ²ஸி² வர்ணம் சதுர்பு⁴ஜம்| 
ப்ரஸந்ந வத³நம் த்⁴யாயேத் 
ஸர்வ விக்⁴நோப ஸா²ந்தயே||

  • ஸு²க்லாம் ப³ரத⁴ரம்ஸு²க்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் பெருமாள் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
  • விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
  • ஸ²ஸி² வர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர் (பெரும்பாலும் நீல நிறம் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் வ்யூஹ அவதாரங்களில் ஒரு உருவம் சந்திர நிறம் கொண்டவர்)
  • சதுர்பு⁴ஜம் - நான்கு கைகளை உடையவர்
  • ப்ரஸந்ந வத³நம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
  • த்⁴யாயேத் - தியானிக்கிறேன்
  • ஸர்வ விக்⁴ந உப ஸா²ந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும் 
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 81 வார்த்தைகள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

81 வார்த்தைகள்

  • 1 அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே| 
  • 2 அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே|
  • 3 தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே|
  • 4 தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே|
  • 5 பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே|
  • 6 பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே|
  • 7 தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே|
  • 8 தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே|
  • 9 மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே|
  • 10 முதலடியைப் பெற்றேனோ அஹலிகையைப் போலே|
  • 11 பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே|
  • 12 எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே|
  • 13 ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையாரைப் போலே|
  • 14 அவன் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே|
  • 15 ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே|
  • 16 யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே|
  • 17 அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே|
  • 18 அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே|
  • 19 அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே|
  • 20 அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே|
  • 21 தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியாரைப் போலே|
  • 22 தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே|
  • 23 ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே|
  • 24 ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே|
  • 25 அநுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே|
  • 26 அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே|
  • 27 ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே|
  • 28 அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே|
  • 29 கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே|
  • 30 கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே|
  • 31 குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வானைப் போலே|
  • 32 கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே|
  • 33 இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவானைப் போலே|
  • 34 இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே|
  • 35 இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே|
  • 36 இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியாரைப் போலே|
  • 37 அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியாரைப் போலே|
  • 38 அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே|
  • 39 அனுப்பி வைய்யும் என்றேனோ வசிஷ்டரைப் போலே|
  • 40 அடி வாங்கினேனோ கொங்கிற் பிராட்டியைப் போலே|
  • 41 மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே|
  • 42 மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே|
  • 43 பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே|
  • 44 பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே|
  • 45 வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே|
  • 46 வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே|
  • 47 அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே|
  • 48 அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே|
  • 49 இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே|
  • 50 இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே|
  • 51 இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே|
  • 52 இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே|
  • 53 காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே|
  • 54 கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே|
  • 55 இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே|
  • 56 இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே|
  • 57 இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே|
  • 58 நில் என்று பெற்றேனோ இடையற்றூர்குடி நம்பியைப் போலே|
  • 59 நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே|
  • 60 அவன் போனான் என்றேனோ மாருதியாண்டானைப் போலே|
  • 61 அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே|
  • 62 அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே|
  • 63 அருள் ஆழங்கண்டேனோ நல்லானைப் போலே|
  • 64 அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே|
  • 65 ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே|
  • 66 அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே|
  • 67 அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே|
  • 68 கள்வன் இவன் என்றேனோ லோககுருவைப் போலே|
  • 69 கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே|
  • 70 சுற்றி கிடந்தேனோ திருமாலையாண்டானை போலே|
  • 71 சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூராரைப் போலே|
  • 72 உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே|
  • 73 உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே|
  • 74 என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே|
  • 75 யான் சிறியேன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே|
  • 76 நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே|
  • 77 நீரோருகம் கொண்டேனோ காசி சிங்கனைப் போலே|
  • 78 வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே|
  • 79 வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே|
  • 80 தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே|
  • 81 துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - அறிமுகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

இவனே இறைவன். இவனே சகல ஜீவராசிகட்கும், தேவர்கட்கும் சகல லோகங்களுக்கும் ஆத்மாவாக இருப்பவன். “சர்வம் விஷ்ணுமயம் ஜகத்”. இந்த மகாவிஷ்ணு பரமபதத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் எந்நேரமும் நித்ய சூரிகளால் பல்லாண்டு இசைக்க சகல லோகங்களையும் காத்தருள்கிறான். இவர் உலகு படைப்பதற்காகவும், பக்தர்கட்காகவும் தம்மை ஐந்து வடிவங்களில் உண்டாக்கி தரிசனம் தருகிறார் என்பது மரபு. அவைகள் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அருச்சை என ஐவகைப்படும். இதனை விரிவுறக் காணலாம் 

1) பரம்
பரம பதத்தில் திருமகள், மண்மகள் எனப்படும் பூமாதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவிமார்களுடன் எழுந்தருளி இருக்கிறார். இங்கு பகவானுக்கோ, மற்றவர்கட்கோ, பசி, தாகம், தூக்கம், துக்கம், அயர்வு என்பன கிடையாது.  இங்கு உள்ளவர்களையே நித்ய சூரிகள் என அழைப்பதுண்டு. இவர்கள் அத்தம்பதிகளின் அழகிலும், கல்யாண குணங்களிலும் ஈடுபட்டு எப்போதும் அவர்களைச் சாம கானத்தில் புகழ்ந்து கொண்டு ஆனந்தித்திருப்பார். அத்தம்பதிகளோ இவர்களின் சேர்த்தியில் ஆனந்தம் கொண்டிருப்பர். இவ்வுலகிற்குப் பாட்டுக் கேட்கும் உலகு என்று பெயர். 

2) வ்யூகம்
ஸ்ரீமந்நாராயணன் பரமபதமாகிய இந்த வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு வெள்ளையந்தீவு என்று சொல்லப்படும் சீராப்தி என்ற பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காகவும் தன்னைக் கீழ்க்கண்ட வ்யூகமாக பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் திருமகளும், பூமகளும் திருவடி வருட யோக நித்திரை செய்து அறிதுயிலமர்ந்த நிலையில் உள்ளார். இதைத்தான் “உறங்குவது போல யோகு செய்து” என்பார் நம்மாழ்வார். இந்த வ்யூகத்தில் (வ்யூகம் என்றால் விரிவுபடுத்துதல் எனப் பொருள்)
  
*கிழக்கு நோக்கிச் சிரிப்புடன் கூடிய வாசுதேவனாகவும், தெற்கு நோக்கிச் சிங்கமுகம் கொண்ட சங்கர்ஷனனாகவும், வடக்கு நோக்கிய வராகமுகம் கொண்ட பிரத்யுமனனாகவும், மேற்கு நோக்கிய ருத்ரமுகம் கொண்ட அனிருத்னாகவும் தம்மை வ்யூகப்படுத்தி சர்வ திக்குகளையும் நோக்கியுள்ளார்.*

தேவர்கள் தமக்குத் துன்பம் நேரிடும்போதெல்லாம் இந்தப் பாற்கடலின் கரையில் வந்து நின்று ஸ்ரீமந் நாராயணனைப் பற்றியெழுப்பி தமது முறையீட்டினைத் தெரிவித்து அபயக்குரல் கொடுப்பர். எம்பெருமானும் அபயமளிப்பான். எனவே இந்த உலகிற்கு கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர். இந்த வ்யூக வாசுதேவனுடன் மற்றைய மூன்று உருவங்களும் பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுகின்றன என்பது ஐதீஹம்.

3) விபவம் 
விபவம் என்ற வடசொல்லுக்கு இறங்கி வருதல் என்று பொருள். பக்தர்கட்காகவும் உலகுய்யவும் - இரண்டிடங்களிலிருந்து இறங்கி வருதல், ஸ்ரீ இராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணனாகவும், பூவுலகில் தோன்றிய அவதாரங்களை விபவம் என்பர். இவைகள் பூர்ணாவதாரம், அமிசாவதாரம், ஆவேச அவதாரம் என்று வகைப்படும். இராம, கிருஷ்ண, வாமன, பரசுராம அவதாரங்கள் பூர்ணவதாரம். மச்சாவதாரம், வராக அவதாரம் போன்றன அமிசாவதாரம். நரசிம்மம் - ஆவேச அவதாரம். 

4) அந்தர்யாமித்வம் 
இதில் ஒவ்வொரு ஜீவாத்மாவின் உள்ளிருந்தும் அதைத் தாங்கி நிற்பதாக ஐதீஹம். அந்தர்யாமியாக - மறைமுகமாக (உள்ளுக்குள் உணர்வாய், உணர்வுக்குள் உயிராய்) மானிடர்களின், ஞானிகளின், பக்தர்களின் உள்ளத்திலிருந்து தம் சக்தியை வெளிப்படுத்தும். 

5) அருச்சை 
நம்மைப்போன்ற சாமான்ய மனிதர்கள் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம் என்னும் இவைகளை கண்ணால் காண்பதும், கருத்தால் தீண்டலும் அரிதே. ஆம் பரமபதத்திற்குச் செல்ல நாம் நித்ய சூரிகளாக இல்லை. வ்யூகத்தைக் காண நாம் தேவர்களாயில்லை. விபவ அவதாரங்கள் நிகழ்ந்த காலக் கட்டத்தில் நாம் எப்படிப்பட்ட ஜென்மங்களாக இருந்தோம் என்பதை உணருமாறில்லை. அந்தர்யாமித்யமாய் இருப்பதை அறியும் ஆற்றலும் நமக்கு இல்லை. எனவேதான் ஒரு மனிதன் (ஒரு பக்தன்) தங்கம், வெள்ளி, கல், மரம், சாளக்கிராமம், முதலிய வஸ்துக்களில் யாதாயினுமொரு கருப்பொருளில் தன் மனதிற்குகந்தவாறும், சாஸ்திரங்களில் கூறியமுறை வழுவாமலும் மேற்சொன்னவற்றில் ஏதாயினுமோர் உருவத்தை பிரதிட்டை செய்து வழிபடும் முறைக்கு அருச்சை அல்லது அர்ச்சாவதார வழிபாடு என்று பெயர். இதனையே விக்ரக ஆராதனை அல்லது உருவ வழிபாடு என்றும் சொல்வர். 

மனிதர்கள் செய்யாமல், பக்தர்களின் வேண்டுகோளுக்காக எம்பெருமான் தானே யுகந்து அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளியதுண்டு. பக்தர்கள் விரும்பிய உருவங்களில் இந்த அர்ச்சா வடிவங்களில் தன்னை வெளிக்காட்டியதுண்டு. நம் போன்று இந்தக் கலியுகத்தில் வாழ்பவர்கட்கு அர்ச்சாவதாரம் போன்று எளிதாக வேறென்ன இருக்க முடியும். அல்லது இதை விடுத்தால் தான் நம் மனதில் பக்திக்கு அடைக்கலம் அளித்து உய்விக்க வேறு என்ன உபாயம் இருக்க முடியும். 

“புகலொன்றில்லா அடியேன் நின்னடிக்கீழ் புகுந்தொழிந்தேனே” என்றாற் போல் இதைவிட்டால் நமக்கு புகலேது. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - அறிமுகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மறை என்று அழைக்கப்படும் வேதம், பகவான் நமக்கருளிய சரீர இந்திரியங்களைக் கொண்டு இவ்வுலகில் வாழ வேண்டிய முறையைக் காட்டிக் கொடுப்பதோடு பிறவிக் கடலைக் கடக்க வழியையும் காட்டிக்கொடுக்கிறது. அவ்வேதங்களை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தே பொருள் கொள்வது அவசியமாக உள்ள நிலையில், எம்பெருமான் அருளால் மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்கள் உயர்ந்த அரியதான விஷயார்த்தங்கள் அனைத்து தரப்பு மக்களையும் எளிதாக சென்றடையும் வகையில் திவ்ய ப்ரபந்தங்களாக அருளிச் செய்துள்ளனர். ஆழ்வார் வேதங்கள் காட்டிக் கொடுக்கும் ஆதிமூல காரணமான பகவானை, பக்தி பாவம், தாஸ பாவம், நாயக பாவம், தாய் பாவம் முதலிய பலவித பாவங்களில் அனுபவித்து தம் அனுபவம் கரைபுரண்டு ஓட அதன் வெளிப்பாடாக அவ்வனுபவ ரஸம் சொட்டச் சொட்ட தமது ஈரச்சொற்களில் உலகோர் உய்வடையும் பொருட்டு அருளிச் செய்துள்ளனர். மக்கள் வெவ்வேறு விஷயத்தில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள் அல்லவா! ஆழ்வார்கள் உணர்ச்சிப் பெருக்கால் உண்டான ஈரச்சொற்கள் ஆசை உடையவர்கள் அனைவரையும் தடுத்து ஆட்கொள்ள வல்லதாய் அமைந்திருப்பது பகவதருளே.

முதல் ஆழ்வார்களும் திருமழிசை ஆழ்வாரும் த்வாபர யுகத்திலும், நம்மாழ்வார் தொடங்கி மற்ற அனைத்து ஆழ்வார்களும் கலியுகத்திலும் அவதரித்து பகவான் ஸ்ரீமந்நாராயணனின் அருளால் அஞ்ஞானம் தொலைந்து ஞானம் பிரகாசிக்க, தாங்கள் ஞான திருஷ்டியால் அனுபவித்தவற்றை உள்ளது உள்ளபடி திவ்ய ப்ரபந்தங்களில் காட்டியுள்ளனர்.

காலப்போக்கில் இவை உலகில் மறைந்து போக, பகவான் எல்லையில்லா கருணை கொண்டு நாதமுனிகள் என்னும் ஆசார்யர் மூலம் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் முழுவதுமாக மீண்டும் கிடைக்க வழி வகுத்தான் போலும். நம்மாழ்வாரை யோக தசையில் தரிசித்தார். அவராலேயே அவரது ப்ரபந்தங்கள் மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும் அவற்றின் விசேஷ அர்த்தங்களையும் உபதேசிக்கப் பெற்றார்.

நாலாயிர திவ்யப் ப்ரபந்தங்களின் சீர்மை கருதி நாதமுனிகள் அவற்றுக்கு இயலும் இசையும் சேர்த்து தன் காலத்தவர்களுக்கு உபதேசித்து, காலதத்துவம் உள்ளவரை உலகில் நடையாடும்படியாக பேருபகாரம் செய்தருளினார். "தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்" என்று ஸ்வாமி தேசிகனால் போற்றப்பட்டவர். பகவானின் அருள் ஒன்றே காரணமாக இன்று இவை கிடைக்கப்பெற்ற நாம் பரம பாக்கியசாலிகள் என்பதை உணர்ந்து ஸேவித்து, பகவத் அருளால் படிப்படியாக முன்னேறி பகவான் திருவுள்ளம் உகக்கும்படி வாழ வழி கிடைக்கும் என்பது ஸர்வ நிச்சயம். 

பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும்.  கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் ப்ரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் என அழைக்கும்படி அருளினார். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய ப்ரபந்தங்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் எனத் தொகுத்தார். 

நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ‘திவ்யம்’ என்பது அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது என்ற பொருளில் இனிமை என்னும் பொருளைத் தரும். ‘ப்ரபந்தம்’ என்பது ‘தொகுப்பு’ என்றும் ‘தனி நூல்’ என்றும் பொருள் தரும் என்பர். எனவே, திவ்ய ப்ரபந்தம் என்பது, தெய்வத்தின் திவ்ய குணங்களைப் போற்றும் ப்ரபந்தங்களின் தொகுப்பு என்று பொருள் தரும். 

இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட ப்ரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - அறிமுகம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தையில் உள்ளது 18 அத்யாயங்கள்.

முதலில் கீதை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அதன் காரணங்கள் ஆன கதை மிகவும் அவசியம். அதன் பிறகு அதன் ஸ்லோகங்கள், அதன் விளக்கம் பற்றி பார்ப்போம். ரொம்ப பேருக்கு, கீதை என்றால் அதன் ஸ்லோகங்கள் பற்றி தான் தெரியும். அதன் முன் கதை பற்றி பல பேருக்கு தெரியாதது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம் நோக்கமே ஸ்ரீமத் பகவத் கீதை தான். ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ளது 18 அத்யாயங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25ம் அத்யாயம் தொடக்கமாக 42ம் அத்யாயம் முடிய பதினெட்டு அத்யாயங்கள் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீமத் பகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.


கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளன. சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு. ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும்.

இவற்றில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதாக 574 ஸ்லோகங்கள், அர்ஜுனன் பேசுவது 84, ஸஞ்ஜயன் பேசுவது 41, ஒரே ஒரு ஸ்லோகம். திருதராஷ்டிரன் சொல்வதாக உள்ளது. 

பாரதம் ஐந்தாவது வேதம் (பாரத: பஞ்சமோ வேத:), என்பது வழக்கு. வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவாகப் பிரிக்கப் படுகிறது. இதில் ஞான காண்டம், ஆத்மாவைக் குறித்த ஆராய்ச்சிகள் இடம் பெரும். ஞான காண்டத்துக்கு உபநிஷத் என்றும் பெயர் உண்டு. அதே போல பாரதத்தில் ஞான காண்டமாக கீதை விளங்குகிறது. கீதையை ஓதினால் உபநிஷதங்கள் அனைத்தையும் கற்ற பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கி.மு 3067 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உன்னதமான நிகழ்ச்சியை தெரிந்துக் கொள்வதன் மூலம் தர்மத்தின் வழி நடப்பது எவ்வாறு என்பதையும் அதன் உன்னதம் எத்தகையது என்பதையும் அதனால் நாம் எத்தகைய நல்ல உன்னதமான கதியை அடைவோம் என்பது பற்றியும் அறியலாம்.  


ஸ்ரீமத் பகவத் கீதையை ஸ்ரீ கிருஷ்ணரின் மூலம் அர்ஜுனன் தெரிந்து கொண்டான். அதை எழுதி வைத்த வியாச முனிவர் மூலம் நாம் இன்றும் அதை படித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று இருக்கிறோம் .

கீதை 18 அத்யாயங்களைக் கொண்டது. இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமனுஜர், ஸ்ரீ மத்வர் போன்ற சமயாச்சார்யார்கள் வியாக்யானம் எழுதியுள்ளனர். 

ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல் பகவான் கிருஷ்ணர் அருளிய கீதை இந்துக்களின் வேத நூல் ஆகும். 

ஸ்ரீமத் பகவத் கீதையை பகவத் கீதா என்று சொல்வதும் வழக்கம். பகவத் என்றால் இறைவன். கீதா என்றால் நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது தாகீ என்று மாறும். தாகீ என்றால் தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் கீதா விற்குரிய ஆழமான பொருளாகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

"ஸ்ரீமத் பாகவதம்", பகவானது குணானுபவங்களை வெளியெடுத்துச் சொல்லும் நூலாம். அப்பரம்பொருள் அளவிட முடியாத ஐஸ்வர்யம், வீர்யம், கீர்த்தி, அழகு ஞானம், வைராக்கியம் ஆகிய ஆறு குணங்களின் நிலமாய் இருப்பதால் அவருக்குப் பகவான் என்று பெயர். அவரது ஸ்வரூபத்தின் மென்மையும், அவர் செய்த அவதாரங்களின் சரித்திரத்தையும் சொல்லுவதால், இதற்குப் பாகவதம் என்ற பெயர் வந்தது. இது ஸ்ரீ வேத வியாசரால் அவர் செய்த புராணாதிகளின் இறுதியில் பதினெட்டாவது புராணமாகச் செய்யப்பட்டது. இது கங்கைக் கரையில் பிராயோபவேசம் {அன்ன ஆகாரம் இன்றிப் பட்டினிக் கிடத்தல்} செய்து கொண்டு ஏழாம் நாள் தனக்கு வரப்போகிற மரணத்தை எதிர்பார்த்திருந்த அர்ச்சுனனது பேரனாகிய பரீட்சித்துக்கு வியாசருடைய பிள்ளையும், முற்றுந்துறந்த முழு ஞானியுமான சுகப்ரஹ்மத்தால் சொல்லப்பட்டது. இந்த புராணத்தில் 12 ஸ்கந்தங்களும், 18,000 ஸ்லோகங்களும் உள்ளன. 


ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடம் இருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமே ஸ்ரீமத் பாகவதம்
ஒரு கல்லிலோ பளிங்கிலோ பகவான் அவதரிக்கும் போது, அவரை விக்ரஹம் என்கிறோம். அவர் மீனாகத் தோன்றினால் மத்சயர் என்றும், ஆமையாகத் தோன்றினால் கூர்மர் என்றும், பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் தோன்றினால் நரசிம்மர் என்றும் அழைக்கின்றோம். அது போலவே, புத்தகத்தின் வடிவில் கிருஷ்ணர் தோன்றினால், அவர் ஸ்ரீமத் பாகவதம் என்று அறியப்படுகிறார்.


ஸ்ரீமத் பாகவதம் தோன்றிய விதம்
நான்கு வேதங்கள், வேதாந்த சூத்திரம், புராணங்கள், மகாபாரதம் போன்றவற்றை தொகுத்து வழங்கிய மாமுனிவரான ஸ்ரீல வியாச தேவரின் மனம், அவ்வாறு தொகுத்த பின்னும் திருப்தி அடையவில்லை. அந்நிலைக்கான காரணத்தை அவர் தனது ஆன்மீக குருவான ஸ்ரீல நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர், “உண்மையில், முழுமுதற் கடவுளின் களங்கமற்ற புகழை நீ வர்ணிக்கவில்லை. பகவானின் தெய்வீகப் புலன்களைத் திருப்தி செய்யாத தத்துவங்கள் பயனற்றவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விவரமாக விளக்கியுள்ள போதிலும், முழுமுதற் கடவுளான வாசுதேவரின் (கிருஷ்ணரின்) புகழை நீ விளக்கவில்லை. அந்த முழுமுதற் கடவுளின் சேவையில் நமது எல்லா செயல்களையும் அர்ப்பணிப்பதால் மட்டுமே நமது அனைத்து துயரங்களையும் போக்க முடியும். ஆகையால் தயவுசெய்து நீ பகவானின் லீலைகளைப் பற்றி நேரடியாக வர்ணிப்பாயாக. அதுவே கற்றறிந்தவர்களின் ஏக்கத்தை திருப்தி செய்ய வல்லது” என்று வியாசருக்கு உபதேசித்தார். இவ்வாறாக, ஞானத்தின் முதிர்ந்த நிலையில், தனது குருவான நாரதரின் கட்டளைப்படி, வியாச தேவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் நமக்கு அருளினார். நாரத முனிவர் ருக்மணி பிராட்டியாருக்கு வியாசர் அருளிய பாகவதத்தை சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - அறிமுகம்l

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மகாபாரதத்தில் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உள்ளது. விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் குறிக்கும். இது மகாபாரதத்தின் அனுஷாசானிகா பர்வத்தில் (அரசர்களுக்கான கட்டளைகள் அல்லது விதிகள் தொடர்பான அத்தியாயம்) காணப்படுகிறது.


பிதாமகன் பீஷ்மர் அர்ஜுநனால் தோற்கடிக்கப்பட்டு படுகாயமடைந்தார். ஆனால் அவர் பெற்ற வரத்தின்படி அவர் இறக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதால், அவர் உத்தராயணத்தில் மரணத்தைத் தேர்ந்தெடுத்து சுப காலத்திற்காக காத்திருந்தார். இதற்கிடையில், பஞ்ச பாண்டவர்கள் மற்றும் அபிமன்யுவின் பிறக்காத குழந்தை தவிர அவரது குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும் மரணத்திற்கு வழிவகுத்தது போர் முடிந்தது. பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தின் அரசரானார், மேலும் பீஷ்மரைத் தவிர வேறு யாருடைய ஆலோசனையைப் பெறுவார். அனுஷாசானிகா பர்வா என்பது யுதிஷ்டிரனுக்கும் பீஷ்மா பிதாமஹாவுக்கும் இடையேயான கேள்விகள் மற்றும் பதில்களின் வடிவத்தில் உள்ளது. சாத்தியமான சிறந்த ஸ்தோத்திரம் எது என்ற கேள்விக்கு, அது விஷ்ணு என்று பீஷ்மர் பதிலளிக்கிறார். ஸஹஸ்ர நாமம் செய்து யுதிஷ்டிரனுக்கு உபதேசிக்கிறார்.

இது ஸஹஸ்ர நாமம் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் அது 901 வித்தியாசமான ஒலிப் பெயர்களை மட்டுமே கொண்டுள்ளது. எண்ணூற்று பதினைந்து பெயர்கள் ஒரு முறையும், எழுபத்தைந்து பெயர்கள் இரண்டு முறையும், ஒன்பது பெயர்கள் மூன்று முறையும், இந்த பெயர்களில் இரண்டு நான்கு முறையும் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன. ஒரே வார்த்தைக்கு வெவ்வேறு அர்த்தங்களை வெவ்வேறு இடங்களில் கொடுக்க ஆச்சார்யர்கள் முயற்சித்து வெற்றி அடைந்து உள்ளனர்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பூர்வபாகா அல்லது முன்னுரையுடன் தொடங்குகிறது. இந்த பகுதி இருபத்தி ஒரு வசனங்களைக் கொண்டுள்ளது, பெரும்பாலும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களைத் தூண்டுவது மற்றும் அவரது மகத்துவத்தை விளக்கும் வடிவத்தில் உள்ளது. இந்த பகுதி யுதிஷ்டிரருக்கும் பீஷ்மருக்கும் இடையேயான உரையாடல் வடிவில் உள்ளது.

அனைத்து கேள்விகளுக்கும் பீஷ்மர் பதில் அளித்தார். அப்போது பகவான் ஸ்ரீ விஷ்ணு வின் ஆயிரம் பெயர்களையும் கூறினார்.

யுதிஷ்திரரின் கேள்விகள்: -

  • யார் இந்த உலகத்தின் முக்கிய கடவுள்?
  • யாருக்கு செய்கின்ற பிராத்தனை அனைவரின் புகலிடமாக இருக்கிறது?
  • எந்த கடவுளை வனங்குவதன் மூலம் ஒரு மனிதன் அமைதி மற்றும் நல்ல வாழ்க்கை கிடைகிறது?
  • எந்த கடவுளை புகழ்த்து படுவதால் ஒருவனுக்கு சந்தோசம் கிடைக்கும்?
  • உங்களை பொருத்தவரை எது தர்மம், எது நல்ல செயல்?
  • எல்லா ஜீவ ராசிகளும் பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபட யாரை வணங்க வேண்டும்?

பீஷ்மரின் பதில்:

  • இந்த உலகத்தின் கடவுள் ஸ்ரீ விஷ்ணு.எல்லா கடவுளின் கடவுள். முடிவில்லாதவர். புனிதமானவர். இவருடைய ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலன் ஒரு மனிதன் முக்தி அடையலாம்.
  • யார் ஒருவன் அந்த கடவுளை நிலையான புத்தியுடன் பூஜிக்கிறானோ தியானிக்கிரானோ அவன் அழிவை அடைவதில்லை.
  • அப்படிப்பட்ட கடவுளை எவன் ஒருவன் பணிந்து நமஸ்காரம் செய்கிறானோ அவன் அவருடைய அருளை பெறுவான்.
  • ஸ்ரீ விஷ்ணு ஆரம்பம் முடிவு இல்லாதவர். இந்த உலகத்தின் உச்ச கடவுள்.
  • இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் அவரே. துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து பூஜிப்பானோ அவன் எல்லா கட்டுக்களில் இருந்தும் விடுபடுவான்.
  • ஸ்ரீ விஷ்ணு மிகவும் பிரகாசமானவர். அனைத்தையும் கட்டுபடுத்துபவர். அவர் உச்சமான உண்மை. அடையப்பட வேண்டியவர்.
  • அவர் சுத்ததிற்கு எல்லாம் சுத்தமானவர். புனிதத்திற்கு எல்லாம் புனிதம். கடவுளுக்கு எல்லாம் கடவுள். அனைத்து ஜீவ ராசிகளின் தந்தை. அவர் தான் ஸ்ரீ விஷ்ணு பகவான்.

ஸ்ரீ விஷ்ணுவின் அருள் பெறுவதற்கு பீஷ்மர் கொடுத்த அறிவுரை:
ஸ்ரீ விஷ்ணு தான் முதன்மை கடவுள். அவருடைய ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலம் பயத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுதலை பெறலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறிமுகம்l

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

நவ திருப்பதிகளில் ஒன்றான, மதுரகவியாழ்வாரால் பெருமை பெற்ற திவ்ய தேசமான திருக்கோளூரில் ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அந்த பெண் மதுரகவியாழ்வாருடைய நிஷ்டை படைத்தவள். வைத்த மாநிதி பெருமானுடைய அனுக்ரஹம் பெற்றவள். நம்மாழ்வாருடைய பாசுரத்திலே திளைத்தவள். அப்படிப்பட்ட அப்பெண் எந்த காரணத்தாலோ அவ்வூரை விட்டு வெளியேறி போய்க் கொண்டிருந்த அதே சமயம், ஸ்வாமி ராமானுஜர் பல திவ்ய தேசங்களுக்கு யாத்திரையாக வருகிறார். அப்படி ஒவ்வொரு ஊராக போய்க் கொண்டிருந்த அவர் திருக்கோளூருக்குள் சென்று கொண்டிருந்தார். ராமாநுஜருக்கு நம்மாழ்வாரிடத்தில் தனி ப்ரீதியும் பக்தியும் இருந்தது. காரணம், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே பல திவ்ய தேச பெருமாள்களின் தரிசனம் கிடைக்கப் பெற்று,  மங்களாஸாஸநம் செய்த பெருமைக்கு உரியவர் நம்மாழ்வார் மட்டுமே! அவர் அவதரித்த ஆழ்வார் திருநகரி திருத்தலத்தை தரிசித்து வணங்கிய பின்னர், ராமாநுஜர், 'எல்லோரும் விரும்பிப் புகும் ஊர்’ என்று நம்மாழ்வாரால் போற்றப் பெற்ற திருக்கோளூருக்குச் செல்கிறார். அந்த திவ்ய தேசத்தின் புறநகரில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். ஸ்வாமியை பார்த்த அப்பெண் மிகுந்த பக்தியோடு அவருக்கு தெண்டன் சமர்ப்பிகிறாள். அப்போது ஸ்வாமி அவளை பார்த்து "எங்கிருந்து வருகிறாய்" என்று வினவினார். அதற்கு அப்பெண் திருக்கோளூரை விட்டு வெளியேறுவதாக கூறினாள். அதை கேட்டு ஆச்சர்யம் அடைந்த ஸ்வாமி, ‘‘அம்மா, உனக்குக் குறை தான் என்ன?’’ ஏழு பேராக ஒரே துணியை அணிந்து கொண்டாலும், எது கிடைத்தாலும் சாப்பிட்டு கொண்டு, திருக்கோளூரிலேயே இருக்க வேண்டும் என்று அனைவர்க்கும் புகு ஊராக இருக்கும் இவ்வூர் உமக்கு மட்டும் ஏன் போகும் ஊரக இருக்கிறது? நாங்கள் எல்லோரும் இந்த ஊர் கிடைக்குமா என்றெண்ணி உள்ளே புகுர்கிறோம் நீர் ஏன் வெளியே வந்தீர்? என்று வினவ, அதற்கு அந்த பெண், “எனக்கு என்ன யோகியதை இருக்கிறது இந்த ஊரில் இருக்க? எனக்கு எந்த யோகியதையும் இல்லை. காலந்தோறும் தோன்றிய திருமாலடியார்கள் போல், தான் எதனையும் சாதித்து விடவில்லை என்றும், எந்த பெரியவரை போலவும் நான் நடந்துக் கொள்ளவில்லையே. அவர்களை போல நான் வாழ்ந்து காட்ட வில்லையே! அதனால் தான் இந்த ஊரில் இருப்பதே தவறு என்று எண்ணி ஊரை விட்டு புறப்படுகிறேன்” என்று கூறி, அவர்களுடைய செயற்கரிய செயல்களைப் பட்டியலிட்டுக் 
கூறினாள். 


இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கூறினாள். அத்தகைய சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். மிகச் சிறந்த திருத்தலமாகிய திருக்கோளூரில், தான் தொடர்ந்து வசிக்கத் தகுதியற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி, அடியேன் அவர்களைப் போல் ஞானமும் அன்பும் பக்தியும் கொண்டிருந்தேன் என்றால் நானும் இவ்வூரில் தங்கலாம். ஆனால் அவர்களைப் போல் ஞானம் கொன்டவள் இல்லை. அழகிய மரமாகும் திறன் இல்லா விதை வயலில் இருந்தால் என்ன பாலைவனத்தில் இருந்தால் என்ன? இரண்டும் அதற்கு ஒன்று தானே. அடியேன் கூறிய நற்காரியங்கள் ஏதும் செய்திராமல், எவ்வாறு நான் இந்த ஊரில் வசிப்பதற்குத் தகுதியானவளாக இருக்கமுடியும்? என்னுடைய இருப்பின் காரணமாக திருக்கோளூர் தன் புனிதத்தை இழந்து விடக்கூடாது. அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள். வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல், தான் திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகக் கூறினாள்.

அத்தனையும் பொறுமையாக கேட்ட ஸ்வாமி ராமானுஜர், இந்த ஊரில் இருப்பதற்கு யோகியதை இல்லை என்று சொல்பவளே இந்த பேச்சு பேசுகிறாளே! சாதாரணப் பெண்மணிக்கே இவ்வளவு ஞானம் இங்கு உள்ளதே என வியந்தார். அப்படியானால் இந்த ஊரில் இருப்பவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து ஆனந்தப்பட்டு ஆச்சர்யப்பட்டு போனார். அவள் சொன்ன அத்தனையையும் யாராலும் இருந்து விட முடியாது. யாரோ சில புருஷர்கள் ஸ்திரீகள் இருந்திருக்கிறார்கள். அவர்களை போல என்னால் இருக்க முடியவில்லையே என்று கூறினாள். இராமானுஜரும் திருக்கோளூர்ச் சான்றோர்களும் அப்பெண்மணியின் ஞானத்தையும், பணிவையும் கண்டு வியந்தனர். அதை கேட்ட ஸ்வாமி, "பெண்ணே! "ஸ்ரீ வைஷ்ணவத்தின் முழு சரித்திரத்தையும், அதன் கொள்கைகளையும் எண்பத்தி ஒன்று வரிகளில் அசாதாரணமாக விளக்கிய உன்னை விட இவ்வூரில் வாழ தகுதியானவர் எவர் இருக்க முடியும்?!" உனக்கு தான் இந்த ஊரில் இருக்க யோகியதை, நான் சொல்கிறேன் வா என்று சொல்லி அப்பெண்மணியை இராமானுஜர் தன்னுடன் அழைத்துச் சென்று, வைத்தமாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் செய்தார். ஊருக்குள் அழைத்து சென்று அவள் இல்லத்தில் தங்கி அவளை தளிகை பண்ண சொல்லி பெருமாளுக்கு கண்டருளப் பண்ணி அமுது பண்ணினார். ஸ்வாமி எந்த இடத்திலும் சாப்பிடுவது கிடையாது. கிடாம்பியாச்சான் ஒருவர் தொட்டு மட்டும் தான் சாப்பிடுவார். கிடாம்பியாச்சானின் மடப்பள்ளி மடத்தில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று அவருடைய அசார்யர்களில் ஒருவரான திருகோட்டியூர் நம்பியின் ஆணை. நிச்சயம் ஸ்வாமி அதை மீறி நடக்க மாட்டார். இருந்தும் அந்த பெண் தொட்டு ஸ்வாமி சாப்பிடுகிறார் என்றால் அந்த பெண்ணிடத்தில் நிச்சயமாக ரொம்ப உசந்த லக்ஷணங்கள் நிறைந்த குணம் இருக்கிறது என்று தானே அர்த்தம். அவள் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வைணவத்தைச் சாறு பிழிந்து கூறுவது போல இருந்தது. அவற்றை சுருங்கச் சொல்லி விளங்கவைத்தது, அப்பெண்ணின் ஞான அறிவைக் கூறுகிறது. அதனால் தான் அவள் சொன்ன அந்த காரணங்கள் "பெண்பிள்ளை ரஹஸ்யம்" என்று ஏட்டில் பதித்து வைத்து எல்லா அசார்யர்களும் ஆசையோடு ஆதரித்து வந்திருக்கிறார்கள். திருமாலடியார்களின் செயற்கரிய செய்லகளை இரண்டிரண்டு அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவற்றுள் இதிகாச புராண வரலாறுகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வரலாற்றிலும் ஒவ்வொரு ரகசியம் (மறை பொருள்) அடங்கியுள்ளது.

அவள் சொல்லும் காரணங்களை தான் “திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்” என்று நமக்கு தொகுத்து கொடுத்துள்ளர்கள். ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரி தான். ஆனால் அதில் உள்ள கதைகள், அதன் அர்த்தங்களை நாம் புரிந்து கொண்டோமேயானால் பல பெரியவர்கள் எப்படியெல்லாம் நடந்துக் கொண்டார்கள் என்பதையும், பல சம்ப்ரதாய விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த வார்த்தைகள் நம் மனதில் சட்டென்று பதிந்து அதை கடை பிடிக்க வேண்டும் என்ற வைராகியத்தையும் கொடுக்க கூடியதாக சிறப்புற்று விளங்குகிறது. இதன் மூலம் பல பெரியவர்கள் எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பதை விளக்கமாகவும் தெரிந்து கொள்கிறோம்.

அதை ஒவ்வொரு வார்த்தையாக விளக்கத்தோடு இப்போது நாம் பார்க்கலாம். முதலில் என்னென்ன வார்த்தைகள் சொன்னாள் என்பதை பார்க்கலாம். அடுத்தடுத்து ஒவ்வொரு வார்த்தைக்குரிய கதையையும் அதிலுள்ள கருத்தினையும் பார்க்கலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்