About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 6 August 2023

திவ்ய ப்ரபந்தம் - அறிமுகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மறை என்று அழைக்கப்படும் வேதம், பகவான் நமக்கருளிய சரீர இந்திரியங்களைக் கொண்டு இவ்வுலகில் வாழ வேண்டிய முறையைக் காட்டிக் கொடுப்பதோடு பிறவிக் கடலைக் கடக்க வழியையும் காட்டிக்கொடுக்கிறது. அவ்வேதங்களை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தே பொருள் கொள்வது அவசியமாக உள்ள நிலையில், எம்பெருமான் அருளால் மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்கள் உயர்ந்த அரியதான விஷயார்த்தங்கள் அனைத்து தரப்பு மக்களையும் எளிதாக சென்றடையும் வகையில் திவ்ய ப்ரபந்தங்களாக அருளிச் செய்துள்ளனர். ஆழ்வார் வேதங்கள் காட்டிக் கொடுக்கும் ஆதிமூல காரணமான பகவானை, பக்தி பாவம், தாஸ பாவம், நாயக பாவம், தாய் பாவம் முதலிய பலவித பாவங்களில் அனுபவித்து தம் அனுபவம் கரைபுரண்டு ஓட அதன் வெளிப்பாடாக அவ்வனுபவ ரஸம் சொட்டச் சொட்ட தமது ஈரச்சொற்களில் உலகோர் உய்வடையும் பொருட்டு அருளிச் செய்துள்ளனர். மக்கள் வெவ்வேறு விஷயத்தில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள் அல்லவா! ஆழ்வார்கள் உணர்ச்சிப் பெருக்கால் உண்டான ஈரச்சொற்கள் ஆசை உடையவர்கள் அனைவரையும் தடுத்து ஆட்கொள்ள வல்லதாய் அமைந்திருப்பது பகவதருளே.

முதல் ஆழ்வார்களும் திருமழிசை ஆழ்வாரும் த்வாபர யுகத்திலும், நம்மாழ்வார் தொடங்கி மற்ற அனைத்து ஆழ்வார்களும் கலியுகத்திலும் அவதரித்து பகவான் ஸ்ரீமந்நாராயணனின் அருளால் அஞ்ஞானம் தொலைந்து ஞானம் பிரகாசிக்க, தாங்கள் ஞான திருஷ்டியால் அனுபவித்தவற்றை உள்ளது உள்ளபடி திவ்ய ப்ரபந்தங்களில் காட்டியுள்ளனர்.

காலப்போக்கில் இவை உலகில் மறைந்து போக, பகவான் எல்லையில்லா கருணை கொண்டு நாதமுனிகள் என்னும் ஆசார்யர் மூலம் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் முழுவதுமாக மீண்டும் கிடைக்க வழி வகுத்தான் போலும். நம்மாழ்வாரை யோக தசையில் தரிசித்தார். அவராலேயே அவரது ப்ரபந்தங்கள் மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும் அவற்றின் விசேஷ அர்த்தங்களையும் உபதேசிக்கப் பெற்றார்.

நாலாயிர திவ்யப் ப்ரபந்தங்களின் சீர்மை கருதி நாதமுனிகள் அவற்றுக்கு இயலும் இசையும் சேர்த்து தன் காலத்தவர்களுக்கு உபதேசித்து, காலதத்துவம் உள்ளவரை உலகில் நடையாடும்படியாக பேருபகாரம் செய்தருளினார். "தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்" என்று ஸ்வாமி தேசிகனால் போற்றப்பட்டவர். பகவானின் அருள் ஒன்றே காரணமாக இன்று இவை கிடைக்கப்பெற்ற நாம் பரம பாக்கியசாலிகள் என்பதை உணர்ந்து ஸேவித்து, பகவத் அருளால் படிப்படியாக முன்னேறி பகவான் திருவுள்ளம் உகக்கும்படி வாழ வழி கிடைக்கும் என்பது ஸர்வ நிச்சயம். 

பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும்.  கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் ப்ரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் என அழைக்கும்படி அருளினார். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய ப்ரபந்தங்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் எனத் தொகுத்தார். 

நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ‘திவ்யம்’ என்பது அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது என்ற பொருளில் இனிமை என்னும் பொருளைத் தரும். ‘ப்ரபந்தம்’ என்பது ‘தொகுப்பு’ என்றும் ‘தனி நூல்’ என்றும் பொருள் தரும் என்பர். எனவே, திவ்ய ப்ரபந்தம் என்பது, தெய்வத்தின் திவ்ய குணங்களைப் போற்றும் ப்ரபந்தங்களின் தொகுப்பு என்று பொருள் தரும். 

இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட ப்ரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment