||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
முக்தியடைந்தவன் பரமபதத்திலிருந்து கொண்டு எப்போதும் எம்பெருமானின் திவ்யத்தில் மூழ்கியிருக்கிறான். எனவே அவன் பூலோகத்தில் நித்ய சேவை சாதிக்கும் திருமலை வேங்கடவனையோ, குடந்தைக் கிடந்த ஆராவமுதனையோ, துவாரகாபுரி கண்ண பிரானையோ சேவிக்க எண்ணினால் அது முடியாதாம்.
இதைத்தான் ஆழ்வார் போயினால் பின்னையித் திசைக்கு பிணை கொடுக்கிணும் போக ஒட்டான் என்கிறார். அதாவது பரமபதத்தில் இருக்கும் முக்தனை எம்பெருமான் போக வொட்டான்.
எனவே பூவுலகில் வந்தவனுக்கு அர்ச்சா மூர்த்தியைவிட்டால் வேறு யார் அடைக்கலம்.
எனவே அர்ச்சாவதாரமே நம்மை இறைவனிடம் நெருக்கி கொண்டு சென்று பரமபதத்து நித்ய சூரிகளில் ஒருவனாக ஆக்கும். நம்மையெல்லாம் உய்விக்கும் பொருட்டே எம்பெருமான் அர்ச்சாவதார மூர்த்திகளாய் இங்கு எழுந்தருளியுள்ளான். எனவே எளிது எளிது நமக்கு அர்ச்சாவதாரமே எளிது.
இதைத்தான் நமக்கு ஆழ்வார்கள் காட்டிக் கொடுத்தனர். வேதம் தமிழ் செய்த மாறனான நம்மாழ்வார் இந்த அர்ச்சாவதாரமே நமக்கு எளிது என்று அடையாளங் காட்டிப் போந்தார் என்கிறார் மணவாளமாமுனிகள்.
செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றியிவற்றுள் - எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ்மாறன் பயின்று
இவ்வாறு பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அருச்சை, என்னும் எம்பெருமானின் இவ்வைந்து நிலைகளை வேதத்தைத் தமிழில் விரித்துரைத்த நம்மாழ்வார் குறிப்பால் உணர்த்திச் சென்றுள்ளார்.
விண் மீதிருப்பாய், மலை மேல் நிற்பாய், கடற் சேர்ப்பாய்
மண் மீதுழழ்வாய், இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்
என் மீதியன்ற புற வண்டத்தாய் என தாவி
உன் மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ?
- விண் மீதிருப்பாய் - பரத்துவம் (பரமபதம்)
- மலை மேல் நிற்பாய் - விபவம் (அவதார புருஷனாக இறங்கி வந்தது)
- கடல் சேர்ப்பாய் - வ்யூகம் (திருப்பாற்கடலில் 5 வ்யூகமாக பிரித்து)
- மண் மீதுழழ்வாய் - அர்ச்சை (த்வ்யதேசங்களிலும் பிற ஸ்தலங்களிலுமுள்ள அர்ச்சா மூர்த்திகள்)
- என் மீதியன்ற புறவண்டத்தாய் - அந்தர்யாமியாய் கலந்தது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment