||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
நந்தகோபரை மலைப் பாம்பு விழுங்குதல்|
ஒரு நாள் மகா சிவராத்திரி தினத்தன்று மகாதேவரைப் பூஜை செய்யும் பொருட்டு, எல்லாச் கோபர்களும் அம்பிகா வனம் என்ற இடத்திற்குச் சென்றார்கள். எல்லோரும் சரஸ்வதி நதியில் முழுங்கினார்கள். நதிக் கரையில் ஒரு பெரிய சிவன் கோவில் இருந்தது. நீராடிய பிறகு எல்லோரும் சிவனையும் பார்வதியையும் மலர்கள், ஊதுபத்திகள், நைவேத்தியங்கள் கொண்டு வழிபட்டார்கள். ஆனால் நந்தகோபர் அன்று முழுவதும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு உபவாசம் இருந்தார். நதிக் கரையிலேயே அவர் படுத்து உறங்கினார்.
அன்றிரவு மிகவும் பசியோடு இருந்த ஒரு மலை பாம்பு நந்தகோபர் தூங்கி கொண்டிருந்த இடத்திற்கு வர நேர்ந்தது. அது நந்தகோபரை விழுங்க ஆரம்பித்தது. அவர் நடுங்கிப் போய், ‘கிருஷ்ணா, கிருஷ்ணா! ஒரு பெரிய மலை பாம்பு என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது. நான் உன்னைச் சரண் அடைந்தேன். என்னை காப்பாற்று’ என்று கத்தினார். எல்லாக் கோபர்களும் விழித்தெழுந்தனர். ஒரு மலைப் பாம்பின் வாயில் நந்தகோபர் இருப்பதைக் கண்டு திகைத்தார்கள். கொள்ளிக் கட்டைகளால் பாம்பை அடித்தார்கள். ஆனால் ஒரு பலனும் ஏற்படவில்லை. நந்தகோபரோ மெல்லப் பாம்பின் வாய்க்குள் சென்றுக் கொண்டிருந்தார். கோபர்களின் கூக்குரலைக் கேட்டுக் கிருஷ்ணன் அங்கே ஒடி வந்தான். அவன் தன் காலால் பாம்பைத் தொட்டான். என்ன ஆச்சரியம்! அந்த பாம்பு உருவம் மறைய, அங்கு ஒரு அழகிய தெய்விக மனிதர் தோன்றினார். அவர் கிருஷ்ணனைக் கீழே விழுந்து வணங்கினார். கிருஷ்ணன் அவரைப் பார்த்து, ‘நீங்கள் யார்? எப்படி இந்த பாம்பின் உருவத்தை அடைந்தீர்கள்!” என்று கேட்டான்.
அதற்கு அந்தத் தெய்வீக மனிதர், ‘நான் தேவலோகத்தில் வசிக்கும் வித்தியாதரர்களில் ஒருவன். செல்வம், அழகு ஆகியவை காரணமாக நான் மிகவும் கர்வத்துடன் இருந்தேன். ஒரு சமயம் பூமியில் உள்ள சில ஆசிரமங்களின் மீது நான் என் விமானத்தில் சென்றேன். அப்போது அங்கிருந்த விகாரமாக விளங்கிய சில முனிவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அதனால் அந்த முனிவர்களில் ஒருவராகிய அங்கிரஸ் எனக்குச் சாபம் கொடுத்தார். ‘நீ ஒரு மலைபாம்பாக மாறிப் பூமியில் வசிக்கக் கடவாய்’ என்று சொன்னார். உடனே நான் என் அழகை இழந்து மலைப் பாம்பாக மாறினேன். எத்தனையோ வருடங்கள் இந்தப் பாம்பு வடிவத்தில் இருந்தேன். இப்போது தங்களின் புனித பாதம் என் மீது பட்டதனால் நான் என் பழைய உருவத்தை அடைந்து விட்டேன்’ என்று சொன்னார். கிருஷ்ணன் அவரை வாழ்த்தித் தேவலோகத்திற்குத் திரும்பும்படி சொன்னான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்