||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணனும் தன் நண்பர்களும்|
தம் நண்பர்களைக் காப்பாற்றி விட்டு கிருஷ்ணன் அவர்களை யமுனை நதிக் கரைக்கு அழைத்து வந்தான். அவனுக்கு மிகவும் பசியாக இருந்தது. ஆதலால் அவன் நண்பர்களை பார்த்து, "இதோ பாருங்கள், உச்சிப் பொழுது ஆகி விட்டது. நாம் எல்லோரும் பசியாக இருக்கிறோம். இங்கேயே உட்கார்ந்து நாம் கொண்டு வந்திருக்கும் உணவைச் சாப்பிடுவோம்" என்று சொன்னான். கிருஷ்ணன் சொல்லுக்கு ஏது மறுப்பு! எல்லாச் சிறுவர்களும் அவன் சொன்னதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். கன்றுகளைத் தண்ணீர் குடிக்க விட்டு பிறகு நல்ல புல் இருந்த இடத்தில் மேய விட்டார்கள். பிறகு கிருஷ்ணன் நடுவில் உட்கார அவனைச் சுற்றி அவனுடைய நண்பர்கள் உட்கார்ந்து கொண்டு, எல்லோரும் தங்கள் உணவுப் பொட்டலங்களைப் பிரித்தார்கள்.
பிறகு ஒருவரை ஒருவர் வேடிக்கையாகப் பரிகசித்து கொண்டு உற்சாகமாகச் சாப்பிட்டார்கள். பார்ப்பதற்கு எவ்வளவு எழிலான காட்சி! நாம் கிருஷ்ணனை படங்களாகவும், விக்கிரங்களாகவும் வடித்து நிவேதனம் செய்கிறோம். ஆனால் இந்தச் சிறுவர்கள் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்! உயிருள்ள கிருஷ்ணனைத் தங்களுடன் உட்கார வைத்துக் கொள்வதற்கு! கிருஷ்ணன் பார்க்க எப்படி இருந்தான்? அவன் தன் இடையில் ஆடைக்கும், வயிற்ருக்கும் நடுவே புல்லாங்குழலை செருகி வைத்திருந்தான். அவன் மஞ்சள் பட்டாடை உடுத்திருந்தான். அவனுடைய இடது கக்கத்தில் கொம்பினாலான ஊதலையும், இடக் கையில் ஒரு சிறு கழியையும் வைத்திருந்தான். வலக் கையில் வெள்ளை வெளேரென்று தயிர் சாத உருண்டைகள் இருந்தன. அவன் தன் பரிகாச வார்த்தைகளால் அங்கிருந்த சிறுவர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணனின் பரிகாச வார்த்தைகளைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்களுக்குத் தங்கள் கன்றுகளைப் பற்றிய நியாபகம் இருக்கவில்லை.
பக்கத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த கன்றுகள் மெல்ல வெகு தூரம் சென்று விட்டன; அடர்ந்த காட்டை அடைந்து விட்டன. திடீரென்று ஒரு சிறுவன் கன்றுகள் காணவில்லை என்பதைக் கண்டான். "கன்றுகள் எங்கே? அவை அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டன என்று தோன்றுகிறது. காட்டு மிருங்கங்கள் அவற்றை விழுங்கி விடுமே!" என்று கத்தினான். இதை கேட்டு எல்லாச் சிறுவர்களும் கவலைப்படத் தொடங்கினார்கள். ஆனால் கிருஷ்ணன் அவர்களைச் சமாதானப் படுத்தினான். "கவலைப்படாதீர்கள் இந்த சிறிய விஷயத்திற்காக, சாப்பிடுவதை நிறுத்தாதீர்கள். நான் போய் நொடியில் கன்றுகளைத் தேடி வருகிறேன்" என்று சொன்னான். கையில் தயிர்ச் சாதத்தை வைத்துக் கொண்டே கிருஷ்ணன் கன்றுகளைத் தேடப் புறப்பட்டான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்