||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சில காலம் கழித்து, அதே சப்த ரிஷிகள் அந்த பக்கம் வரும் போது, “இங்கே மிக ரம்மியமாக, ஆசிரமம் போல் உள்ளதே! ஓ… இங்கே தானே ‘ராம’ நாம ஜபம் செய்ய ஒருவர் உட்கார்ந்தார்” என்று அந்த எறும்புப் புற்றைப் பார்த்தனர். அதைப் பார்த்து, ‘வால்மீகி!’ என்று அழைத்தனர். புற்றுக்கு ‘வால்மீகி’ என்றுப் பெயர். புற்றிலிருந்து மகரிஷி வெளியே வந்தார்.
“இன்றிலிருந்து உமக்கு ‘வால்மீகி’ என்று பெயர். நீங்கள் மகரிஷியாகி விட்டீர்கள். இந்த ராம நாம மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும்“, என்று கூறினர்.
அவரும் ரிஷிகளை பல முறை நமஸ்கரித்து, பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு, ஒரு ஆசிரமத்தை அந்த தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டு இருந்து வருகிறார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள்.
பிறகு, நாரத மகரிஷி ஸ்ரீ ராம சரித்திரத்தை வால்மீகி பகவானுக்கு உபதேசம் செய்தார்.
இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லாநல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகிமுனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில்வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராமசரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம்.
வால்மீகி பகவான், நாரத மகரிஷி கூறிய இந்த இராமச் சரித்திரத்தை கேட்டு பரமானந்தம் அடைந்தார். நாரதரை வெகுவாக கொண்டாடினார். இந்த இராம சரித்திரத்தையும் போற்றினார். பின், நாரத பகவான் த்ரிலோக சஞ்சாரியாக பக்தியை பரப்புபவர் ஆதலால் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார். அதிலிருந்து வால்மீகி பகவானின் மனதில் இந்த ஸ்ரீ ராமச்சரித்திரமே ஓடிக் கொண்டிருந்தது.
வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன்ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர் சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்ம தேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாக இயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.
ஸ்ரீ ராமாயணத்தை இயற்றிய ஸ்ரீ வால்மீகி முனிவரின் அவதார தினம் வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’ எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்