||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
021. திருநந்திபுர விண்ணகரம்
நாதன் கோயில் - கும்பகோணம்
இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
.
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1438 - தயிர் உண்ட நாதன் ஊர் நந்திபுர விண்ணகரம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு* நீர் கெழு விசும்பும் அவை ஆய்*
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை*
அவை ஆய பெருமான்* தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு*
தட மார்வர் தகைசேர்* நாதன் உறைகின்ற நகர்*
நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1439 - உலகேழும் உண்டவன் உறையும் ஊர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு* ஏழும் ஒழி யாமை முன நாள்*
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல* ஐயன் அவன் மேவும் நகர் தான்*
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு* மலர் கிண்டி அதன்மேல்*
நைவளம் நவிற்று பொழில்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1440 - மனமே! நந்திபுர விண்ணகரம் சேர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்* ஒழியாமை முன நாள்*
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த*
தட மார்வர் தகை சேர்*
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி* மணி கங்குல் வயல் சூழ்*
நம்பன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1441 - அசுரர்களை அழித்தவன் அமரும் இடம் இது
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என* வந்த அசுரர்*
இறைகள் அவை நெறு நெறு என வெறிய அவர் வயிறு அழல*
நின்ற பெருமான்*
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல*
அடிகொள் நெடு மா*
நறைசெய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1442 - பஞ்சாயுதன் உறையும் இடம் இது
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என* வந்த அசுரர்*
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக* நொடி ஆம் அளவு எய்தான்*
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்* இவை அம்கை உடையான்*
நாளும் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1443 - இராமன் இருக்கும் இடம் இது
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்* துணை ஆக முன நாள்*
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்* இனிது மேவும் நகர் தான்*
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்* எழில் ஆர் புறவு சேர்*
நம்பி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1444 - நந்தி வர்மன் பணி செய்த இடம் இது
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்* நந்தன் மதலை*
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ* நின்ற நகர் தான்*
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்* மயில்கள் ஆடு பொழில் சூழ்*
நந்தி பணிசெய்த நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1445 - மனமே! நந்திபுர விண்ணகரை அடைவாய்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று* முனி யாளர் திரு ஆர்*
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு* கூட எழில் ஆர்*
மண்ணில் இதுபோல நகர் இல்லை என* வானவர்கள் தாம் மலர்கள் தூய்*
நண்ணி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1446 - நந்திபுர விண்ணகரத்தானே நங்கள் பெருமான்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக* மிக்க பெருநீர்*
அங்கம் அழியார் அவனது ஆணை* தலை சூடும் அடியார் அறிதியேல்*
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி* எங்கும் உளதால்*
நங்கள் பெருமான் உறையும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1447 - இவற்றைப் பாடினால் வினைகள் அகலும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
நறை செய் பொழில் மழை தவழும்* நந்திபுர விண்ணகரம் நண்ணி உறையும்*
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்* அவை அம் கை உடை யானை*
ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல*
கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்*
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடு வினைகள்* முழுது அகலுமே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்