||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பிரலம்பாசுரனின் அழிவு|
பலராமனும் கிருஷ்ணனும் கோபர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். சில நாட்களுக்கெல்லாம் கோடைக்காலம் வந்தது. ஒரு நாள் கிருஷ்ணனும் பலராமனும் வழக்கம் போல் தங்கள் நண்பர்களுடன் மாடுகள் மேய்க்கக் காட்டுக்குச் சென்றார்கள்.
அன்றைக்குக் கிருஷ்ணன் நாட்டியமாடும் ஆசையில் இருந்தான். அதனால் எல்லோரும் ஒரு பெரிய மரத்தின் நிழலில் உட்கார, கிருஷ்ணன் நடனமாடத் தொடங்கினான். உடனே சிலர் ஆட்டத்திற்கேற்பப் பாடினார்கள்; சிலர் கொம்பு வாத்தியங்களை ஊதினர்; சிலர் புல்லாங்குழல் ஊதினர்; இன்னும் சிலர் கைத்தாளம் போட்டனர். கிருஷ்ணனின் தண்டை மணிகளின் இனிய ஓசை வெகு தூரத்துக்குக் கேட்டது. இதைக் கேட்டு மயில்கள் பல திசைகளிலிருந்தும் ஒடி வந்தன. கிருஷ்ணன் ஆடுவதைப் பார்த்து, அவையும் தங்கள் தோகைகளை விரித்து ஆடத் தொடங்கின. சொர்க்கலோகமே பூலோகத்திற்கு வந்து விட்டது போன்று அந்த அழகிய காட்சி தோன்றிற்று.
நடனம் முடிந்ததும் சிறுவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். அப்போது பிரலம்பன் என்ற ஒர் அசுரன் கிருஷ்ணனைக் கொல்லுவதற்காக அங்கு வந்து சேர்ந்தான். அவன் ஒரு கோபனைப் போலத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு அவர்களோடு சேர்ந்து விளையாடத் தொடங்கினான். ஆனால் கிருஷ்ணன் அவனைக் கவனித்து விட்டான். அவனைக் கொல்லுவதற்கு ஒரு வழியைத் தீர்மானித்துக் கொண்டு, கிருஷ்ணன் அவன் பக்கம் சென்று அவனை நண்பனாக்கிக் கொண்டான். பல விளையாட்டுக்களின் மூலம் தன் நண்பர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், திடீரென்று அவர்களிடம் ஒரு புதிய விளையாட்டைச் சொன்னான். அதன் படி எல்லோரையும் இரண்டு கட்சிகளாகப் பிரித்தான். வயதிலும் பலத்திலும் இரண்டு கட்சிகளும் சமமாக இருந்தன.
பலராமன் ஒரு கட்சிக்குத் தலைவன். கிருஷ்ணன் இன்னொரு கட்சிக்குத் தலைவன். எந்தக் கட்சி தோற்கிறதோ அதைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற கட்சியின் சிறுவர்களை முதுகில் தாங்கிச் செல்ல வேண்டும் என்பது நிபந்தனை. பிரலம்பன் கிருஷ்ணன் கட்சியில் இருந்தான். கிருஷ்ணன் கட்சி தோற்றது. அதனால் இந்தக் கட்சிச் சிறுவர்கள், பலராமன் கட்சிச் சிறுவர்களை முதுகில் ஏற்றிச் செல்ல வேண்டி வந்தது. பலராமனும் அவனுடைய சகாக்களும் மகிழ்ச்சியாக, எதிர்கட்சிச் சிறுவர்களின் முதுகுகளில் சவாரி செய்தார்கள். எல்லோரும் ஒர் அசுவத்த மரத்தை அடைந்தார்கள். கோபன் உருக் கொண்ட பிரலம்பாசுரன் பலராமனைத் தன் முதுகில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் ஸ்ரீதாமா என்னும் சிறுவனைத் தன் முதுகில் சுமந்து கொண்டிருந்தான்.
பலராமன் கிருஷ்ணனுடைய அண்ணனாதலால் முதலில் அவனைக் கொல்வது என்று பிரலம்பாசுரன் முடிவு செய்தான். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்று தெரிந்ததும், அவன் பலராமனை முதுகில் தூக்கிக் கொண்டு வெகு தூரம் ஓடினான், ஒரு தனி இடத்தை அடைந்ததும் அவன் தன் சுய உருவத்தை எடுத்துக் கொண்டான். அவனுடைய பெரிய உருவத்தைக் கண்டு, பலராமன் சற்றுத் திடுக்கிட்டான். அசுரன் தன்னைக் கொன்று விடுவான் என்று பலராமனுக்குத் தெரியும்.
ஆதலால் அவன் தன் முஷ்டியை மடித்துக் கொண்டு, பிரலம்பாசுரன் தலையையப் பார்த்துப் பல குத்துக்கள் விட்டான். இதை அந்த அசுரனால் தாங்க முடியவில்லை. அவன் தடுமாற ஆரம்பித்தான். வாயிலிருந்து ரத்தம் கொட்டிற்று. அவன் சீக்கிரமே அலறிக் கொண்டு செத்து விழுந்தான். அசுரனின் அலறலைக் கேட்டுக் கிருஷ்ணனும் அவனுடைய சகாக்களும் அங்கே ஓடி வந்தார்கள். எல்லோரும் பலராமனைத் தழுவிக் கொண்டு, “நன்று! நன்று! அசுரனைக் கொன்றாய். உன் புகழ் ஒங்குக! என்று பாராட்டினார்கள். இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்...
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்