||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 5
திருமங்கையாழ்வார்
082. திவ்ய ப்ரபந்தம் - 1556 - நம்பி! உயிர்க்கெல்லாம் நீ தான் தாய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
தூயாய் சுடர் மா மதிபோல்* உயிர்க்கு எல்லாம்*
தாய் ஆய் அளிக்கின்ற* தண் தாமரைக் கண்ணா!*
ஆயா அலை நீர் உலகு ஏழும்* முன் உண்ட வாயா*
உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே|
083. திவ்ய ப்ரபந்தம் - 1557 - துயரமே இல்லை; விண்ணுலகு கிடைக்கும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வண்டு ஆர் பொழில் சூழ்* நறையூர் நம்பிக்கு*
என்றும் தொண்டு ஆய்* கலியன் ஒலி செய் தமிழ் மாலை*
தொண்டீர் இவை பாடுமின்* பாடி நின்று ஆட*
உண்டே விசும்பு* உம் தமக்கு இல்லை துயரே|
084. திவ்ய ப்ரபந்தம் - 1558 - நம்பி! நான் உன்னையே நினைப்பேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
புள் ஆய் ஏனமும் ஆய்ப் புகுந்து* என்னை உள்ளம் கொண்ட*
கள்வா என்றலும்* என் கண்கள் நீர்கள் சோர் தருமால்*
உள்ளே நின்று உருகி* நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்*
நள்ளேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ|
085. திவ்ய ப்ரபந்தம் - 1559 - நம்பி! நான் உன்னையே நாடுவேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
ஓடா ஆள் அரியின்* உரு ஆய் மருவி*
என் தன் மாடே வந்து* அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*
பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல் கொண்டு*
நாடேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ|
086. திவ்ய ப்ரபந்தம் - 1560 - நம்பி! எனக்கு நீயே அம்மையும் அப்பனும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
எம்மானும் எம் அனையும்* என்னைப் பெற்று ஒழிந்ததற் பின்*
அம்மானும் அம்மனையும்* அடியேனுக்கு ஆகி நின்ற*
நல் மான ஒண் சுடரே* நறையூர் நின்ற நம்பீ*
உன் மைம் மான வண்ணம் அல்லால்* மகிழ்ந்து ஏத்த மாட்டேனே|
087. திவ்ய ப்ரபந்தம் - 1561 - உலகுண்டவன் உறையும் இடம் என் மனம்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்* உலகு உண்டு ஓர் ஆல் இலை மேல் உறைவாய்*
என் நெஞ்சின் உள்ளே* உறைவாய் உறைந்தது தான்*
அறியாது இருந்தறியேன்* அடியேன் அணி வண்டு கிண்டும்*
நறை வாரும் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பீயோ|
088. திவ்ய ப்ரபந்தம் - 1562 - நம்பியே! என் வனத்தை விடுத்து அகல முடியாது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
நீண்டாயை வானவர்கள்* நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்*
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு* நான் அடிமை பூண்டேன்*
என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்*
நாண் தான் உனக்கு ஒழிந்தேன்* நறையூர் நின்ற நம்பீயோ|
089. திவ்ய ப்ரபந்தம் - 1563 - நம்பீ! நீ அருள் செய்து கொண்டே இருப்பாய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
எம் தாதை தாதை அப்பால்* எழுவர் பழ அடிமை வந்தார்*
என் நெஞ்சின் உள்ளே* வந்தாயைப் போகல் ஒட்டேன்*
அந்தோ! என் ஆர் உயிரே* அரசே அருள் எனக்கு*
நந்தாமல் தந்த எந்தாய்!* நறையூர் நின்ற நம்பீயோ|
090. திவ்ய ப்ரபந்தம் - 1564 - நம்பீ! நீ பிறர் மனத்தில் புக நான் விட மாட்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மன் அஞ்ச ஆயிரம் தோள்* மழுவில் துணித்த மைந்தா*
என் நெஞ்சத்துள் இருந்து* இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்*
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்* வளைத்து வைத்தேன்*
நல் நெஞ்ச அன்னம் மன்னும்* நறையூர் நின்ற நம்பீயோ|
091. திவ்ய ப்ரபந்தம் - 1565 - நம்பீ! நீ என் மனத்தில் தான் இருக்க வேண்டும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
எப்போதும் பொன் மலர் இட்டு* இமையோர் தொழுது*
தங்கள் கைப் போது கொண்டு இறைஞ்சிக்* கழல் மேல் வணங்க நின்றாய்*
இப்போது என் நெஞ்சின் உள்ளே* புகுந்தாயைப் போகல் ஒட்டேன்*
நல் போது வண்டு கிண்டும்* நறையூர் நின்ற நம்பீயோ|
092. திவ்ய ப்ரபந்தம் - 1566 - நம்பீ! எனக்குத் தான் இப்பேறு கிடைத்தது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஊன் நேர் ஆக்கை* தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்*
யான் ஆய் என் தனக்கு ஆய்* அடியேன் மனம் புகுந்த தேனே*
தீங் கரும்பின் தெளிவே* என் சிந்தை-தன்னால்*
நானே எய்தப் பெற்றேன்* நறையூர் நின்ற நம்பீயோ|
093. திவ்ய ப்ரபந்தம் - 1567 - நெடுங்காலம் தேவராக வாழ்வர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
நல் நீர் வயல் புடை சூழ்* நறையூர் நின்ற நம்பியை*
கல் நீர மால் வரைத் தோள்* கலிகன்றி மங்கையர் கோன்*
சொல் நீர சொல் மாலை* சொல்லுவார்கள் சூழ் விசும்பில்*
நல் நீர்மையால் மகிழ்ந்து* நெடுங் காலம் வாழ்வாரே|
094. திவ்ய ப்ரபந்தம் - 1568 - நறையூர் நம்பியைக் கண்டு களித்தேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்*
செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் மனமுள் கொண்டு*
என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை* மரம் ஏழ் எய்த மைந்தனை*
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை*
நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை*
கனவில் கண்டேன் இன்று கண்டமையால்*
என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே|
095. திவ்ய ப்ரபந்தம் - 1569 - நறையூர் நம்பியைக் நான் ஆதரிப்பேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தாய் நினைந்த கன்றே ஒக்க* என்னையும் தன்னையே நினைக்கச் செய்து*
தான் எனக்கு ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை*
அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை*
மகரக் குழைக் காதனை* மைந்தனை மதிள் கோவல் இடைகழி ஆயனை*
அமரர்க்கு அரி ஏற்றை* என் அன்பனை அன்றி ஆதரியேனே|
096. திவ்ய ப்ரபந்தம் - 1570 - எம்பிரானை நான் எந்த விதத்திலும் மறக்க முடியாது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்*
மற்று ஓர் நெஞ்சு அறியான்*
அடியேனுடைச் சிந்தை ஆய் வந்து*
தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக் கோவினை*
குடம் ஆடிய கூத்தனை*
எந்தையை எந்தை தந்தை தம்மானை* எம்பிரானை எத்தால் மறக்கேனே?
097. திவ்ய ப்ரபந்தம் - 1571 - கண்ணனுக்கே என் மனம் தாழும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உரங்களால் இயன்ற மன்னர் மாளப்*
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும் எம்பிரானை*
வம்பு ஆர் புனல் காவிரி*
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி* ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று*
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி*
என் மனம் தாழ்ந்து நில்லாதே|
098. திவ்ய ப்ரபந்தம் - 1572 - கண்ணபிரானையே என் மனம் சிந்தை செய்யும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும் போது*
அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தாங்கு*
தாமரை அன்ன பொன் ஆர் அடிஎம்பிரானை*
உம்பர்க்கு அணி ஆய் நின்ற* வேங்கடத்து அரியை பரி கீறியை*
வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட தீங் கரும்பினை*
தேனை நன் பாலினை அன்றி* என் மனம் சிந்தை செய்யாதே|
099. திவ்ய ப்ரபந்தம் - 1573 - பள்ளி கொண்டானையே நான் பாடுவேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
எள் தனைப்பொழுது ஆகிலும்* என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்*
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்*
தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்கட்டியை*
கரும்பு ஈன்ற இன் சாற்றை* காதலால் மறை நான்கும் முன் ஓதியபட்டனை*
பரவைத் துயில் ஏற்றை* என் பண்பனை அன்றிப் பாடல் செய்யேனே|
100. திவ்ய ப்ரபந்தம் - 1574 - கடல் வண்ணன் நிறத்தையே என் வாய் பேசும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற* பாலை ஆகி இங்கே புகுந்து*
என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்*
கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*
விண் உளார் பெருமானை எம்மானை*
வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்வண்ணன்*
மா மணி வண்ணன் எம் அண்ணல்* வண்ணமே அன்றி வாய் உரையாதே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்