||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
காலயவனனின் அழிவுl
கிருஷ்ணன் காலயவனனைக் கண்டு பயந்தவனைப் போல ஓட ஆரம்பித்தான். காலயவனனும் கத்திக்கொண்டே கிருஷ்ணன் பின்னால் ஓடினான். "ஓ கிருஷ்ணா! கோழையைப் போல் ஓடாதே! இது ஒரு வீரனுக்குத் தகாது. உன் வெறும் கைகளால் கம்சனைக் கொன்றாய். ஜரசந்தனைப் பல தடவை தோற்கடித்தாய், இருந்தும் உன்னைப் பற்றி நான் நினைத்ததற்கு மாறாக நீ இருக்கிறாய். எதற்காக என்னைக் கண்டு ஓடுகிறாய்?" என்று கத்தினான். அவன் தன் வேகத்தை அதிகரித்துக் கொண்டு ஓடினான்.
கிருஷ்ணன் சிக்கி விட்டான் என்று நினைக்கும் சமயம் அவன் அகப்பட்டுக் கொள்ளாமல் இன்னும் வேகமாக ஓடினான். கடைசியில் வெகு தூரத்தில் உள்ள ஒரு குகைக்குள் நுழைந்தான். "இது தான் உன் திட்டமா! குகைக்குள் ஒளிந்து கொண்டு என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டுவிட முடியும் என்று நினைக்கிறாயா" என்று சொல்லிக் கொண்டே காலயவனன் குகைக்குள் நுழைந்தான். அவன் கிருஷ்ணனைத் தேடித் பார்த்தான். ஆனால் கிருஷ்ணன் அகப்படவில்லை. கடைசியில் யாரோ ஒருவர் அங்கே தரையில் படுத்துத் தூங்குவது போல் தென்பட்டது, இருட்டில் படுத்திருப்பவன் முகம் தெரியவில்லை. கிருஷ்ணன் தான் அப்படித் தூங்குவது போலப் பாசாங்கு செய்கிறான் என்று நினைத்துக் கொண்டு, அந்த உருவத்தைப் பார்த்து ஒரு பலமான உதை விட்டான் காலயவனன்.
தூங்கிக் கொண்டிருந்தவர் சற்று அசைந்துக் கொடுத்து, மெல்லத் தம் கண்களைத் திறந்தார். தம் தூக்கத்தைக் கலைத்தது யார் என்று நாலாபுறமும் பார்த்தார். காலயவனன் தம் முன் நிற்பதை பார்த்ததும், உடனே அவரது உடலிலிருந்து ஜ்வாலை கிளம்ப, அது காலயவனனை எரித்துச் சாம்பலாக்கியது.
என்ன ஆச்சரியம்! அங்கே தூங்கிக் கொண்டிருந்த அந்த மனிதர் யார்? அவருடைய பார்வை எப்படி ஒரு வீரனை எரித்தது? இது ஒரு தனிக் கதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment