||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
059 நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே|
வைணவ ஆச்சாரியர்கள் பரம்பரை வரிசையில் முதன்மையானவரான நாதமுனிகள் வீரநாராயணபுரம் எனும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் அந்தணக் குடும்பம் ஒன்றில் ரங்கநாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தார். யோகவித்தை, தேவகான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் இவர். ஆகவே, இவரை திருவரங்கநாத முனிவர் என்று அழைத்தனர். அதுவே நாதமுனியாயிற்று. சிறுவயதிலேயே பெருமாள் மீது பற்று கொண்ட இவர், ஒரு சமயம், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் குறித்து நம்மாழ்வார் பாடிய பத்துப் பாசுரங்களை சில வைணவர்கள் இசையுடன் பாடியதை கேட்டார். ‘ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்’ என்று அவர்கள் பாசுரங்களைப் பாடி முடித்த போது, நாதமுனிகள், “ஆயிரத்தையும் பாடக் கூடாதா?’’ என்று கேட்டார். அதற்கு அவர்களோ “திருக்குருகூரில் வசிக்கும் நம்மாழ்வாரின் சீடர் பராங்குசதாசனுக்கு தான் அத்தனையும் தெரியும்” என்றனர்.
பராங்குசதாசனைத் தேடி தாமிரபரணிக் கரைக்குப் போனார் நாத முனிகள். அவரோ, “எல்லாம் மகான் நம்மாழ்வாருக்குத் தானே தெரியும். ஆழ்வார் திருநகரியில் உள்ள புளிய மரத்தடியில் தான் அந்த மகான் மோட்சமான இடம் உள்ளது. அங்கு சென்று, நம்மாழ்வாருக்காக மதுரகவி ஆழ்வார் பாடிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பாசுரத்தை பன்னிரெண்டாயிரம் முறை பாடினால் நம்மாழ்வார் காட்சி கொடுப்பார். அவர் அருளினால், ஆயிரத்தையும் நீங்கள் பெறலாம்.” என்று கூறினார்.
அதன்படியே, ஆழ்வார் திருநகரி சென்று பன்னிரெண்டாயிரம் முறை அந்தப் பாசுரத்தைப் பாடினார் நாதமுனிகள். அப்போது அவருக்கு காட்சி கொடுத்த நம்மாழ்வார், “ஆயிரமென்ன! நாலாயிரமும் உமக்குத் தந்தோம்” என்றுக் கூறி நாலாயிரம் திவ்யப் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்கு அருளினார். இவர் இல்லையெனில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் காணாமல் போயிருக்கும். அனைத்திலும் இறைவனை மட்டுமே கண்டார் நாதமுனிகள். யோக பிரபாவம் உடையவர் நாதமுனிகள்.
ஒரு நாள், அவர் யோக நிஷ்டையில் இருந்த போது, சோழ மன்னன் இவரைக் காண வந்தான். ஆனால், பார்க்க முடியாமல் திரும்பினான் .பின், அதை அறிந்த நாதமுனியார், சோழனின் தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரம் வரை மன்னனைக் காண நடந்தே சென்றார். இவரது இச்செயலைப் பற்றி சிஷ்யர்கள் கேட்ட போது, தான் மன்னனை, கிருஷ்ணனாகவே எண்ணுவதாகக் கூறினார்.
மற்றொரு சமயம், பிருந்தாவனம் வரை யோக மார்க்கத்தால் வந்த நாதமுனிகளைக் காண சிலர் வந்து சென்றனர். தியானம் முடிந்து விழித்த நாதமுனிகள், விஷயம் கேட்டு, யார் வந்ததென வினவ, அவர்கள், “கையில் வில்லுடன் இரு ஆடவரும், ஒரு பெண்ணும் உடன் சில வானரமும் வந்தனர்.”, என்றனர். அதிர்ந்த நாதமுனிகள், வந்தது, தான் யோகத்தில் அனுபவித்த ராமனே என்பதை உணர்ந்து, அவர்கள் சென்ற திசை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
வீர நாராயணப்பெருமாளே அவ்வாறு வந்து, போக்கு காட்டி, நாதமுனிகளை கங்கை கொண்ட சோழபுரம் வரை அழைத்துச் சென்றார். கடைசி வரை அவர்களை நாதமுனிகளால் காண முடியவில்லை. சோர்ந்துப் போன நாதமுனிகள் எங்கு செல்ல என்று காட்டில் அமர்ந்து அழ, வீர நாராயணப் பெருமாளே அவருக்கு காட்சிக் கொடுத்தார். பெருமாளைக் கண்ட ஆனந்தத்திலேயே ஸ்ரீ வைகுண்டம் புகுந்தார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "நாதமுனியைப் போலே| எம்பெருமானைக் காண நெடுந்தூரம் போனேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்