About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 16 October 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அசிங்கம் அழகானது

ஸ்கந்தம் 01

தென் பாரதத்தின் கோடியிலிருந்து மாதக்கணக்காக நடையாய் நடந்து, ஜென்ம சாபல்யம் அடைந்து விட வேண்டும் என்ற தீராத வேட்கையோடு, பல சிரமங்களைப் பொருட்படுத்தாது, பல ஆபத்துகளிலிருந்து தப்பி வந்தும், காசி வந்து கங்கைக் கரையை அடைந்து விட்ட பின்னரும், லட்சியம் பூர்த்தி ஆகவில்லை. கங்கா மாதா கண்ணுக்குப் புலப்படவில்லை. அழுகை அழுகையாய் வந்தது. அப்பேர்ப்பட்ட பாவியா நான்? விமோசனமே இல்லையா? கங்கா மாதாவை நினைத்து நினைத்து அழுதழுது புழுவாய்த் துடித்தார். இரவாகி விட்டது. அங்கேயே உட்கார்ந்து அரற்றிக் கொண்டு இருந்தார்.


எதனால் தனக்கு தரிசனம் கிட்டவில்லை என்று தெரிந்து கொள்ள கங்கா மாதாவைக் குறித்து தியானம் செய்யத் துவங்கினார். தியானத்தில் ஒளிப் ரவாஹமாய் கங்கா மாதா தோன்றினாள்.

"அம்மா, எனக்கு ஏன் தங்கள் ப்ரவாஹம் தெரியவில்லை?"

"நீ ஒரு பரம பாகவதோத்தமரை அவமத்து விட்டாய். அவரிடம் சென்று மன்னிப்பு வேண்டு. அவர் மன்னித்து விட்டாரானால், உனக்கு தரிசனம் கிட்டும்"

"அம்மா, நான் அனைவரிடமும் வணக்கத்துடன் பழகும் இயல்புடையவன். யாரை அவமதித்தேன்? தாங்கள் சொன்னால், ஓடோடிச் சென்று அந்தப் பெரியவரின் பதம் பணிவேன்"

"நேற்றிரவு ஒருவர் வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்தாயே. அவர் பெரிய மஹாத்மா. நீ அவரை நிந்தித்து பெரும் பாவத்தை சம்பாதித்துக் கொண்டாய். அவரை வணங்கி மன்னிப்புக் கேள்" என்று சொல்லி மறைந்து விட்டாள் கங்கை.

பயணி சிந்தித்தார். நேற்றிரவு சந்தித்தவரோ, காசி தெரியாது. கங்கை தெரியாது என்றார். ஆனால், கங்கா மாதாவோ அவரை மஹாத்மா என்கிறாள். பார்த்த சில நிமிடங்களில் அவரைப் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டு திட்டியது தவறு தான். அவரிடம் மன்னிப்பு வேண்டினால் மட்டும் போதாது. கங்கா மாதாவே ஒருவரை மஹாத்மா என்று கொண்டாடுகிறாள் என்றால் அவர் என்ன ஸாதனை செய்தார், என்ன தவம் செய்தார், ஏதேனும் மந்திர ஜபம் செய்கிறாரா, தெய்வ உபாசனையா? என்ன தான் செய்கிறார் என்று தெரிந்து கொண்டு அவரிடம் உபதேசமும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நிச்சயித்து அந்த கிராமத்தை நோக்கி நடந்தார்.

ஒரு நாளலெல்லாம் நடந்து அந்த வீட்டை அடையும் போது இருட்டி விட்டது. இரவில் தொந்தரவு செய்யக் கூடாதென்று திண்ணையில் படுத்தார்.

அப்போது மிகவும் கோரமான உருவம் கொண்ட ஏழு பேர் அந்த வீட்டினுள் சென்றனர். அவர்களின் உருவத்தைப் பார்த்து பயந்து போன பயணி வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார்.

அந்த வீட்டுப் பெரியவர் உறங்கிக் கொண்டிருக்க, ஒருத்தி விசிறினாள். மற்றவர்கள் வீட்டைப் பெருக்கி, நீர் கொண்டு வந்து மெழுகி, கோலம் போட்டு, வீட்டை ஒழுங்கு செய்து என்று அத்தனை வேலைகளையும் செய்தார்கள்.

எல்லா வேலைகளும் முடியவும் ப்ரும்ம முகூர்த்தம் வரவும் சரியாக இருந்தது. இப்போது அந்தப் பெண்கள் அனைவரும் அதிரூப சுந்தரிகளாக மாறி விட்டிருந்தனர். ஏழு பேரும் வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே வரும் நேரம், அவர்களுக்குத் தலைவி போல் இருந்த ஒரு பெண்ணின் காலில் சென்று விழுந்தார் நமது பயணி. உற்றுப் பார்த்ததும் அவள் தான் நேற்று தியானத்தில் தரிசனம் கொடுத்  கங்கா மாதா என்று உணர்ந்து கொண்டார்.

"அம்மா நீங்களா? இவர்களெல்லாம் யார்? நீங்கள் வந்து சேவை செய்யும் அளவிற்கு இவர் உயர்ந்தவரா? தெரியாமல் தவறு செய்தேன் அம்மா"

கங்கா புன்சிரிப்போடு சொன்னாள்.

நாங்கள் கங்கா, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா, கோதாவரி, ஸிந்து, காவேரி ஆகிய ஸப்த் புண்ய நதிகளாவோம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் எங்களிடம் ஸ்நானம் செய்து தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். அவற்றின் தாக்கத்தால் நாங்கள் குரூபிகளாக மாறி விடுகிறோம். தினமும் இவருக்கு ஸேவை செய்வதன் மூலம் எங்களிடம் சேர்ந்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து போய், நாங்கள் எங்கள் ஸ்வரூபத்திற்குத் திரும்புகிறோம். நீ பொழுது விடிந்ததும் அவரை வணங்கு" என்று சொல்லி விட்டு ஆறு புண்ய நதிகளுடனும் மறைந்து போனாள் கங்கா மாதா.

பொழுது எப்போது விடியும் என்று மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கலானார் பயணி.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment