||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸர்வ பூத மனோஹரம்
ஸ்கந்தம் 01
புத்ரனான சுகரைத் துரத்திக் கொண்டு வியாஸர் சென்ற போதும், அவரால் தனயனைப் பிடிக்க முடியவில்லை. யக்ஞப் ப்ரசாதமாக ப்ரும்ம ஸ்வரூபமாய் அருமையான புத்ரன் கிடைத்தும் அவன் வீடு தங்காமல் புறப்பட்டதை நினைத்து, வருத்தத்துடன் ஆசிரமம் திரும்பினார் வியாஸ பகவான்.
பாட சாலைகளில் அஷ்டமி, அமாவாசை போன்ற பாடம் இல்லாத நாட்களில், ஹோமத்திற்கும் அனுஷ்டானங்களுக்கும் வேண்டிய தர்பை, ஸமித் (அரச மரக் குச்சி) போன்றவற்றை சேகரிக்க மாணவர்கள் காட்டுக்குள் செல்வார்கள்.
ஒரு சமயம் அவ்வாறு செல்லும் மாணவர்கள் குருவான வியாஸரிடம் வந்து, "ஸ்வாமி, காட்டினுள் துஷ்ட மிருகங்கள் அதிகமாக ஸஞ்சரிக்கின்றன. எங்களுக்கு பயமாக இருக்கிறது. அவற்றிடமிருந்து காத்துக் கொள்ள ஏதாவது உபாயம் சொல்லுங்கள்", எனக் கேட்டனர். வியாஸர், ஹூம் பட் என்று கேட்டவுடன் மிருகங்கள் சிதறி ஓடும்படியாக ஏதாவது மந்திர உபதேசம் செய்யக்கூடாதோ? ஆனால், அவரோ சற்று யோசித்து விட்டு,
"பர்ஹா பீடம் நட வர வபு: கர்ணயோ: கர்ணி காரம்
பிப்ரத் வாஸ: கனக கபிசம் வைஜயந் தீஞ்ச மாலாம் |
ரந்த்ரான் வேணோர் அதர சுதயா பூரயன் கோப வ்ருந்தை:
வ்ருந்தாரண்யம் ஸ்வபத ரமணம் ப்ராவிசத் கீத கீர்த்தி:||
என்ற ஸ்லோகத்தை உபதேசம் செய்து இதை ஆவ்ருத்தி செய்து கொண்டே செல்லுங்கள். எந்த ஜீவராசியும் உங்களை ஒன்றும் செய்யாது" என்று சொன்னார்.
அப்படியென்ன ஸ்லோகம் அது?
சகல ஆபத்து களிலிருந்தும் காக்கும் எவ்வளவோ மந்திரங்கள் இருக்கின்றனவே. பலவற்றை செய்ததே வியாசர் தானே!
ஸ்ரீ மத் பாகவதத்திலேயே நாராயண கவசம் என்ற அற்புதமான ஸ்லோகத் தொகுப்பு எதிரிகளிடமிருந்து பாதுகாக்குமே.
ஸ்ரீ மத் பாகவத்திலேயே சுதர்சன ஸ்துதி இருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு கண்ணன் வேணு கானம் செய்யக் கிளம்பிய கோலத்தை வர்ணிக்கும் ஸ்லோகத்தை இப்போது காக்கும் கவசமாக உபதேசம் செய்திருக்கிறாரே என்று தோன்றலாம்.
இந்த ஸ்லோகம் ஸ்ரீ மத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் 21ம் அத்யாயத்தில் சொல்லப்படுகிறது. ஐந்து முக்கியமான கீதங்களில் கண்ணன் குழலூதும் அழகை வர்ணிக்கும் வேணுகீதத்தின் துவக்கத்தில் வருகிறது.
அழகான பெரிய மயில் பீலியை தலையில் வைத்துக் கொண்டு, அன்னை போட்டு விட்ட தங்க ஆபரணங்களை எல்லாம் மரப் பொந்தில் கழற்றி வைத்து விட்டு, காதுகளில் கர்ணி காரப் புஷ்பத்தையும், கழுத்தில் வன மாலையையும் அணிந்து கொண்டு அத்தனை கோபிகளையும் பொறாமை கொள்ள வைக்கும் குழலை பவள வாயில் வைத்துக் கொண்டு, அத்தனை ஜட மற்றும் ஜீவராசிகளின் ஹ்ருதயங்களையும் கொள்ளை கொள்ளும் படி மிக மிக ஒயிலான நடையுடன் ப்ருந்தாவனத்திற்குள் கண்ணன் ப்ரவேசிக்கும் அழகைச் சொல்லும் ஸ்லோகம்.
குரு உபதேசம் செய்த ஸ்லோகத்தை உரு ஏற்றிக் கொண்டு அதையே ஆவ்ருத்தி செய்து கொண்டு சீடர்கள் காட்டில் ஸமித் முதலியவைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன ஆச்சர்யம்!
மாணாக்கர்கள் சொல்லும் ஸ்லோகத்தைக் கேட்டு சிங்கம், புலி, பாம்பு போன்றவை எல்லாம் கூட ஸ்வபாவத்தை மறந்து அன்போடு வாலைக் குழைத்துக் கொண்டும் நக்கிக் கொடுத்துக் கொண்டும் சென்றன.
அன்பே உருவான நமது ஸ்வாமியைப் பற்றிய வர்ணனையே போதும். உலகில் அன்பு பெருகும்.
அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த ஸ்லோகம் காற்றில் சுற்றிச் சுற்றி நமது ப்ரும்மத்தின் காதுகளுள் நுழைந்தது. பாமரர்களையும் மிருகங்களையும் மட்டுமல்ல, ப்ரும்ம ஞானிகளையும் அசைத்துப் போடும் நமது கண்ணனின் உருவமும், பெயரும்.
அவதூதரான ஸதாசிவ ப்ரும்மேந்திராளும்
- மதசிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே
தலையில் மயில் பீலி வைத்துக் கொண்டிருக்கும் ப்ரும்மத்தில் ஈடுபடுவாய் மனமே என்று பாடுகிறார்.
தேனிருக்கும் மலரை வண்டு தேடி வருவது போல, நன்கு பழுத்த பழத்தைத் தேடி கிளி வருவது போல, ஸ்லோகத்தைக் கேட்டதும் சுக முனியின் கால்கள் தாமாகவே சொல்பவர்களைத் தேடி நடந்தது.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்