About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 12 October 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி ஆறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

056 இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியைப் போலே|

கர்நாடகத்தின் மைசூரில் உள்ள சாலகிராமம் என்னும் ஊரில் சித்திரை மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் ஆந்திரபூரணர் என்னும் இயற்பெயரோடு பிறந்த வடுகநம்பி, வைணவ ஆச்சாரியனான இராமாநுசரின் முதன்மை மாணாக்கரில் ஒருவர். தன் குருவாகிய இராமானுசர் மீது கொண்ட அளவில்லா குருபக்திக்காக இவர் பெரிதும் புகழப்பெறுகிறார்.  


இராமானுசரோடு திருவரங்கனை சேவிக்க செல்லும்போதெல்லாம், இராமானுசர் அரங்கனின் வடிவழகில் தன்னைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொள்ள, நம்பியோ தன் ஆச்சாரியனாகிய இராமானுசரின் வடிவழகில் லயித்துக் கொண்டிருப்பார். இதனை ஒருநாள் கண்ணுற்ற இராமானுசர் "நீண்ட அப்பெரிய கண்கள்..." எனும் ஆழ்வாரின் பாடலைப் பாடி அரங்கனின் கண்ணழகை காணும்படிக் கூற, நம்பியோ திருப்பாணாழ்வாரின் பாடலாகிய "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என பதிலளிக்க, இவரின் குருபக்தியை பெருதும் மெச்சினார் உடையவர்.

ஒரு நாள், இராமானுசருக்காக பால் சூடுபடுத்திக் கொண்டிருக்கையில் திருவரங்கத்து அரங்கநாதன் கோயில் உற்சவராகிய நம்பெருமாள் உலா வந்துக் கொண்டிருந்தார். அவரை சேவிக்க (தொழும் பொருட்டு) இராமானுசர் தனது மாணாக்கர் ஒருவரை அனுப்பி வடுக நம்பியை அழைத்து வரக் கூறினார். “வடுகா, விரைந்து வா... நம்பெருமாள் உலா வந்து கொண்டு இருக்கிறார். சேவித்துக் கொள்." என அழைத்தனர். அதற்கு வடுக நம்பியோ, “பெருமாளைக் காண நான் வந்து விட்டால், எம்பெருமாளுக்காக (இராமானுசர்) தயாராகிக் கொண்டிருக்கும் பால் பொங்கி விடும். அதன் சுவையும் போய்விடும். ஆச்சார்யாருக்கான எனது சேவையை முதலில் சரியாக புரிந்து விட்டு வருகிறேன்.”, என்றார் பணிவுடன்.

தாமதமாக வந்த நம்பியை இராமானுசர் கடிந்துக் கொள்ள அதற்கு "உம்பெருமாளை (நம்பெருமாள் - ரங்கநாதன்) சேவிக்க வந்துவிட்டால், எம்பெருமாளுக்கான (இராமானுசர்) சேவையை (பணிவிடை) யார் செய்வது" என்று பதிலளித்தார். அவரைப் பொறுத்தவரை ராமாநுஜரே நம்பெருமாள்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த வடுகநம்பியைப் போல பெருமாளையும் மறந்து ஆச்சார்ய பக்தி கொண்டுள்ளேனா? ஆசார்ய பக்தியில் இருந்தேனா?  இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment