About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 28 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பிரம்மனுக்கு ஆசிர்வாதம்|

தாம் செய்த தந்திரத்தின் பலன் என்ன ஆயிற்று என்று பார்க்க, பிரம்மன் பிருந்தாவனம் வந்தார். அங்கே கன்றுகளும் சிறுவர்களும் வழக்கம் போல நடனமாடிக் கொண்டிருந்ததை பார்த்துத் திகைத்தார். "கன்றுகளையும் சிறுவர்களையும் நான் குகையில் அடைத்து வைக்க, அவர்கள் அங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க அவர்கள் இங்கே எப்படிக் கிருஷ்ணனுடன் இருக்கிறார்கள்!" என்று ஆச்சரியப்பட்டார். 


ஒரு வேளை குகையில் இருந்த அவர்களைக் கிருஷ்ணன் விடுவித்து விட்டானோ என்று நினைத்து குகைக்குச் சென்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! அவர்கள் எல்லோரும் அங்கே தூங்கிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவோ முயன்றும், இந்த மர்மத்தின் இரகசியத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

பிரம்மனின் குழப்பத்தைக் கிருஷ்ணன் கவனித்தான். கடைசியில் அவர் மீது இரக்கம் கொண்டு அவர் இந்த மர்மத்தை புரிந்து கொள்ளும்படி செய்தான். இப்பொழுது கிருஷ்ணன் தன் நண்பர்களுடனும் கன்றுகளுடனும் செல்வதைப் பார்த்த போது, பிரம்மனுக்கு எல்லோரும் கிருஷ்ணனாகத் தோன்றினார்கள். கன்றுகளையும் காணோம், சிறுவர்களையும் காணோம். எல்லோரும் கிருஷ்ணனாகத் தான் தோன்றினார்கள். உடனே பிரம்மன் ஓடிச் சென்று கிருஷ்ணன் காலில் விழுந்தார். கிருஷ்ணனும் பிரம்மனை ஆசீர்வதித்தான். பிரம்மன் கிருஷ்ணனை மூன்று முறை வலம் வந்து வணங்கி விட்டு தம் இருப்பிடம் திரும்பினார். பிரம்மன் ஒளித்து வைத்திருந்த எல்லாக் கன்றுகளையும் சிறுவர்களையும் கிருஷ்ணன் திரும்ப கொண்டு வந்தான். அவனுடைய மாயக் கன்றுகளும் சிறுவர்களும் மறைந்தனர்.

திரும்பக் கொண்டு வரப்பட்ட சிறுவர்கள் யமுனை நதிக்கரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் வரவை அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். ஒரு வருட காலம் சென்றதும் அவர்களுக்கு தெரியாது; அந்த ஒரு வருட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளும் அவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணன் கன்றுகளுடன் அரைக் கணத்தில் திரும்பி விட்டதாகவே அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் கிருஷ்ணனைப் பார்த்து, "இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துவிட்டாயே! நீ சென்ற பிறகு நாங்கள் ஒரு கவளம் கூடச் சாப்பிடவில்லை. இந்தா, உட்கார்ந்து நீயும் எங்களோடு சாப்பிடு" என்று சொன்னார்கள். கிருஷ்ணன் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டுப் புன்முறுவல் பூத்து, அவர்களுடன் கூடச் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

006. திருப்பேர் நகர் 
கோவிலடி – திருச்சி
ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 33 - 1

பெரியாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 173 -  திவ்ய தேசங்களில் விளையாடும் மகன்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் 
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்* 
எங்கும் திரிந்து* விளையாடும் என் மகன்* 
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க* 
நல் அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா!* 
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா| (2)

002. திவ்ய ப்ரபந்தம் - 205 - கொண்டல் வண்ணன் கோயில் பிள்ளை
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கொண்டல் வண்ணா! இங்கே போதராயே* 
கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே* 
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா! இங்கே போதராயே* 
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி* ஓடி அகம் புக ஆய்ச்சி தானும்*
கண்டு எதிரே சென்று எடுத்துக் கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்வி தானே|

திருமங்கையாழ்வார்

003. திவ்ய ப்ரபந்தம் - 1428 - பரமனைப் பாடி நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கை இலங்கு ஆழி சங்கன்* கரு முகில் திரு நிறத்தன்*
பொய் இலன் மெய்யன் தன் தாள்* அடைவரேல் அடிமை ஆக்கும்*
செய் அலர் கமலம் ஓங்கு* செறி பொழில் தென் திருப்பேர்*
பை அரவு அணையான் நாமம்* பரவி நான் உய்ந்த ஆறே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1429 - திருமாலைத் துதித்து நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வங்கம் ஆர் கடல்கள் ஏழும்* மலையும் வானகமும் மற்றும்*
அம் கண் மா ஞாலம் எல்லாம்* அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*
திங்கள் மா முகில் அணவு* செறி பொழில் தென் திருப்பேர்*
எங்கள் மால் இறைவன் நாமம்* ஏத்தி நான் உய்ந்த ஆறே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1430 - திருப்பேர் நகரை நினைந்து நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
ஒருவனை உந்திப் பூமேல்* ஓங்குவித்து ஆகம் தன்னால்*
ஒருவனைச் சாபம் நீக்கி* உம்பர் ஆள் என்று விட்டான்*
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த* பெரு நகர் அரவு அணை மேல்*
கரு வரை வண்ணன் தென் பேர்* கருதி நான் உய்ந்த ஆறே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1431 - அப்பக் குடத்தானை வாழ்த்தி நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி* உலகு எலாம் திரியும் ஈசன்*
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன* ஒண் புனலை ஈந்தான்*
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த* செறி வயல் தென் திருப்பேர்*
வானவர்-தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1432 - நரசிங்கனின் திருவடிகளை அடைந்து உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வக்கரன் வாய் முன் கீண்ட* மாயனே என்று வானோர்
புக்கு* அரண் தந்தருளாய் என்னப்* பொன் ஆகத்தானை*
நக்கு அரி உருவம் ஆகி* நகம் கிளர்ந்து இடந்து உகந்த*
சக்கரச் செல்வன் தென்பேர்த்* தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1433 - திருப்பேர் நகர் சேர்ந்து நான் வாழ்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
விலங்கலால் கடல் அடைத்து* விளங்கிழை பொருட்டு* 
வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன்* இருபது புயம் துணித்தான்*
நலம் கொள் நான்மறை வல்லார்கள்* ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு*
மலங்கு பாய் வயல் திருப்பேர்* மருவி நான் வாழ்ந்த ஆறே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1434 - கண்ணனின் பெயரையே சொல்லி உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வெண்ணெய் தான் அமுது செய்ய* வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி*
கண்ணி ஆர் குறுங் கயிற்றால்* கட்ட வெட்டென்று இருந்தான்**
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* 
வேலை வண்ணனார் நாமம் நாளும்* வாய் மொழிந்து உய்ந்த ஆறே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1435 - நாள்தோறும் கண்ணனையே துதிப்பேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய* ஆய்ப்பாடி தன்னுள்*
கொம்பு அனார் பின்னை கோலம்* கூடுதற்கு ஏறு கொன்றான்*
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* மேவும்
எம்பிரான் நாமம் நாளும்* ஏத்தி நான் உய்ந்த ஆறே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1436 - என் சிந்தையில் வாழ்பவன் திருப்பேரூரான்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
நால் வகை வேதம் ஐந்து வேள்வி* ஆறு அங்கம் வல்லார்*
மேலை வானவரின் மிக்க* வேதியர் ஆதி காலம்*
சேல் உகள் வயல் திருப்பேர்ச்* செங் கண் மாலோடும் வாழ்வார்*
சீல மா தவத்தர் சிந்தை ஆளி* என் சிந்தையானே|

012. திவ்ய ப்ரபந்தம் - 1437 - தேவர் உலகு கிடைக்கும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வண்டு அறை பொழில் திருப்பேர்* வரி அரவு அணையில் பள்ளி*
கொண்டு உறைகின்ற மாலைக்* கொடி மதிள் மாட மங்கை*
திண் திறல் தோள் கலியன்* செஞ்சொலால் மொழிந்த மாலை*
கொண்டு இவை பாடி ஆடக்* கூடுவர் நீள் விசும்பே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1851 - திருப்பேர் நகரும் திருவெள்ளரையும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
துளக்கம் இல் சுடரை * அவுணன் உடல் பிளக்கும் மைந்தனைப் * 
பேரில் வணங்கிப் போய் * அளப்பு இல் ஆர் அமுதை * 
அமரர்க்கு* அருள் விளக்கினை * 
சென்று வெள்ளறைக் காண்டுமே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1857 - இவற்றைப் பாடுவோருக்குத் துன்பமில்லை 
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 
பெற்ற மாளியைப்* பேரில் மணாளனை*
கற்ற நூல்* கலிகன்றி உரை செய்த*
சொல் திறம்* இவை சொல்லிய தொண்டர்கட்கு*
அற்றம் இல்லை* அண்டம் அவர்க்கு ஆட்சியே|

015. திவ்ய ப்ரபந்தம் - 2048 - எம்பிரான் பெருமையையே பேசுவேன்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (17)
பேசினார் பிறவி நீத்தார்* பேர் உளான் பெருமை பேசி,* 
ஏசினார் உய்ந்து போனார்* என்பது இவ் உலகின் வண்ணம்,*
பேசினேன் ஏச மாட்டேன்* பேதையேன் பிறவி நீத்தற்கு,* 
ஆசையோ பெரிது கொள்க* அலைகடல் வண்ணர் பாலே*

016. திவ்ய ப்ரபந்தம் - 2050 - திருக்கோயில் சேர்க! உய்யலாம்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
பிண்டியார் மண்டை ஏந்திப்* பிறர் மனை திரி தந்து உண்ணும்*
உண்டியான் சாபம் தீர்த்த* ஒருவன் ஊர்*
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்* 
கச்சி பேர் மல்லை என்று மண்டினார்* 
உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல் ஆமே? (2) 

017. திவ்ய ப்ரபந்தம் - 2059 - அடியார் மனம் தான் ஹரியின் கோயில்
திருநெடுந்தாண்டகம் - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (8)
நீரகத்தாய்! நெடு வரையின் உச்சி மேலாய்!*
நிலாத் திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி ஊரகத்தாய்* 
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்* உள்ளுவார் உள்ளத்தாய்* 
உலகம் ஏத்தும் காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா!*
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்* 
பேராது என் நெஞ்சின் உள்ளாய்!* 
பெருமான்! உன் திருவடியே பேணினேனே| (2)

018. திவ்ய ப்ரபந்தம் - 2060 - எம்பிரானே! நீ எங்கே இருக்கிறாய்
திருநெடுந்தாண்டகம் - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (9)
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய்!* 
மதிள் கச்சி ஊராய்! பேராய்* 
கொங்குத்தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்* 
குல வரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்*
பங்கத்தாய் பாற் கடலாய்! பாரின் மேலாய்!* 
பனி வரையின் உச்சியாய்! பவள வண்ணா!* 
எங்கு உற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி* 
ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே|

019. திவ்ய ப்ரபந்தம் - 2070 - குடந்தை நகரும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
முற்று ஆரா வன முலையாள் பாவை* 
மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்* 
தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்* 
அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்* 
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்* 
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி* 
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்* 
பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே| 

திருமழிசையாழ்வார் 

020. திவ்ய ப்ரபந்தம் - 2417 - பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
நான்முகன் திருவந்தாதி - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்* 
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்* 
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்* 
அணைப்பார் கருத்தன் ஆவான்| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 23 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 23 - பாதக் கமலங்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்

சீதக் கடலுள்* அமுதன்ன தேவகி* 
கோதைக் குழலாள்* அசோதைக்குப் போத்தந்த*
பேதைக் குழவி* பிடித்துச் சுவைத்துண்ணும்*
பாதக் கமலங்கள் காணீரே* 
பவள வாயீர்! வந்து காணீரே| (2) 

  • சீதம் - குளிர்ந்த 
  • கடல் உள் - திருப்பாற்கடலில்
  • அமுது அன்ன - அமுதாகப் பிறந்த லக்ஷ்மியைப் போன்ற
  • தேவகி - தேவகி பிராட்டியால்
  • கோதைக் - பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட்
  • குழலாள் - கேச பாசத்தை உடைய
  • அசோதைக்குப் - யசோதைப் பிராட்டிக்கு
  • போத்தந்த - தத்து கொடுக்கப்பட்ட
  • பேதைக் - ஒன்றுமறியாத 
  • குழவி - சிசுவான கண்ணபிரான்
  • பிடித்து - தன் கைகளால் பிடித்து
  • சுவைத்து உண்ணும் - ருசித்து உண்ணும்
  • பாதக் கமலங்கள் - திருவடித் தாமரைகளை
  • காணீரே - வந்து பாருங்கள்
  • பவள வாயீர்! - பவளம் போன்ற அதரத்தை உடையவர்களே!
  • வந்து காணீரே - வந்து பாருங்கள்

கண்ணனின், திருமேனி அழகைப் பாதம் முதல் கேசம் வரை (அடி முதல் முடி வரை) கூறியுள்ளார். பெரியாழ்வார். திருப்பாற்கடலில் தோன்றிய தேவர்களுக்கு உணவான சாவாமருந்து என்று சொல்லப்படும் அமிழ்தத்தை ஒத்த தேவகிப் பிராட்டியானவர், திருப்பாற்கடலில் தோன்றிய அமிழ்தத்தினைப் போன்றவர். தன் திருவயிற்றில் உதித்த கண்ணபிரானை, கம்சனிடமிருந்து குழந்தையைக் காப்பதற்காக நறுமணமிகுந்த, செறிவாகத் தொடுக்கப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை உடையவளான யசோதை பிராட்டியிடம் அனுப்பி வைக்கிறாள். ஏதும் அறியாப் பச்சிளங் குழந்தை கண்ணனோ தன் காலின் விரல்களை எடுத்து வாயில் வைத்து விரும்பிச் சுவைக்கின்ற அந்த அழகிய பாதமலர்களை, வந்து பாருங்கள்! தாமரை இதழ் போன்று மென்மையாகவும் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கின்ற அழகினைப் பாருங்கள் என்று இந்த அழகை வெகுவாக ரசித்த யசோதை, அங்குள்ள பவளம் போன்று சிவந்த வாயினை உடைய பெண்களை அழைத்து இந்த திவ்ய காட்சியை அவர்களும் அனுபவிக்குமாறு செய்கிறாள். எம்பெருமானுடைய திருவடியில் தேன், வெள்ளம் போல் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது என்றும் அவனுடைய திருவயிற்றில் கிடக்கும் உலகங்கள் எல்லாம் உஜ்ஜீவநமாக்கவே இவ்வாறு செய்கிறான் எனபதும் பெரியவர்களின் கருத்து. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.24

ஸஞ்ஜய உவாச|
ஏவ முக்தோ ஹ்ருஷீ கேஸ²:
கு³டா³ கேஸே²ந பா⁴ரத|
ஸேநயோ ருப⁴யோர் மத்⁴யே
ஸ்தா² பயித்வா ரதோ²த்தமம்||

  • ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொல்லுகிறார் 
  • ஏவம் - இவ்வாறு 
  • உக்தோ - சொன்னவற்றை கேட்டு 
  • ஹ்ருஷீகேஸ²ஹ - பகவான் கிருஷ்ணர் 
  • கு³டா³ கேஸே²ந - அர்ஜுனனால் 
  • பா⁴ரத - கேளாய் பரத நாட்டரசே 
  • ஸேநயோர் - சேனைகளின் 
  • உப⁴யோர் - இரு தரப்பு 
  • மத்⁴யே - மத்தியில் 
  • ஸ்தா² பயித்வா - நிறுத்தி 
  • ரதோ²த்தமம் - மேன்மை கொண்ட அத்தேரை

ஸஞ்ஜயன் கூறுகிறார்: பரத குலத்தில் உதித்தவனே! பார்த்தன் இவ்வாறு கூற கேட்ட கண்ணன் தன் உத்தம தேரை இரு தரப்பு சேனைகளுக்கு நடுவே நிறுத்தினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.8

த⁴ர்ம: ஸ்வநுஷ்டி²த: பும்ஸாம்
விஷ்வக் ஸேந கதா² ஸு ய:।
நோத்பாத³ யேத்³ யதி³ ரதிம்
ஸ்²ரம ஏவ ஹி கேவலம்॥

  • யஹ த⁴ர்மஸ் - எந்த தர்மமானது 
  • ஸ்வநுஷ்டி²தஃ - நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டதாய்
  • பும்ஸாம் - மக்களுக்கு 
  • விஷ்வக் ஸேந கதா²ஸு - விஷ்வக் ஸேனருடைய கதைகளில்
  • ரதிம் - ஆஸக்தியை (கவர்ச்சியை)
  • ந - இல்லை
  • உத்பாத³யேத்³ - உண்டாக்கும் 
  • ஹி - அப்பொழுது 
  • கேவலம் - முழுமையாக
  • ஸ்²ரம - பயனற்ற உழைப்பு
  • ஏவ - மட்டுமே
  • யதி³ - எனில்

வருணாசிரம நெறிகளைத் தவறாது மனப்பூர்வமாகச் செய்து வருபவருக்கு, பகவானுடைய சரித்திரங்களைக் கேட்பதில் ஆசை. அவ்வாறு ஏற்படவில்லை என்றால், அவர் செய்து வந்த வினைகள் எல்லாம் வெறும் வினைகளே ஆகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 39

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 9

ஈஸ்²வரோ விக்ரமீ தந்⁴வீ 
மேதா⁴வீ விக்ரம: க்ரம:|
அநுத்தமோ து³ராத⁴ர்ஷ: 
க்ருதஜ்ஞ: க்ருதிர் ஆத்மவாந்:||

  • 75. ஈஸ்²வரோ - அனைத்துக்கும் தலைவர். சர்வ வல்லமை படைத்தவர்.
  • 76. விக்ரமீ - மிக்க வலிமை உடையவர். தைரியமானவர்.
  • 77. தந்⁴வீ - சாரங்கம் என்னும் வில்லை உடையவர்.
  • 78. மேதா⁴வீ - அனைத்தும் அறிந்தவர். சிறந்த புத்திசாலி.
  • 79. விக்ரமஹ் - கருட வாகனன். முன்னேற்றங்களைக் கொண்டவர்.
  • 80. க்ரமஹ - அளவற்ற ஐஸ்வர்யங்களால் செழிப்புற்றவர். பிரபஞ்சத்தில் ஒழுங்கை பராமரிக்கிறார்.
  • 81. அநுத்தமோ - தனக்கு மேம்பட்டவர் இல்லாதவர்.
  • 82. து³ராத⁴ர்ஷஹ் - கலக்க முடியாதவர். வெல்ல முடியாதவர்.
  • 83. க்ருதஜ்ஞஹ் - சேதநர்களால் செய்யப்படும் புண்ணிய பாபரூபமான செயல்கள் அனைத்தையும் அறிபவர். தனது பக்தர்களுக்கு நன்றியுள்ளவர்.
  • 84. க்ருதிர் - செய்விப்பவர். அனைத்து செயல்களுக்கும் பின்னால் உள்ள சக்தி.
  • 85. ஆத்மவாந்நு - எல்லா ஆன்மாக்களையும் தன்னுடைய ஆன்மாவாக உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி ஆறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

036 இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியாரைப் போலே|

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் பத்தாவது ஆழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் 'விப்ர நாராயணர்' என்னும் இயற்பெயருடன் வளர்ந்தார்.

பல தலங்கள் தோறும் சென்று, இறைவனை வணங்க எண்ணியவராய் முதற்கண் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தார். அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநானைச் சேவித்து, அவரது அழகில் ஈடுபட்டவராய், அரங்கன் கோயில் அருகில் நந்தவனம் அமைத்து, தினமும் துளசிமாலையக் கட்டி அரங்கனுக்குச் சூடி அழகுப்பார்த்தார். இறைவனுக்கு மாலை கட்டித் தரும் திருப்பணியை மேற்கொண்டு அங்கேயே தங்கலானார். 

அப்படிப்பட்டவர் தன் பெயர், குலம், கற்ற வேதம், அரங்கன் ஆகிய அனைத்தையும் மறந்து புலனடக்கம் இழந்து தாசியின் வீடே கதியாகிக் கிடந்தார். அனைத்துப் பொருளையும் இழந்தார். "காசிருந்தால் வா இல்லையேல் வெளியே போ" என தாசி தேவதேவி அவரை வெளியில் துரத்தி கதவை அடைத்தாள். அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. "பணமிருந்தால் வா என்று சொன்னேனே!" என்று சொல்லி கொண்டே வந்து கதவைத் திறந்தவள், வாயிலில் நிற்பவரைப் பார்த்து, "யார் நீ?" என்றாள். "நான் விப்ரநாராயணனுக்கு வேண்டற்பட்டவன். அவரிடம் காசில்லை. ஆதலால் எனக்குச் சொந்தமான பொன்வட்டியைக் கொடுக்கிறேன். அவனை அனுமதி" என்றார். தேவதேவி பொன் வட்டியை வாங்கிக் கொண்டாள். விப்ரநாராயணனுக்கு கதவுத் திறந்தது.

மறுநாள் கோயில் திறக்கப்பட்டது. பெருமாளின் பொன் வட்டியைக் காணவில்லை. கோயிலில் இருந்த கடைநிலை ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவனை அடித்துச் சிறையில் அடைத்தனர். அந்த கடைநிலை ஊழியரின் காதலி தேவதேவியின் சேடிப் பெண். அவள் வந்து, விப்ரநாராயணனின் நண்பர் ஒருவர் பொன்வட்டியைக் கொடுத்ததைக் கூறினாள். விப்ரநாராயணன் சிறையெடுக்கப்பட்டார். தன் தவறை உணர்ந்த தொடரடிப்பொடியாழ்வார், தன் குலப்பெருமையை இழந்து, நாயினும் கீழானேனே என வருந்தினார். திருமாலை என்ற 45 பாசுரங்கள் பாடினார்.

மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி வட்டியைக் கொடுத்தது தானே என்று சொல்லி விப்ரநாராயணரை அகம், புறம் இருச் சிறைகளிலிருந்தும் விடிவித்தார். பின் நாளில் திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற் கொண்டார். இங்கு “இரு” என்று திருக்கோளூர் அம்மாள் குறிக்கும் மாலை இரு அர்த்தங்கள் கொண்டுள்ளது. 


“இரு”, அதாவது “இரண்டு” மாலைகள் என்னும் ஒரு அர்த்தம். மற்றொன்று, “மிகப்பெரிய சிறப்புமிக்க” மாலைகள். தொண்டரடிப்பொடியாழ்வாரின் இரு மாலைகள் – பாமாலை, பாமாலை!! அனுதினமும் ஸ்ரீரங்கநாதனுக்கு, பூமாலை கட்டித் தரும் திருப்பணியை இவர் செய்தார். இது ஒரு மாலை. மற்றொன்று, அவரால் இயற்றப்பட்ட பாமாலை – திருப்பள்ளியெழுச்சி, திருமாலை. 

சிறப்புமிக்க மாலைகள் என்னும் அர்த்தம் எவ்வாறெனில், பரமனுக்கு அடிமை என்பதினும் அவன் தன் உத்தம அடியார்க்கு அடிமை என்பதை பெரிதாக எண்ணுவது வைணவ மரபு. அதனாலேயே அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும் பொருள்பட "தொண்டரடிப்பொடி" என்று தன் பெயரை மாற்றிக்கொள்ள, அரங்கனின் பக்தியில் ஆழ்ந்துப் போனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க தொண்டரடிப் பொடியாழ்வார் ஆன விப்ர நாராயணர், பக்தி மட்டுமே மனதில் கொண்டு, எதையும் எதிர்பார்க்காமல் அனுதினமும் ரங்கநாதனின் புகழ் பாடி பூமாலை கட்டியதால், அவரது பூமாலைகள் சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும், அவரது இரு சிறப்பு மிக்க பாமாலைகள் திருப்பள்ளியெழுச்சி, திருமாலை. பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர் ஆழ்வாரின் “திருமாலை” எனும் நூலை படித்தால் போதும் என்னும் கருத்தும், மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது என்பதும் இவரது படைப்புகளின் சிறப்பினை குறிக்க சிறந்த எடுத்துக்காட்டு.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "தொண்டரடிப்பொடியார் போல் பூமாலையோ பாமாலையோ சூடி பெருமாளுக்கு சேவை செய்தேனா! அப்படி இருமாலைகளை நான் எம்பெருமானுக்கு ஈந்தேனா! .இல்லையே!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்