||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
036 இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியாரைப் போலே|
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் பத்தாவது ஆழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் 'விப்ர நாராயணர்' என்னும் இயற்பெயருடன் வளர்ந்தார்.
பல தலங்கள் தோறும் சென்று, இறைவனை வணங்க எண்ணியவராய் முதற்கண் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தார். அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநானைச் சேவித்து, அவரது அழகில் ஈடுபட்டவராய், அரங்கன் கோயில் அருகில் நந்தவனம் அமைத்து, தினமும் துளசிமாலையக் கட்டி அரங்கனுக்குச் சூடி அழகுப்பார்த்தார். இறைவனுக்கு மாலை கட்டித் தரும் திருப்பணியை மேற்கொண்டு அங்கேயே தங்கலானார்.
அப்படிப்பட்டவர் தன் பெயர், குலம், கற்ற வேதம், அரங்கன் ஆகிய அனைத்தையும் மறந்து புலனடக்கம் இழந்து தாசியின் வீடே கதியாகிக் கிடந்தார். அனைத்துப் பொருளையும் இழந்தார். "காசிருந்தால் வா இல்லையேல் வெளியே போ" என தாசி தேவதேவி அவரை வெளியில் துரத்தி கதவை அடைத்தாள். அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. "பணமிருந்தால் வா என்று சொன்னேனே!" என்று சொல்லி கொண்டே வந்து கதவைத் திறந்தவள், வாயிலில் நிற்பவரைப் பார்த்து, "யார் நீ?" என்றாள். "நான் விப்ரநாராயணனுக்கு வேண்டற்பட்டவன். அவரிடம் காசில்லை. ஆதலால் எனக்குச் சொந்தமான பொன்வட்டியைக் கொடுக்கிறேன். அவனை அனுமதி" என்றார். தேவதேவி பொன் வட்டியை வாங்கிக் கொண்டாள். விப்ரநாராயணனுக்கு கதவுத் திறந்தது.
மறுநாள் கோயில் திறக்கப்பட்டது. பெருமாளின் பொன் வட்டியைக் காணவில்லை. கோயிலில் இருந்த கடைநிலை ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவனை அடித்துச் சிறையில் அடைத்தனர். அந்த கடைநிலை ஊழியரின் காதலி தேவதேவியின் சேடிப் பெண். அவள் வந்து, விப்ரநாராயணனின் நண்பர் ஒருவர் பொன்வட்டியைக் கொடுத்ததைக் கூறினாள். விப்ரநாராயணன் சிறையெடுக்கப்பட்டார். தன் தவறை உணர்ந்த தொடரடிப்பொடியாழ்வார், தன் குலப்பெருமையை இழந்து, நாயினும் கீழானேனே என வருந்தினார். திருமாலை என்ற 45 பாசுரங்கள் பாடினார்.
மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி வட்டியைக் கொடுத்தது தானே என்று சொல்லி விப்ரநாராயணரை அகம், புறம் இருச் சிறைகளிலிருந்தும் விடிவித்தார். பின் நாளில் திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற் கொண்டார். இங்கு “இரு” என்று திருக்கோளூர் அம்மாள் குறிக்கும் மாலை இரு அர்த்தங்கள் கொண்டுள்ளது.
“இரு”, அதாவது “இரண்டு” மாலைகள் என்னும் ஒரு அர்த்தம். மற்றொன்று, “மிகப்பெரிய சிறப்புமிக்க” மாலைகள். தொண்டரடிப்பொடியாழ்வாரின் இரு மாலைகள் – பாமாலை, பாமாலை!! அனுதினமும் ஸ்ரீரங்கநாதனுக்கு, பூமாலை கட்டித் தரும் திருப்பணியை இவர் செய்தார். இது ஒரு மாலை. மற்றொன்று, அவரால் இயற்றப்பட்ட பாமாலை – திருப்பள்ளியெழுச்சி, திருமாலை.

சிறப்புமிக்க மாலைகள் என்னும் அர்த்தம் எவ்வாறெனில், பரமனுக்கு அடிமை என்பதினும் அவன் தன் உத்தம அடியார்க்கு அடிமை என்பதை பெரிதாக எண்ணுவது வைணவ மரபு. அதனாலேயே அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும் பொருள்பட "தொண்டரடிப்பொடி" என்று தன் பெயரை மாற்றிக்கொள்ள, அரங்கனின் பக்தியில் ஆழ்ந்துப் போனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க தொண்டரடிப் பொடியாழ்வார் ஆன விப்ர நாராயணர், பக்தி மட்டுமே மனதில் கொண்டு, எதையும் எதிர்பார்க்காமல் அனுதினமும் ரங்கநாதனின் புகழ் பாடி பூமாலை கட்டியதால், அவரது பூமாலைகள் சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும், அவரது இரு சிறப்பு மிக்க பாமாலைகள் திருப்பள்ளியெழுச்சி, திருமாலை. பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர் ஆழ்வாரின் “திருமாலை” எனும் நூலை படித்தால் போதும் என்னும் கருத்தும், மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது என்பதும் இவரது படைப்புகளின் சிறப்பினை குறிக்க சிறந்த எடுத்துக்காட்டு.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "தொண்டரடிப்பொடியார் போல் பூமாலையோ பாமாலையோ சூடி பெருமாளுக்கு சேவை செய்தேனா! அப்படி இருமாலைகளை நான் எம்பெருமானுக்கு ஈந்தேனா! .இல்லையே!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment