About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 12 September 2025

108 திவ்ய தேசங்கள் - 037 - திருமணிக்கூடம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

037. திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ திருமாமகள் தாயார் ஸமேத ஸ்ரீ மணிகூட பெருமாள் 
திருவடிகளே சரணம்||


  • பெருமாள் மூலவர்: வரதராஜர்
  • பெருமாள் உற்சவர்: கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன் 
  • தாயார் மூலவர்: திருமாமகள் நாச்சியார்
  • தாயார் உற்சவர்: ஸ்ரீதேவி, பூதேவி 
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற
  • புஷ்கரிணி: சந்திர 
  • தீர்த்தம்: ப்ரஹ்ம 
  • விமானம்: கனக, ப்ரஸந்த 
  • ப்ரத்யக்ஷம்: பெரிய திருவடி, சந்திரன்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


-----------------
ஸ்தல புராணம்

உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் மூலஸ்தானத்தில் வரதராஜர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு சக்கரமும், முன் கைகளில் அபய, ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்றபடி இடதுகரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்க விட்ட படியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறாள். இடது புறத்தில் பூமா தேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறாள். அருகிலேயே உற்சவ மூர்த்திகள் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன், "உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்,' என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாக சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாக காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாப விமோசனம் கிடைத்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 88

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 33

ஸ்கந்தம் 03

இறைவனை மகனாகப் பெற்ற தேவஹூதி, குருவிடம் சிஷ்யை கேட்பது போல் கேட்டாள்.

ப்ரும்மத்தை அறிந்த ஞானியாகிய என் ப்ரபுவே! ப்ரக்ருதியும்‌ புருஷனும் ஒன்றையொன்று தழுவிய நித்ய வஸ்துக்கள். ப்ரக்ருதி புருஷனை விட்டுப் பிரிவதே இல்லை.

பூமியும் அதன் குணமான மணமும், நீரும் அதன் தன்மையான சுவையும் எப்படி ஒன்றை விட்டு ஒன்று பிரியாதோ அவ்வாறே ப்ரக்ருதியும் புருஷனும் பிரிவதில்லை.

இயற்கையில் ஆன்மா செயலற்றதாக இருப்பினும் ப்ரக்ருதி அவனைச் செயல்பட வைக்கிறது. ப்ரக்ருதியோடு சம்பந்தம்‌ உள்ளவரை ஆன்மாவிற்குச் சுதந்திரம்‌ இல்லையே. பிறகு எப்படி விடுபடும்? என்றாள்.

பகவான் சிரித்தார். பின்னர் கூறலானார்.


அம்மா! அக்னியை உண்டாக்க அரணிக் கட்டையைக் கடைவது வழக்கம். அக்னியானது தான் தோன்றக் காரணமாயிருக்கும் அரணிக் கட்டையையே எரித்து விடும்.

விறகடுப்பை எரிக்க ஒரு குச்சியைப் பயன்படுத்துவோம். அந்தக் குச்சியால், மற்ற விறகுகளை அடுப்பில் தள்ளுவோம். கடைசியில் இவ்வளவு நேரமாக அடுப்பை எரிக்கப் பயன்படுத்திய குச்சியும் அடுப்பினுள்ளேயே போடப்பட்டு எரிந்து போகும்.

ப்ரக்ருதியால் உண்டாக்கப்பட்ட புத்தி, மனம், இந்திரியங்கள்‌ ஆகியவை ப்ரக்ருதியை எரித்து விடும்.

எப்படி என்றால், ஸ்வதர்மத்தை, அதாவது தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட கர்மத்தை ஒருவன் பலனை எதிர்பார்த்துச் செய்யாமல், பகவத் அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மனத்தூய்மை ஏற்படும். அதனால், இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிய கதைகளில் ஊக்கம் ஏற்படும். அதனால் தீவிரமான பக்தி ஏற்படும். அதன் மூலம் தத்துவத்தை உணரும் அறிவும் திடமான வைராக்யமும், சித்தம் ஒருமைப்படுவதால், புருஷனுடைய அறியாமை நாளடைவில் குறைந்து கொண்டே வந்து பின்னர் முற்றிலும் அழிந்து விடும்.

கனவில் வரும் பற்பல துன்பங்களால் கனவில் மிகவும் கஷ்டப்படுகிறான். விழித்துக் கொண்ட பின்னர், கனவில் வந்த கஷ்டங்கள் அவனைப் பாதிக்கவில்லை என்று உணர்கிறான்.

அது போல் உண்மை நிலையை உணர்ந்தவனை ப்ரக்ருதியால் சம்சார பந்தத்தில் சிக்க வைக்க முடியாது.

இவ்வாறு ஒருவன் பற்பல பிறவிகள் தோறும் பகவானான என்னைப் பற்றிய நினைவாகவே வெகுகாலம்‌ இருப்பானாகில், அவனுக்கு ப்ரும்ம லோகம் உள்பட அனைத்து போகங்களிலும் வெறுப்பு தோன்றி வைராக்யம்‌ சித்திக்கும்.

அம்மா! வைராக்யம்‌ கை வரப் பெற்ற என் பக்தன் மிகுந்த துணிவுடையவன் ஆகிறான். என் கருணையினால், தத்வங்கள் அனைத்தின் ஸாரமான காண்பதனைத்தும் பொய், இறைவனே சத்யம் என்ற அனுபவத்தைப் பெற்றுகிறான். அவனது அத்தனை சந்தேகங்களும்‌ நீங்கப் பெறுகிறான்.

தேகமே ஆன்மா என்ற அபிமானம் அவனை விட்டொழியும். சூக்ஷ்ம உடலை விட்டு யோகிகள் எப்படி திரும்பி வர இயலாத இடத்தை அடைகிறார்களோ, அதே இடத்தை என் பக்தன் அடைகிறான். அவ்விடம் கைவல்யம் எனப்படும் ஆனந்த வடிவான என் உலகமே ஆகும்.

அஷ்டமா சித்திகளும் கடினமான யோக சாதனையால்‌ மட்டுமே கை கூடும். வேறு சாதனைகளால் அவற்றை அடைய முடியாது. ஆனால், பக்தி யோகம்‌ கூடியவனுக்கு அணிமாதி சித்திகள் தானே கை கூடும். அவை மாயையே உருவானவை. ஆகவே மனத்தைத் தன்பால் இழுத்து விடும். உலகியல் தளைகளை மேன்மேலும் தோற்றுவிக்கும். அவைகளில் பற்று வைப்பவர்கள் மீளவே இயலாத சம்சாரக் கடலில் விழுந்து விடுகிறார்கள்.

பக்தி யோகம் கை வரப் பெற்றவர் அவற்றில் மனம் வைக்காமல் இருப்பாராயின், உலகியல் பற்றுக்கள் விடுபட்டு, உடலின் தொடர்பு நீங்கி, மரணபயமற்ற ஆனந்தமே வடிவான என் பரமபதத்தை அடைந்து விடுகிறார். இதற்குச் சிறந்த உதாரணம்..

குருவிடம் பக்தி செலுத்திய கனிகண்ணன் கிழவியைக் குமரியாக்கினார். ஆனால், அந்த சித்தியில் மயங்காமல், குருவருளால் நிகழ்ந்ததென்று அர்ப்பணம் செய்தார். அந்த கனிகண்ணன் ஊரை விட்டுப் போனால், அவர் பின்னால், குருவான திருமழிசை ஆழ்வாரும், பகவானும், காஞ்சியில் இருக்கும் தெய்வங்களும் நடந்து போகிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்