||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
012. திருக்குடந்தை
பாஸ்கர க்ஷேத்ரம் - கும்பகோணம்
பன்னிரெண்டாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 51 - 2
திருமங்கையாழ்வார்
026. திவ்ய ப்ரபந்தம் - 1975 - வெண்ணெயுண்டவரை யாம் அறிவோம்
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
அறியோமே என்று* உரைக்கல் ஆமே எமக்கு*
வெறி ஆர் பொழில் சூழ்* வியன் குடந்தை மேவி*
சிறியான் ஓர் பிள்ளை ஆய்* மெள்ள நடந்திட்டு*
உறி ஆர் நறு வெண்ணெய்* உண்டு உகந்தார் தம்மையே|
027. திவ்ய ப்ரபந்தம் - 2010 - பிரளயத்தில் இருந்து நம்மைக் காத்தவன் மணிவண்ணன்
பெரிய திருமொழிபதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
அண்டத்தின் முகடு அழுந்த* அலை முந்நீர்த் திரை ததும்ப ஆஆ என்று*
தொண்டர்க்கும் அமரர்க்கும்* முனிவர்க்கும் தான் அருளி*
உலகம் ஏழும் உண்டு ஒத்த திருவயிற்றின்*
அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட*
கொண்டல் கை மணி வண்ணன்* தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே|
028. திவ்ய ப்ரபந்தம் - 2037 - அரியை முற்ற முடியப் புகழ்வது எளிதன்று
திருக்குறுந்தாண்டகம் - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (6)
மூவரில் முதல்வன் ஆய* ஒருவனை உலகம் கொண்ட*
கோவினைக் குடந்தை மேய* குரு மணித் திரளை*
இன்பப் பாவினைப் பச்சைத் தேனைப்*
பைம் பொன்னை அமரர் சென்னிப் பூவினை*
புகழும் தொண்டர்* என் சொல்லிப் புகழ்வர் தாமே?
029. திவ்ய ப்ரபந்தம் - 2045 - அந்தோ! வீண் பொழுது போக்கினேனே!
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் (14)
காவியை வென்ற கண்ணார்* கலவியே கருதி*
நாளும் பாவியேன் ஆக எண்ணி* அதனுள்ளே பழுத்தொழிந்தேன்*
தூவி சேர் அன்னம் மன்னும்* சூழ் புனல் குடந்தையானை*
பாவியேன் பாவியாது* பாவியேன் ஆயினேனே|
030. திவ்ய ப்ரபந்தம் - 2068 - எல்லாத் தலங்களையும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (17)
பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப*
பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று*
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்*
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து*
ஆங்கே தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்*
தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு*
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன*
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே|
031. திவ்ய ப்ரபந்தம் - 2070 - குடந்தை நகரும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
முற்று ஆரா வன முலையாள் பாவை*
மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்*
தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்*
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும்*
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்*
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி*
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்*
பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே|
032. திவ்ய ப்ரபந்தம் - 2080 - கண்ணனையே நாயேன் நினைக்கின்றேன்
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை*
அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை*
குன்றாத வலி அரக்கர் கோனை மாளக்*
கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை*
குன்று எடுத்த தோளினானை*
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை*
தண் குடந்தைக் கிடந்த மாலை*
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே|
பூதத்தாழ்வார்
033. திவ்ய ப்ரபந்தம் - 2251 - எந்தை எழுந்தருளியுள்ள இடங்கள்
இரண்டாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை*
தமர் உள்ளும் மாமல்லை கோவல்* மதிள் குடந்தை என்பரே*
ஏ வல்ல எந்தைக்கு இடம்|
034. திவ்ய ப்ரபந்தம் - 2278 - தேவர்கட்கெல்லாம் தலைவன் நெடுமால்
இரண்டாம் திருவந்தாதி - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (97)
எங்கள் பெருமான்* இமையோர் தலைமகன்! நீ*
செங்கண் நெடு மால் திருமார்பா!*
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப்*
பாம்பு அணைமேல் சேர்ந்தாய்* குடமூக்கில் கோயிலாக் கொண்டு|
பேயாழ்வார்
035. திவ்ய ப்ரபந்தம் - 2311 - திருமால் தங்கியிருக்கும் இடங்கள்
மூன்றாம் திருவந்தாதி - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (30)
சேர்ந்த திருமால்* கடல் குடந்தை வேங்கடம்*
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும்*
வாய்ந்த மறை பாடகம் அனந்தன்*
வண் துழாய்க் கண்ணி* இறை பாடி ஆய இவை|
036. திவ்ய ப்ரபந்தம் - 2343 - திருமால் எழுந்தருளியுள்ள திருப்பதிகள்
மூன்றாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (62)
விண்ணகரம் வெஃகா* விரி திரை நீர் வேங்கடம்*
மண் நகரம் மா மாட வேளுக்கை*
மண்ணகத்த தென் குடந்தை*
தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி*
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு|
திருமழிசை ஆழ்வார்
037. திவ்ய ப்ரபந்தம் - 2417 - பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
நான்முகன் திருவந்தாதி - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்*
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்*
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்|
திருமங்கையாழ்வார்
038. திவ்ய ப்ரபந்தம் - 2672 - திருமாலே! பிரமனை ஈன்றாய்! இராவணனைக் கொன்றாய்! மூவுலகு அளந்தாய்!
திருஎழுகூற்றிருக்கை
ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்*
ஒருமுறை அயனை ஈன்றனை*
ஒரு முறை இரு சுடர் மீதினில் இயங்கா*
மும் மதிள் இலங்கை இரு கால் வளைய*
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை*
மூவடி நானிலம் வேண்டி*
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு மார்வினின்*
இரு பிறப்பு ஒரு மாண் ஆகி*
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை*
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை ஏறி*
நால் வாய் மும் மதத்து இரு செவி ஒரு தனி வேழத்து அரந்தையை*
ஒரு நாள் இரு நீர் மடுவுள் தீர்த்தனை*
முத் தீ நான்மறை ஐ வகை வேள்வி*
அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை*
ஐம்புலன் அகத்தினுள் செறித்து*
நான்கு உடன் அடக்கி முக் குணத்து இரண்டு அவை அகற்றி*
ஒன்றினில் ஒன்றி நின்று*
ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை*
முக் கண் நால் தோள் ஐ வாய் அரவோடு*
ஆறு பொதி சடையோன் அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை*
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை*
கூறிய அறு சுவைப் பயனும் ஆயினை*
சுடர்விடும் ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை*
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண*
நின் ஈர் அடி ஒன்றிய மனத்தால்*
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலர் அன*
அங்கையின் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை*
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை*
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே*
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்*
ஏழ் விடை அடங்கச் செற்றனை*
அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை*
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை*
அறம் முதல் நான்கு அவை ஆய் மூர்த்தி மூன்று ஆய்*
இரு வகைப் பயன் ஆய் ஒன்று ஆய் விரிந்து நின்றனை*
குன்றா மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை*
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்*
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த*
கற்போர் புரிசைக் கனக மாளிகை*
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்*
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை*
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க*
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த பரம*
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே|
039. திவ்ய ப்ரபந்தம் - 2707 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்|
040. திவ்ய ப்ரபந்தம் - 2772 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை*
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை*
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை*
மன்னிய தண் சேறை வள்ளலை|
நம்மாழ்வார்
041. திவ்ய ப்ரபந்தம் - 3310 - திருக்குடந்தை ஆராவமுதே! நின்னைக் கண்டேன்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
ஆரா அமுதே அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்* செழு நீர்த் திருக்குடந்தை*
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே|
042. திவ்ய ப்ரபந்தம் - 3311 - திருக்குடந்தைப் பிரானே! நான் என்ன செய்வேன்?
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - இரண்டாம் பாசுரம்
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி* என்னை ஆள்வானே*
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்* ஆவாய் எழில் ஏறே*
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்* திருக்குடந்தை*
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே* என் நான் செய்கேனே|
043. திவ்ய ப்ரபந்தம் - 3312 - திருக்குடந்தையானே! இறந்த பின்னும் நின் தாளே என் துணை
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - மூன்றாம் பாசுரம்
என் நான் செய்கேன்?* யாரே களைகண்?*
என்னை என் செய்கின்றாய்?* உன்னால் அல்லால் யாவராலும்*
ஒன்றும் குறை வேண்டேன்* கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்*
அடியேன் அரு வாழ்நாள்* செல் நாள் எந் நாள்? அந் நாள்*
உன தாள் பிடித்தே செலக்காணே|
044. திவ்ய ப்ரபந்தம் - 3313 - குடந்தையானே! நின்னைக் காண அழுது தொழுகின்றேன்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - நான்காம் பாசுரம்
செலக் காண்கிற்பார் காணும் அளவும்* செல்லும் கீர்த்தியாய்*
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய* ஒரு மூர்த்தி*
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்*
உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய்*
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே|
045. திவ்ய ப்ரபந்தம் - 3314 - ஆராவமுதே! நான் உன் திருவடி சேரும் வகையை நினை
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஐந்தாம் பாசுரம்
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்* பாடி அலற்றுவன்*
தழு வல்வினையால் பக்கம் நோக்கி* நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்* செந்தாமரைக் கண்ணா*
தொழுவனேனை உன தாள்* சேரும் வகையே சூழ் கண்டாய்|
046. திவ்ய ப்ரபந்தம் - 3315 - அமுதே! நான் எவ்வளவு நாள் தான் காத்திருப்பேன்?
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஆறாம் பாசுரம்
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து*
உன் அடிசேரும் ஊழ் கண்டிருந்தே*
தூராக்குழி தூர்த்து* எனை நாள் அகன்று இருப்பன்?*
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்* வானோர் கோமானே*
யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே அரி ஏறே|
047. திவ்ய ப்ரபந்தம் - 3316 - எந்தாய்! இனிப் பொறுக்க முடியாது: அடைக்கலம் அருள்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஏழாம் பாசுரம்
அரி ஏறே என் அம் பொன் சுடரே* செங்கண் கரு முகிலே!*
எரி ஏய் பவளக் குன்றே!* நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்* குடந்தைத் திருமாலே*
தரியேன் இனி உன் சரணம் தந்து* என் சன்மம் களையாயே|
048. திவ்ய ப்ரபந்தம் - 3317 - மாயா! என் உயிர் பிரியும் பொழுது நின் திருவடித் துணை வேண்டும்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - எட்டாம் பாசுரம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்* களைகண் மற்று இலேன்*
வளை வாய் நேமிப் படையாய்* குடந்தைக் கிடந்த மா மாயா*
தளரா உடலம் எனது ஆவி* சரிந்து போம் போது*
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்* போத இசை நீயே|
049. திவ்ய ப்ரபந்தம் - 3318 - ஆதிமூர்த்தீ! எனக்கு தரிசனம் தா
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஒண்பதாம் பாசுரம்
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்* இருத்தும் அம்மானே*
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா* ஆதிப் பெரு மூர்த்தி*
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்* திருக்குடந்தை*
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்* காண வாராயே|
050. திவ்ய ப்ரபந்தம் - 3319 - மாயா! உன்னடிமையாகிய நான் இன்னமும் துன்புறுவேனோ?
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - பத்தாம் பாசுரம்
வாரா அருவாய் வரும் என் மாயா!* மாயா மூர்த்தியாய்*
ஆரா அமுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்* திருக்குடந்தை*
ஊராய்* உனக்கு ஆள் பட்டும்* அடியேன் இன்னம் உழல்வேனோ?
051. திவ்ய ப்ரபந்தம் - 3320 - இவற்றைப் படியுங்கள்: ஆசைகள் அகலும்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - பதினொன்றாம் பாசுரம்
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு* அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மான் ஏய் நோக்கியர்க்கே|
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்