||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
055 இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே|
இந்திர பிரஸ்தம் உருவாக்கப்பட்டு, பஞ்ச பாண்டவர்களின் மூத்தவரான தர்மர் ராஜசூய யாகம் நடத்தி மன்னனாக முடி சூட்டப்பட்டான். விழாவில் கலந்து கொண்ட துரியோதனன், அரண்மனையை சுற்றிப் பார்க்கும் போது நீரில் விழுந்து விட, அதைக் கண்ட த்ரௌபதி நகைக்க, துரியோதனனின் கோபத்திற்கு வழி வகுத்தது. துரியோதனன் இவர்கள் நன்றாக இருப்பதைக் கண்டு பொறாமைப் பட்டான். இவர்களை எப்படி வீழ்த்துவது என்று யோசித்தான். மாமன் சகுனி சூதாட்டத்தில் வல்லவன். சூதாட்டத்தில் இவர்களை வீழ்த்தலாம் என்று தீய யோசனை கூறினான். சகுனியின் துணை கொண்டு, திட்டம் தீட்டி, பாண்டவர்களையும் த்ரௌபதியையும் அஸ்தினாபுரம் வரவழைத்தான் துரியோதனன்.
தர்மரைச் சூதாட்டத்துக்கு அழைத்தான் துரியோதனன். அரசன் எதற்குக் கூப்பிட்டாலும் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் இல்லை அரசனுக்கு அது அவமானம். அதனால் தர்மர் அதற்குக் கட்டுப்பட்டு ஒப்புக் கொண்டார். சூதாட்டம் நடந்தது. சகுனி சூதாட்டத்தில் குறுக்கு வழியில் வஞ்சகமாகப் பந்தயம் வைத்து ஒவ்வொன்றையும் இழக்க வைத்தான்.
தர்மர் முதலில் வீடு, நிலம், ராஜ்யம் முதல்யவற்றை பறிகொடுத்தார். பிறகுத் தன் தம்பிகளைப் பந்தயத்தில் வைத்துத் தோற்றார். அவர்கள் துரியோதனனுக்கு அடிமைகளானார்கள். தன்னை இழந்தார். இறுதியில், “திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து விளையாடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்.” என்று சவால் விட்டான் துரியோதனன். சகுனியின் சூழ்ச்சியின் தொடர் வெற்றிகளின் விளைவாக த்ரௌபதியையும் வைத்துத் தோற்றார். பாஞ்சால தேசத்து இளவரசி, இந்திரபிரஸ்தம் தேசத்து மகாராணி பாஞ்சாலி, நொடியில் பணிப்பெண் ஆனாள். துரியோதனன் பயங்கரமாகச் சிரித்தான். தன் தம்பி துச்சாதனனை அனுப்பி திரௌபதியை அரசவைக்கு இழுத்து வரக் கட்டளையிட்டான்.
துச்சாதனன் திரௌபதியின் தலை மயிரைப் பிடித்து இழுத்து சபைக்கு நடுவில் நிறுத்தினான். துரௌபதி அழுது கொண்டு சபை நடுவே வந்து நின்றாள். துரியோதனன், கர்ணன் முதலானவர்கள் திரௌபதியை மரியாதை குறைச்சலாகப் பேசினார்கள். பீஷ்மர், துரோணர் முதலானவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தார்கள்.
அப்போது துச்சாதனன் ”திரௌபதி உன் கணவர்கள் எங்களுக்கு அடிமை. உன்னையும் பந்தயத்தில் தோற்றார்கள். அதனால் நீயும் எங்கள் அடிமை. அடிமைக்கு எதற்கு இந்த விலை உயர்ந்த உடைகள் என்று ஏளனம் செய்து, சான்றோர்கள் நிறைந்த சபையில் தர்மம் தலை குனிந்து நிற்க, அவள் அணிந்திருந்த சேலையைப் பிடித்து இழுத்தான். திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தந்தைக்கு நிகரான தந்தையின் நண்பன் துரோணர் உதவிக்கு வரவில்லை. தர்மத்தின் திரு உருவம் பீஷ்மர் உதவிக்கு வரவில்லை. மன்னன் என மகுடம் சூடி அமர்ந்திருக்கும் மன்னனும் வரவில்லை. தான் அவமானப்படுவதை பார்த்து என்ன செய்வது என்று அறியாமல் முழித்துக் கொண்டு, மற்றவர்களைப் போல், ஏதும் செய்யாது, பேசாது அமர்ந்திருக்கும் கணவர்கள் கூட உதவவில்லை. வாதங்கள் வீணாய்ப் போக, உறவையும், மனிதனையும் நம்பி நின்றால் தான் காப்பாற்றப்பட போவதில்லை என்பதை உணர்ந்து, தன்னைக் காக்க கண்ணன் ஒருவனால் தான் முடியும் என அவனை சரணாகதி அடைகிறாள்.
துச்சாதனன் வேகமாக இழுக்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில், தனது இருகைகளால் மானம் போகாது மறைத்து கண்ணனைக் கூப்பிடுகிறாள். கண்ணன் வரவில்லை. பின், ஒரு கையால் மானத்தை மறைத்து, மறுகையால் கண்ணனை வணங்கி அலறுகிறாள். கண்ணன் வரவில்லை. ஒரு கட்டத்தில் துச்சாதனனின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் கையே அவளுக்கு உதவி செய்ய முடியாமல் தவித்தது. இறுதியாக, தன் பலத்தை, தன் துணிச்சலை விடுத்து, தன் இருகைகளையும் மேலே தூக்கி, கைகூப்பி முற்றிலும் அவனே கதி என "சங்கு சக்ர கதாபாணே! துவாரகா வாசியே! அச்சுதா! கோவிந்தா! தாமரைக் கண்ணா! உன்னையே சரணடைந்தேன்! என்னைக் காப்பாற்று!” என்றாள்.
கண்ணன் எங்கிருந்தோ புடவை சுரக்க அருள் புரிந்தான். துச்சாதனன் திரௌபதியின் சேலையை இழுக்க இழுக்க வந்து கொண்டே இருந்தது. பல மணி நேரம் இழுத்து இழுத்துச் சோர்வடைந்தான் துச்சாதனன். மேலும் இழுக்க முடியாமல் சரிந்து கீழே விழுந்தான். பந்தயப்படி பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓர் ஆண்டு மறைந்தும் வாழ வேண்டும் என்ற நிபந்தனையில் காட்டுக்குச் சென்றார்கள்.
அழைத்ததும் வந்தான். அவள் மானத்தைக் காத்தான். மானத்தை உயிரை விடவும் பெரியதாய் கருதும் திரௌபதி, ஆடவர் நிறைந்திருக்கும் சபையில், அனைவரின் முன்னிலையில், துகிலுரியப்படும் நேரத்தில், தன் துகில் விட்டு இரு கை கூப்பி நின்று “கோவிந்தா” என்று கூவினால் என்றால், கண்ணனின் மீது அவள் கொண்டுள்ள நம்பிக்கையை என்ன வென்று கூறுவது? நுனிப்புல் அளவு கூட அவநம்பிக்கையோ ஐய்யமோ இல்லாது வேண்டி நின்றாளே!!
எம்பெருமானை, சரணாகதி என வந்துவிட்டால், நம்மை அவன் காப்பாற்றுவான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "நான் அந்த திரௌபதியைப் போல முற்றிலும் நம்பிக்கையோடுசரணம் என இருகையும் விட்டேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment