||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
054 கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே|
இங்கு “திருவடி” என்று திருக்கோளூர் அம்மாள் அழைப்பது “சிறிய திருவடி”யான ஹனுமனை.
ஸ்ரீ இராமனும் இலட்சுமணனும், இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி காடு முழுதும் அலைந்தனர். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் கிஷ்கிந்தையின் அரசனும், வானரர்களின் அரசனுமான சுக்கிரீவனின் நட்பு கிடைத்தது. இராமனுக்கு உதவி புரிய விரும்பிய சுக்ரீவன், நான்கு திசைகளிலும் வானர கூட்டங்களை அனுப்பி, சிதையின் இருப்பிடம் குறித்து அறிய அனுப்பினான். தெற்கு திசையில் தேடிச் செல்ல, ஹனுமான், ஜாம்பவான், நிலா மற்றும் சில வானரங்களை, அங்கதனின் தலைமையில் அனுப்பினான். ஒரு மாதத்திற்குள் அவர்கள் சீதையின் இருப்பிடம் குறித்து அறிந்து வர ஆணையிட்டான்.
அனுமனை தென் திசைக்குச் சென்று சீதை இருக்குமிடத்தைத் தெரிந்து வரும் படி ராமன் உரைத்தார். அடையாளமாகக் காட்ட கணையாழியைக் கொடுத்தார். தானும், சீதையும் அறிந்த சில ரகசிய நிகழ்வுகளையும் கூறியனுப்பினார். கடல் தாண்டி சென்ற ஹனுமான், இலங்கை அடைந்து, அசோகவனத்தில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சீதையைக் கண்டார். இராமன் தன்னிடம் கொடுத்த கணையாழியை சீதையிடம் வழங்கி, தான் இராமனின் தூதுவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அங்கு, அரக்கர்கள் அனுமனின் வாலுக்கு தீயை வைத்தனர். அத்தீயைக் கொண்டே இலங்கையை எரித்தார் அனுமன். சீதைக்கு நம்பிக்கையும், ஆறுதலும் கூறிய பின், சீதை கொடுத்த சூளாமணியை எடுத்துக் கொண்டு ஸ்ரீ இராமனிடம் வந்தார்.
ஹனுமானின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் ஸ்ரீ இராமனிடம், “கண்டெனன், கற்பினுக் கணியையைக் கண்களால்" என்கிறார் ஹனுமான். “சீதையை” என்று தொடங்கி விட்டால் இராமன் சீதைக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்று பதைத்து விடுவாரோ என்று எண்ணி, இராமனுக்கு மணித்துளி மன வருத்தத்தையும் தான் அளிக்கக் கூடாதெனக் கருதியும், தன்சொல்லில் ஐயம் எழக்கூடாதெனக் கருதியும் ஹனுமான் “கண்டேன்” என ஆரம்பித்தார். ஹனுமானின் வார்த்தைகளைக் கேட்டு மனமகிழ்ந்த ஸ்ரீ இராமன், அவனை ஆரத்தழுவிக்கொண்டார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "ஹனுமனைப் போல் பெருமானுக்கு தான் சேவை செய்து அவரை மனம் மகிழ செய்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment