||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 3
திருமங்கையாழ்வார்
041. திவ்ய ப்ரபந்தம் - 1515 - பாஞ்சாலியின் கூந்தலை முடித்தவன் இவனே
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி* கூந்தல் முடிக்க பாரதத்து*
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச்* சங்கம் வாய் வைத்தான்*
செந்தாமரைமேல் அயனோடு* சிவனும் அனைய பெருமையோர்*
நந்தா வண் கை மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே|
042. திவ்ய ப்ரபந்தம் - 1516 - சிவபிரானின் குறை தீர்த்தவன் இவன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஆறும் பிறையும் அரவமும்* அடம்பும் சடைமேல் அணிந்து* உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்* இறையோன் சென்று குறை இரப்ப*
மாறு ஒன்று இல்லா வாச நீர்* வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்*
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய* நறையூர் நின்ற நம்பியே|
043. திவ்ய ப்ரபந்தம் - 1517 - இவற்றைப் படித்தோரைத் தேவர்களும் வணங்குவர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
நன்மை உடைய மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியை*
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்* கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை*
பன்னி உலகில் பாடுவார்* பாடு சாரா பழ வினைகள்*
மன்னி உலகம் ஆண்டு போய்* வானோர் வணங்க வாழ்வாரே|
044. திவ்ய ப்ரபந்தம் - 1518 - திருவேங்கடத்தானைத் திருநறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
மான் கொண்ட தோல்* மார்வின் மாணி ஆய்*
மாவலி மண் தான் கொண்டு* தாளால் அளந்த பெருமானை*
தேன் கொண்ட சாரல்* திருவேங்கடத்தானை*
நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே|
045. திவ்ய ப்ரபந்தம் - 1519 - கடல் கடைந்தவனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
முந்நீரை முன் நாள்* கடைந்தானை*
மூழ்த்த நாள் அந் நீரை மீன் ஆய்* அமைத்த பெருமானை*
தென் ஆலி மேய திருமாலை எம்மானை*
நல் நீர் சூழ்* நறையூரில் கண்டேனே|
046. திவ்ய ப்ரபந்தம் - 1520 - கருட வாகனனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதி தேவனைச்* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே|
047. திவ்ய ப்ரபந்தம் - 1521 - திருநீர்மலையானைத் திருநறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஓடா அரி ஆய்* இரணியனை ஊன் இடந்த*
சேடு ஆர் பொழில் சூழ்* திருநீர்மலையானை*
வாடா மலர்த் துழாய்* மாலை முடியானை*
நாள்தோறும் நாடி* நறையூரில் கண்டேனே|
048. திவ்ய ப்ரபந்தம் - 1522 - வில் வீரன் இராமனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கல் ஆர் மதிள் சூழ்* கதி இலங்கைக் கார் அரக்கன்*
வல் ஆகம் கீள* வரி வெம் சரம் துரந்த வில்லானை*
செல்வ விபீடணற்கு* வேறாக*
நல்லானை நாடி* நறையூரில் கண்டேனே|
049. திவ்ய ப்ரபந்தம் - 1523 - யசோதை சிறுவனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
உம்பர் உலகோடு* உயிர் எல்லாம் உந்தியில்*
வம்பு மலர்மேல்* படைத்தானை மாயோனை*
அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை*
நம்பனை நாடி* நறையூரில் கண்டேனே|
050. திவ்ய ப்ரபந்தம் - 1524 - கிருஷ்ண பரமாத்மாவை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கட்டு ஏறு நீள் சோலைக்* காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை*
மெய்யம் அமர்ந்த பெருமானை*
மட்டு ஏறு கற்பகத்தை* மாதர்க்கு ஆய்*
வண் துவரை நட்டானை நாடி* நறையூரில் கண்டேனே|
051. திவ்ய ப்ரபந்தம் - 1525 - பூ பாரம் தீர்த்த கண்ணனைக் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மண்ணின் மீ பாரம் கெடுப்பான்* மற மன்னர்*
பண்ணின்மேல் வந்த* படை எல்லாம் பாரதத்து*
விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை*
நண்ணி நான் நாடி* நறையூரில் கண்டேனே|
052. திவ்ய ப்ரபந்தம் - 1526 - திருக்குடந்தைக் கிடந்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே|
053. திவ்ய ப்ரபந்தம் - 1527 - தேவர்க்கெல்லாம் தேவர் ஆவர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மன்னு மதுரை* வசுதேவர் வாழ் முதலை*
நல் நறையூர்* நின்ற நம்பியை*
வம்பு அவிழ் தார்க் கல் நவிலும் தோளான்* கலியன் ஒலி வல்லார்*
பொன் உலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே|
054. திவ்ய ப்ரபந்தம் - 1528 - மனமே! நறையூர் நம்பியின் அடியினை சேர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பெடை அடர்த்த மட அன்னம்* பிரியாது*
மலர்க் கமலம் மடல் எடுத்து மது நுகரும்* வயல் உடுத்த திருநறையூர்*
முடை அடர்த்த சிரம் ஏந்தி* மூவுலகும் பலி திரிவோன்*
இடர் கெடுத்த திருவாளன்* இணை அடியே அடை நெஞ்சே|
055. திவ்ய ப்ரபந்தம் - 1529 - மனமே! நறையூரில் இராமபிரான் தான் உள்ளான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கழி ஆரும் கன சங்கம்* கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்*
பழி ஆரும் விறல் அரக்கன்* பரு முடிகள் அவை சிதற*
அழல் ஆரும் சரம் துரந்தான்* அடி இணையே அடை நெஞ்சே|
056. திவ்ய ப்ரபந்தம் - 1530 - மனமே! நறையூரில் கண்ணபிரான் தான் உள்ளான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
சுளை கொண்ட பலங்கனிகள்* தேன் பாய*
கதலிகளின் திளை கொண்ட பழம் கெழுமு*
திகழ் சோலைத் திருநறையூர்*
வளை கொண்ட வண்ணத்தன்* பின் தோன்றல்*
மூவுலகோடு அளை வெண்ணெய் உண்டான் தன்*
அடி இணையே அடை நெஞ்சே|
057. திவ்ய ப்ரபந்தம் - 1531 - மனமே! கோவர்த்தனனே நறையூரில் உள்ளான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
துன்று ஒளித் துகில் படலம்* துன்னி எங்கும் மாளிகைமேல்*
நின்று ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
மன்று ஆரக் குடம் ஆடி* வரை எடுத்து மழை தடுத்த*
குன்று ஆரும் திரள் தோளன்* குரை கழலே அடை நெஞ்சே|
058. திவ்ய ப்ரபந்தம் - 1532 - நறையூரில் ஆழியான் அடியினை சேர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
அகில் குறடும் சந்தனமும்* அம் பொன்னும் அணி முத்தும்*
மிகக் கொணர்ந்து திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
பகல் கரந்த சுடர் ஆழிப்* படையான் இவ் உலகு ஏழும்*
புகக் கரந்த திரு வயிற்றன்* பொன் அடியே அடை நெஞ்சே|
059. திவ்ய ப்ரபந்தம் - 1533 - மனமே! திருமகள் மார்பன் திருவடிகளே சேர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பொன் முத்தும் அரி உகிரும்* புழைக் கை மா கரிக் கோடும்*
மின்னத் தண் திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
மின் ஒத்த நுண் மருங்குல்* மெல் இயலை*
திரு மார்பில் மன்னத் தான் வைத்து உகந்தான்*
மலர் அடியே அடை நெஞ்சே|
060. திவ்ய ப்ரபந்தம் - 1534 - திருத்துழாய் முடியான் திருநறையூரில் உள்ளான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்* செங் கமலத்து இடை இடையின்*
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்* பயன் விளைக்கும் திருநறையூர்*
கார் தழைத்த திரு உருவன்* கண்ணபிரான் விண்ணவர் கோன்*
தார் தழைத்த துழாய் முடியன்* தளிர் அடியே அடை நெஞ்சே|
061. திவ்ய ப்ரபந்தம் - 1535 - மனமே! நறையூர் நம்பியின் நல்லடி நண்ணு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
குலை ஆர்ந்த பழுக் காயும்* பசுங் காயும் பாளை முத்தும்*
தலை ஆர்ந்த இளங் கமுகின்* தடஞ் சோலைத் திருநறையூர்*
மலை ஆர்ந்த கோலம் சேர்* மணி மாடம் மிக மன்னி*
நிலை ஆர நின்றான் தன்* நீள் கழலே அடை நெஞ்சே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்