||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
வியாஸ நாரத ஸம்வாதம் - 4
ஸ்கந்தம் 01
"ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாயே முதல் குருவாகிறாள். தன் குழந்தை நிம்மதியோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படாத தாயே இல்லை. குழந்தை கர்பத்திலிருக்கும் போதே அவளது ப்ரார்த்தனைகள் துவங்கி விடுகின்றன. கைக்குழந்தை என்றும் பாராமல், மாஹாத்மாக்களின் சரணங்களிலும் கோவில்களில் ஸந்நிதிகளிலும் குழந்தையைக் கிடத்தி தன் குழந்தையின் க்ஷேமத்திற்காக ப்ரார்த்தனை செய்யாத அம்மாக்கள் எங்கேயாவது உண்டா?
இங்கு நாரதரின் பூர்வாசிரமத்தில் அவரது தாயே ஸாது சங்கத்தை அறிமுகம் செய்து வைக்கிறாள்.
ஸாது கொடுத்த உச்சிஷ்டத்தை உண்ட குழந்தைக்கு, உள்ளத்தில் எம் முயற்சியுமின்றி தானாகவே ஹரி நாமம் கேட்டது.
கண்ணை மூடித் திறப்பதற்குள் நான்கு மாதங்கள் ஓடி விட்டன. சாதுர்மாஸ்யம் முடிந்து ஸாதுக்கள் கிளம்பினார்கள். போகும் போது ஒரு ஸாது குழந்தையை அழைத்து அதன் வலது காதில் ஹரி நாமத்தை உபதேசம் செய்து விட்டுப் போனார்.
ஸாதுக்களைப் போல் பொல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரே காட்சியில் அன்பினால் ஹ்ருதயம் நுழைந்து விடுவார்கள். இனி அவர்களைப் பிரிய முடியாது என்னும் படியாக நம் மீது அன்பைக் கொட்டி விட்டு அடுத்தவர்க்கு அனுக்ரஹம் செய்யக் கிளம்பி விடுவார்கள்.
அவ்வளவு தான் நமது நிலைமை.
அமர்ந்தாலும், எழுந்தாலும், நின்றாலும், நடந்தாலும், பசித்தாலும், புசித்தாலும் உறங்கினாலும், கனவிலும் கூட அவர்கள் நினைவே ஆட்கொண்டு விடும். ஒரு கட்டத்தில் நாம் லௌகீகமாக உழன்று கொண்டிருந்ததே தேவலாம் என்னும் அளவிற்கு அவர்களது பிரிவு வாட்டும். கணவன் மனைவி, தாய் பிள்ளை, காதலன் காதலி இவர்களது அன்பைக் காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்தது குருவிற்கும் சிஷ்யனுக்குமிடையிலான அன்பு.
நம்மைப் பிரிவதன் மூலம், நமது முயற்சியின்றியே நமக்கு குருவின் தியானம் சித்தித்து விடும்.
குழந்தையால் அந்த ஸாதுக்களைப் பிரிய முடியவில்லை. அவர்களோடு போக விழைந்தாலும், ஆதரவற்ற அன்னையை விட்டுப் போக முடியவில்லை. மேலும் அவனோ ஐந்து வயதுக் குழந்தை.
ஒரு நாள் விதி வசத்தால் தாய் பாம்பு கடித்து மாண்டு போனாள்.
ஸாது சேவை செய்தும் தாய் இறந்து விட்டாளே என்று தோன்றவில்லை. மாறாக, இறைவனை அடையும் வழியில் தடையாக இருந்த ஒரே பந்தத்தையும் இறைவன் விலக்கினானே என்று தோன்றியது குழந்தைக்கு.
பக்தி, ஞானம், வைராக்யம் இவையெல்லாம் ஒரு உண்மையான மஹாத்மாவின் ஸந்நிதியில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தாலே கிடைத்து விடுகிறது.
இனி தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையென்று ஸாதுக்கள் போன திக்கிலேயே கிளம்பினான்.
வழி நடந்து கங்கா தீரத்தை அடைந்தான். மனம் தியானத்தில் இயல்பாக மூழ்கித் திளைத்தது. கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்தால், தானாகவே ஹ்ருதயத்தில் ஒரு ஒளி தோன்றியது. குழலோசை கேட்டது. மின்னல் போல் அவ்வப்போது திவ்யக் காட்சிகள் தென்பட்டன. ஒருநாள் அசரீரி கேட்டது.
இடி போன்ற குரலில் பகவான் குழந்தையிடம் பேசினான்.
"குழந்தாய்! உன்னைக் கண்டு மகிழ்ந்தேன். என் அனுபவத்தில் நான் யாரோடும் இவ்வளவு சீக்கிரமாக பேசியதுமில்லை. தரிசனம் கொடுத்ததும் இல்லை. நீ அறிந்தோ அறியாமலோ ஸாதுக்களின் கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகி விட்டாய். குறுக்கு வழியில் வெகு சீக்கிரத்தில் என் அனுக்ரஹத்தை அடைந்து விட்டாய். எனினும் இப்பிறவியில் என் தரிசனத்தைக் காணும் பக்குவத்தை நீ அடையவில்லை. எனவே, உனது அடுத்த பிறவியில் உனக்கு என் தரிசனம் கிட்டும்."
குரல் வந்த திசையில் நமஸ்காரம் செய்த குழந்தை சிரித்தான்.
"இப்போது தரிசனம் இல்லை என்கிறேன் சிரிக்கிறாயே."
"இருக்கட்டுமே. அதனால் என்ன?"
"இப்போதும் நீங்கள் என்னோடு பேசியதன் காரணம் என்ன தெரியுமா? அன்றொரு நாள் எனக்கு அனுக்ரஹம் செய்தார்களே அந்த ஸாதுக்கள், "அந்த ஊரில் ஒரு குழந்தை நம்மோடு ஓடி ஓடி வந்ததே. இப்போது எப்படி இருக்கிறானோ என்று என்னைப் பற்றி நினைத்திருப்பார்கள்.
நீங்கள் அவர்கள் ஹ்ருதயத்தில் குடி கொண்டிருப்பதால், அவர்கள் என்னை நினைத்ததும் ஓடி வந்து என்னோடு பேசுகிறீர்கள்.
அடுத்த பிறவி என்று நீங்களே வந்து சொல்கிறீர்களே.. அதுவே பாக்யம் தானே. என்னிடம் வந்து அதைச் சொல்ல அவசியம் என்ன இருக்கிறது? என் மீதான அந்த மஹாத்மாக்களின் கருணையே உம்மை என்னோடு பேசத் தூண்டிற்று. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் கொடுங்கள். அது உங்கள் விருப்பம்.
எனக்கு உங்கள் மீது எப்போதும் பக்தி இருக்க வேண்டும் என்று அனுக்ரஹம் செய்யுங்கள்" என்று சொல்லி மீண்டும் நமஸ்காரம் செய்தான்.
மிகவும் மகிழ்ந்த பகவான் "அப்படியே" என்று அசரீரியாகச் சொன்னார்.
கேட்டுக் கொண்டிருந்த வியாஸர்,
"ஸ்வாமி, இப்போது அடுத்த பிறவியா?" என்றார்.
"ஆம். அதன் பிறகு அந்தப் பிறவியை ஹரி தியானத்திலேயே கழித்தேன். பிறகு ப்ரும்மாவின் மானஸ புத்திரர்களுள் ஒருவனாக இந்தப் பிறவி வாய்த்தது."
"இப்போது பகவான் தரிசனம் கொடுத்தாரா?"
"அதை ஏன் கேட்கிறீர்கள் வியாஸரே"
"சென்ற பிறவியில் தெரியாத்தனமாக தியானம் செய்து விட்டேன். மின்னல் போல் அவ்வப்போது ஒளியாய்த் தோன்றி, அசரீரியாகப் பேசினார். இப்பிறவியில் நான் நான் தியானமோ, யோகமோ ஸாதனைகளுமோ செய்வதில்லை. எந்நேரமும் நாராயணா எனும் நாமத்தையே சொல்கிறேன். அதனால் குச்சி வைத்துக் கொண்டு விரட்டினாலும் என்னை விட்டுப் போவதே இல்லை. எப்போதும் என்னைச் சுற்றி சுற்றி வருகிறார். எந்நேரத்திலும் நேரில் தோன்றி என்னோடு பேசுகிறார். எனவே, நீங்கள் நாமத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம் ஒரு கிரந்தம் செய்யுங்கள்" என்றார் நாரதர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்