||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பக்தியே கதி
ஸ்கந்தம் 02
ஸ்ரீ சுகாசார்யார், யோகிகள் சரீரத்தை விட்டதும் எவ்வாறு பரமாத்ம ஸ்வரூபத்தில் கலக்கிறார்கள் என்பதை விவரித்துக் கூறினார். பின்னர், “அரசே, தொன்று தொட்டு வேதங்களில் கூறப்பட்டு வரும் ஸத்யோ முக்தியையும், கிரமமாக படிப்படியாக அடையும் முக்தியையும் உனக்குச் சொன்னேன். இவையே தூம மார்க்கம், அர்ச்சிராதி மார்க்கம் எனப்படும். முன்பு பிரம்ம தேவருக்கு ஸ்ரீ வாஸுதேவர் கூறிய இரண்டு வழிகள் இவை.
பகவான் வாஸுதேவரிடம் அன்புடன் பக்தி செய்யும் வழியைத் தவிர இந்த நிலவுலகில் விழுந்து தவிக்கும் ஒருவனுக்கு, நன்மை அளிக்கும் வழி வேறு இல்லை.
பிரம்ம தேவர் ஒரு மனத்தோடு வேதங்களை திரும்ப திரும்பப் படித்து, நிதானமாக ஆலோசித்து, பின்னர் பகவான் வாஸுதேவரிடம் தீவிர பக்தி கொள்வது ஒன்று தான் மேலான வழி என்று நிச்சயித்தார்.
புத்தி, அநுமானம் இவை, பகவான் இருக்கிறார் என்பதை ஊகித்து அறிய பயன்படும் ஸாதனங்களே தவிர, பகவானை அடையும் ஸாதனங்கள் ஆக மாட்டா. மனிதர்களான நமக்கு எங்கும், எந்நேரத்திலும், எவ்விதத்திலும் பகவான் ஸ்ரீஹரி ஒருவரே, மனோ, வாக், காயங்களால் பாடவும் சிந்திக்கவும் தகுந்தவர். அனைத்திலும் ஆத்மாவாக விளங்கும் பகவானின் லீலைகளை ஸாதுக்கள் கேட்டும், பருகியும் மனத்தில் தேக்கி வைத்துக் கொள்கின்றனர். அதனால் புலன்களால் மாசு அடைந்த இதயம் தூய்மையாகிறது.”
சுகாசாரியார் மேலும் கூறத் தொடங்கினார்.
“பிரம்ம தேஜஸை விரும்புபவன் பிரம்மாவையும், புலன்களின் சக்தியை வேண்டுபவன் இந்திரனையும், மக்கட் பேற்றை விரும்புபவன் ப்ரஜாபதிகளையும், நல்ல இல்லறத்தை விரும்புபவன் துர்கா தேவியையும், ஒளியை விரும்புபவன் அக்னியையும், செல்வத்தை விடும்புபவன் அஷ்ட வசுக்களையும், வீரத்தை விரும்புபவன் ருத்ரனையும், அன்னத்தை விரும்புபவன் அதிதியையும், ஸ்வர்கத்தை விரும்புபவன் பன்னிரண்டு ஆதித்யர்களையும், அரசனாக விரும்புபவன் விஸ்வே தேவர்களையும், நீண்ட ஆயுளை விரும்புபவன் அஸ்வினி தேவர்களையும், வலிமையை விரும்புபவன் பூமியையும், அழகை விரும்புபவன் கந்தர்வர்களையும், கணவன் மனைவி உறவு இனிக்க ஸதி தேவியான உமையையும், குலம் தழைக்க பித்ரு தேவர்களையும், தொல்லைகளில் இருந்து விடுபட யக்ஷர்களையும், உலகியல் இன்பத்தை வேண்டுபவன் சந்திரனையும், வைராக்யத்தை விரும்புபவன் ஸ்ரீமந் நாராயணனையும் பூஜிக்க வேண்டும்.
ஒருவன் எங்கும் எதிலும் விருப்பமுள்ளவன் ஆயினும், மேற்கண்ட அனைத்தையும் விரும்புபவன் ஆயினும், முக்தியை அடைய விரும்பினாலும், எதிலுமே விருப்பம் இல்லாதவன் ஆயினும், தீவிரமான பக்தி யோகத்தால் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பகவானையே ஆராதிக்க வேண்டும். எந்த தேவதையை உபாசித்தாலும், ஸாது சங்கத்தில் இருந்து கொண்டு, பகவான் ஸ்ரீ ஹரியிடம் நிச்சயமான பக்தி செய்து தான் முக்தி பெற இயலும்.”
சௌனகர் கேட்டார்.
“ஸூதரே, பரீக்ஷித் மேலும் என்னென்ன விஷயங்களைக் கேட்டான்?”
“பரிக்ஷித் சிறு வயதிலிருந்தே விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு ஸ்ரீ க்ருஷ்ணனைப் பூஜை செய்யும் விளையாட்டுக்களையே விளையாடினான். வியாஸரின் மகனோ, அனைத்தும் அறிந்தவர். இவ்விருவரும் சேர்ந்தால் மிகச் சிறந்த பகவத் கதைகளே வெளிப்படும். பகவானைப் பற்றிய சிந்தனைகளில் கழிக்கும் நேரமானது காலவரையறைகளில் அடங்குவதில்லை. பகவானைப் பற்றிக் கேட்காத பேசாத ஒவ்வொரு நொடியும் வீணே. அவர்களின் ஆயுள் பறிக்கப் படுகிறது.
மற்ற விலங்குகளைப் போல் வாழும் மனிதன் அவைகளை விட எவ்விதத்தில் உயர்ந்தவன்? பகவன் நாமத்தைச் சொல்லாத கேட்காத ஒருவனின் புலன்கள் விலங்குகளின் புலன்களுக்குச் சமம். மூவுலகையும் அளந்த பெருமானின் புகழைக் கேட்காத காதுகள் எலி வசிக்கும் வளை. பாம்பு வசிக்கும் புற்று. இறைவனின் சரிதத்தை கானம் செய்யாத நாக்கு தவளையின் நாக்கு போன்றது. பட்டுத் தலைப் பாகை இருப்பினும் அது வெறிம் சுமை. இறைவனின் திருவுருவத்தைப் பார்க்காத கண்கள் மயில் பீலியின் கண்களே. கோவில்களுக்குச் செல்லாத கால்கள் மரக் கால்கள். இறைவன் புகழைக் கேட்டு நெகிழாத இதயம் இரும்பு. ஆகவே நீங்கள் பகவானைப் பற்றிய கதைகளையே கூறுங்கள்.” என்றார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்