||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
007 தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே|
அநஸூயை அத்ரி முனிவரின் தர்ம பத்தினி. இருவரும் சித்திரக்கூடத்தின் தெற்கு பக்கத்தில் மந்தாகினி நதிக்கரையில் ஓர் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அநஸூயை என்ற பெயருக்கு ஏற்றார் போல், யார் குற்றமும் அவள் கண்ணில் படாது. எல்லாவற்றையும் நல்ல குணமாகவே எடுத்துக் கொள்வாள். அவளும் யாரை பார்த்தாலும் பொறாமை படமாட்டாள். அவளை பார்த்தும் யாரும் பொறாமை படமாட்டார்கள். அந்த அளவிற்கு சிறந்த குணசாலினியாக இருந்தாள். அவர்களுக்கு சொத்து என்று எதுவும் இல்லை. ஆனால் ராமரும் சீதையும் அவர்களை தேடிக் கொண்டு வந்து தெண்டன் சமர்ப்பித்து அதிக நேரம் உட்கார்ந்து பேசுகிற அளவிற்கு சிறந்தவர்களாக விளங்கினர் தம்பதியினர்.

ராமர் அத்ரியுடனும், சீதை அநஸூயையூடனும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது சீதையிடம் "சீதை, உன் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடந்ததாமே! எப்படி நடந்தது? யாரெல்லாம் வந்தார்கள்? என்ன சீர் எல்லாம் வந்தது?" போன்ற கேள்விகளை எல்லாம் கேட்கிறாள் அநஸூயை. சீதையும் ஆசையோடு அனைத்தையும் சொல்கிறாள். அதை கேட்டு "சீதை, இத்தனை நன்றாக இருந்தவள் இப்பொழுது காட்டிற்கு வந்து விட்டாயே! இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டாம் தான். இருந்தாலும் எல்லா அலங்காரமும் உனக்கு நான் பண்ணி விடுகிறேன். அனைத்தையும் விட்டுவிட்டு தான் நீ வந்திருக்க! ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆபரணம் அணிந்துக் கொள்ளும் அளவிற்கு தான் உன் தந்தையின் இல்லமும் மாமனாரின் இல்லமும் இருக்கிறது. அத்தனை வைபவம் பெற்றவர்கள் தான் அவர்கள். அப்படியிருக்கும் போது ஒன்றுமே இல்லாமல் வெறும் மான் தோல் ஆபரணங்களோடு வந்திருக்கிறாயே! இது எனக்கு பிடிக்கலை, அதனால் உனக்கு நான் அலங்காரம் பண்ண போறேன்" என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் நல்ல புஷ்பங்களை கொய்து கொண்டு வந்து, நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு வந்து சீதைக்கு மிகவும் அழகாக அலங்காரம் பண்ணி விட்டாள். தன் மகளாக நினைத்து, அழகுப் படுத்தி, தலை கோதி விட்டு, தோள்களை தொட்டு தடவி ஆஸ்வாஸப்படுத்தி, "கவலைப்படாதே சீதை, பதினான்கு வருடங்கள் ரிஷிகளோடு கூடியிருந்து நிறைய விஷயங்களையும் அர்த்தத்தையும் தெரிந்துக் கொண்டு நீயும் ராமனுமாக நல்ல ஆட்சி புரிவீர்கள்" என்று சீதைக்கு சொல்கிறாள்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படி ஒரு தாயை போல நான் ஏதாவது செய்தேனா? அந்த தாய்மை எனக்கு இல்லையே! பெருமானுக்கும் பிராட்டிக்கும் அலங்காரம் பண்ணி பார்க்க வேண்டும் என்ற தாய்மை எனக்கு இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
----------
தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே - இதற்கு இன்னொரு கதையையும் எடுத்துக்காட்டாய் சொல்லுவார்கள்.
அத்திரி மகரிஷி, அனுசூயா தம்பதிகள் குடில் அமைத்து வசித்து வந்தனர். அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் குழந்தைகளாக பிறக்க வேண்டும் என ஆசை. அதற்காக கடுமையாக பிரார்தித்து வந்தனர்
மும்மூர்த்திகளும், அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினர். துறவிகள் போல அவர்கள் வேடமிட்டு, அத்திரியின் குடிலுக்கு வந்தனர். அப்போது மகரிஷி வீட்டில் இல்லை.
அனுசூயா, தினமும் தன் கணவருக்கு பாத பூஜை செய்து, அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்ட பின்னரே பணிகளைத் தொடங்குவார். அந்தத் தீர்த்தம் எப்போதும் அவர்கள் இல்லத்தில் இருக்கும்.
அனுசூயா வந்த துறவிகளை வரவேற்றார். உணவு எடுத்து வர உள்ளே சென்ற போது அவர்கள் "தாயே! எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது, எங்களுக்கு யார் உணவிட்டாலும் அவர்கள் நிர்வாண (திகம்பரராக) நிலையிலேயே அதைச் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த உணவை நாங்கள் ஏற்போம்" என்றனர்.
அனுசூயாவிற்கு இதில் ஏதோ தெய்வ சங்கல்பம் இருப்பது போலத் தெரிந்தது. உடனே அவர் ,"ஆகா அப்படியே செய்கிறேன்" என்று கூறிவிட்டு, எப்போதும் வீட்டில் வைத்திருக்கும் கணவரின் பாத பூஜை தீர்த்தத்தை எடுத்து" இறைவா! நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையானால் இந்தத் துறவிகளை குழந்தையாக மாற்று' என்று கூறியபடியே அந்த தீர்த்தத்தை அவர்கள்மீது தெளித்தார். மூவரும் குழந்தைகள் ஆகிவிட்டனர். பின், அவர்கள் விருப்பப்படியே அவர்கள் பசியை பாலூட்டிப் போக்கினார்.

அத்திரி முனிவரும் வந்தார். தனது ஞானதிருஷ்டியால் வந்தவர்கள் மும்மூர்த்திகள் என அறிந்தார். அக்குழந்தைகளை அணைத்தார். மூன்று தலைகளும், ஆறு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆனது. இத்தகவல் அறிந்த முப்பெரும் தேவியரும், அவரவர் தங்கள் கணவர்களைத் திருப்பித்தர வேண்டினர். அக்குழந்தை தங்களுடனேயே வளர வேண்டும் என அத்திரியும், அனுசூயாவும் சொன்னார்கள், அதற்கு தேவியர்கள் ஒப்புக் கொண்டால், அவர்களது கணவன்மார்களைத் திருப்பித் தருவதாகக் கூறினர். மூவரும் அதற்கு இசைய, அனுசூயை மும்மூர்த்திகளை மானசிகமாக வேண்டினார். அப்போது மூவரும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை அவர்களுடன் வளர ஆசிர்வதித்து, அக்குழந்தை ஒரு முனிவராக வளரும் என்றனர். அக்குழந்தையே தத்தாத்ரேயர் ஆவார்.
இதையே திருக்கோளூர் பெண் 'தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப் போல" என்கிறாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்