||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
காட்டுத் தீ|
ஒரு நாள் கிருஷ்ணனும் அவனுடைய நண்பர்களும் வழக்கம் போல் ஒரு மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பசுக்களும் கன்றுகளும் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. ஆனால் அவை பசும் புல்லைத் தேடி நகர்ந்து கொண்டே சென்று, ஒர் அடந்த காட்டை அடைந்து விட்டன. அவை மேய்ந்து கொண்டிருக்கையில், காட்டுத் தீ செடிகளையும் மரங்களையும் எரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தன. நாலா பக்கங்களிலும் தீ அந்தப் பசுக்களையும் கன்றுகளையும் அணுகிக் கொண்டிருந்தது. அப்போது தான் சிறுவர்களுக்குப் பசுக்களைக் காணோம் என்ற விவரம் தெரிய வந்தது. எங்கே தேடிப் பார்த்ததும் பசுக்களைக் காணவில்லை. உடனே கிருஷ்ணன் தன் மாயக் குழலை எடுத்து ஊத ஆரம்பித்தான். தங்கள் தலைவனின் குழல் ஓசையைக் கேட்டு, தீயினால் சூழப்பட்டிருந்த அந்தப் பசுக்கள் பெருத்த குரல் கொடுத்தன. அவற்றின் குரலில் வேதனை தோன்றியது. பசுக்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கிருஷ்ணன் உடனே புரிந்து கொண்டான். பசுக்களின் குரல் கேட்ட திசையை நோக்கி அவன் தன் நணபர்களுடன் விரைந்தான்.
இதற்கிடையில் தீ வேகமாகப் பரவிவிட்டது. நெருப்பின் ஜ்வாலைகள் ஆகாயத்தை நோக்கிக் கிளம்பின. பெரும் வெப்பக் காற்றாக இருந்தது. தீ பரவுவதைப் பார்த்துப் பசுக்களும் பயந்தன. சிறுவர்களும் பயந்தார்கள். பீதியடைந்த சிறுவர்கள் கிருஷ்ணன் காலில் விழுந்து, “கிருஷ்ணா! எங்களை சாம்பலாக்கி விடத் துடித்துக் கொண்டிருக்கும் காட்டுத் தீயிலிருந்து எங்களைக் காப்பாற்ற ஏதாவது செய். தீ எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறது. நீ தாமதம் செய்தால் அது எங்களை அழித்துவிடும்” என்று சொல்லிக் கதறினார்கள்.
அவர்களுடைய பரிதாபக் குரலைக் கேட்ட சர்வ சக்தி உடையவனான கிருஷ்ணன், அவர்களைச் சமாதானப் படுத்தினான். “பயப்படாதீர்கள்! நான் இருக்கும் வரையில் நீங்கள் எதற்காகப் பயப்பட வேண்டும்? எல்லாரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள் நான் சொல்லும் வரையில் திறக்காதீர்கள்” என்றான். அவன் சொன்னபடியே சிறுவர்கள் செய்தார்கள். எல்லாரும் கண்களை இறுக மூடிக் கொண்டு நின்றார்கள். கிருஷ்ணன் தன் யோக சக்தியைப் பயன்படுத்தி, தன் வாயினால் காட்டுத் தீயை விழுங்கினான். எல்லாத் தீயும் அவன் வயிற்றுக்குள் சென்றது. அது அவனை ஒன்றும் செய்யவில்லை. “இப்போது கண்ணைத் திறங்கள்” என்றான் கிருஷ்ணன். அவர்கள் கண்களைத் திறந்து பார்த்த போது தீயை அங்கே காணவில்லை. எங்கும் குளிர்ச்சி மயமாக இருந்தது. அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். கிருஷ்ணனைப் பாராட்டிக் கொண்டே எல்லாரும் பசுக்களுடன் வீடு திரும்பினார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்