||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் - திருச்சி
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 11
திருமங்கை ஆழ்வார்
186. திவ்ய ப்ரபந்தம் - 1408 - எல்லாமாய் இருப்பவன் திருவரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்*
பதங்களும் பதங்களின் பொருளும்*
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்* பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்* ஏழு மா மலைகளும் விசும்பும்*
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|
187. திவ்ய ப்ரபந்தம் - 1409 - உயிர்களுக்கு வாழ்வு அளிப்பவன் திருவரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்* எண் இல் பல் குணங்களே இயற்ற*
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும்* சுற்றி நின்று அகலாப் பந்தமும்*
பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும்* பல் உயிர்க்கு எல்லாம்*
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|
188. திவ்ய ப்ரபந்தம் - 1410 - அன்னமாகி அருமறை அளித்தவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்* வானமும் தானவர் உலகும்*
துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கித்*
தொல்லை நான்மறைகளும் மறைய*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்* பிறங்கு இருள் நிறம் கெட*
ஒருநாள் அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*
அரங்க மா நகர் அமர்ந்தானே|
189. திவ்ய ப்ரபந்தம் - 1411 - அலை கடல் கடைந்தவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம்
மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக* மாசுணம் அதனொடும் அளவி*
பா இரும் பௌவம் பகடு விண்டு அலறப்* படு திரை விசும்பிடைப் படர*
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்* தேவரும் தாம் உடன் திசைப்ப*
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|
190. திவ்ய ப்ரபந்தம் - 1412 - நரசிம்மனாகப் தோன்றியவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?* இரணியன் இலங்கு பூண் அகலம்*
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து* பொழிதரும் அருவி ஒத்து இழிய*
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*
விண் உறக் கனல் விழித்து எழுந்தது*
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|
191. திவ்ய ப்ரபந்தம் - 1413 - பாற்கடலில் பள்ளி கொண்டவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய* அடல் புரை எழில் திகழ் திரள் தோள்*
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி* மற்று அவன் அகல் விசும்பு அணைய*
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச* அறிதுயில் அலை கடல் நடுவே*
ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|
192. திவ்ய ப்ரபந்தம் - 1414 - கடலில் அணை கட்டியவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*
கொடுமையின் கடு விசை அரக்கன்*
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடி செய்து*
இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரி சிலை வளைய அடு சரம் துரந்து* மறி கடல் நெறிபட*
மலையால் அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*
அரங்க மா நகர் அமர்ந்தானே|
193. திவ்ய ப்ரபந்தம் - 1415 - அருச்சுனனுக்கு அருளியவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய்* ஒரு கால் உடைய தேர் ஒருவன் ஆய்*
உலகில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து*
இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப்* பகலவன் ஒளி கெட*
பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*
அரங்க மா நகர் அமர்ந்தானே|
194. திவ்ய ப்ரபந்தம் - 1416 - மலையைக் குடையாகப் பிடித்தவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*
ஒரு கால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
மால் ஆய் ஆல் இலை வளர்ந்து* மணி முடி வானவர் தமக்குச் சேயன் ஆய்*
அடியேர்க்கு அணியன் ஆய் வந்து* என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்*
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்* அரங்க மா நகர் அமர்ந்தானே|
195. திவ்ய ப்ரபந்தம் - 1417 - பழவினைகள் அகலும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து* பொரு திரை மா நதி புடை சூழ்ந்து*
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த* அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே|
196. திவ்ய ப்ரபந்தம் - 1418 - குகனைத் தோழமை கொண்டவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி* மற்று அவற்கு இன் அருள் சுரந்து*
மாழை மான் மட நோக்கி உன் தோழி* உம்பி எம்பி என்று ஒழிந்திலை*
உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*
அடியேன் மனத்து இருந்திட*
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|
197. திவ்ய ப்ரபந்தம் - 1419 - சாதி வேற்றுமை பாராட்டாதவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு* மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை*
உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச்*
செய்த கவினுக்கு இல்லை கைம்மாறு*
என்று கோது இல் வாய்மையினாயொடும் உடனே*
உண்பன் நான் என்ற ஒண் பொருள்*
எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|
198. திவ்ய ப்ரபந்தம் - 1420 - கஜேந்திரனைக் காப்பாற்றியவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை* வைகு தாமரை வாங்கிய வேழம்*
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*
மற்று அது நின் சரண் நினைப்ப*
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*
கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*
உன் அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|
199. திவ்ய ப்ரபந்தம் - 1421 - சுமுகன் என்ற நாககுமாரனைக் காத்தவன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்*
வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்*
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*
அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர்* கொடிய செய்வன உள*
அதற்கு அடியேன் அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|
200. திவ்ய ப்ரபந்தம் - 1422 - கோவிந்த ஸ்வாமி என்ற அந்தணனுக்கு அருள் செய்தவன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*
மலர் அடி கண்ட மா மறையாளன்*
தோகை மா மயில் அன்னவர் இன்பம்* துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து*
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே* போதுவாய் என்ற பொன் அருள்*
எனக்கும்ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|
201. திவ்ய ப்ரபந்தம் - 1423 - மார்க்கண்டேயனைக் காப்பாற்றியவன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை*
மதியாத வெம் கூற்றம் தன்னை அஞ்சி*
நின் சரண் என சரண் ஆய்த்* தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம்* எண்ணிய பேர் அருள்*
எனக்கும் அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|
202. திவ்ய ப்ரபந்தம் - 1424 - சாந்தீபினிக்கு அருள் புரிந்தவன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*
உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்*
காதல் என் மகன் புகல் இடம் காணேன்*
கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|
203. திவ்ய ப்ரபந்தம் - 1425 - அரங்கனே! எனக்கும் அருள் செய்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*
எந்தை நின் சரண் என்னுடை மனைவி*
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*
கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச் செய்து*
உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|
204. திவ்ய ப்ரபந்தம் - 1426 - தொண்டை மன்னனுக்குத் திருமந்திரம் உபதேசித்தவன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
துளங்கு நீள் முடி அரசர் தம் குரிசில்*
தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு*
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*
அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்த ஆறு*
அடியேன் அறிந்து*
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே|
205. திவ்ய ப்ரபந்தம் - 1427 - இவற்றைப் பாடுங்கள்: பாவம் பறந்து விடும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மாட மாளிகை சூழ் திருமங்கை மன்னன்* ஒன்னலர் தங்களை வெல்லும்*
ஆடல்மா வலவன் கலிகன்றி*அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*எந்தையை நெடுமாலை நினைந்த*
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர் பாட* நும்மிடைப் பாவம் நில்லாவே|
206. திவ்ய ப்ரபந்தம் - 1506 - திருநறையூரில் திருமால் அருள் கிடைக்கும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
தார் ஆளன் தண் அரங்க ஆளன்*
பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேர் ஆளன்*
ஆயிரம் பேர் உடைய ஆளன்*
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்*
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*
படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|
207. திவ்ய ப்ரபந்தம் - 1571 - கண்ணனுக்கே என் மனம் தாழும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உரங்களால் இயன்ற மன்னர் மாளப்*
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும் எம்பிரானை*
வம்பு ஆர் புனல் காவிரி*
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி* ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று*
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி*
என் மனம் தாழ்ந்து நில்லாதே|
208. திவ்ய ப்ரபந்தம் - 1664 - என் மகள் எவ்வளவு ஏங்கி விட்டாள்!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தரங்க நீர் பேசினும்* தண் மதி காயினும்*
இரங்குமோ?* எத்தனை நாள் இருந்து எள்கினாள்*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை*
ஊர் அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே|
209. திவ்ய ப்ரபந்தம் - 1829 - அழகரின் திருவடிகளை என் மகள் காண்பாளோ?
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
புனை வளர் பூம் பொழில் ஆர்* பொன்னி சூழ் அரங்க நகருள் முனைவனை*
மூவுலகும் படைத்த* முதல் மூர்த்தி தன்னை*
சினை வளர் பூம் பொழில் சூழ்* திருமாலிருஞ்சோலை நின்றான்*
கனை கழல் காணும்கொலோ* கயல் கண்ணி எம் காரிகையே?
210. திவ்ய ப்ரபந்தம் - 1978 - இவை என்ன மாயங்கள்?
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கண்ணன் மனத்துள்ளே* நிற்கவும் கை வளைகள்*
என்னோ கழன்ற?* இவை என்ன மாயங்கள்?*
பெண் ஆனோம்* பெண்மையோம் நிற்க*
அவன் மேய அண்ணல் மலையும்* அரங்கமும் பாடோமே?
211. திவ்ய ப்ரபந்தம் - 2029 - எனக்கு உய்யும் வகை கூறுக
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
அணி ஆர் பொழில் சூழ்* அரங்க நகர் அப்பா!*
துணியேன் இனி* நின் அருள் அல்லது எனக்கு*
மணியே மணி மாணிக்கமே* மதுசூதா!*
பணியாய் எனக்கு உய்யும் வகை* பரஞ்சோதீ|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்