About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 13 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - இருபதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

020 அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே|

ராமாயண காலத்தை ரிஷிகளின் காலம் என்றால் மிகையாகாது. தசரதனின் குலகுரு வசிஷ்டர் பிரம்ம ரிஷி. சீதையின் தந்தை ஜனகரும் பிரம்மரிஷி தான். பிராட்டியுடன் பெருமானைச் சேர்த்து கதையின் போக்கை மாற்றும் விசுவாமித்திரரோ ராஜரிஷி! தண்டகாரண்யத்தில் அத்ரி முதற்கொண்டு கௌதமர், காச்யபர், அகத்தியர் என்று கதை நெடுகிலும் ரிஷிகள் தான். எனில், அந்த த்ரேதா யுகம் எவ்வளவு புண்ணிய காலமாக இருந்திருக்க வேண்டும்!


ராம லக்ஷ்மணர்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை. உயர்ந்த சீதையை திருக்கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். அதற்காக தான் விஸ்வாமித்ரர் வந்தார். ராமருக்கு பன்னிரண்டு வயதாகிறது. மந்திரிகளை கூப்பிட்டு அவருக்கு பட்டாபிஷேகம் பண்ணுவது குறித்து தசரதன் ஆலோசனை நடத்துகிறார்.  அப்படி பேசிக்கொண்டு இருக்கையில் விஸ்வாமித்ரர் வந்திருப்பதாக ஒருவர் வந்து சொல்கிறார். விஸ்வாமித்ரர் வந்ததில் தசரதனுக்கு பெரு மகிழ்ச்சி. பூர்ண கும்ப மரியாதைகளோடு உள்ளே அழைத்து கொண்டு வந்தார். மகிழ்ச்சி பொங்க "தேவரீருக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் தருகிறேன்" என்றார் தசரதன்.


“நான் சித்தாஷ்ராமத்திற்கு போய் ஆறு நாட்கள் ஒரு யக்ஜம் பண்ணுவதாக இருக்கிறேன். அந்த யக்ஜத்தை தடை பண்ணுவதற்காக ராட்சசர்கள் எல்லோரும் வருவார்கள். நானே சாபம் குடுத்து அவர்களை கொன்று விட முடியும். ஆனால் யக்ஜத்தில் தீக்ஷை எடுத்துக் கொள்ள போவதால் நான் சாபம் இட கூடாது. வேறு யாராவது தான் இதை ரக்ஷித்து கொடுக்க வேண்டும். நீ தான் ஷத்ரிய ராஜா. பிராமணனின் காத்து ரக்ஷிக்க வேண்டியது உன் பொறுப்பு தான்." என்று சொன்னார் விஸ்வாமித்ரர். 


தசரதனும் மிகவும் சந்தோஷத்தோடு கேட்டுக் கொண்டு வந்தார். இதை போல நிறைய முறை பலரை ரக்ஷித்து கொடுப்பது இவருக்கு வழக்கம். அதை போல விஸ்வாமித்ரர் கேட்கிறார். ரக்ஷிக்க கிளம்பலாம் என்று சந்தோஷத்தோடு சம்மதிக்கிறார். சட்டென்று விஸ்வாமித்ரர், "உனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு கருப்பு பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் உயரமான கருப்பு பிள்ளையை எனக்கு குடு" என்று கூறுகிறார். 


இடி இடித்தார் போல திகைத்து போனார் தசரதன். நம்மை கேட்பார் என்று நினைத்தேன். சிறு குழந்தை ராமரை கேட்கிறாரே என்று உடனே மறுத்து விட்டார். ராமனுக்கு யுத்தம் செய்யும் வயது கூட இல்லையே! அவனை நான் அனுப்புவதாக இல்லை என்றார் தசரதன். விடாமல் விஸ்வமித்ரரும் கேட்டுக் கொண்டே இருந்தார். "என் ராமன் சிறு பிள்ளை. ராக்ஷசர்களோடு யுத்தம் பண்ணும் அளவுக்கு அவனுக்கு சக்தி போதாது. சாமர்த்தியம் கிடையாது. அவனை என்வென்று நீர் நினைத்து கொண்டிருகிரீர்?" என்று தசரதன் விஸ்வமித்ரரை பார்த்து கேட்கிறார்.


அப்பொழுது தசரதனுக்கு விஸ்வாமித்ரர் பதில் கூறுகிறார். "அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸ்த்யராக்ரமம் வஷிஷ்டோபி மஹாதேஜா யே சேமே தபஸிஸ்திதா” "நீ அவனை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் அவனை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். அவன் யார் என்று உனக்கு தான் புரியவில்லை. “அவனை நான் அறிகிறேன். ராமன் தான் மஹாத்மா என்றும், சத்ய பராக்ரமன் என்றும்,” கூறுகிறார். "பெற்ற எனக்கு தெரியாதா ராமனை பற்றி, அவனோடேயே இருக்கிறேனே எனக்கு புரியாதா" என்றார் தசரதன். அப்படியும் விஸ்வாமித்ரர் விடாமல் சொல்கிறார். உனக்கு தெரியாது. நீ ஆசனத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு பார்க்கிறாய். நான் ஆசனத்தின் கீழ் இருந்து பரதந்தரனான ராமனை பார்கிறேன். நீயோ கிரீடம் தரித்த முடியோடே ராமனை பார்க்கிறாய். நான் சடமுடியோடே ராமனை பார்க்கிறேன். உனக்கு அர்த்தத்திலேயும், காமத்திலேயும் ஆசை. ராமனை தெரிந்து கொள்ள மாட்டாய். எனக்கு தர்மத்திலேயும் மோக்ஷத்திலேயும் ஆசை. நீ கையில் பிடித்து கொண்டிருப்பது வில். நான் பிடித்து கொண்டிருப்பது புல். உனக்கு கர்ப்பம் ராமன் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நான் ராமருக்கு கர்ப்பம் உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு தான் ராமனை தெரியுமே தவிர உனக்கு தெரியாது" என்றார் விஸ்வாமித்ரர்.


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “ராமரை நன்றாக புரிந்து கொண்ட விஸ்வமித்ரரை போல நான் தெரிந்து கொள்ளவில்லையே! தெரிந்திருந்தால் அவனே எல்லாம் என்று இருந்திருப்பேனே! ராமருடைய பெருமைகளை தெரிந்து கொண்டு வெளியிட்டாரே அதை போல ஞானம் எனக்கு இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment