About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 13 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 12

திருமங்கை ஆழ்வார் 

212. திவ்ய ப்ரபந்தம் - 2038 - அரங்கனை நினைவார் என் தலை மீது தங்குவார்
திருக்குறுந்தாண்டகம் - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (7)
இம்மையை மறுமை தன்னை* எமக்கு வீடு ஆகி நின்ற*
மெய்ம்மையை விரிந்த சோலை* வியன் திரு அரங்கம் மேய*
செம்மையைக் கருமை தன்னைத்* திருமலை ஒருமையானை*
தன்மையை நினைவார் என் தன்* தலைமிசை மன்னுவாரே| 

213. திவ்ய ப்ரபந்தம் - 2043 – அஞ்சாதே! என்று காட்சி தந்தார்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
ஆவியை அரங்க மாலை* அழுக்கு உடம்பு எச்சில் வாயால்* 
தூய்மை இல் தொண்டனேன் நான்* சொல்லினேன் தொல்லை நாமம்*
பாவியேன் பிழைத்தவாறு என்று* அஞ்சினேற்கு அஞ்சல் என்று* 
காவி போல் வண்ணர் வந்து* என் கண்ணுளே தோன்றினாரே|

214. திவ்ய ப்ரபந்தம் - 2044 – அரங்கனை கண்டேன்! பாவங்கள் அகன்றன
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (13)
இரும்பு அனன்று உண்ட நீரும்* போதரும் கொள்க,* 
என் தன் அரும்பிணி பாவம் எல்லாம்* அகன்றன என்னை விட்டு,*
சுரும்புஅமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட,* 
கரும்பினைக் கண்டு கொண்டு* என் கண் இணை களிக்குமாறே| 

215. திவ்ய ப்ரபந்தம் - 2050 – திருக்கோயில் சேர்க! உய்யலாம்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
பிண்டியார் மண்டை ஏந்திப்* பிறர் மனை திரி தந்து உண்ணும்*
உண்டியான் சாபம் தீர்த்த* ஒருவன் ஊர்*
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்* 
கச்சி பேர் மல்லை என்று மண்டினார்* 
உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல் ஆமே? (2) 

216. திவ்ய ப்ரபந்தம் - 2062 - திருவரங்கம் எங்கே என்கிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம் (11)
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்* 
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்* 
எள் துணைப் போது என் குடங்கால் இருக்க கில்லாள்* 
எம் பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்* 
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்* 
மட மானை இது செய்தார் தம்மை* 
மெய்யே கட்டு விச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!*
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே?

217. திவ்ய ப்ரபந்தம் - 2063 - அரங்கனை எண்ணி அயர்கின்றாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்* 
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும்* 
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்* 
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்* 
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே|

218. திவ்ய ப்ரபந்தம் - 2065 - திருமால் புகழ் கேட்கவே என் மகள் விரும்புகிறாள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் (14)
முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை* 
மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற* 
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை* 
அந்தணர் தம் சிந்தையானை* 
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்* 
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு* 
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக! என்று* 
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே|

219. திவ்ய ப்ரபந்தம் - 2069 - திருநீர்மலை செல்ல விரும்புகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (18)
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* 
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்*
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்* 
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்* 
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* 
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்* 
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* 
இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?

220. திவ்ய ப்ரபந்தம் - 2070 - குடந்தை நகரும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
முற்று ஆரா வன முலையாள் பாவை* 
மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்* 
தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்* 
அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்* 
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்* 
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி* 
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்* 
பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே|

221. திவ்ய ப்ரபந்தம் - 2073 - தோழி! எம்பிரான் கோவில் திருவாலி யாமே?
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (22)
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* 
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்* 
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி*
எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* 
இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்* 
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்* 
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* 
இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே|

222. திவ்ய ப்ரபந்தம் - 2074 - கண்ணனை கனவில் கண்டால் விட மாட்டேன்
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (23)
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* 
என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* 
சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன* 
கள் ஊரும் பைந் துழாய் மாலை யானைக்* 
கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது* 
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்* 
என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே?

223. திவ்ய ப்ரபந்தம் - 2075 - தோழி! எம்பிரான் ஊர் திருவரங்கமாமே?
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம் (24)
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்!* 
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* 
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* 
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* 
உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* 
என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* 
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே|

224. திவ்ய ப்ரபந்தம் - 2076 - தோழி! என்னை கவர்ந்தவர் ஊர் திருவரங்கம்
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (25)
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* 
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்* 
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* 
தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி* 
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* 
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு* 
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* 
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே|

பொய்கை ஆழ்வார்

225. திவ்ய ப்ரபந்தம் - 2087 - பகவானை மறப்பேனா
முதலாம் திருவந்தாதி - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம் 
ஒன்றும் மறந்தறியேன்* ஓத நீர் வண்ணனை நான்*
இன்று மறப்பனோ? ஏழைகாள்!* 
அன்று கரு அரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்*
திருவரங்கம் மேயான் திசை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment