||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 10 – காளிங்க நர்த்தனம் ஆடிய
மதுரைப் பிரானைப் பாடு
திருப்பல்லாண்டு - பத்தாம் பாசுரம்
எந்நாள் எம்பெருமான் *
உன் தனக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட அந்நாளே*
அடியோங்கள் அடிக்குடில்*
வீடு பெற்றுய்ந்தது காண்*
செந்நாள் தோற்றித் *
திரு மதுரையுள் சிலை குனித்து*
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே*
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே|
இதில் ஏடு நிலம் பாசுரத்தில் சொல்லப்பட்டு, தீயில் பொலிகின்ற பாசுரத்தில் வந்து சேர்ந்த கைவல்ய நிஷ்டர்களுடன் சேர்ந்து திருப்பல்லாண்டு பாடுகிறார்.
- எந்நாள் - எந்த தினமோ
- எம்பெருமான் - ஸ்வாமியே!
- உன் தனக்கு - தேவரீர்க்கு
- அடியோம் என்று - நாங்கள் அடிமைப் பட்டவர்கள் என்று
- எழுத்து - சொல்லானது
- பட்ட நாள் - எங்களுடைய வாயில் உண்டாகப் பெற்ற
- அந்நாளே - அந்த நாள் முதலாகவே
- அடியோங்கள் - அடியோங்களுடைய
- அடி குடில் - அடிமைப்பட்ட வீட்டிலுள்ள அனைவரும்
- வீடு பெற்று - நல்ல கதியை
- உயந்தது காண் - அடைந்து உஜ்ஜீவித்து விட்டோம்
- செம் நாள் தோற்றி - நல்ல நக்ஷத்திரத்திலே திருவவதரித்து
- திரு மதுரையுள் - அழகிய வட மதுரையிலே கம்ஸனுடைய ஆயுத சாலையில் புகுந்து
- சிலை குனித்து - வில்லை வளைத்து முறித்து
- ஐந்தலைய - ஐந்து தலைகளையுடய
- பை - பரந்த படங்களையுடைய
- நாகம் - காளியன் என்னும் நாகத்தின்
- தலை - தலை மேலே
- பாய்ந்தவனே - குதித்தவனே!
- உன்னை பல்லாண்டு கூறுதும் - தேவரீருக்கு மங்களாசாஸநம் செய்வோம்
எம்பெருமானுக்கு அடியவர்களாக மாறிய பின் அவர்களும் அவர்களுடைய சந்ததியரும் நல்ல கதியடைந்து உயர்ந்து விட்டார்களாம். எம்பெருமானுக்கு அடிமைப்பட்டு வாழ்வதே சிறந்த கதியை கொடுத்து விடும் என்று சுட்டிக் காட்டுகிறார் ஆழ்வார். எங்கள் நாயகனே! உனக்கு அடிமைப் பட்டவர்கள் என்று நாங்கள் என்று எழுதிக் கொடுத்தோமோ, அன்றே அடியவர்களான எங்கள் குடும்பத்தின் சந்ததியினர் எல்லோரும் கைவல்ய மோக்ஷத்தை அடைவதில் இருந்து விடுதலை பெற்று உஜ்ஜீவனத்தை அடைந்தனர். அழகான திருநன்னாளில் திருவவதரித்து, எழில் மிகுந்த திருவடமதுரையில் கம்ஸனின் வில்விழாவில் வில்லை முறித்து, ஐந்து தலைகளைக் கொண்ட விரிந்த பணங்களை உடைய காளியன் என்னும் நாகத்தின் தலை மேலே குதித்து நடனமாடிய எம்பெருமானே! உன்னை நாங்கள் எல்லோரும் கூடி இருந்து பல்லாண்டு பாடுவோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment