||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் - திருச்சி
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 10
திருமங்கை ஆழ்வார்
169. திவ்ய ப்ரபந்தம் - 1391 - மாமாயன் என் மகளை மயக்கி விட்டானே!
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
தாய் வாயில் சொல் கேளாள்*
தன் ஆயத் தோடு அணையாள் தட மென் கொங்கையே*
ஆரச் சாந்து அணியாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*
பேசில் நங்காய்*
மா மாயன் என் மகளைச் செய்தனகள்* மங்கைமீர் மதிக்கிலேனே|
170. திவ்ய ப்ரபந்தம் - 1392 - ஆய்ப்பாடி நம்பி என் மகளை எப்படி மாற்றி விட்டான்!
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பூண் முலைமேல் சாந்து அணியாள்*
பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்*
ஏண் அறியாள் எத்தனையும்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நாள் மலராள் நாயகன்* ஆய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர் அறிகிலேனே|
171. திவ்ய ப்ரபந்தம் - 1393 - மதுசூதன் என் மகளை என்னவெல்லாம் செய்து விட்டான்!
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தாது ஆடு வன மாலை* தாரானோ? என்று என்றே தளர்ந்தாள் காண்மின்*
யாதானும் ஒன்று உரைக்கில்* எம் பெருமான் திருவரங்கம் என்னும்*
பூமேல் மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*
மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற தூதாளன்*
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சொல்லுகேனே?
172. திவ்ய ப்ரபந்தம் - 1394 - என் மகளது குணத்தை மாற்றி விட்டானே மாயன்!
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*
எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள்*
இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்?*
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்*
ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த தேர் ஆளன்*
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் செப்புகேனே?
173. திவ்ய ப்ரபந்தம் - 1395 - என் மகள் மாயவன் பெயரையே கூறுகின்றாள்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
உறவு ஆதும் இலள் என்று என்று* ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால்*
மறவாதே எப்பொழுதும்* மாயவனே மாதவனே என்கின்றாளால்*
பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்*
விண்ணோர் தங்கள் அறவாளன்*
என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர் அறிகிலேனே|
174. திவ்ய ப்ரபந்தம் - 1396 - அரங்கன் வந்தானா என்கின்றாள்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பந்தோடு கழல் மருவாள்* பைங் கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்*
வந்தானோ திருவரங்கன்?* வாரானோ? என்று என்றே வளையும் சோரும்*
சந்தோகன் பௌழியன்* ஐந் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி*
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர் அறிகிலேனே|
175. திவ்ய ப்ரபந்தம் - 1397 - இவற்றைப் படிப்போர் பொன்னுலகில் வாழ்வர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த*
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்* தாய் மொழிந்த அதனை*
நேரார் கால வேல் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்*
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்ப்*
பொன் உலகில் வாழ்வர் தாமே|
176. திவ்ய ப்ரபந்தம் - 1398 - திருமாலைத் தென்னரங்கத்தில் கண்டேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கைம் மான மழ களிற்றைக்* கடல் கிடந்த கருமணியை*
மைம் மான மரதகத்தை* மறை உரைத்த திருமாலை*
எம்மானை எனக்கு என்றும் இனியானைப்* பனி காத்த அம்மானை*
யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே|
177. திவ்ய ப்ரபந்தம் - 1399 - உலகேழும் உண்டவனை அரங்கத்தில் கண்டேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பேரானைக்* குறுங்குடி எம் பெருமானை*
திருத்தண்கால் ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*
முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும்* மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும்*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே|
178. திவ்ய ப்ரபந்தம் - 1400 - அடியார் மனத்தில் இருப்பவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
ஏன் ஆகி உலகு இடந்து* அன்று இரு நிலனும் பெரு விசும்பும்*
தான் ஆய பெருமானை* தன் அடியார் மனத்து என்றும்**
8தேன் ஆகி அமுது ஆகித்* திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்*
ஆன்-ஆயன் ஆனானைக்* கண்டது தென் அரங்கத்தே|
179. திவ்ய ப்ரபந்தம் - 1401 - இரணியனை அழித்தவன் இடம் அரங்கம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வளர்ந்தவனைத் தடங் கடலுள்* வலி உருவில் திரி சகடம்*
தளர்ந்து உதிர உதைத்தவனைத்*
தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை*
பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்* பண்டு ஒருநாள் அளந்தவனை*
யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே|
180. திவ்ய ப்ரபந்தம் - 1402 - யாகங்களில் அவி உணவை உண்பவன் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
நீர் அழல் ஆய்* நெடு நிலன் ஆய் நின்றானை*
அன்று அரக்கன் ஊர் அழலால் உண்டானைக்* கண்டார் பின் காணாமே**
பேர் அழல் ஆய்ப் பெரு விசும்பு ஆய்ப்* பின் மறையோர் மந்திரத்தின்*
ஆர் அழலால் உண்டானைக்* கண்டது தென் அரங்கத்தே|
181. திவ்ய ப்ரபந்தம் - 1403 - கம்சனைக் கொன்றவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்* தவ நெறியை தரியாது*
கஞ்சனைக் கொன்று* அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை**
வெம் சினத்த கொடுந் தொழிலோன்* விசை உருவை அசைவித்த*
அம் சிறைப் புள் பாகனை* யான் கண்டது தென் அரங்கத்தே|
182. திவ்ய ப்ரபந்தம் - 1404 - என் உள்ளத்தே உறைபவன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
சிந்தனையைத் தவநெறியைத்* திருமாலை*
பிரியாது வந்து எனது மனத்து இருந்த* வடமலையை*
வரி வண்டு ஆர் கொந்து அணைந்த பொழில் கோவல்*
உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை*
யான் கண்டது* அணி நீர்த் தென் அரங்கத்தே|
183. திவ்ய ப்ரபந்தம் - 1405 - யாவர்க்கும் பிரான் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
துவரித்த உடையவர்க்கும்* தூய்மை இல்லாச் சமணர்க்கும்*
அவர்கட்கு அங்கு அருள் இல்லா* அருளானை*
தன் அடைந்த எமர்கட்கும் அடியேற்கும்* எம்மாற்கும் எம் அனைக்கும்*
அமரர்க்கும் பிரானாரைக்* கண்டது தென் அரங்கத்தே|
184. திவ்ய ப்ரபந்தம் - 1406 - மெய்யார்க்கு மெய்யன் அரங்கன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பொய் வண்ணம் மனத்து அகற்றிப்* புலன் ஐந்தும் செல வைத்து*
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு* மெய்ந் நின்ற வித்தகனை**
மை வண்ணம் கரு முகில்போல்* திகழ் வண்ணம் மரதகத்தின்*
அவ் வண்ண வண்ணனை* யான் கண்டது தென் அரங்கத்தே
185. திவ்ய ப்ரபந்தம் - 1407 - இவற்றைப் பாராயணம் செய்க: தீவினை தீரும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
ஆ மருவி நிரை மேய்த்த* அணி அரங்கத்து அம்மானை*
காமரு சீர்க் கலிகன்றி* ஒலிசெய்த மலி புகழ் சேர்**
நா மருவு தமிழ் மாலை* நால் இரண்டோடு இரண்டினையும்*
தாம் மருவி வல்லார் மேல்* சாரா தீவினை தானே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment