About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 16 September 2023

லீலை கண்ணன் கதைகள் - 38

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வருணன் நந்தகோபரை பிடித்துச் செல்லுதல்|

ஒரு நாள் நந்தகோபர் யமுனையில் குளிக்க சென்றிருந்தார். அப்பொழுது அதிகாலை நேரம். அதனால் இருட்டாகவே இருந்தது. அந்த நேரம் வருணனின் தூதர்களில் ஒருவன் நந்தகோபர் குளிப்பதை பார்த்தான் அவன் நந்தகோபரை இழுத்துக் கொண்டு, வருணனிடம் கொண்டு சென்று விட்டான். நதிக்கு சென்ற நந்தகோபர் திரும்பி வராததை கண்டு எல்லோரும் அழ ஆரம்பித்தார்கள். அனைவரும் கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டார்கள். கிருஷ்ணன் கண்களை மூடிக் கொண்டு தன் யோக சக்தியை பயன்படுத்தி இது வருணனின் குறும்புத்தனம் என்று தெரிந்துக் கொண்டான். உடனே கிருஷ்ணன் அந்த நதி கரைக்கு சென்று அதில் குதித்து வருணன் இருக்கும் இடம் சென்றடைந்தான். வருணன் கிருஷ்ணனின் காலில் விழுந்து வணங்கி தன் இரண்டு கைகளையும் கூப்பி கிருஷ்ணனை பார்த்து, "பகவானே இன்று நான் ஆசிர்வதிக்க பட்டேன். உங்களுடைய பாதம் எங்கெல்லாம் படுகிறதோ அதை தொடுகிறவர்கள் பிறவிக் கடலிலிருந்து காப்பாற்ற படுகிறார்கள். என்னையும் எனது தூதரையும் மன்னித்து அருளுங்கள். உங்களுடைய தந்தையை நீங்கள் அழைத்து செல்லலாம்".


கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொண்டு மனதில் சந்தோஷந்துடன் அவன் தந்தையுடன் வீடு திரும்பினான். இதை பார்த்த கோபியர்கள் மனதில் அவன் தெய்வமாகவே தோன்றினான். பல நாட்களாக அவர்கள் மனதில் கிருஷ்ணனை பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவன் வசிக்கும் வைகுண்டத்தை பார்க்க வேண்டும் என்றும் ஆசை வைத்திருந்தார்கள். அவர்கள் மனதில் உள்ள ஆசையை அறிந்து கொண்ட கிருஷ்ணன் அதை பூர்த்தி செய்தான். அதன் விளைவாக கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்தனர், அவர்கள் நாராயணனை கிருஷ்ணனாக பார்த்தார்கள், எல்லா தேவர்களாலும் போற்ற பட்டார். இன்னொரு புறம் திரும்பி அவர்கள் பக்கம் பார்த்தால் அங்கும் கிருஷ்ணன் இருந்தான். அதன் பிறகு அவர்கள் மறுபடியும் பிருந்தாவனம் வந்தடைந்தனர். கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்ததை அவர்களாலே நம்ப முடியவில்லை. பகவான் கிருஷ்ணனின் லீலைகளே ஆச்சரியம் தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 009 - திருக்கவித்தலம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

009. திருக்கவித்தலம் 
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கும்பகோணம்
ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ கஜேந்திர வரதன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ ரமாமணிவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கஜேந்திர வரதன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: கஜேந்திர வரதன்
  • பெருமாள் உற்சவர்: ஆதிமூலப் பெருமாள், கண்ணன்
  • தாயார் மூலவர்: ரமாமணிவல்லி
  • தாயார் உற்சவர்: பொற்றாமரையாள்
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • கோலம்: புஜங்க சயனம்
  • புஷ்கரிணி: கஜேந்திர
  • தீர்த்தம்: கபில
  • விமானம்: ககனாக்ருதி
  • ஸ்தல விருக்ஷம்: மகிழம்பூ
  • ப்ரத்யக்ஷம்: கஜேந்திரன், ஆஞ்சநேயர்
  • ஆகமம்: வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 1

------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலபெருமாளை ஆழ்வார் "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ண மங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.

கஜேந்திர மோக்ஷத்தை சேவிக்க வேண்டும் என்று ஆஞ்சநேயர் பிரார்த்திக்க இந்த க்ஷேத்திரத்தில் தவம் இருக்கும் படி பெருமாள் கூற அதன் படி அவரும் தவம் இருந்தார். கபியான ஆஞ்சநேயரின் கோரிக்கைக்கு இணங்க இங்கு கஜேந்திர வரதனாக சேவை சாதித்துள்ளார். இதனால் கபிதலம் என்று பெயர் பெற்றது.

இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதும் இல்லை. இவனும் யாரையும் காண்பதும் இல்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக் குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர் மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கி இருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில் ’மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும் பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும் நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண் விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும் பாப விமோசனமும் கேட்டான். இவனது நிலை உணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு ‘நீ யானையாக இருந்தாலும் அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன் ’ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி உனக்கு மோட்சமும் சாப விமோசனமும் கிடைக்கும் ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப் பிடித்து இழுத்து கொடுமை படுத்துவதையே  தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப் பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர், "நீ வருபவர்களை எல்லாம் காலைப் பிடித்து இழுப்பதால் முதலையாக மாறுவாய்'' என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். 

அகத்தியர் ’கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப் பிடிப்பாய் அப்போது அதைக் காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக் கண்ட முதலை யானையின் காலைக் கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக வரலாறு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 31 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 31 - தாம்பினால் கட்டப்பட்ட திருவயிறு
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

அதிரும்* கடல் நிற வண்ணனை* 
ஆய்ச்சி மதுர முலை ஊட்டி* 
வஞ்சித்து வைத்துப்* 
பதறப் படாமே* 
பழந்தாம்பால் ஆர்த்த* 
உதரம் இருந்தவா காணீரே* 
ஒளி வளையீர்! வந்து காணீரே|

  • அதிரும் - கோஷிக்கின்ற
  • கடல்நிறம் - கடலினது நிறம் போன்ற
  • வண்ணனை – நிறத்தை உடைய கண்ணனுக்கு
  • ஆய்ச்சி - யசோதையானவள்
  • மதுரம் முலை ஊட்டி - இனிய முலைப் பாலை ஊட்டி
  • வஞ்சித்து வைத்து - தான் இவனைக் கட்டப் போகிறதை இவன் அறியா வண்ணம் ஏமாத்தி
  • பதறப் படாமே - தன் எண்ணம் தப்பாதபடி
  • பழ தாம்பால் - பழைய கயிற்றாலே
  • ஆர்த்த – கட்டி வைத்த
  • உதரம் இருந்தவா காணீரே - திருவயிற்றின் அழகை வந்து பாருங்கள்
  • ஒளிவளையீர் வந்து காணீரே – ஒளி மிக்க வளையை உடைய பெண்களே! வந்து பாருங்கள்

பெருத்த அலைகளின் சப்தங்களோடு கூடிய பெருங்கடலின் நீலவண்ண தேகம் கொண்ட கண்ணனை யசோதை இனிமையான தாய்ப்பால் கொடுப்பதாக கூறி, அவனை தன்னருகே வரவழைத்த யசோதை அன்னை, அப்படியே அவனை மிகவும் கவனமாய் அவனறியாதபடி ஏமாற்றி அருகில் கிடந்த ஆநிரைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய பழைய கயிற்றை எடுத்து, இடுப்பில் கட்டி அவன் ஓடாதபடி உரலோடு கட்டி வைத்து விடுவாளாம். கட்டி வைத்ததும் சும்மா நில்லாது, உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே நடப்பானாம். அதனால், அவன் வயிற்றில் தாம்புக் கயிற்றின் தழும்பும் தப்பாமல் ஒட்டிக் கொண்டது. தாம்பு கயிற்றினால் ஏற்பட்ட தழும்புடன் கூடிய கண்ணனின் திருவயிற்றை காண வருமாறு ஒளிமிக்க வளைகளை கையில் அணிந்திருக்கும் பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.32

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண 
ந ச ராஜ்யம் ஸுகா²நி ச।
கிம் நோ ராஜ்யேந கோ³விந்த³ 
கிம் போ⁴கை³ர் ஜீவிதேந வா॥

  • ந - இல்லை 
  • காங்க்ஷே - விரும்பிகிறேன் 
  • விஜயம் - வெற்றி 
  • க்ருஷ்ண - கிருஷ்ணரே 
  • ந - இல்லை 
  • ச - மேலும் 
  • ராஜ்யம் - ராஜ்ஜியம் 
  • ஸுகா²நி - அதன் இன்பம் 
  • ச – மற்றும்
  • கிம் - என்ன பலன் 
  • ந - நமக்கு 
  • ராஜ்யேந - ஆட்சியினால் 
  • கோ³விந்த³ - ஹே கோ³விந்தா
  • கிம் - என்ன 
  • போ⁴கை³ர் - இன்பம் 
  • ஜீவிதேந - வாழ்வதால் 
  • வா - அல்லது 

கோவிந்தா! இவற்றால் வாழ்க்கையில் ஆவது என்ன? ராஜ்யம், போகம், இன்பம் யாருக்காக? இதனால் பெறக்கூடிய வெற்றியையோ ராஜியத்தையோ அதன் இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.16

ஸு²ஸ்²ரூஷோ: ஸ்²ரத்³த³தா⁴ நஸ்ய 
வாஸுதே³வ கதா²ருசி:| 
ஸ்யாந் மஹத் ஸேவயா விப்ரா: 
புண்ய தீர்த² நிஷேவணாத்||

  • விப்ராஹா - ஹே ப்ராமணோத்தமர்களே!
  • புண்ய தீர்த² - புண்ணிய தீர்த்தங்களை 
  • நிஷேவணாத் - சேவிப்பதாலும் 
  • மஹத் ஸேவயா - பெரியாருடைய பாத ஸேவையாலும் 
  • ஸ்²ரத்³த³ தா⁴நஸ்ய - ஸ்ரத்தையோடு கூடியவனும் 
  • ஸு²ஸ்²ரூஷோஸ் - இறைவன் குணத்தை கேட்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவனுமான மனிதனுக்கு
  • வாஸுதே³வ - வாஸுதேவனின் 
  • கதா²ருசிஹி - கதையில் விருப்பம் 
  • ஸ்யாந் - உண்டாகும் 

அந்தணப் பெரியோர்களே! புண்ணிய நதிகளில் நீராடுவதால் சான்றோர்களின் தரிசனம் (சாது சத்சங்கம்) கிடைக்கும். சாதுக்களின் நட்பினால் அறநெறிகளில் ஈடுபாடு உண்டாகும். அதன்பின், பகவானுடைய குணங்களைக் கேட்பதில் விருப்பம் ஏற்படும். பின்னர், பகவானுடைய கதைகளைக் கேட்பதில் நம்பிக்கை பிறக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 47

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 17

உபேந்த்³ரோ வாமந: ப்ராம்ஸு²ர் 
அமோ⁴க: ஸு²சிர் ஊர்ஜித:|
அதீந்த்³ர: ஸங்க்³ரஹ: ஸர்கோ³ 
த்⁴ருதாத்மா நியமோ யம:||

  • 153. உபேந்த்³ரோ - இந்திரனுக்குத் தம்பியானவன், வாமனன்
  • 154. வாமநஃ - ஒப்பற்ற குறள் வடிவினன், குள்ளன்
  • 155. ப்ராம்ஸு²ர் - உயர்ந்தவன், திரிவிக்ரமன்
  • 156. அமோ⁴கஸ் - பழுது படாதவன்.
  • 157. சுசிர் - தூயவன், அமலன்
  • 158. ஊர்ஜிதஹ - வல்லமை படைத்தவன்.
  • 159. அதீந்த்³ரஸ் - இந்திரனுக்கு மேம்பட்டவன்.
  • 160. ஸங்க்³ரஹஸ் - எளிதில் கிரகிக்கப்படுபவன், எளிவரும் இயல்பினன்
  • 161. ஸர்கோ³ - தன்னைத் தானே பல உருவங்களில் படைத்துக் கொள்பவன்.
  • 162. த்⁴ருதாத்மா -ஆன்மாக்களைத் தரித்திருப்பவன்.
  • 163. நியமோ - அடக்குபவன். அடக்கி அருள் புரிபவன் 
  • 164. யமஹ - அனைத்தையும் ஆள்பவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி நான்காவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

044 பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே|

கம்சனின் அழைப்பை ஏற்று, ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமனும் அக்ரூரருடன் மதுரா வந்தடைந்தனர். மதுரா நகர மக்களிடையே நாகரீகம், உடை, நடை என அனைத்திலும் ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமனும் தனித்து தெரிய, தாங்களும் மதுரா மக்களுக்கு ஏற்றது போல் மாற எண்ணினர்.


ஒரு வண்ணானிடம் அணிந்து செல்ல துணியைக் கேட்க, அவன் கொடுக்க மறுக்கிறான். பின், அவனைத் தோற்கடித்து, துணிகளை எடுத்து அணிந்து செல்கின்றனர். அழகிய புதிய மணமுள்ள மலர்களை அணிய விரும்பி, மதுரா நகரின் கடை வீதியில் உள்ள மாலாகாரரின் குடிலுக்கு சென்றனர். மாலாகாரர் என்றார் பூமாலைகள் தொடுத்து விற்பவர் என்று அர்த்தம். பாகவதம், அம்மாலாகாரரின் பெயர் சுதாமா என்று கூறுகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும்  பலராமனை கண்ட சுதாமா அவர்களை அடையாளம் கண்டு கொண்டார். அவர்களின் பாதங்களில் விழுந்து வணங்கிய சுதாமா, அவர்கள் விரும்பியது போல் சிறந்த, அழகான, வாசனை மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகள் இரண்டை எடுத்து அவர்களுக்கு கொடுத்தார்.

மாலையை ஸ்ரீ கிருஷ்ணனிடமும் பலராமனிடமும் வழங்கும் முன், தன் முகத்தை ஒரு துணியால் மூடிக் கொண்டு கொடுத்தார். மாலையின் அழகில் மயங்கி, அதை தான் உபயோகிக்க எண்ணம் கொண்டால் அம்மாலை ஸ்ரீ கிருஷ்ணனை சென்று சேராமல் போய் விடும். மேலும், அதனால் தன் முகம் வாடினால் அது ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் வருத்தத்தை அளிக்கும். தனது சிறந்த படைப்பு, ஸ்ரீ கிருஷ்ணனுக்கே சமர்ப்பணம். எனவே, தனது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு மாலைகளை கொடுத்தார். சுதாமாவின் இச்செயலை, அக்ரூரர் பாராட்டினார் என்கிறது கீதா பாஷ்யம்.

மலர்ந்த தாமரைப் போலக் காணப்பட்ட அவர்கள், மனம் மகிழ்ந்து அவன் கேட்ட வரங்களை அளிக்கின்றனர்.

ஆழ்வார்களும், ஆச்சார்யாக்களும் எம்பெருமானை மலர் வழிப்பாடு செய்ய இது காரணமாக அமைந்தது எனலாம். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படி மாலாகாரர் (மாலைக்காரர்) போல எம்பெருமானுக்குப் பூவைக் கொடுத்தேனோ?  மாலாகாரர் போல் எதையும் எதிர்பார்க்காமல் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பு காட்டினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 37

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணன் கோவிந்தன் ஆகிறான்|

கிருஷ்ணன் இந்திரனுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டிருந்த சமயம், ஒரு பசு அங்கு வந்தது. அது சாதாரணப் பசு அன்று, தேவ லோகப் பசு! அதன் பெயர் காமதேனு. காமதேனுக்கு ஒரு தெய்விகச் சக்தி இருந்தது. 


யார் என்ன கேட்டாலும் அதனால் கொடுக்க முடியும். அதனால் மனிதக் குரலில் பேச முடியும். காமதேனு கிருஷ்ணனைப் பார்த்து, ‘எங்கள் அதிர்ஷ்டம் தான் நீங்கள் இடையர் குலத்தில் பிறந்தீர்கள். என் குழந்தைகளாகிய எல்லாப் பசுக்களையும் நீங்கள் காப்பாற்றுகிறீர்கள். நீங்கள் எங்களுக்குத் தேவ தேவனாவீர்கள். தங்களை எங்கள் இந்திரனாக ராஜ்யாபிஷேகம் செய்யும் படி பிரம்மா கட்டளை இட்டிருக்கிறார்’ என்று சொன்னது.

பிறகு காமதேனு, தேவ லோகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், தேன், பால் எல்லாவற்றினாலும் கிருஷ்ணனை அபிஷேகம் செய்தது. கங்கையில் இருந்து நீர் கொண்டு வரும் படி இந்திரன் தன் ஐராவதத்தை ஏவினான். ஐராவதம் ஒரு தங்கக் குடத்தில் கங்கை நீர் கொண்டு வந்தது. 

இந்திரன் அந்த நீரைக் கொண்டு கிருஷ்ணனை அபிஷேகம் செய்தான். பிறகு இந்திரன் கிருஷ்ணனைப் பார்த்து, ‘இன்றையிலிருந்து நீங்கள் கோவிந்தன் என்று அழைக்கப் படுவீர்கள். கோவிந்தன் என்றால் பசுக்களின் இந்திரன் என்று பொருள். பசுக்களையும் இந்த உலகத்தையும் காப்பாற்றுவதனால் நீங்கள் கோவிந்தன் தான். நான் தேவர்களுக்கு மாத்திரம் தான் இந்திரன். நீங்களோ உயிருள்ள எல்லா பிராணிகளுக்கும் இந்திரன்’ என்று சொன்னான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 008 - திருக்கூடலூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

008. திருக்கூடலூர் 
ஸங்கம க்ஷேத்திரம் - கும்பகோணம் 
எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10 

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1358 - பாண்டவ தூதர் பயிலும் ஊர் கூடலூர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தாம் தம் பெருமை அறியார்* 
தூது வேந்தர்க்கு ஆய* வேந்தர் ஊர் போல்* 
காந்தள் விரல்* மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும்* கூடலூரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1359 - நம்பின்னை நாயகர் தங்கும் ஊர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
செறும் திண்* திமில் ஏறு உடைய* 
பின்னை பெறும் தண் கோலம்* பெற்றார் ஊர் போல்*
நறும் தண் தீம்* தேன் உண்ட வண்டு*
குறிஞ்சி பாடும்* கூடலூரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1360 - அடியேன் உள்ளம் புகுந்தவர் ஊர் இது
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பிள்ளை உருவாய்த்* தயிர் உண்டு* 
அடியேன் உள்ளம் புகுந்த* ஒருவர் ஊர் போல்*
கள்ள நாரை* வயலுள்* 
கயல்மீன் கொள்ளை கொள்ளும்* கூடலூரே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1361 - குறளுருவாய பெருமான் வாழும் ஊர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
கூற்று ஏர் உருவின்* குறள் ஆய்* 
நிலம் நீர் ஏற்றான் எந்தை* பெருமான் ஊர் போல்*
சேற்று ஏர் உழவர்* கோதைப் போது ஊண்*
கோல் தேன் முரலும்* கூடலூரே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1362 - தொண்டர் பரவும் அடிகள் அமரும் ஊர்
ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தொண்டர் பரவச்* சுடர் சென்று அணவ*
அண்டத்து அமரும்* அடிகள் ஊர் போல்*
வண்டல் அலையுள்* கெண்டை மிளிர*
கொண்டல் அதிரும்* கூடலூரே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1363 - சிவனுக்குத் துணைவர் தங்கும் ஊர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தக்கன் வேள்வி* தகர்த்த தலைவன்*
துக்கம் துடைத்த* துணைவர் ஊர் போல்* 
எக்கல் இடு* நுண் மணல்மேல்* 
எங்கும் கொக்கின் பழம் வீழ்* கூடலூரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1364 - உலகமுண்டான் உறையும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கருந் தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும் ஊர்போல* 
பெருந் தண் முல்லைப்* பிள்ளை ஓடி*
குருந்தம் தழுவும்* கூடலூரே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1365 - திருநீர்மலைப் பெருமான் வாழும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கலை வாழ்* பிணையோடு அணையும்*  
திருநீர்மலை வாழ் எந்தை* மருவும் ஊர்போல்* 
இலை தாழ் தெங்கின்* மேல்நின்று* 
இளநீர்க் குலை தாழ் கிடங்கின்* கூடலூரே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1366 - என் உள்ளம் புகுந்தவன் எழுந்தருளிய ஊர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பெருகு காதல் அடியேன்* 
உள்ளம் உருகப் புகுந்த* ஒருவர் ஊர் போல்* 
அருகு கைதை மலர* 
கெண்டை குருகு என்று அஞ்சும்* கூடலூரே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1367 - பாவம் பறந்து போய் விடும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
காவிப் பெருநீர் வண்ணன்* 
கண்ணன் மேவித் திகழும்* கூடலூர் மேல்* 
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாட பாவம் போமே|
---------

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 30 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 30 - நந்தன் மதலையின் உந்தி
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

வந்த மதலைக்* 
குழாத்தை வலி செய்து* 
தந்தக் களிறு போல்* 
தானே விளையாடும்*
நந்தன் மதலைக்கு* 
நன்றும் அழகிய* 
உந்தி இருந்தவா காணீரே* 
ஒளியிழையீர்! வந்து காணீரே|

  • வந்த - தன்னோடு விளையாட வந்த
  • மதலை குழாத்தை - சிறு பிள்ளைகளின் கூட்டத்தில்
  • வலி செய்து - தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு
  • தந்தம் களிறுபோல் - கொம்பு முளைத்த யானைக் குட்டி போல்
  • தானே - தானே தலைவனாய் நின்று
  • விளையாடும் - விளையாடுமவனாய்
  • நந்தன் - நந்தகோபர்க்கு
  • மதலைக்கு - விதேயனான பிள்ளையாகிய கண்ணனுடைய
  • நன்றும் அழகிய - மிகவும் அழகியதான
  • உந்தி இருந்த வா காணீரே - நாபி இருக்கிற படியை வந்து பாருங்கள் 
  • ஒளி - ஒளியால் விஞ்சின 
  • இழையீர் வந்து காணீரே – ஆபரணங்கள் அணிந்த பெண்களே! வந்து பாருங்கள்

குழந்தை கண்ணன் விளையாடும் போது மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளயாட மாட்டனாம். இவன் ஒரு தனிக் கட்சியாகவும், எல்லா குழந்தைகளும் சேர்ந்து எதிர் கட்சியாகவும் இருக்குமாறு தான் விளையாடுவானாம். விளையாடும் போது, தன்னுடன் விளையாட வந்த மற்ற ஆயர்க் குழந்தைகள் மத்தியில், தன் வல்லமையை காட்டிக் கொண்டு கொம்பு முளைத்த குட்டி யானை போல், அவர்களுக்கு ஏதாவது துன்பம் செய்து அழ வைத்து விட்டு, தான் மட்டும் தனியே வீரனாக நின்று, வென்று விளையாடும், நந்தகோபருடைய மழலைக் குழந்தையாய் குழைகின்ற செல்வமான இந்த மைவண்ணக் கண்ணனுக்கு சீர்மையுடன் அமைந்துள்ள அழகான தொப்புள் அழகினை வந்து பாருங்கள் என்று கண்ணனின் தொப்புள் அழகை காண ஒளிவீசிய ஆபரணங்கள் அணிந்திருந்த பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.31

நிமித்தாநி ச பஸ்²யாமி 
விபரீ தாநி கேஸ²வ|
ந ச ஸ்²ரேயோநு பஸ்²யாமி 
ஹத்வா ஸ்வஜந மாஹவே||

  • நிமித்தாநி - சகுனங்கள் 
  • ச - மேலும் 
  • பஸ்²யாமி - நான் காண்கிறேன் 
  • விபரீதாநி - விபரிதமான 
  • கேஸ²வ - கேசி என்ற அரக்கனை அழித்த கிருஷ்ணரே
  • ந - இல்லை 
  • ச - மற்றும் 
  • ஸ்²ரேயோ - நன்மை 
  • அநுபஸ்²யாமி - நான் காண்பது 
  • ஹத்வா - கொன்று 
  • ஸ்வஜநம் - சொந்த உறவினர்கள் 
  • ஆஹவே - போரில் கேசவா! 

விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். சொந்த உறவினர்களை கொல்வதனால் என்னால் எந்த நன்மையையும் இப்போரில் காண முடியவில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.15

யத³ நுத்⁴ யாஸிநா யுக்தா: 
கர்ம க்³ரந்தி² நிப³ந்த⁴ நம்|
சி²ந்த³ந்தி கோவிதா³ஸ் தஸ்ய 
கோ ந குர்யாத் கதா² ரதிம்||

  • யத்³ - எந்த இறைவனது
  • அநுத்⁴யா - தியானமாகிய
  • அஸிநா - கத்தியைக்
  • யுக்தா - கொண்டு
  • கர்ம - பிரதிபலன் விளைவிக்கும் செயல்
  • க்³ரந்தி² - முடிச்சை 
  • நிப³ந்த⁴ நம் - பின்னிப் பிணைந்துள்ள
  • சி²ந்த³ந்தி - அவிழ்த்துக் கொள்கின்றனர்
  • கோவிதா³ஸ் - விவேகிகள்
  • தஸ்ய - அப்படிப்பட்ட இறைவனது
  • கோ - யார் தான்
  • ந - மாட்டார்
  • குர்யாத் - செய்ய
  • கதா² - கதையில் ஆசையை உண்டு
  • ரதிம் - பண்ணுகிற கவனம்

இவ்வாறு நிரந்தரமான 'பகவத் தியானம்' என்கிற வாள் கொண்டு, அறிஞர்கள் மனத்தில் உள்ள கர்ம முடிச்சை அறுத்து எறிகிறார்கள். அவ்வாறிருக்க, அந்த முகுந்தனுடைய கதையைக் கேட்பதில் யாருக்கு தான் ஆசை பிறக்காது?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 46

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 16

ப்⁴ராஜிஷ்ணுர் போ⁴ஜநம் போ⁴க்தா 
ஸஹிஷ்ணுர் ஜக³தா³தி³ஜ:|
அநகோ⁴ விஜயோ ஜேதா 
விஸ்²வ யோநி: புநர்வஸு:||

  • 143. ப்⁴ராஜிஷ்ணுர் - நான்கு திருக்கைகளுடன் கூடிய உருவத்துடன் பக்தர்களுக்குத் தன்னை ஒளிரச் செய்பவன்.
  • 144. போ⁴ஜநம் - உணவு, அநுபவிப்பதற்குப் பொருளாய் இருப்பவன்.
  • 145. போ⁴க்தா - உண்பவன், அநுபவிப்பவனாக இருப்பவன்.
  • 146. ஸஹிஷ்ணுர் - மன்னிப்பவன். எல்லாப் பாவங்களையும் பொறுத்து அருள்பவன்.
  • 147. ஜக³தா³தி³ஜஹ - உலக ஆரம்பத்தில் இருப்பவன்.
  • 148. அநகோ⁴ - குற்றமற்றவன்.
  • 149. விஜயோ - வெற்றியை உடையவன், வெற்றியை அருள்பவன்
  • 150. ஜேதா - வெற்றி பெறுபவன்.
  • 151. விஸ்²வ யோநிஃ - உலககாரணன்.
  • 152. புநர்வஸுஹு - எல்லாத் தேவர்களிடத்தும் அந்தராத்மாவாக வசிப்பவன், வாழ்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி மூன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

043 பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே|

கிருஷ்ணரும் பலராமரும் அக்ரூரருடன் கம்சனின் அரண்மனைக்கு வரும்போது வழியில், மதுராவின் அழகை ரசித்துக் கொண்டே வந்தனர். கடை வீதி, மக்கள் கூட்டம், நாகரீக வாழ்க்கை என சிறிதும் கோகுலத்தின் சுவடு இல்லா மதுரா நகரின் வாழ்க்கையை ரசித்தபடி வீதியில் நடந்து வந்தனர்.


அக்ரூரர், தேரினைச் செலுத்த, கண்ணனும், பலராமனும் தெருவில் வரும் போது மக்கள் கண்ணனைத் தரிசிக்கக் கூடினர். பெரும் கூட்டம் முண்டி அடித்தனர். கிருஷ்ணனின் லீலைகள் அறிந்த மதுரா மக்கள் கிருஷ்ணனையும் பலராமனையும் அதிசயத்துடன் பார்த்தனர்! அக்கூட்டத்தில், கம்சனின் அரண்மனையில் வேலை புரியும் பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு முன்னே வந்தாள். ஆனால் அவளால் நிமிர்ந்து கண்ணனைப் பார்க்க முடியவில்லை. அவள் முதுகுவளைந்த கூனுடன் இருந்தது. திருவத்திரை என்னும் பெயர் கொண்ட அவள், கம்சனுக்கும், அரண்மனை பெண்களுக்கும் வாசனை திரவியங்களும் சந்தனமும் அரைத்து கொடுப்பாள்.


மாலினி என பெயர் கொண்ட அவள் மிகவும் அழகானவள். சில ஆண்டுகளுக்கு முன் நோய் வாய்ப்பட்டதில் கூன் விழுந்து, கழுத்துப் பகுதி சாய்ந்தும், ஒரு கால் வேலை செய்யாமலும் போக, மக்கள் அவளை கிண்டல் செய்யும் விதமாக “திருவத்திரை”, அதாவது மூன்று குறைபாடுகள் கொண்டவள், என அழைத்தனர்!

சிறு வயது கிருஷ்ணனின் லீலைகளை கேட்டு ரசித்த அவள், கிருஷ்ணனால் தனது நிலையை மாற்ற முடியும் என மாறா நம்பிக்கை கொண்டிருந்தாள். “கிருஷ்ணன் வருவான், என் நிலை மாறும்!” – என தன்னை மக்கள் கிண்டல் செய்த போதெல்லாம் தன் மனதை தேற்றிக் கொள்வாள்.

பெரிய தாமரை இலையில் மணக்க மணக்க சந்தனத்தை அரைத்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள். கண்ணன் வந்தால் தன் கைகளாலேயே அவனுக்கு சந்தணம் பூச வேண்டும் என்றிருந்தாள்.

வைணவ சம்பிரதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு. மடிதடவாத சோறு, சுருள் நாறாக பூ, சுண்ணாம்பு கலவாத சந்தனம் இவையே எம்பெருமானுக்கு ஏற்றவை. (மடி தடவாத சோறு என்றால் கைமாறு எதிர்பாராத விருந்தோம்பல் - இதை செய்தவர் விதுரர் ஒருவரே). மணம் வீசும் மாலைகள் (இதை பூ வியாபாரி அளித்தார் என பார்த்தோம்). இப்போது இந்தக் கூனி சந்தனத்துடன் நிற்கிறாள்.

கண்ணன் பலராமனுடன் வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிருஷ்ணனை கண்டதும், அவனருகே சென்று, “நீ வருவாய் என நான் அனுதினமும் காத்துக் கிடந்தேன்! என் நம்பிக்கை பொய்க்கவில்லை!” என்றாள்.

புன்னகைத்த கிருஷ்ணன், தேரை நிறுத்தி அப்பெண்மணியைக் கூப்பிட்டு, அவளிடம்- “கையில் என்ன வைத்துள்ளீர்”, என்றான்.

“சந்தனம். அரசனுக்கு!”- என்ற அவளிடம், “எங்களுக்கும் தர முடியுமா?”-என்று கூறி, இருவரும் கை நீட்டினர்!


“நான் கொடுத்து வைத்தவள். உங்களின் அழகு மார்புக்கு என் சந்தனமா!”- என்று கூறி கண்ணனின் திருமேனியில் சந்தனத்தைப் பூசினாள். கம்சனுக்கு இவ்விஷயம் தெரிய வந்தால் தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல், கையில் உள்ள சந்தனத்தை கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் கொடுத்தார். அவளது பணிவைக் கண்டு மகிழ்ந்தார் கிருஷ்ணர். 

"இந்த சந்தனம் நன்றாய் இல்லையே. வேறு இல்லையா? என்கிறான் கண்ணன். “வேறு சந்தனம் என்றால் என் மேனியைத் தான் சந்தனமாக பூசிக் கொள்ள வேண்டும் ஏற்றுக் கொள்" என்றாள்.

கண்ணன் சிரித்தவாறே அவளது கூன் முதுகைத் தொட்டு அவளை நிமிர்த்தினான். அவளது கூன் உடலை அழகான உடல் அமைப்பாக்கி அருள் புரிந்தார். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு, கூனியைப் போல், விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் சந்தனம் பூசக் கொடுத்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்