||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 31 - தாம்பினால் கட்டப்பட்ட திருவயிறு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
அதிரும்* கடல் நிற வண்ணனை*
ஆய்ச்சி மதுர முலை ஊட்டி*
வஞ்சித்து வைத்துப்*
பதறப் படாமே*
பழந்தாம்பால் ஆர்த்த*
உதரம் இருந்தவா காணீரே*
ஒளி வளையீர்! வந்து காணீரே|
- அதிரும் - கோஷிக்கின்ற
- கடல்நிறம் - கடலினது நிறம் போன்ற
- வண்ணனை – நிறத்தை உடைய கண்ணனுக்கு
- ஆய்ச்சி - யசோதையானவள்
- மதுரம் முலை ஊட்டி - இனிய முலைப் பாலை ஊட்டி
- வஞ்சித்து வைத்து - தான் இவனைக் கட்டப் போகிறதை இவன் அறியா வண்ணம் ஏமாத்தி
- பதறப் படாமே - தன் எண்ணம் தப்பாதபடி
- பழ தாம்பால் - பழைய கயிற்றாலே
- ஆர்த்த – கட்டி வைத்த
- உதரம் இருந்தவா காணீரே - திருவயிற்றின் அழகை வந்து பாருங்கள்
- ஒளிவளையீர் வந்து காணீரே – ஒளி மிக்க வளையை உடைய பெண்களே! வந்து பாருங்கள்
பெருத்த அலைகளின் சப்தங்களோடு கூடிய பெருங்கடலின் நீலவண்ண தேகம் கொண்ட கண்ணனை யசோதை இனிமையான தாய்ப்பால் கொடுப்பதாக கூறி, அவனை தன்னருகே வரவழைத்த யசோதை அன்னை, அப்படியே அவனை மிகவும் கவனமாய் அவனறியாதபடி ஏமாற்றி அருகில் கிடந்த ஆநிரைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய பழைய கயிற்றை எடுத்து, இடுப்பில் கட்டி அவன் ஓடாதபடி உரலோடு கட்டி வைத்து விடுவாளாம். கட்டி வைத்ததும் சும்மா நில்லாது, உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே நடப்பானாம். அதனால், அவன் வயிற்றில் தாம்புக் கயிற்றின் தழும்பும் தப்பாமல் ஒட்டிக் கொண்டது. தாம்பு கயிற்றினால் ஏற்பட்ட தழும்புடன் கூடிய கண்ணனின் திருவயிற்றை காண வருமாறு ஒளிமிக்க வளைகளை கையில் அணிந்திருக்கும் பெண்களை அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment