||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
044 பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே|
கம்சனின் அழைப்பை ஏற்று, ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமனும் அக்ரூரருடன் மதுரா வந்தடைந்தனர். மதுரா நகர மக்களிடையே நாகரீகம், உடை, நடை என அனைத்திலும் ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமனும் தனித்து தெரிய, தாங்களும் மதுரா மக்களுக்கு ஏற்றது போல் மாற எண்ணினர்.
ஒரு வண்ணானிடம் அணிந்து செல்ல துணியைக் கேட்க, அவன் கொடுக்க மறுக்கிறான். பின், அவனைத் தோற்கடித்து, துணிகளை எடுத்து அணிந்து செல்கின்றனர். அழகிய புதிய மணமுள்ள மலர்களை அணிய விரும்பி, மதுரா நகரின் கடை வீதியில் உள்ள மாலாகாரரின் குடிலுக்கு சென்றனர். மாலாகாரர் என்றார் பூமாலைகள் தொடுத்து விற்பவர் என்று அர்த்தம். பாகவதம், அம்மாலாகாரரின் பெயர் சுதாமா என்று கூறுகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் பலராமனை கண்ட சுதாமா அவர்களை அடையாளம் கண்டு கொண்டார். அவர்களின் பாதங்களில் விழுந்து வணங்கிய சுதாமா, அவர்கள் விரும்பியது போல் சிறந்த, அழகான, வாசனை மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகள் இரண்டை எடுத்து அவர்களுக்கு கொடுத்தார்.
மாலையை ஸ்ரீ கிருஷ்ணனிடமும் பலராமனிடமும் வழங்கும் முன், தன் முகத்தை ஒரு துணியால் மூடிக் கொண்டு கொடுத்தார். மாலையின் அழகில் மயங்கி, அதை தான் உபயோகிக்க எண்ணம் கொண்டால் அம்மாலை ஸ்ரீ கிருஷ்ணனை சென்று சேராமல் போய் விடும். மேலும், அதனால் தன் முகம் வாடினால் அது ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் வருத்தத்தை அளிக்கும். தனது சிறந்த படைப்பு, ஸ்ரீ கிருஷ்ணனுக்கே சமர்ப்பணம். எனவே, தனது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு மாலைகளை கொடுத்தார். சுதாமாவின் இச்செயலை, அக்ரூரர் பாராட்டினார் என்கிறது கீதா பாஷ்யம்.
மலர்ந்த தாமரைப் போலக் காணப்பட்ட அவர்கள், மனம் மகிழ்ந்து அவன் கேட்ட வரங்களை அளிக்கின்றனர்.
ஆழ்வார்களும், ஆச்சார்யாக்களும் எம்பெருமானை மலர் வழிப்பாடு செய்ய இது காரணமாக அமைந்தது எனலாம்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படி மாலாகாரர் (மாலைக்காரர்) போல எம்பெருமானுக்குப் பூவைக் கொடுத்தேனோ? மாலாகாரர் போல் எதையும் எதிர்பார்க்காமல் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பு காட்டினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment