About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 16 September 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி மூன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

043 பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே|

கிருஷ்ணரும் பலராமரும் அக்ரூரருடன் கம்சனின் அரண்மனைக்கு வரும்போது வழியில், மதுராவின் அழகை ரசித்துக் கொண்டே வந்தனர். கடை வீதி, மக்கள் கூட்டம், நாகரீக வாழ்க்கை என சிறிதும் கோகுலத்தின் சுவடு இல்லா மதுரா நகரின் வாழ்க்கையை ரசித்தபடி வீதியில் நடந்து வந்தனர்.


அக்ரூரர், தேரினைச் செலுத்த, கண்ணனும், பலராமனும் தெருவில் வரும் போது மக்கள் கண்ணனைத் தரிசிக்கக் கூடினர். பெரும் கூட்டம் முண்டி அடித்தனர். கிருஷ்ணனின் லீலைகள் அறிந்த மதுரா மக்கள் கிருஷ்ணனையும் பலராமனையும் அதிசயத்துடன் பார்த்தனர்! அக்கூட்டத்தில், கம்சனின் அரண்மனையில் வேலை புரியும் பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு முன்னே வந்தாள். ஆனால் அவளால் நிமிர்ந்து கண்ணனைப் பார்க்க முடியவில்லை. அவள் முதுகுவளைந்த கூனுடன் இருந்தது. திருவத்திரை என்னும் பெயர் கொண்ட அவள், கம்சனுக்கும், அரண்மனை பெண்களுக்கும் வாசனை திரவியங்களும் சந்தனமும் அரைத்து கொடுப்பாள்.


மாலினி என பெயர் கொண்ட அவள் மிகவும் அழகானவள். சில ஆண்டுகளுக்கு முன் நோய் வாய்ப்பட்டதில் கூன் விழுந்து, கழுத்துப் பகுதி சாய்ந்தும், ஒரு கால் வேலை செய்யாமலும் போக, மக்கள் அவளை கிண்டல் செய்யும் விதமாக “திருவத்திரை”, அதாவது மூன்று குறைபாடுகள் கொண்டவள், என அழைத்தனர்!

சிறு வயது கிருஷ்ணனின் லீலைகளை கேட்டு ரசித்த அவள், கிருஷ்ணனால் தனது நிலையை மாற்ற முடியும் என மாறா நம்பிக்கை கொண்டிருந்தாள். “கிருஷ்ணன் வருவான், என் நிலை மாறும்!” – என தன்னை மக்கள் கிண்டல் செய்த போதெல்லாம் தன் மனதை தேற்றிக் கொள்வாள்.

பெரிய தாமரை இலையில் மணக்க மணக்க சந்தனத்தை அரைத்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள். கண்ணன் வந்தால் தன் கைகளாலேயே அவனுக்கு சந்தணம் பூச வேண்டும் என்றிருந்தாள்.

வைணவ சம்பிரதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு. மடிதடவாத சோறு, சுருள் நாறாக பூ, சுண்ணாம்பு கலவாத சந்தனம் இவையே எம்பெருமானுக்கு ஏற்றவை. (மடி தடவாத சோறு என்றால் கைமாறு எதிர்பாராத விருந்தோம்பல் - இதை செய்தவர் விதுரர் ஒருவரே). மணம் வீசும் மாலைகள் (இதை பூ வியாபாரி அளித்தார் என பார்த்தோம்). இப்போது இந்தக் கூனி சந்தனத்துடன் நிற்கிறாள்.

கண்ணன் பலராமனுடன் வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிருஷ்ணனை கண்டதும், அவனருகே சென்று, “நீ வருவாய் என நான் அனுதினமும் காத்துக் கிடந்தேன்! என் நம்பிக்கை பொய்க்கவில்லை!” என்றாள்.

புன்னகைத்த கிருஷ்ணன், தேரை நிறுத்தி அப்பெண்மணியைக் கூப்பிட்டு, அவளிடம்- “கையில் என்ன வைத்துள்ளீர்”, என்றான்.

“சந்தனம். அரசனுக்கு!”- என்ற அவளிடம், “எங்களுக்கும் தர முடியுமா?”-என்று கூறி, இருவரும் கை நீட்டினர்!


“நான் கொடுத்து வைத்தவள். உங்களின் அழகு மார்புக்கு என் சந்தனமா!”- என்று கூறி கண்ணனின் திருமேனியில் சந்தனத்தைப் பூசினாள். கம்சனுக்கு இவ்விஷயம் தெரிய வந்தால் தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல், கையில் உள்ள சந்தனத்தை கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் கொடுத்தார். அவளது பணிவைக் கண்டு மகிழ்ந்தார் கிருஷ்ணர். 

"இந்த சந்தனம் நன்றாய் இல்லையே. வேறு இல்லையா? என்கிறான் கண்ணன். “வேறு சந்தனம் என்றால் என் மேனியைத் தான் சந்தனமாக பூசிக் கொள்ள வேண்டும் ஏற்றுக் கொள்" என்றாள்.

கண்ணன் சிரித்தவாறே அவளது கூன் முதுகைத் தொட்டு அவளை நிமிர்த்தினான். அவளது கூன் உடலை அழகான உடல் அமைப்பாக்கி அருள் புரிந்தார். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு, கூனியைப் போல், விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் சந்தனம் பூசக் கொடுத்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment