||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
023. திருதேரழுந்தூர்
திருவழுந்தூர் - மாயவரம்
இருபத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 45 - 2
திருமங்கையாழ்வார்
023. திவ்ய ப்ரபந்தம் - 1610 - ஐயா! நின் திருவடிகளே நான் அறிவேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும்* நீண்ட தோள் உடையாய்*
அடியேனைச் செய்யாத உலகத்திடைச் செய்தாய்*
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப்*
போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்*
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
024. திவ்ய ப்ரபந்தம் - 1611 - ஆதி வராகனே! எனக்கு அடைக்கலம் தர யாருமில்லை
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன்*
பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே*
மாதவனே மதுசூதா* மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண்*
நரனே நாரணனே திருநறையூர்* நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும் அரனே*
ஆதி வராகம் முன் ஆனாய்* அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
025. திவ்ய ப்ரபந்தம் - 1612 - நின் திருவடியன்றி வேறொன்றும் அறியேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய்ப்*
பரியோன் மார்வுஅகம் பற்றிப் பிளந்து*
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும்* பண்பாளா பரனே பவித்திரனே*
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*
கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்*
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
026. திவ்ய ப்ரபந்தம் - 1613 - நான்கு யுகங்களாக ஆனவன் ஆமருவியப்பன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ணச் சொன்னார்* சொல்லி நகும் பரிசே*
பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா*
தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய்*
கிரேத திரேத துவாபர கலியுகம்* இவை நான்கும் முன் ஆனாய்*
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
027. திவ்ய ப்ரபந்தம் - 1614 - ஐம்புல் ஆசைகட்கு அஞ்சினேன்: காப்பாற்று
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்*
கார் வண்ணா கடல்போல் ஒளி வண்ணா*
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்*
எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய்*
பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக் கொணாப்*
போகமே நுகர்வான் புகுந்து*
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
028. திவ்ய ப்ரபந்தம் - 1615 - அழுந்தூர் அம்மானே; என்னை ஆட்கொள்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
நெடியானே கடி ஆர்கலி நம்பீ* நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை*
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து* காவல் செய்த அக் காவலைப் பிழைத்து*
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்*
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி*
அடியேனைப் பணி ஆண்டு கொள்எந்தாய்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
029. திவ்ய ப்ரபந்தம் - 1616 - அழுந்தூர் அம்மானே! எனக்கு இரக்கம் காட்டு
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறிக்*
கூறை சோறு இவை தா என்று குமைத்துப் போகார்*
நான் அவரைப் பொறுக்ககிலேன்* புனிதா புள் கொடியாய் நெடுமாலே*
தீ வாய் நாகணையில் துயில்வானே*
திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்*
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
030. திவ்ய ப்ரபந்தம் - 1617 - மண்ணும் விண்ணும் ஆள்வர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை*
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்* மங்கைக் குல வேந்தன்*
சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை* தூய மாலை இவைபத்தும் வல்லார்*
மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு* மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே|
031. திவ்ய ப்ரபந்தம் - 1618 - பாம்பணையில் பள்ளி கொண்டவனே ஆமருவியப்பன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன்*
திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த*
வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும்*
வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம்* ஐந்து
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை*
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|
032. திவ்ய ப்ரபந்தம் - 1619 - வேதப் பொருளை அருளியவன் ஆமருவியப்பன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண*
முனிவரொடு தானவர்கள் திசைப்ப*
வந்து பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம்*
பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்*
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச்*
சங்கம் அவை முரலச் செங் கமல மலரை ஏறி*
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|
033. திவ்ய ப்ரபந்தம் - 1620 - கஜேந்திரனுக்கு அருளியவன் இவனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
குலத் தலைய மத வேழம் பொய்கை புக்குக்*
கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று*
நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன*
நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்*
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு*
வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய*
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|
034. திவ்ய ப்ரபந்தம் - 1621 - வராக அவதாரம் எடுத்தவன் இவனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கண் குன்றம்*
திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றி ஆகி*
இலங்கு புவி மடந்தை தனை இடந்து புல்கி*
எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்*
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்க*
பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல*
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|
035. திவ்ய ப்ரபந்தம் - 1622 - ந்ருஸிம்ஹ அவதாரம் எடுத்தவன் இவனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகித்*
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு*
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
மாள* உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்*
இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை*
ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல்*
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|
036. திவ்ய ப்ரபந்தம் - 1623 - வாமன அவதாரம் எடுத்தவன் இவனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி*
மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி*
தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித்*
தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்*
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதிச்*
செழு மாட மாளிகைகள் கூடம்தோறும்*
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|
037. திவ்ய ப்ரபந்தம் - 1624 - இராம அவதாரம் எடுத்தவன் இவனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகிப்*
பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்*
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ*
அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்*
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*
திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க*
அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|
038. திவ்ய ப்ரபந்தம் - 1625 - கிருஷ்ண அவதாரம் எடுத்தவன் இவனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு
பறித்து* மழ விடை அடர்த்துக் குரவை கோத்து*
வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய்*
உண்டு உகந்த மாயோன் காண்மின்*
செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்*
திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்*
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|
039. திவ்ய ப்ரபந்தம் - 1626 - சக்கரபாணி ஆமருவியப்பன் தான்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*
ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற*
நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி*
நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்*
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித்*
திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும்*
ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து*
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே|
040. திவ்ய ப்ரபந்தம் - 1627 - இவற்றைப் பாடினால் உலகை ஆளலாம்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய்ப்* பாரைப்
படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை*
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும்*
அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை*
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன்*
கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்*
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார்*
ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே|
041. திவ்ய ப்ரபந்தம் - 1854 - தேரழுந்தூரும் திருவெஃகாவும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கூந்தலார் மகிழ்* கோவலன் ஆய்*
வெண்ணெய் மாந்து அழுந்தையில்* கண்டு மகிழ்ந்து போய்*
பாந்தள் பாழியில்* பள்ளி விரும்பிய*
வேந்தனைச் சென்று காண்டும்* வெஃகாவுளே|
042. திவ்ய ப்ரபந்தம் - 2066 - திருமால் புகழையே பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (15)
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும்*
கடல் கிடந்த கனியே! என்றும்*
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி*
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும்*
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்*
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு*
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே*
மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே|
043. திவ்ய ப்ரபந்தம் - 2077 - வண்டே! என் நிலையைக் கண்ணனுக்குக் கூறு
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (26)
தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்*
தேன் அதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்*
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த*
அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை*
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான்*
அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று*
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது*
நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே|
044. திவ்ய ப்ரபந்தம் - 2707 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*
045. திவ்ய ப்ரபந்தம் - 2777 - மண்ணுலகில் மாயவன் தரும் காட்சிகள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (65)
அள்ளல் வாய் அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை*
தென் தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை*
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்