||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சுதாமருக்கு வரவேற்பு|
துவாரகையை அடைந்ததும், அந்த அழகிய நகரைக் கண்டு இன்புற்றுக் கொண்டே சென்றார், கிருஷ்ணருக்குச் சொந்தமான பல மாளிகைகள் இருந்த இடத்தை அடைந்தார். எல்லா மாளிகைகளையும் விட மிகச் சிறப்பாகத் தோன்றிய ஒரு மாளிகைக்குள் நுழைந்தார். அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. வாயிற் கதவைத் தாண்டி உள்ளே இருந்த கூடத்துள் நுழைந்தார். தூரத்தில் கிருஷ்ணர் ஒரு கட்டிலில், ருக்மிணியோடு உட்கார்ந்திருந்தது தெரிந்தது.
அவர் உள்ளே நுழைந்து தான் தாமதம். கிருஷ்ணர் வெகு ஆவலோடு ஓடி வந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார். தம் நண்பரைத் தழுவிக் கொண்டது கிருஷ்ணருக்குப் மிகுந்த ஆனந்தத்தைத் கொடுத்தது. அவருடைய தாமரைக் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது. சுதாமரும் தம்மை அடக்கி கொள்ள முடியாமல் அழுதார்.
கிருஷ்ணர் அவரைத் தம் கட்டிலில் உட்கார வைத்து, அவர் கால்களை அலம்பி அந்தத் தண்ணீரைக் குடித்ததுடன், தம் தலையிலும் தெளித்துக் கொண்டார். கிருஷ்ணர் பக்கத்தில் நின்று கொண்டு ருக்மிணி சுதாமருக்கு விசிற ஆரம்பித்தாள். எலும்பும் தோலுமாக இருந்த அந்த அந்தணரை, அதுவும் கிழிந்த அழுக்கு வேட்டி கொண்டிருந்தவரைக் கிருஷ்ணர் பூஜை செய்தது, அரண்மனையில் உள்ள எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.
கிருஷ்ணரும் சுதாமரும் கை கோர்த்துக் கொண்டு உட்கார்ந்து குரு குலத்தில் தாங்கள் கழித்த இன்ப நாட்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
தம் நண்பருடைய நிலை கிருஷ்ணருக்கு நன்கு தெரியும், அவர் ஏன் அங்கு வந்தார் என்பதும் கிருஷ்ணருக்கு தெரியும். அவருக்கு நிறைய தனம் கொடுக்க வேண்டுமென்று அவர் நினைத்தார். பணத்திற்க்காகச் சுதாமர் என்னை ஒரு நாளும் பூஜை செய்தது இல்லை. இப்பொழுது கூட அவருடைய தர்ம பத்தினியின் தூண்டுதலினால் தான் வந்திருக்கிறார். அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு அவருக்கு செல்வதைக் கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment