||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
023. திருதேரழுந்தூர்
திருவழுந்தூர் - மாயவரம்
இருபத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 45 - 1
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1588 - எம்பெருமான் ஊர் திருவழுந்தூர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தந்தை காலில் பெரு விலங்கு* தாள் அவிழ*
நள் இருட்கண் வந்த எந்தை பெருமானார்* மருவி நின்ற ஊர் போலும்*
முந்தி வானம் மழை பொழியும்* மூவா உருவின் மறையாளர்*
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்* அணி ஆர் வீதி அழுந்தூரே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1589 - பார்த்தசாரதியின் ஊர் திருவழுந்தூர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பாரித்து எழுந்த* படை மன்னர் தம்மை மாள*
பாரதத்துத் தேரில் பாகன் ஆய் ஊர்ந்த* தேவ தேவன் ஊர் போலும்*
நீரில் பணைத்த நெடு வாளைக்கு* அஞ்சிப் போன குருகு இனங்கள்*
ஆரல் கவுளோடு அருகு அணையும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1590 - இராவணனைக் கொன்றவன் ஊர் திருவழுந்தூர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்* சிரங்கள் ஐ இரண்டும்*
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக* உதிர்த்த உரவோன் ஊர் போலும்*
கொம்பில் ஆர்ந்த மாதவி மேல்* கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
அம்பு அராவும் கண் மடவார்* ஐம்பால் அணையும் அழுந்தூரே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1591 - என் கண்ணிலும் கருத்திலும் நின்றவர் ஊர் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வெள்ளத்துள் ஓர் ஆல் இலை மேல் மேவி* அடியேன் மனம் புகுந்து*
என் உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்* நின்றார் நின்ற ஊர் போலும்*
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்* போன காதல் பெடையோடும்*
அள்ளல் செறுவில் கயல் நாடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1592 - எல்லாம் ஆனவர் நின்ற ஊர் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பகலும் இரவும் தானே ஆய்ப்* பாரும் விண்ணும் தானே ஆய்*
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி* நின்றார் நின்ற ஊர் போலும்*
துகிலின் கொடியும் தேர்த் துகளும்* துன்னி மாதர் கூந்தல்வாய்*
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்* அணி ஆர் வீதி அழுந்தூரே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1593 - என் உள்ளம் புகுந்தவர் நின்ற ஊர் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
ஏடு இலங்கு தாமரை போல்* செவ்வாய் முறுவல் செய்தருளி*
மாடு வந்து என் மனம் புகுந்து* நின்றார் நின்ற ஊர் போலும்*
நீடு மாடத் தனிச் சூலம்* போழக் கொண்டல் துளி தூவ*
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1594 - நான் பக்திக் கண்ணீர் விடச் செய்தவர் ஊர் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மாலைப் புகுந்து மலர் அணைமேல்* வைகி அடியேன் மனம் புகுந்து*
என் நீலக் கண்கள் பனி மல்க* நின்றார் நின்ற ஊர் போலும்*
வேலைக் கடல் போல் நெடு வீதி* விண் தோய் சுதை வெண் மணி மாடத்து*
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்* வீதி அழுந்தூரே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1595 - எனக்குக் கனவில் காட்சி தந்தனர் ஊர் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வஞ்சி மருங்குல் இடை நோவ* மணந்து நின்ற கனவகத்து*
என் நெஞ்சு நிறையக் கைகூப்பி* நின்றார் நின்ற ஊர் போலும்*
பஞ்சி அன்ன மெல் அடி* நல் பாவைமார்கள்*
ஆடகத்தின் அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா* அணி ஆர் வீதி அழுந்தூரே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1596 - என் ஐம்புலன்களையும் கவர்ந்தவர் ஊர் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு* இங்கே நெருநல் எழுந்தருளி*
பொன் அம் கலைகள் மெலிவு எய்தப்* போன புனிதர் ஊர் போலும்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல்* வரி வண்டு இசை பாட*
அன்னம் பெடையோடு உடன் ஆடும்* அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1597 - இப்பாடல்களைப் பாடினால் பாவம் நீங்கும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
நெல்லில் குவளை கண் காட்ட* நீரில் குமுதம் வாய் காட்ட*
அல்லிக் கமலம் முகம் காட்டும்* கழனி அழுந்தூர் நின்றானை*
வல்லிப் பொதும்பில் குயில் கூவும்* மங்கை வேந்தன் பரகாலன்*
சொல்லில் பொலிந்த தமிழ் மாலை* சொல்லப் பாவம் நில்லாவே|
011. திவ்ய ப்ரபந்தம் - 1598 - நரசிங்கனை நான் கண்ட இடம் திருவழுந்தூர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்
சிங்கம் அது ஆய் அவுணன்* திறல் ஆகம் முன் கீண்டு உகந்த*
சங்கம் இடத்தானைத்* தழல் ஆழி வலத்தானை*
செங் கமலத்து அயன் அனையார்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அம் கமலக் கண்ணனை * அடியேன் கண்டு கொண்டேனே|
012. திவ்ய ப்ரபந்தம் - 1599 - பரசுராமனை நான் கண்டு திளைத்த இடம் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கோ ஆனார் மடியக்* கொலை ஆர் மழுக் கொண்டருளும்*
மூவா வானவனை* முழு நீர் வண்ணனை அடியார்க்கு*
ஆஆ என்று இரங்கித்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
தேவாதி தேவனை * யான் கண்டு கொண்டு திளைத்தேனே|
013. திவ்ய ப்ரபந்தம் - 1600 - உலகம் படைத்தவனை அடைந்து உய்ந்த இடம் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உடையானை* ஒலி நீர் உலகங்கள் படைத்தானை*
விடையான் ஓட அன்று* விறல் ஆழி விசைத்தானை*
அடையார் தென் இலங்கை அழித்தானை*
அணி அழுந்தூர் உடையானை* அடியேன் அடைந்து உய்ந்து போனேனே|
014. திவ்ய ப்ரபந்தம் - 1601 - குன்றினால் மழை தடுத்தவனை நான் கண்ட இடம் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
குன்றால் மாரி தடுத்தவனை* குல வேழம் அன்று பொன்றாமை*
அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை* அன்று ஆவின் நறு நெய்*
அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் நின்றானை *
அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே|
015. திவ்ய ப்ரபந்தம் - 1602 - கண்ணனைக் கண்டு கொண்ட இடம் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கஞ்சனைக் காய்ந்தானைக்* கண்ணமங்கையுள் நின்றானை*
வஞ்சனப் பேய் முலையூடு* உயிர் வாய் மடுத்து உண்டானை*
செஞ்சொல் நான்மறையோர்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அஞ்சனக் குன்றம் தன்னை * அடியேன் கண்டு கொண்டேனே|
016. திவ்ய ப்ரபந்தம் - 1603 - யாவர்க்கும் அரியவனைக் கண்டு கொண்ட இடம் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பெரியானை* அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்*
உரி யானை உகந்தான் அவனுக்கும்*
உணர்வதனுக்கு அரியானை* அழுந்தூர் மறையோர்கள்*
அடிபணியும் கரியானை * அடியேன் கண்டு கொண்டு களித்தேனே|
017. திவ்ய ப்ரபந்தம் - 1604 - அழுந்தூரில் ஆமருவியப்பனைக் கண்டு களித்தேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
திரு வாழ் மார்வன் தன்னைத்* திசை மண் நீர் எரி முதலா*
உரு ஆய் நின்றவனை* ஒலி சேரும் மாருதத்தை*
அரு ஆய் நின்றவனைத்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
கரு ஆர் கற்பகத்தைக்* கண்டு கொண்டு களித்தேனே|
018. திவ்ய ப்ரபந்தம் - 1605 - நிலமகள் கணவனை அழுந்தூரில் கண்டு களித்தேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
நிலை ஆள் ஆக* என்னை உகந்தானை*
நில மகள் தன் முலை ஆள் வித்தகனை* முது நான்மறை வீதிதொறும்*
அலை ஆர் கடல் போல் முழங்கும்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
கலை ஆர் சொற்பொருளைக்* கண்டு கொண்டு களித்தேனே|
019. திவ்ய ப்ரபந்தம் - 1606 - திருமகள் கணவனை நான் கண்டு களித்த இடம் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பேரானைக்* குடந்தைப் பெருமானை*
இலங்கு ஒளி சேர் வார் ஆர் வனமுலையாள்*
மலர் மங்கை நாயகனை* ஆரா இன் அமுதைத்*
தென் அழுந்தையில் மன்னி நின்ற*
கார் ஆர் கரு முகிலைக் * கண்டு கொண்டு களித்தேனே|
020. திவ்ய ப்ரபந்தம் - 1607 - தேவர் உலகை ஆள்வர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
திறல் முருகன் அனையார்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அற முதல்வன் அவனை* அணி ஆலியர் கோன் மருவார்*
கறை நெடு வேல் வலவன்* கலிகன்றி சொல் ஐ இரண்டும்*
முறை வழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வான் உலகே|
021. திவ்ய ப்ரபந்தம் - 1608 - ஆமருவியப்பா! நீயே அடைக்கலம்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம்
திருவுக்கும் திரு ஆகிய செல்வா* தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா*
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே* உலகு உண்ட ஒருவா திரு மார்பா*
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை என்றால்*
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து* ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
022. திவ்ய ப்ரபந்தம் - 1609 - ஆமருவியப்பா! நின்னையே நான் சரணடைந்தேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி*
பாவை பூமகள் தன்னொடும் உடனே வந்தாய்*
என் மனத்தே மன்னி நின்றாய்* மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா*
சந்தோகா பௌழியா தைத்திரியா* சாம வேதியனே நெடுமாலே*
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்*
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment